என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லையில் பா.ஜனதா பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு
- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
- குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நெல்லை:
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தொடர பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் 370-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் மோடி தனது பிரசாரத்தை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
வருகிற 27-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதைத்தொடர்ந்து கேரளா செல்கிறார். மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடி வருகை தரும் பிரதமர் மோடி துறைமுகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கிறார்.
அப்போது குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு அரசு திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனைத்தொடர்ந்து நெல்லையில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித்ஷா நெல்லை வந்தபோது பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்ற வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ள இடம், சாரதா கல்லூரி அருகே அமைந்துள்ள இடங்களை பா.ஜனதாவினர் ஆய்வு செய்தனர்.
பாளை கோர்ட்டு எதிரே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் இன்று ஆய்வு செய்த காட்சி
அதன் ஒரு பகுதியாக பாளை கோர்ட்டு எதிரே பெல் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தலாமா? என்று ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாறு நடத்தினால் பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்க வசதியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டு இந்த மைதானம் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாநில பா.ஜனதா அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






