என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.
- மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தங்களது மதுக்கூட வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பணியினை திங்கட்கிழமைக்குள் செய்து முடித்து தங்களது மதுக்கூடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க மதுக்கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தவறும் பட்சத்தில் மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 221 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது.
- கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது.
- மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட த.மா.கா தலைவர் கேசவரெட்டியின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன், நேற்று மாலை ஓசூர் வந்தார்.
பின்னர், அவர் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:
"பெங்களூரு முதல் ஓசூர் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பு மிகவும் அவசியம் மற்றும் இந்த பகுதி மக்களுக்கு அவசர தேவையாகும். இதனை அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். எனவே, இரு மாநில மக்களின் அவசிய, அவசர தேவையை புரிந்து கொண்டு, தமிழக அரசும், கர்நாடக அரசும் இணைந்து விரைவில், மெட்ரோ நீட்டிப்புக்கான உறுதியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு, இது சம்பந்தமாக கர்நாடக அரசுடன் கண்டிப்புடன் பேசி, தமிழக விவசாயிகளின் எண்ணங்களை பிரதிப லிக்கும் அரசாக செயல்பட வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை செய்து விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.
மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன். அதனை நம்புகிறேன். "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை த.மா.கா. வரவேற்கிறது. இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், த.மா.காவை பலப்படுத்தும் பணிகள் தீவிரபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
அப்போது கேசவரெட்டி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- அன்னியாலம், தாசரிப்பள்ளி பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தல்.
ஓசூர்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.
கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அன்னியாலம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தம்மா தோட்டம் வழியாக நடந்து சென்றபோது காட்டு யானை தாக்கி பலியானார்.
தாசரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வதம்மாவும் யனை தாக்கியதில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அன்னியாலம், தாவரக்கரை, தாசரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
குட்டி ஜப்பான் என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 1,087 சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்கான பட்டாசு தயாரிப்பை ஒரு சில ஆலைகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இதில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மதியம் 12.45 மணியளவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (30), சாந்தி (43), ஜெயா (57), ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (50), கீழாண்மறைநாடு சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துசாமி (43), குருசாமி (50), முனியசாமி (42), சித்திரப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (26), கிளியம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (29), நாச்சியார்பட்டியைச் சேர்ந்த அவ்வைராஜ் (62) ஆகியோர் இறந்தனர்.
5 ஊர்களில் இருந்து விரைந்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்ட போதிலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. காயமடைந்த சிவக்குமார், முத்துக்குமார், ரெங்கம்மாள் உள்பட 4 பேருக்கும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகாசியை சுற்றியுள்ள 60 சதவீதம் பட்டாசு ஆலைகளை அதன் லைசென்சு பெற்ற உரிமையாளர்கள் நடத்துவதில்லை.
மாறாக, அதனை மற்றவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். அவ்வாறு குத்தகைக்கு வாங்கி பட்டாசு ஆலைகளை நடத்துபவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ஒரு அறையில் 4 பேர் மட்டுமே பணியில் இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் 10-க்கும் மேற்பட்டோரை பணியில் வைக்கிறார்கள்.
கூடுதல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கூடுதல் தொழிலாளர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்துகிறார்கள். வெடிமருந்து பயன்பாடு வழக்கத்தைவிட அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பட்டாசு தொழிலை மட்டுமே தெரிந்திருக்கும் ஆட்களை கொண்டு ஆலைகளை இயக்காமல் அதிக சம்பளம் தருவதாக கூறி தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தபோது பணியில் இருந்த தொழிலாளி செல்வம் கூறுகையில், மதிய உணவுக்காக அனைவரும் தயாராகிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென அருகில் இருந்த ஒரு அறையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே நாங்கள் பதறியடித்துக்கொண்டு அருகில் செல்ல முயன்றோம். ஆனால் அடுத்தடுத்த அறைகள் இடிந்து தரைமட்டமாகிக் கொண்டு இருந்தன.
அதேவேளையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிய வண்ணம் இருந்தது. எனவே எங்களால் நெருங்க முடியவில்லை. ஒருவழியாக முதலில் வெடித்து சிதறிய அறைக்கு அருகில் சென்றபோது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் நாலாபுற மும் உடல் சிதறிய நிலையில் இறந்துகிடந்தனர். அதிலும் ஒருவரின் ஆடைகள் மட்டும் அங்குள்ள மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள் மீட்கும் போதே 7 பேருக்கு உயிர் இல்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் பலரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
நாங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த தொழிலை செய்துவருகிறோம். இன்று நடந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என நினைக்கிறோம். காலையில் எங்களுடன் வேலைக்கு வந்தவர்கள் மாலை வீடு திரும்பும்போது உயிருடன் இல்லை என்றபோது அதனை எங்களால் ஏற்க முடியவில்லை.
காலையில் அனைவரும் ஒன்றாக வேலைக்கு வந்தோம். ஆனால் மாலையில் 10 பேர் பிணமாக வீடு திரும்பியதை எண்ணும்போது மனம் பதறுகிறது. ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைக்கும் தொழிலாக பாதுகாப்பற்ற பட்டாசு தொழில் வந்துவிட்டது என்றார்.
மற்றொரு தொழிலாளி கூறுகையில், இந்த விபத்து முழுக்க முழுக்க மனித குறைபாட்டால் நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து பெரும்பாலான பட்டாசு ஆலைகள் இன்னும் திறந்து பணிகளை தொடங்காத நிலையில், தை மாதம் ஒவ்வொரு நிறுவனமாக திறந்து பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது முழுமையாக ஆலையில் பேன்சி ரகம் என்று சொல்லக்கூடிய வாண வேடிக்கை பட்டாசுகள் தான் அதிக அளவு தயாரிக்கப்படுகிறது.
இந்த வகை வாணவேடிக்கைகளை தயாரிக்கும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் அறிவியல் ரீதியாக கவனத்துடன் இருக்கவேண்டும். எனவே மனித கவனக்குறைவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது ஒரே நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுத் தொழிலில் உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் போர்மேன் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.
மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர் களை தீவிரமாக தேடி வரு கிறார்கள்.
- மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
- கர்நாடகாவால் மேகதாதவில் அணை கட்டமுடியாது என்றார் அமைச்சர் துரைமுருகன்.
சென்னை:
கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல் மந்திரி சித்தராமையா, மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடைசியாக நடந்த கூட்டத்தில் கூட மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை கொண்டு வந்த போது நாங்கள் எதிர்த்தோம்.
கர்நாடக அரசு நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால் தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது.
மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம், அதுதான் நியதி என தெரிவித்தார்.
- சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக செல்வப்பெருந்ததை இருந்து வந்தார்.
- அந்த பதவிக்கு ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது எம்.எல்.ஏ.-வாக இருக்கும் செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக செல்வப்பெருந்ததை இருந்து வந்த நிலையில், அந்த பதவிக்கு ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த மாற்றத்தை காங்கிரஸ் தலைமை செய்துள்ளது.
ஏற்கனவே இருந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பங்களிப்பை வெகுவாக பாராட்டுவதாக தெரிவித்துள்ளது.
- ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.
- அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.
மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள்.
* ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்
* அவர் மறைந்ததும், திருட்டுத்தனமாக மத்திய அரசான பா.ஜனதாவுக்கு பயந்து அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது.
* நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
* நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம், தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- பறவை காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது.
- ஆந்திராவில் பறவை காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம் சட்லகுட்டா, கும்மல்லா திப்பா ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.
திருப்பதி மாவட்டம் போல் புலிக்காட் ஏரியில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள் மூலம் இந்த நோய் பரவியுள்ளது. ஆந்திராவில் இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
- தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.19 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 287 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் 1,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தையகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55) கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு அதிகாரிபட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மதுபானம் வாங்கி டாஸ்மாக் அருகிலேயே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தேத்தாம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (28), காம்பார்பட்டியை சேர்ந்த ரஜினி (42) ஆகியோரும் அதே இடத்தில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மனோஜ், ரஜினி ஆகிய 2 பேரும் சேர்ந்து முருகனை தாக்கி கீழே தள்ளினர். நிலை தடுமாறிய முருகன் கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் புறநகர் போலீஸ் டி.எஸ்.பி. உதயகுமார் மேற்பார்வையில், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சிவராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தனர்.
பின்னர் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். கொத்தனாரை கொலை செய்த குற்றவாளிகளை சில மணி நேரத்திலேயே கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பிரதீப் பாராட்டினார்.
கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதியில் சட்டவிரோதமாக பார் செயல்பட்டு வந்ததும், இதன் காரணமாக அடிக்கடி மோதல் சம்பவம் நடந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோல் சட்ட விரோதமாக செயல்படும் மதுபான பார்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மதுரை:
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த வாசுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழ்நாடு அரசின் முறையான அனுமதி பெற்று, கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பேரையூர் அருகே உள்ள சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறேன்.
இந்நிலையில் சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு கட்டிடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்தனர். இதனையடுத்து நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது தூரம் தள்ளி வைத்தோம். இதற்காக தேவையற்ற பிரச்சனையை எழுப்பி என் மீதும் எனது குடும்பத்தினர் மீது டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். இதனையடுத்து மீண்டும் இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் எதிர்தரப்பினர் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர். இதுகுறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாக தாக்கி இழிவான வார்த்தைகளால் திட்டினர். ஏற்கனவே அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சமூக ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து அனுமதியின்றி சட்டவிரோதமாக குறிப்பிட்ட சாதி சமூகத்தினர் வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும். கொலைமிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பேனர் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், இந்த விவகாரத்தில் போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.






