search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு: தலைமை தேர்தல் ஆணையரிடம் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தல்
    X

    தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு: தலைமை தேர்தல் ஆணையரிடம் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தல்

    • பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப் படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.
    • அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்ப துரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள 'டிரைடண்ட்' நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.

    முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஒவ்வொரு கட்சியிலும் 2 பேர் சென்று தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்து அதை மனுவாகவும் கொடுத்தனர்.

    முக்கியமான கோரிக்கையாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லு முல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

    பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப் படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.

    இன்றைய இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.

    அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்ப துரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் டி.ஜி.பி. பாலச்சந்திரன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் வக்கீல் பிரிவு தலைவர் சந்திர மோகன், ஆம் ஆத்மி கட்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, ஸ்டெல்லா மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஆறுமுக நயினார், சம்பத், தேசிய மக்கள் கட்சி யில் மாநில தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் 2 பேர் வீதம் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து தங்களது கருத்துக்களை கோரிக்கை மனுவாக வழங்கினார்கள்.

    ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் 9 நிமிட நேரம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 11.39 மணி வரை நடந்தது.

    ஒவ்வொரு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அங்கு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் மீண்டும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் விவரங்கள், மின்னணு எந்திரங்கள் கையிருப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாளையும் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    நாளை காலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் கலந்தாலோசனை நடத்துகிறார்கள்.

    Next Story
    ×