என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார் புஸ்சி ஆனந்த்.
- விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:
விஜய் ரசிகர் மன்றத்தில் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் புஸ்சி ஆனந்த். இவர் புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் இயக்க பணிகளை தீவிரப்படுத்தினார். மக்கள் இயக்கத்தின் மூலம் நடைபெற்ற அன்னதானம், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார்.
தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையொட்டி புதுச்சேரியில் தனது வாக்காளர் அட்டை முகவரியை வைத்திருந்த புஸ்சி ஆனந்த் கட்சி பணிகளுக்காக தற்போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் முகவரிக்கு மாற்றியுள்ளார்.
- பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப் படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.
- அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்ப துரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சென்னை:
சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள 'டிரைடண்ட்' நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.
முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
ஒவ்வொரு கட்சியிலும் 2 பேர் சென்று தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்து அதை மனுவாகவும் கொடுத்தனர்.
முக்கியமான கோரிக்கையாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லு முல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப் படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.
இன்றைய இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.
அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்ப துரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் டி.ஜி.பி. பாலச்சந்திரன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் வக்கீல் பிரிவு தலைவர் சந்திர மோகன், ஆம் ஆத்மி கட்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, ஸ்டெல்லா மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஆறுமுக நயினார், சம்பத், தேசிய மக்கள் கட்சி யில் மாநில தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் 2 பேர் வீதம் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து தங்களது கருத்துக்களை கோரிக்கை மனுவாக வழங்கினார்கள்.
ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் 9 நிமிட நேரம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 11.39 மணி வரை நடந்தது.
ஒவ்வொரு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அங்கு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் மீண்டும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் விவரங்கள், மின்னணு எந்திரங்கள் கையிருப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளையும் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
நாளை காலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் கலந்தாலோசனை நடத்துகிறார்கள்.
- நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் நிறுவனம், டைட்டில் கம்யூனிகேஷன் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
- நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
சென்னை:
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் டிரேட் லிமிட் என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அதன் கிளை நிறுவனங்கள் சென்னை, திருச்சி, டெல்லி, விசாகப்பட்டினம் உள்பட பல நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேலும் நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம், டைட்டில் கம்யூனிகேஷன் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று காலை முதல் இந்த நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
8 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள ஐ.டி.எல். நிறுவனத்தின் கிளை அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனை முடிந்த பின்னரே, மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமி நாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
- பெருமாள்சாமியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் அருமைத் தந்தை முத்தூர்.சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.
தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமி நாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- கிராமங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் நெல் உற்பத்தி நடைபெறுவது வழக்கம்.
- நடவு பணிகள் முடிவுற்று 2 மாத காலத்தில் நெற்பயிர்களில் நெல் மணிகள் உருவாக தொடங்கும்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலமாக 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
ஆண்டு தோறும் 10 மாதங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதால் இரு போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கோபி மற்றும் அதைச்சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் நெல் உற்பத்தி நடைபெறுவது வழக்கம்.
நடவு பணிகள் முடிவுற்று 2 மாத காலத்தில் நெற்பயிர்களில் நெல் மணிகள் உருவாக தொடங்கும் நேரத்தில் வயலுக்குள் புகும் எலிகள் நெற்பயிர்களை முழுமையாக சேதப்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது.
நெல் வயல்களில் எலிகளை அழிப்பதற்காக ரசாயண மருந்துகளை பயன்படுத்தினால் நெற்பயிர்களும், மண்ணின் தன்மையும் விஷமாக மாறும் அபாயம் இருப்பதால், எலிகளை பிடிப்பதற்கு ரசாயண மருந்துகளை பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக கிட்டி வைத்தல் என்ற முறையில் விவசாயிகள் எலிகளை பிடித்து நெற்பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராகி வரும் வயல்களில் நெற்பயிர்களை சேதபடுத்தி வரும் எலிகளை விவசாயிகள் கிட்டி அமைத்து பிடித்து வருகின்றனர்.
- விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
- விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சூளகிரி:
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த கார் சூளகிரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க அந்த காரை ஓட்டி வந்தவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது காரின் பின்னால் திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
இதனை சற்று எதிர்பாராத பின்னால் வந்த கிருஷ்ணகிரி -ஓசூர் செல்லும் அரசு பஸ் ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
இந்த விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்களான அரசு பஸ் டிரைவர் திம்மராயன் (வயது50), கண்டக்டர் சிங்கமாதவன் (51), பஸ்சில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை கலா உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- வேலம்மாள் தன் மகள் கிருஷ்ணவேணி என்பவருக்கு வீடு கட்டி கொடுத்தது தெரியவந்தது.
- சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் வேலம்மாள். இவர் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலம்மாள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வகையில் வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் ரூ.45.90 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று காலை அம்பாசமுத்திரத்தில் உள்ள வேலம்மாள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் வேலம்மாள் தன் மகள் கிருஷ்ணவேணி என்பவருக்கு வீடு கட்டி கொடுத்தது தெரியவந்தது. மகள் வீடானது குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியில் உள்ளது.
இதையடுத்து மருங்கூரில் உள்ள அவரது மகள் கிருஷ்ணவேணி வீட்டில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை 7 மணிக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கிருஷ்ணவேணி, அவரது கணவர் சங்கர் மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வங்கியில் ரூ.10 லட்சம் வரை நிரந்தர வைப்பு தொகை போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. அது தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன்.
- மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ஒரு வழக்கு சம்பந்தமாக அவருக்கு சாதகமான நடவடிக்கை எடுக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.
இவர் ஏற்கனவே தனக்கு ஜாமீன் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டத்துக்கு புறம்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் என்னை கைது செய்து உள்ளனர்.
தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எனக்கு ஜாமீன் அளிக்கும்பட்சத்தில் உரிய நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைப்பேன். எனவே எனக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் வக்கீல் திருவடிக்குமார் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால் தான் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கில் குற்றபத்திரிகை தயாராக உள்ளது. இந்த சமயத்தில் மனுதாரருக்கு ஜாமீன் அளித்தால் அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பக்கூடும் என்று வாதாடினார்.
பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல், சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும் வரை மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என கோரினார். விசாரணை முடிவில், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
- தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை.
ஏற்கனவே தி.மு.க. குழுவுடன் தமிழக காங்கிரஸ் குழு ஒரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அப்போது 15 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதே தி.மு.க. தரப்பில் 'அதிகம் ஆசைப்படாதீர்கள். மற்ற கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும். எனவே தொகுதிகள் குறையும்' என்று கூறப்பட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே 9 தொகுதி குறைய கூடாது என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது அஜோய்குமார் 'காங்கிரசுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என்று வெளியே தகவல்கள் பரவுகிறது. தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் எதுவும் சொல்லவில்லை.
இதற்கிடையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல்களை சுமூகமாக பேசி முடிக்கும் வேலையில் டெல்லி தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் பேசியதில் காங்கிரசுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. டெல்லியிலும் காங்கிரசுக்கு 3 தொகுதிகள் வழங்க ஆம்ஆத்மி ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாநில வாரியாக சுமூகமாக முடிவுகள் எட்டப்பட்டு வருவதால் இந்தியா கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் தி.மு.க.வுடனும் சுமூகமாக பேசி உடன்பாடு காண முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.
அப்போது காங்கிரசுக்கு மொத்தம் 9 தொகுதிகள் வழங்கவும் ஒரு தொகுதியை கமலுக்கு கொடுக்கும்படியும் பேசியதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
- பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தை தொடங்கி வைக்கிறார்.
- தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறார்.
அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். தொடர்ந்து மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மறுநாள் (28-ந்தேதி) காலை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி துறை முகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து காணொலி காட்சி மூலம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி மைதானத்திற்கு வரும் பிரதமர் மோடி பாளை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாளையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்ட முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜை பணி பெல் மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.
விழாவில் தமிழக சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட தலைவர்கள் தயாசங்கர், தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி மற்றும் நிர்வாகிகள் வேல் ஆறுமுகம், பாபுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி 15 முறைக்கு மேல் தமிழகத்திற்கு வந்துள்ளார். தற்போது முதல் முறையாக நெல்லைக்கு பிரதமர் வருகிறார். பிரதமர் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய மன மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தாமரைக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மீண்டும் 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் எனஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பா.ஜ.க.விற்கு தருவார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போராட்டம் தொடர்பாக தமிழக அரசு நேரடியாக தலையிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஆசிரியர் சங்கம், ஓய்வூதியர் சங்கத்தினர் இணைந்து கடந்த 14-ந்தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பதிவாளரோ, துணைவேந்தரோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது சம்பளம் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை. இதனால் பேராசிரியர்கள் அலுவலர்கள் ஓய்வூதியர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் சான்றிதழ் வழங்கும் பணிகள் தினசரி வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் மாணவ-மாணவிகள் சான்றிதழ் பெற காலதாமதமாகிறது. இதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பும் தள்ளி போகிறது.
மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும், சான்றிதழ் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் மாணவ-மாணவிகளும் இப்போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போராட்டம் தொடர்பாக தமிழக அரசு நேரடியாக தலையிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
- பாராளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
- மனக்கசப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ‘வெற்றிதான் இலக்கு’ என்பதை மனதில் வைத்து நீங்கள் உழைக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.
2-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்தகட்டமாக நாளை துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு தி.மு.க.விடம் கடிதம் கொடுத்துள்ளன.
இதனால் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட இருக்கும் தொகுதிகளில் சில மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நடத்திய இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், 72 மாவட்டச் செயலாளர்கள் 234 தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் கள நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்தார். பாராளுமன்ற தேர்தல் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? பி.எல்.ஏ. 2 பாக முகவர்கள், நிர்வாகிகள் சரிவர செயல்படுகிறார்களா? என்பதையும் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பாராளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கூட்டணி கட்சியினருக்கு விரைவில் தொகுதி உடன்பாடு செய்யப்பட உள்ளது.
எனவே அவர்கள் நிற்கும் தொகுதியிலும் அதே உணர்வோடு நாம் பணியாற்றி வெற்றிபெற வைக்க வேண்டும். இதில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்க கூடாது. புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பணிகள் திருப்தியாக இருப்பதாக தெரிய வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சிறு, சிறு பிரச்சனைகள் இருப்பதாக தெரிகிறது. எனவே மனக்கசப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு 'வெற்றிதான் இலக்கு' என்பதை மனதில் வைத்து நீங்கள் உழைக்க வேண்டும்.
கலைஞர் நினைவிடம் திறப்பு விழா வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை நிகழ்ச்சி போல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் நீங்களும் வந்து பங்கு பெற வேண்டும். இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் 26-ந் தேதி முதல் வீடு வீடாக தேர்தல் பிரசாரமாக நடத்த வேண்டும்.
பாரதிய ஜனதாவின் அநீதிகள் கழக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அடிமட்ட தொண்டர் வரையிலான அனைத்து விவரங்களும் தலைமைக்கு தெரியும், தேர்தலுக்கு பிறகு பல மாற்றங்களை கழகத்திலும், அரசியலிலும் எதிர்பார்க்கலாம். பாராளுமன்ற தொகுதி வாரியாக உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் கூட்டங்களை மிக சிறப்பாக நடத்திய மாவட்ட செயலாளர்களை பாராட்டுகிறேன். தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. 4 ஆயிரத்துக்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.






