என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
- குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நெல்லை:
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தொடர பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் 370-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் மோடி தனது பிரசாரத்தை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
வருகிற 27-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதைத்தொடர்ந்து கேரளா செல்கிறார். மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடி வருகை தரும் பிரதமர் மோடி துறைமுகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கிறார்.
அப்போது குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு அரசு திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனைத்தொடர்ந்து நெல்லையில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித்ஷா நெல்லை வந்தபோது பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்ற வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ள இடம், சாரதா கல்லூரி அருகே அமைந்துள்ள இடங்களை பா.ஜனதாவினர் ஆய்வு செய்தனர்.

பாளை கோர்ட்டு எதிரே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் இன்று ஆய்வு செய்த காட்சி
அதன் ஒரு பகுதியாக பாளை கோர்ட்டு எதிரே பெல் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தலாமா? என்று ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாறு நடத்தினால் பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்க வசதியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டு இந்த மைதானம் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜனதா அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மீனாட்சி சொக்கநாதர் மற்றும் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
- ராஜகோபுரம் கட்டுவதற்கு மண் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.
சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள மீனாட்சி சொக்க நாதர் மற்றும் ஞானதண்டாயுத பாணி சுவாமி கோவிலுக்கு புதிய ராஜகோபுரம் கட்ட அரசு நடவடிக்கை மேற் கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-
மீனாட்சி சொக்கநாதர் மற்றும் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது. மூன்று கால விமானம், சன்னதி என ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் திட்டபணிகள் மேற்கொள்ள பாலாலயம் தொடங்கப்பட உள்ளது.
ராஜகோபுரம் கட்டுவதற்கு மண் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது. தொடர் நடவடிக்கையாக அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் ராஜகோபுரம் கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கமல்ஹாசன் தோல்வியை தழுவினார்.
- கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிர தேர்தல் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தாங்கள் போட்டியிட உள்ள தொகுதிகளை கேட்டு பெறுவதில் தீவிரமாக உள்ளன. தி.மு.க. தொகுதி பங்கிட்டு குழுவினருடன் கூட்டணி கட்சிகள் நடத்திய முதல் கட்ட பேச்சு வார்த்தையில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கி உள்ளன.
அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருப்பதாக கருதப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் அனுப்பப்படாமலேயே உள்ளது. இருப்பினும் கோவை தொகுதியை குறிவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் காய் நகர்த்தி வருகிறார்கள். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் கோவை தொகுதியில் கணிசமான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. இதையடுத்து கோவை தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கமல்ஹாசன் நம்புகிறார். இதற்காகவே மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை தொகுதியை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிர தேர்தல் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.
இப்படி கோவை தொகுதியில் கமல் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தி.மு.க. சார்பில் அங்கு நடிகர் ரஜினிகாந்தின் மருமகனை வேட்பாளராக களம் இறக்கலாமா? என்பது பற்றி கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பல்லடம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடியின் குடும்ப வாரிசு தான் ரஜினியின் மருமகனான விசாகன் ஆவார். பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன்தான் விசாகன். இவர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவை திருமணம் செய்து உள்ளார்.

தி.மு.க. குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற முறையிலும் ரஜினியின் மருமகன் என்கிற முறையிலும் பாராளுமன்றத் தேர்தலில் அவரை களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி உறுதி என்று தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். அதுபோன்று விசாகனை பாராளுமன்ற தேர்தல் களத்தில் நிறுத்தினால் ரஜினி ரசிகர்களும் அவரது வெற்றிக்காக உழைப்பார்கள். அனைத்து தரப்பு மக்களின் ஓட்டுகளும் கிடைக்கும் என்பது தி.மு.க.வினர் போடும் திட்டமாகவும் உள்ளது. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வே செல்வாக்கு மிகுந்ததாக காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இது போன்ற சூழலில் கோவை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நிச்சயம் தங்களது செல்வாக்கையும் காட்ட தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதற்கு பரிச்சயமான ஒருவரை நிறுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று அந்த கட்சி கணக்கு போட்டுள்ளது. இதன் காரணமாகவே ரஜினியின் மருமகன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிற தகவல் கோவை தொகுதியில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
- திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை அரங்கநாத சுவாமி கோவில் கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இநத கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மாசிமக திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 23-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி தினந்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. தேர்த்திரு விழாவை யொட்டி காரமடை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, அரங்கநாத சுவாமி பக்தர்கள் கொண்ட காரமடை ஸ்ரீ தாசப்பளஞ்சிகா மகாஜன சங்கம் சார்பில் 55 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான சப்பரம் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளி சப்பரத்தில் மரகத பச்சை கற்களில் சங்கு, மாணிக்க கற்களில் சக்கரம், சிகப்பு மற்றும் வெள்ளை பவளத்தில் திருநாமம் என விலையுயர்ந்த வைடூரிய கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கோவிலுக்கு வழங்கப்படும் தேக்குமரத்தில் வெள்ளியால் வேயப்பட்ட இந்த சப்பரத்தில் அரங்கநாத சுவாமி உருவபடத்தை வைத்து கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியே உலா கொண்டு வரப்பட்டு கோவிலில் முறைப்படி ஒப்படை க்கப்பட்டது. பின்னர் கோவிலின் உள்ளே இந்த சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பக்தர்கள் பல வண்ண வாண வேடிக்கை நிகழ்த்தினர்.
- சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
- புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார்.
இதையடுத்து மேயர் பிரியா புதிய அறிவிப்புகளை படித்தார். அதன் விவரம் வருமாறு:-
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்படும்.
வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 கவுன்சிலர்களுக்கும் டேப் வழங்கப்படும்.
வருவாய் துறையில் வழங்கப்படும் மதிப்பீட்டு ஆணைகளான புதிய மற்றும் கூடுதல் சொத்துவரி, மதிப்பீடு சொத்துவரி பெயர் மாற்றும், திருத்தம், புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள் கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தில் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்கள், திறந்த வெளிகள், பூங்காக்களில் 2.50 லட்சம் மரக்கன்றுகளை தன்னார்வர்கள் மூலம் நடப்பட்டு அவைகளை முறையாக பராமரித்து பேணி காக்கப்படும். இதன் மூலம் நகரின் மாசு கட்டுப்படுத்தப்படும்.
பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் நாவலர் நகர்-லாக்நகர், வாலாஜா காலணியில் இருந்து பாரதி சாலை, பாலாண்டியம்மன் கோவில் தெரு, சிங்காரவேலர் பாலத்தில் இருந்து-கைலாசபுரம் பாலம், பக்கிங்காம் கால்வாய் தெரு முண்டகக் கண்ணியம்மன் பாலம், பேங்க்ரோடு மயிலாப்பூர் பாலம், மந்தைவெளி பாலம் (இரண்டு பக்கமும்), சாலையோர பூங்காக்களை அழகுப்படுத்தும் பணி ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னையில் ஆண்களுக்கு உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டில் இருப்பது போல பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் எதுவும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மாத்தூர் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள குளத்தினை பரிச்சார்ந்த முறையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்பான்ச் பார்க் வடிவமைக்கப்படும்.
மேலும் மாநகராட்சி பூங்காக்களில் ஸ்பான்ச் பார்க் அமைக்க ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சியால் 192 மயான பூமிகள் பராமரிக்கப்படுகிறது. இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளும் உற்றார் உறவினர்கள் மன அமைதியுடன் இருக்கைகளில் அமர்ந்து மன நிறைவுடன் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் மயான பூமிகள் ரூ.10 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும்.
255 சென்னை பள்ளிகளுக்கு தலா 4 கேமராக்கள் வீதம் ரூ.7.64 கோடி மதிப் பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ மற்றும் 2 செட் சாக்ஸ் முதல் முறையாக வழங்கப்படும்.
சென்னை பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் 11-ம் வகுப்பில் சேரும் 50 மாணவர்களை இஸ்ரோ மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படும்.
மழலையர் வகுப்புகளில் இரண்டாம் ஆண்டு (யு.கே.ஜி.) பயின்று வரும் 5,944 மாணவ-மாணவிகளுக்கு மழலையர் வகுப்பை நிறைவு செய்வதற்கான பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.

புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்களுக்கு ஏற்படும் வெறி நாய் கடி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 3 வட்டாரங்களில் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் ரூ.60 லட்சத்தில் வாங்கப்படும்.
மாடுகளை முறைப்படுத்த மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் கூடுதலாக 2 நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட 82 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளில் ஓட்டுப்பணிகள் மேற்கொள்ள ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எந்திரம் வாங்கி ஒப்பந்ததாரர் மூலம் பணி மேற்கொள்ளப்படும். மேலும் 4750 சாலைகள் மற்றும் நடைப்பாதைகள் மேம்படுத்தும் பணி ரூ.404 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
2024-2025-ம் நிதியாண்டின் வருவாய் ரூ.4464.60 கோடியாகவும் வருவாய் செலவினம் ரூ.4727.12 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.252.52 கோடியாக உள்ளது.
பட்ஜெட் மீதான விவாதம் நாளை நடைபெறுகிறது.
- மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது.
- மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கும்பாபிஷேகம் செய்தார்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் மயில் வடிவ மலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த முருகன் கோவிலுக்கு கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.
அதன்படி இக்கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (21-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கும்பாபிஷேக விழாவிற்காக யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றது. இதனை மயிலம் மொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 9.15 மணியளவில் விநாயகர், பாலசித்தர், வள்ளி தெய் வானை உடனுறை முருகப் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்திகள் விமான கோபுர கலசத்தின் மீது மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கலச நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தார். மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகனுக்கு திருமண விழா நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், குப்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மயிலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தலைமையிலான பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர்.
- இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கள ஆய்வானது, நாளை காலை 9 மணி வரை நடக்கிறது.
பொள்ளாச்சி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் தாலுகா அளவில் கிராமங்களில் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று ஆனைமலை தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆனைமலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு பொதுமக்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து, ஆனைமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் நலத்திட்ட பணிகள் மற்றும் அரசால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மக்களையும் சந்தித்தார். அப்போது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர். தொடர்ந்து அவர் ஆனைமலை பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு சங்கங்கள், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், தாசில்தார் சிவகுமார் உடனிருந்தனர்.
இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கள ஆய்வானது, நாளை காலை 9 மணி வரை நடக்கிறது. இன்று இரவு ஆனைமலை பகுதியில் உள்ள சேத்துமடை கிராமத்தில் தங்கும் அவர் மக்களை நேரடியாக சந்திக்கிறார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த உள்ளார்.
- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
- சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் திருநாவலூர் ஒன்றியத்தின் மேற்குப் பகுதியான பாதூர் கிராம எல்லையில் சேஷ நதியின் குறுக்கே 2 தடுப்பணை கட்டுவது தொடர்பாகவும், உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கரும்பு விவசாயிகள் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சுமையை ஏற்றிச் செல்ல ஏதுவாகவும், குறிப்பாக செங்குறிச்சி, மதியனூர், நைனாகுப்பம், வண்டிப்பாளையம், பாதூர், டி.ஒரத்தூர், சின்னக்குப்பம் ஆகிய கிராமங்களின் விவசாயப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிகளுடன் பச்சை நிறத்துண்டு அணிந்து 3 கி.மீ. தொலைவிற்கு வயல்வெளியில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழு தலைவரின் விவசாய நிலத்தில் சந்தனமரம், செம்மரம், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் நட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வேளாண்மை உற்பத்திக்குழு மாவட்ட தலைவர் ஜோதிராமன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை.
- அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
மார்ச் மாதத்திற்குள் முதலமைச்சர் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-
மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்தும், ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- 6 ஆண்டு அரசியல் பயணம் எனக்கு நிறைய அனுபவங்களை கற்று தந்துள்ளது.
- எல்லா கட்சியும் ஒன்று சேர்ந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கட்சித்தலைவர் கமல்ஹாசன் இதில் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதன்பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று 7-வது ஆண்டில் மக்கள் நீதி மய்யம் அடியெடுத்து வைத்து உள்ளது. இந்த 7 ஆண்டுகளில் நேர்மையான அரசியலை முன்னெடுத்து சென்று உள்ளோம். அதனை பெரிய சாதனையாகவே கருதுகிறோம்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும். கெட்ட செய்தி டெலிகிராம் மூலம் வரும். நல்ல செய்தி கடிதம் மூலமாகவே வரும்.
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். அதுபற்றியும் விரைவில் உங்களிடம் தெரிவிப்போம். உங்களிடம் எதையும் சொல்லாமல் தப்பிக்க முடியாது. அதனை சொல்வது எனது கடமை ஆகும்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும் அவரை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து சொன்னது நான்தான்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் 6 ஆண்டு நிறைவில் எதை செய்யக்கூடாது என்பதையும் மற்றவர்கள் செய்யாமல் மறந்தது எது என்பதையும், நியாயமான விஷயங்களை யார் சொல்லாமல் விட்டார்கள் என்பதையும் கற்றுக்கொண்டு உள்ளோம்.
எங்களது நேர்மையை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் எங்களுக்கு டார்ச்லைட் சின்னம் வழங்கி உள்ளது.
எங்களது கட்சியின் 7 ஆண்டு சாதனை என்ன என்று கேட்கிறீர்கள். பாண்டு பத்திரங்களை நாங்கள் வாங்கியது இல்லை. கடந்த 28 ஆண்டுகளாக தூசுபடிந்து கிடந்த கிராம சபை கூட்டங்களை தூசி தட்டி எழுப்பி உள்ளோம். அதுவும் மிகப்பெரிய சாதனைதான்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
#WATCH | Chennai, Tamil Nadu | Actor and Makkal Needhi Maiam chief Kamal Hassan says, "I have already told that this is the time when you have to blur party politics and think about the nation. Anybody who thinks selflessly about the nation, my Makkal Needhi Maiam will be a part… pic.twitter.com/B9XfBmRvck
— ANI (@ANI) February 21, 2024
- பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.
- தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பா.ஜ.க. நிர்வாகி திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். பின்னர் அங்குள்ள காளாத்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும். திரு காளாத்தீஸ்வரர், ராகு, கேது பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு வந்துள்ளேன். இந்த கோவிலில் 1984 ஆண்டு சிலை கடத்தப்பட்டு அங்கு காவலுக்கு இருந்த மாணிக்க தேவரை கொலை செய்த வழக்கில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வெட்கக்கேடாக உள்ளது. தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை சிறப்பாக செய்துள்ளார். பிரதம மந்திரியின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் பேரூராட்சி பகுதியில் அமல்படுத்தப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு கிராமப்புற கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று அறிவிப்பு செய்துள்ளனர். இதேபோல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தை இந்த அரசு முறையாக செயல்படுத்தவில்லை. 2024-ம் ஆண்டுக்கு மட்டும் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கபடும். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்டு விவரங்கள் குறித்தும் பேசுவதற்கு அகில இந்திய அளவில் பாராளுமன்ற போர்டு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். நான் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மக்களுக்கு உதவாத உதவாக்கரை அரசை மக்கள் உதறித்தள்ளும் காலம் விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டிலேயே 40 சதவீதம் பேர் வாக்களிப்பது இல்லை.
- முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது.
சென்னை:
மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சி கொடியேற்றி வைத்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
* திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்றுக் கொண்டேன்.
* நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன்.
* கோவை தெற்கில் நான் தோல்வியடைய காரணம் 90,000 பேர் வாக்களிக்கவில்லை.
* நாட்டிலேயே 40 சதவீதம் பேர் வாக்களிப்பது இல்லை.
* முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது.
* எனது சொந்த காசில் தான் அரசியல் செய்து வருகிறேன்.
* என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்... போக வைப்பது அதை விட கஷ்டம்.
* என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது... அழுத்தமாக நடைபோடுவேன்.
* கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை... நஷ்டம் தான்.
* விவசாயிகளுக்கு மாநில அரசு செய்தது கூட மத்திய அரசு செய்வதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






