search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது
    X

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது

    • இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசி:

    குட்டி ஜப்பான் என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 1,087 சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்கான பட்டாசு தயாரிப்பை ஒரு சில ஆலைகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இதில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று மதியம் 12.45 மணியளவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (30), சாந்தி (43), ஜெயா (57), ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (50), கீழாண்மறைநாடு சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துசாமி (43), குருசாமி (50), முனியசாமி (42), சித்திரப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (26), கிளியம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (29), நாச்சியார்பட்டியைச் சேர்ந்த அவ்வைராஜ் (62) ஆகியோர் இறந்தனர்.

    5 ஊர்களில் இருந்து விரைந்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்ட போதிலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. காயமடைந்த சிவக்குமார், முத்துக்குமார், ரெங்கம்மாள் உள்பட 4 பேருக்கும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகாசியை சுற்றியுள்ள 60 சதவீதம் பட்டாசு ஆலைகளை அதன் லைசென்சு பெற்ற உரிமையாளர்கள் நடத்துவதில்லை.

    மாறாக, அதனை மற்றவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். அவ்வாறு குத்தகைக்கு வாங்கி பட்டாசு ஆலைகளை நடத்துபவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ஒரு அறையில் 4 பேர் மட்டுமே பணியில் இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் 10-க்கும் மேற்பட்டோரை பணியில் வைக்கிறார்கள்.

    கூடுதல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கூடுதல் தொழிலாளர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்துகிறார்கள். வெடிமருந்து பயன்பாடு வழக்கத்தைவிட அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பட்டாசு தொழிலை மட்டுமே தெரிந்திருக்கும் ஆட்களை கொண்டு ஆலைகளை இயக்காமல் அதிக சம்பளம் தருவதாக கூறி தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.

    பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தபோது பணியில் இருந்த தொழிலாளி செல்வம் கூறுகையில், மதிய உணவுக்காக அனைவரும் தயாராகிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென அருகில் இருந்த ஒரு அறையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே நாங்கள் பதறியடித்துக்கொண்டு அருகில் செல்ல முயன்றோம். ஆனால் அடுத்தடுத்த அறைகள் இடிந்து தரைமட்டமாகிக் கொண்டு இருந்தன.

    அதேவேளையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிய வண்ணம் இருந்தது. எனவே எங்களால் நெருங்க முடியவில்லை. ஒருவழியாக முதலில் வெடித்து சிதறிய அறைக்கு அருகில் சென்றபோது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் நாலாபுற மும் உடல் சிதறிய நிலையில் இறந்துகிடந்தனர். அதிலும் ஒருவரின் ஆடைகள் மட்டும் அங்குள்ள மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள் மீட்கும் போதே 7 பேருக்கு உயிர் இல்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் பலரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

    நாங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த தொழிலை செய்துவருகிறோம். இன்று நடந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என நினைக்கிறோம். காலையில் எங்களுடன் வேலைக்கு வந்தவர்கள் மாலை வீடு திரும்பும்போது உயிருடன் இல்லை என்றபோது அதனை எங்களால் ஏற்க முடியவில்லை.

    காலையில் அனைவரும் ஒன்றாக வேலைக்கு வந்தோம். ஆனால் மாலையில் 10 பேர் பிணமாக வீடு திரும்பியதை எண்ணும்போது மனம் பதறுகிறது. ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைக்கும் தொழிலாக பாதுகாப்பற்ற பட்டாசு தொழில் வந்துவிட்டது என்றார்.

    மற்றொரு தொழிலாளி கூறுகையில், இந்த விபத்து முழுக்க முழுக்க மனித குறைபாட்டால் நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து பெரும்பாலான பட்டாசு ஆலைகள் இன்னும் திறந்து பணிகளை தொடங்காத நிலையில், தை மாதம் ஒவ்வொரு நிறுவனமாக திறந்து பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது முழுமையாக ஆலையில் பேன்சி ரகம் என்று சொல்லக்கூடிய வாண வேடிக்கை பட்டாசுகள் தான் அதிக அளவு தயாரிக்கப்படுகிறது.

    இந்த வகை வாணவேடிக்கைகளை தயாரிக்கும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் அறிவியல் ரீதியாக கவனத்துடன் இருக்கவேண்டும். எனவே மனித கவனக்குறைவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கடந்த வாரம் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது ஒரே நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுத் தொழிலில் உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் போர்மேன் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

    மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர் களை தீவிரமாக தேடி வரு கிறார்கள்.

    Next Story
    ×