என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சென்னை:
மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையை நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அ.தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி, வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.
புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும்,
அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.
இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று கோர்ட்டும் கேள்வி எழுப்பியிருந்தது.
- விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தொடர்பாக ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்கு பாய்ந்தது. இந்தநிலையில், முன்ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது.
விபத்து நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில், த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று கோர்ட்டும் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த நிலையில், கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட த.வெ.க. மாவட்டச் செயலாளர்களிடம் விஜய் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பது குறித்து விஜய் கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்றும் விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்க வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- இன்று காலை ராமதாசிற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- பரிசோதனையில் இதய குழாய்களில் எந்த அடைப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இன்று காலை அன்புமணி ராமதாஸை சந்திக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அங்கு ராமதாசின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறுகையில், ராமதாஸ் உடல்நிலை சீராக உள்ளதாக இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
* இன்னும் 6 மணி நேரம் ICU- வில் ராமதாசிற்கு சிகிச்சை அளிக்கப்படும்.
* ICU- வில் இருப்பதால் ராமதாஸை சந்திக்க முடியவில்லை.
* இன்று காலை ராமதாசிற்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* பரிசோதனையில் இதய குழாய்களில் எந்த அடைப்பும் இல்லை என தெரியவந்துள்ளது என கூறினார்.
- மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர்.
- காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன்(38), அருண் (27) ஆகிய 6 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் இரவு 8 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்து வெள்ளி செயின், மோட்டார் என்ஜின், செல்போன், ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.
இதையடுத்து காயமடைந்த 6 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் காயமடைந்த மீனவர்கள் 6 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் நம்பியார்நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சசிக்குமார், உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ்(19) ஆகிய 5 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து மோட்டார் என்ஜின், ஜி.பி.எஸ் கருவி, இகோ சவுண்டர், 5 செல்போன்கள், மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
- தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200
02-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-10-2025- ஒரு கிராம் ரூ.165
04-10-2025- ஒரு கிராம் ரூ.165
03-10-2025- ஒரு கிராம் ரூ.162
02-10-2025- ஒரு கிராம் ரூ.164
01-10-2025- ஒரு கிராம் ரூ.161
- பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
- 2-ம் பருவத்துக்காக பாட நூல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றன. தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட உள்ளது. மேலும், 2-ம் பருவத்துக்காக பாட நூல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- மருத்துவமனையில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
- டாக்டர் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீப காலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அவர் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று டாக்டர் செங்குட்டுவேல், ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாசை பார்க்க அவரது மகனும் பா.ம.க. தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு மருத்துவர்களை சந்தித்து ராமதாசுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
டாக்டர் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லியம்மன் கோவில் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பல்லாவரம்: துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லியம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
திருமுல்லைவாயல்: சிடிஎச் சாலை, சோளம்பேடு மெயின் ரோடு, நேதாஜி நகர், கலைஞர் நகர்.
மயிலாப்பூர்: ஆர்.கே. சாலை, டி.டி.கே. சாலை மற்றும் அருகிலுள்ள தெருக்களான பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, லாயிட்ஸ் லேன்.
பூந்தமல்லி: பை-பாஸ் சாலை மற்றும் பரிவாக்கம் சாலை
ஆவடி: பாண்டேஸ்வரம் கலைஞர் நகர், கோவில்பதாகை மெயின் ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
- சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார்.
- கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது.
கிருஷ்ணகிரி:
தே.மு.தி.க. சார்பில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் விஜயகாந்த் ரத யாத்திரை - பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு நடந்தது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
கரூரில் நடந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த பெரிய தவறு. நாம் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்தோம். முதலில் விஜய் தாமதமாக வந்தது தவறு. கடமை உணர்வை தவறினார் விஜய்.
சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார். கரூரில் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டது. அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா? வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது.
விஜய் நீங்கள் விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறுகிறீர்கள். அண்ணன் என்ன செய்தார்? என பார்த்து நீங்கள் செயல்படுங்கள். விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை. அறியாமல் விபத்து நடந்து விட்டதாக கூறுங்கள். ஏன் மகாமகத்தில் இறக்கவில்லையா? கள்ளச்சாராயம் குடித்து சாகவில்லையா? யாரை கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சிக்கு இந்த முதலமைச்சர் சென்றாரா? இன்று கரூருக்கு தனி விமானத்தில் இரவோடு இரவாக ஓடோடி செல்கிறார். எல்லாம் அரசியல்.
யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தே.மு.தி.க.வை வஞ்சிக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டிலேயே ஒரு மாநாடு நடத்தி கின்னஸ் சாதனை படைத்த கட்சி தே.மு.தி.க. தான். தொண்டர்களை உண்மையில் நேசித்தவர் விஜயகாந்த். விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். நிதியுதவியை நேரில் கொடுக்க வேண்டும்.
கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை. புஸ்சி ஆனந்த் தலைமறைவு என்கிறார்கள். எதற்காக தலைமறைவாக வேண்டும், தூக்கிலா போட போகிறார்கள். நேரில் வந்து சந்திக்க வேண்டும்.
கர்நாடக மாநில தொழிற்சாலை கழிவுநீர் இந்த மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்த தண்ணீரை கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வேண்டும். அதுவே அரசின் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை. உண்மையைப் பேசுகிறேன்.
- கரூர் சம்பவம் ஒரு விபத்துதான். இதில் யார் மீதும் பழிபோட முடியாது என்றார் தினகரன்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். தார்மீக பொறுப்பு என்பது குற்றத்தை ஏற்பதாக ஆகாது.
அனைத்துக் கட்சிகளும் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகிறோம். நம்மை மீறி தவறு நடப்பது இயல்புதான். அதற்கு அனைத்து, தலைவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இது பின்னாளில் திமுகவையும் பாதிக்கும்.
கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை. உண்மையைப் பேசுகிறேன்.
தவெக தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். பின்னாளில் இது அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்.
தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றனர். அப்போது அந்தத் துறைக்கு தலைவராக இருந்த பழனிசாமி பொறுப்பேற்றாரா?
கரூர் சம்பவத்தை வைத்து தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பழனிசாமி. பழனிசாமி தலைமையை ஏற்று எப்படி அவர்கள் இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் செல்ல முடியும்?
தவெகவை கூட்டணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக கரூர் துயரத்திற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம் என குள்ளநரித்தனமாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் எடப்பாடி. நாகரீகம் இல்லாமல் கூட்டணி குறித்து பேசுகிறார். இந்த விவகாரத்தில் நடுநிலையாக இருங்கள்.
2026 தேர்தலில் 4 முனை போட்டி நடக்கும். கரூர் சம்பவம் ஒரு விபத்துதான். இதில் யார் மீதும் பழிபோட முடியாது. 2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகத்தை வீழ்த்துவோம் என தெரிவித்தார்.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- பெங்களூரு புல்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்தது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று இரவு நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.
இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 8-வது இடத்தில் உள்ளது.






