search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் தி.மு.க. நேரடி பேச்சுவார்த்தை- ஓரிரு நாளில் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று தகவல்
    X

    டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் தி.மு.க. நேரடி பேச்சுவார்த்தை- ஓரிரு நாளில் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று தகவல்

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    • தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

    ஏற்கனவே தி.மு.க. குழுவுடன் தமிழக காங்கிரஸ் குழு ஒரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அப்போது 15 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதே தி.மு.க. தரப்பில் 'அதிகம் ஆசைப்படாதீர்கள். மற்ற கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும். எனவே தொகுதிகள் குறையும்' என்று கூறப்பட்டது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே 9 தொகுதி குறைய கூடாது என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

    இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது அஜோய்குமார் 'காங்கிரசுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என்று வெளியே தகவல்கள் பரவுகிறது. தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் எதுவும் சொல்லவில்லை.

    இதற்கிடையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல்களை சுமூகமாக பேசி முடிக்கும் வேலையில் டெல்லி தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் பேசியதில் காங்கிரசுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. டெல்லியிலும் காங்கிரசுக்கு 3 தொகுதிகள் வழங்க ஆம்ஆத்மி ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒவ்வொரு மாநில வாரியாக சுமூகமாக முடிவுகள் எட்டப்பட்டு வருவதால் இந்தியா கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் தி.மு.க.வுடனும் சுமூகமாக பேசி உடன்பாடு காண முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.

    அப்போது காங்கிரசுக்கு மொத்தம் 9 தொகுதிகள் வழங்கவும் ஒரு தொகுதியை கமலுக்கு கொடுக்கும்படியும் பேசியதாக கூறப்படுகிறது.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×