என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 21 பேர் கொண்ட பட்டியலில் 11 பேர் புதுமுகம்.
- பொன்முடி மகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 21 பேரில் 11 புதுமுகங்கள் இடம் பிடித்துள்ளனர்.
வடசென்னை- கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை- தயாநிதி மாறன், தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர். பாலு, தூத்துக்குடி- கனிமொழி கருணாநிதி, வேலூர் கதீர் ஆனந்த், அரக்கோணம்- ஜெகத்ரட்சகன் போன்ற பிரபலங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, தருமபுரி தொகுதியில் செந்தில், தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் ஐந்து முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட அளவில் திமுக-வின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதுமுகம் தேவை என கட்சி விரும்பியதால் தற்போது பழனி மாணிக்கம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாவட்ட திமுகவினர் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதை விரும்பவில்லை. அவருக்கு எதிராக கட்சிக்காரர்களிடையே எதிர்ப்பு இருந்தாக கூறப்படுகிறது.
தருமபுரி தொகுதி எம்.பி. செந்தில் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், அமைப்பு ரீதியில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறத. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக முழுமையாக சட்டமன்ற இடங்களை இழந்த மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. இதனால் தருமபுரியில் கட்சியின் அமைப்புகளை வளர்க்க தவறியதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் தெய்வீக சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. அவருக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு இருப்பதால் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் சேலம் தொகுதியில் எஸ்.ஆர். பார்த்திபன், தென்காசி தொகுதியில் தனுஷ் எம்.குமார், பொள்ளா்சியில் சண்முக சுந்தரம் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- பிரபலமான 30 நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்புகளை ஆய்வு செய்தனர்.
- ஒரு மனிதனுக்கு 0.6 மில்லிகிராம் புளோரைடு தேவைப்படுகிறது.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் குறைந்தபட்ச கால்சியம், மெக்னீசியம், குளோரைடு, புளோரைடு மற்றும் சோடியம் ஆகியவற்றை நிர்ணயம் செய்ய இந்திய தர நிலைகள் நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
பிரபலமான 30 நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்புகளை ஆய்வு செய்தனர். நிலத்தடி நீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனங்களின் தண்ணீரில் மொத்த கரைந்த உப்புகளின் மதிப்பை குறைக்கிறது. 2000 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட உப்பு அளவை 56 மில்லி கிராம் வரை மட்டுமே பயன்படுத்துகிறது என்று வல்லுனர்கள் கண்டறிந்து உள்ளனர். தற்போது விற்பனையில் உள்ள பிரபலமான குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் கனிம சத்துக்கள் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 188 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் இருக்கலாம் என இந்திய உணவு தரநிலை வலியுறுத்திய நிலையில் இந்த நிறுவனங்கள் 3.5 மில்லி கிராம் மட்டுமே சேர்க்கிறது.
உணவு உட்கொள்வதில் இருந்து பல தாதுக்கள் பெறப்படலாம். அவற்றில் சில புளோரைடுகள் தண்ணீரில் மட்டுமே உள்ளன. குறைந்த புளோரைடு எடுத்துக்கொண்டால் பல் சிதைவை ஏற்படுத்தும். அதிக புளோரைடு உட்கொண்டால் பற்களில் நிறமாற்றம் மற்றும் எலும்பு பலவீனம் ஏற்படலாம் என்று ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பேராசிரியர் சுதர்ஷினி கூறினார்.
ஒரு மனிதனுக்கு 0.6 மில்லிகிராம் புளோரைடு தேவைப்படுகிறது. தரநிலை நிர்ணயம் வரம்பு 1.5 மில்லி கிராம் ஆகும். பரிசோதிக்கப்பட்ட குடிநீரில் 0.08 மில்லி கிராம் அளவே இருந்துள்ளது.
உணவு இல்லாமல் தண்ணீர் மட்டும் குடிப்பதன் மூலம் ஒருவர் 7 நாட்கள் உயிர் வாழ முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்கள் பாட்டிலில் அடைக்கப்பட குடிநீரை மட்டுமே குடித்தால் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்று சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் இளங்கோ கூறினார்.
- வேட்பு மனு பெறப்படும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டுள்ளது.
- அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி தமிழ்நாட்டில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதி, விளவங்கோடு சட்டசபை தொகுதி, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி ஆகியவற்றில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்வதற்காக அரசு அலுவலகங்களில் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக கட்டா ரவி தோகா மற்றும் உதவி தேர்தல் அதிகாரி எஸ்.தனலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு ஷெனாய் நகரில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கே.ஜெ. பிரவீன்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கவிதா நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

இதேபோல் தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.பி. அமித் மற்றும் உதவி தேர்தல் அதிகாரி பி.எம்.செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தென் சென்னையில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள் இன்று ஆர்வமுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு பெறப்படும் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டுள்ளது. அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர் வாகனம் மற்றும் 2 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
வேட்பு மனு தாக்கலின் போது விதிமுறைகளை பின்பற்றும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. மனுதாக்கல் செய்ய வரும் போது முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
வேட்பாளர்கள் நேரடியாக அல்லது முன்மொழிபவர் வழியே வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். தபாலில் வேட்பு மனுவை அனுப்ப கூடாது. முன்மொழிபவர் அல்லாத நபரிடம் கொடுத்து அனுப்பினாலும் மனு பெற்றுக்கொள்ளப்படாது.
வேட்பு மனுவை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம். ஆனால் ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியாது. அதை பிரிண்ட் எடுத்து நேரடியாக வழங்க வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் ஒருவர் முன்மொழிந்தால் போதும் சுயேட்சை வேட்பாளராக இருந்தால் 10 பேர் முன்மொழிய வேண்டும்.
அதேபோல் வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள், வழக்கு விபரம் போன்றவற்றை முழுமையாக தெரிவிக்க வேண்டும்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இடங்களில் தகராறு ஏற்படாமல் இருப்பதற்காக அதிகாரிகள் மட்டத்தில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- பாராளுமன்றத் தேர்தலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- தமிழிசை சவுந்தரராஜன் தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்றார்.
சென்னை:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் பதவியை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முழுநேர அரசியலுக்கு திரும்பி இருக்கிறார்.
பாராளுமன்றத் தேர்தலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கான பூர்வாங்க வேலைகளை டாக்டர் தமிழிசை தொடங்கிவிட்டார்.
கவர்னர் ஆவதற்கு முன்பு பா.ஜனதா கட்சியில் இருந்து விலகினார். மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டுமென்றால் கட்சியில் இணைந்து அடிப்படை உறுப்பினர் ஆக வேண்டும்.
அதற்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்றார். அங்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரிகள் கிஷன்ரெட்டி, எல்.முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
பின்னர் கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
- ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக விராட்கோலி இருக்கிறார்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சி.எஸ்.கே. கேப்டன் டோனி கடந்த 5-ந்தேதியே சென்னை வந்துவிட்டார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். தொடக்க போட்டியில் விளையாடுவதற்காக டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர். விமான நிலையத்தில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு 2-வது குழந்தை பிறந்ததால் விளையாடவில்லை. ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதற்காக அவர் பெங்களூர் வந்து அணியோடு இணைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் விராட்கோலியை பார்த்து ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர். அவர்கள் கோலி...கோலி... என்று உற்சாகமாக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக விராட்கோலி இருக்கிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
ஆர்.சி.பி. அணியின் பெயர் இந்த சீசனில் மாற்றப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்பதற்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று இனி அழைக்கப்படும்.
ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 1 மணி நேரம் கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் நடக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் கலைஞர்களின் நடனமும் இடம் பெறுகிறது. பிரபல இந்தி நடிகர்களான அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் ரசிகர்களை குதூகலப்படுத்த இருக்கிறார்கள். பாடகர் சோனு நிகாம் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
ஐ.பி.எல். தொடக்க போட்டிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனையானது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் முடங்கியதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
- மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
வருசநாடு:
வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் ஓய்ந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு வருகிறது. குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்து உள்ளனர். இதன் காரணமாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மழை கைகொடுத்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும். மூல வைகையாற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை அணைக்கு 5 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.
அணையின் நீர்மட்டம் 64.52 அடியாக உள்ளது. பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கனஅடியாகும்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. 42 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- தோல்வி பயம் காரணமாக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்.
- திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பது இல்லை. உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம்.
சென்னை:
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்வதால் தி.மு.க.வுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று விமர்சனம் செய்துள்ளாரே?
யாருக்கு காய்ச்சல் வந்துள்ளது என்று எங்கள் பொருளாளர் டி.ஆர்.பாலு தெளிவாக பதில் கூறி இருக்கிறார். அவருக்கு தோல்வி பயம் வருகிற காரணத்தலே அடிக்கடி வருகிறார். பிரதமர் வரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் வரும் பாரத பிரதமர், மழை வெள்ளம் வந்தபோது மக்களுக்கு ஆறுதல் சொல்லி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறதே? விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொது தொகுதி ஏன் வழங்கப்படவில்லை?
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரைக்கும், அவர்கள் கேட்க உரிமை உண்டு. அதற்காக தான் குழு அமைத்திருந்தோம். அந்த குழுவில் பேசி விவாதித்து பின்னர் திருப்தி அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய அளவில் உள்ள கட்சி. மற்ற மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளை சரி செய்து விட்டு தமிழ்நாட்டில் இங்கு பேசுவதற்கு கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. அதையும் உட்கார்ந்து சுமூகமாக பேசி தீர்த்துள்ளோம். அதுவும் பொறுமையாக முடித்துள்ளோம். அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு முடிக்கவில்லை.
பாஜக வளர்ந்து வருவது உண்மையா?
நீங்களே உண்மையா என்று கூறுகிறீர்கள். நான் என்ன சொல்ல...
திமுகவை கார்னர் செய்வதை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?
எங்கள் பிரசாரத்தின் மூலம் எதிர்கொள்வோம். ஏற்கனவே இருக்கும் கவர்னரே போதும் எங்களுக்கு பிரசாரம் செய்வதற்கு. இப்போது பிரதமரும் எங்களுக்கு பிரசாரம் செய்கிறார். இருவரும் சேர்ந்து திமுகவிற்கு பெரிய வெற்றியை தேடி தருவார்கள் என்பது உண்மை.
வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளதாக பாஜக கூறுவது?
இது குடும்ப கட்சி. திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப பாச உணர்வோடு அண்ணா, தலைவர் கருணாநிதி ஆரம்பித்து வைத்தது.
திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பது இல்லை. உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம்.
பாஜக 2 இடத்தை பிடிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது பற்றி?
பாஜக வளர்ந்து வருவதாக அவர்கள் சொல்லி வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்பு தெரியும். யார் நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் பெறுகிறார்கள் என்று தேர்தலுக்கு பின் தெரியும்.
தேர்தல் அறிக்கை மத்திய அரசு திட்டங்கள் போல் உள்ளதே?
எங்கள் கூட்டணி தான் மேல வரப்போகிறது. அந்த தைரியத்தில்தான் கொடுத்திருக்கிறேன்.
பிரதமர் வேட்பாளராக உங்கள் மனசாட்சிபடி யாரை முன்நிறுத்துவீர்கள்?
இந்தியா கூட்டணி வேட்பாளரை முன் நிறுத்துவேன் என்று கூறினார்.
- பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகிவிட்டது.
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புது முகங்கள் பலர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைகழகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகிவிட்டது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட்டு இருக்கிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.
எங்களது கூட்டணியில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம், மனித நேய மக்கள் கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புது முகங்கள் பலர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை மக்கள் தேர்வு செய்து நிச்சயம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள். அவர்களது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.
கே: அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை அன்புமணி ராமதாசுக்கு மேல்சபை எம்.பி. வழங்கி இருந்தீர்கள். அவர்கள் தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து இருப்பது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறதா?
ப: மேல்சபை எம்.பி. பதவி கொடுத்தது பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராததால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. அ.தி.மு.க. சொந்த காலில் நிற்கும் கட்சியாகும். கூட்டணிக்கு யாரையும் வற்புறுத்தி இழுத்து வர முடியாது.

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனியாக நின்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி கூட்டணி அமைப்பவர்களை வரவேற்போம். அதே நேரத்தில் வராதவர்கள் பற்றி கவலை இல்லை.
அ.தி.மு.க. தொண்டர்களை பொறுத்தவரை தேர்தல் காலங்களில் அ.தி.மு.க.வுக்கு உழைப்பதைவிட பல மடங்கு கூட்டணி கட்சியினருக்காகவும் இரவு-பகல் பாராமல் உழைத்து அவர்களை வெற்றிபெறவும் வைப்பார்கள்.
கே: தமிழகத்தில் பா.ஜனதா அமைத்துள்ள கூட்டணி பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: மற்றவர்கள் அமைத்து உள்ள கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு முடிவு இருக்கும். அ.தி.மு.க.வில் 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். 30 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்து இருக்கிறோம்.
2014-ம்ஆண்டு தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் இருந்தோம். எனவே தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்கள் நிச்சயம் வெற்றி பெற வைப்பார்கள்.
கே: பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தி அ.தி.மு.க. ஓட்டு கேட்க முடியாத நிலை உள்ளதா?
ப: நாங்கள் மட்டுமா அதுபோன்று பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறோம். நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் அதுபோன்று தேர்தலை சந்திக்கின்றன. இந்த தேர்தலில் தமிழக மக்கள் அ.தி.மு.க.வை நிச்சயம் ஆதரிப்பார்கள். நாங்கள் மக்களோடுதான் கூட்டணி வைத்து இருக்கிறோம்.
தி.மு.க. ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்கு கொடுத்து கடந்த முறை வெற்றி பெற்றது. 38 எம்.பி.க்கள் எதுவும் பேசவில்லை.
வருகிற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அவை தலைவர் தமிழ்மகன்உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, மாதவரம் மூர்த்தி, விஜயபாஸ்கர், வைகைசெல்வன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, முன்னாள் எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
- இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.
சென்னை:
தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும்.
* இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.
* பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.
* மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில்புதியதாக அமைக்கப்படும்.
* பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.
* ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
* மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.
* ரெயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
* இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
* சென்னையில் மூன்றாவது ரெயில் முனையம் அமைக்கப்படும்.
- வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
- 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக 68,320 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். தபால் வாக்குகள் அளிப்பவர்கள் 2-வது பிரிவில் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.
முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தனி விருப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்ப படிவங்கள் வாக்குச் சாவடிகள் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை அவர்கள் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் இன்று (புதன் கிழமை) முதல் வழங்குகிறார்கள்.
அந்த விருப்ப படிவத்தை முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஆனால் இது கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள முதியவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம்.

விருப்ப படிவத்தை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் கொடுப்பதற்கு வருவாய், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணிபுரிவது தொடர்பாக கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று கட்டவாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வீட்டுக்கு சென்று வாக்களிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசினார். அவர் 3 இடங்களில் முதியோர்களை சந்தித்து உரையாடினார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
"முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று 20, 21-ந் தேதிகளில் விண்ணப்பங்கள் வழங்கி தகவல்கள் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில் எத்தனை பேர் தங்கள் வீட்டில் இருந்த படி தபால் வாக்கு அளிக்க உள்ளனர் என்பது தெளிவாக தெரியவரும்.
வாக்குப்பதிவுக்கு முன்பு அவர்களது வீட்டுக்கு சென்று வாக்குப்பதிவு செய்யப்படும். அந்த வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டி குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
வீட்டில் இருந்து வாக்கு அளிக்க சம்மதம் தெரிவித்து விருப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்த பிறகு அந்த முதியவர் அல்லது மாற்றுத்திறனாளி தபால் வாக்கு மட்டுமே அளிக்க முடியும். கடைசி நிமிடத்தில் வாக்குச்சாவடிக்கு செல்கிறேன் என்று சொல்ல இயலாது.
இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.
- தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டி.
- கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன் போட்டி.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்விவரம் வருமாறு
வடசென்னை- கலாநிதி வீராச்சாமி
தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்
மத்தியசென்னை- தயாநிதிமாறன்
ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம்- க.செல்வம்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
வேலூர்- கதிர்ஆனந்த்
தூத்துக்குடி- கனிமொழி
தேனி- தங்க தமிழ்ச்செல்வன்
நீலகிரி- ஆ.ராசா
கள்ளக்குறிச்சி- மலையரசன்
பெரம்பலூர்- அருண் நேரு
சேலம் - செல்வகணபதி
தஞ்சாவூர்- முரசொலி
தென்காசி- ராணி
பொள்ளாச்சி- கே.ஈஸ்வரசாமி
கோவை- கணபதி பி.ராஜ்குமார்
ஈரோடு- கே.இ.பிரகாஷ்
ஆரணி- தரணி வேந்தன்
திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை
தருமபுரி- அ.மணி
வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 21 பேரில் 3 பேர் பெண்கள், 19 பேர் பட்டதாரிகள் ஆவர்.
- ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
- உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
சென்னை:
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-
* தமிழ்நாட்டிற்கு ' நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
* மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
* ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
* வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
* தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
* பாராளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
* உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
* புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
* ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
* ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
* அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
* மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






