என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே.
- பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவடி கிராமம் என்னுடைய தாய் கிராமம். நான் சிறுவனாக இருந்தபோது இந்த ஊர் வழியாக தான் திண்டிவனம் செல்வேன். இந்த கிராமத்திற்கு நான் ஒவ்வொரு முறை வரும்போதும் மக்கள் என்னை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.
ஆகவே நான் எனது தாய் கிராமமான கோவடியில் இருந்து பாராளுமன்ற தேர்தல் பரப்புரையை முதல்முறையாக தொடங்கியுள்ளேன். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜவஹர்லால் நேரு 3 முறை பிரதமராக இருந்துள்ளார். அவரது மகள் இந்திராகாந்தியும் 3 முறை பிரதமராக இருந்துள்ளார். தற்போது நரேந்திர மோடி 2 முறை பிரதமராக இருந்துள்ளார். மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக போகிறார்.

தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். இந்த கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே. குடிசையிலே வாழ்கின்ற மக்கள் நமது மாவட்டத்தில் தான் உள்ளார்கள். விவசாயிகளுக்காக கடந்து 32 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட்டை அறிவித்து வருகிறோம். மேலும் நாட்டில் குடிப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். அவரிடம் பல்வேறு திட்டங்களை பெறுவதுடன், அதில் முதல் திட்டமாக கோதாவரி கங்கை ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை பெற்று அதனை செயல்படுத்த வேண்டும்.
மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வாக்காளர்களாகிய நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் அவையெல்லாம் இல்லாமல் என்னுடைய மக்களுடன் அமர்ந்து உரிமையோடு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நோக்கிலே இங்கு வந்து உங்களிடம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளேன். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது பெண்கள்.
எனவே பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது கிராமத்தில் மட்டுமில்லாமல் தங்களது அருகே உள்ள கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பெண்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். அதற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
- டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கோவை:
ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது77). ம.தி.மு.க கட்சியை சேர்ந்த இவர் ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கணேசமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் கணேசமூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும் போது, கணேசமூர்த்தி எம்.பியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து எக்மோ கருவியை பொருத்தி அதன் மூலம் சிகிச்சை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.
இதற்கிடையே கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தனர்.
கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குத்தாலம்:
குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 16-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.
பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்ட, திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜவள்ளி பாலமுருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேரானது நான்கு வீதிகளையும் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
வடவள்ளி:
கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க கடந்த மாதம் 12-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறுவதற்கு வனத்துறை அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து நாள்தோறும் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுப்பா ராவ்(வயது57). டாக்டரான இவர் தனது நண்பர்களுடன் சம்பவத்தன்று கோவைக்கு வந்தார்.
பின்னர் வெள்ளிங்கிரி மலையடிவாரத்திற்கு வந்து மலையேற தொடங்கினார். 4-வது மலையில் நடந்து கொண்டிருந்த போது, சுப்பாராவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
அடிவாரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த 108 மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(35). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரும் தனது நண்பர்கள் 12 பேருடன் வெள்ளிங்கிரி மலையேறினார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் மலை இறங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை தேனியை சேர்ந்த பாண்டியன் (40) 2வது மலை அருகே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பிரச்சினை உள்ளவர்கள் மலையேறுவதை தவிக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது.
திருக்கடையூர்:
திருக்கடையூர் கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது.
முன்னதாக மாலை 5 மணி அளவில் திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக்காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மகா முத்துமாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர்.
ராயபுரம்:
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்றான சவுகார்பேட்டை பகுதியில் காலை முதலே வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.
பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கைகுலுக்கி ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் வண்ணப் பொடிகளை தூவியபடி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர்.
இதேபோல் வடமாநிலத்தவர் அதிகம் உள்ள புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், துறைமுகம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹோலி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒலி பெருக்கிகள் மூலம் பாடல்களை இசைக்க விட்டு இளைஞர்கள் இளம்பெண்கள் நடனம் ஆடியும் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ந்தனர்.
- பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.54 மணியளவில் தொடங்கியது. பவுர்ணமி காலையில் தொடங்கியதால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். வழக்கமாக சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் தான் பக்தர்களின் வரிசையானது கோவிலையும் தாண்டி மாட வீதியில் வரை காணப்படும். நேற்று விடுமுறை தினம் என்பதால் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
நேற்று வழக்கத்தை விட பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் பக்தர்கள் பலர் பகலில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று முடிவு செய்து வரிசையில் நின்றனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதி வரை பக்தர்கள் வரிசை நீண்டு காணப்பட்டது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தலையில் துண்டு வைத்து மறைத்தும், குடை பிடித்தபடியும் வரிசையில் நின்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதுடன் மோர் வழங்கப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தினால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
மேலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் தனித்தனியாக நேற்று கிரிவலம் சென்றனர். மாலையில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
பவுர்ணமி கிரிவலமானது இன்று மதியம் 12.55 மணி வரை உள்ளது. அதனால் பக்தர்கள் இன்று காலை வரை தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
- கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் செய்யூர் வி.சி. எம்.எல்.ஏ. பாபு 83 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றியடைந்தார்.
- ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிக ஓட்டு பெற்றுத்தரும் வட்ட கழக செயலாளர்களுக்கு 1 பவுன் தங்க மோதிரம் பரிசளிப்பதாக கூறி வருகின்றனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
ஓட்டு குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் ஒன்றிய பகுதி கழக செயலாளர்களிடம் அதிக ஓட்டு பெற்றுத் தருமாறு செயல் வீரர்கள் கூட்டத்தில் கூறி வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிக ஓட்டு பெற்றுத்தரும் வட்ட கழக செயலாளர்களுக்கு 1 பவுன் தங்க மோதிரம் பரிசளிப்பதாக கூறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் தனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செய்யூர் அருகே உள்ள புத்தூர் கூட்டுச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் சுந்தர் பேசும் போது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசியதாவது:-
கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் செய்யூர் வி.சி. எம்.எல்.ஏ. பாபு 83 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றியடைந்தார்.
தற்போது நடைபெறும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் செய்யூர் சட்டசபை தொகுதியில் இருந்து 1 லட்சம் ஓட்டுகள் பெற்றுத் தந்து வேட்பாளர் செல்வத்தை வெற்றி பெற வைத்தால் செய்யூர் எம்.எல்.ஏ.வுக்கு 5 பவுன் நகை வெகுமதியாக வழங்கப்படும் என வாக்குறுதி தருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதே போல் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காக அதிக ஓட்டு பெற்றுத் தரும் ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு தங்க மோதிரம் தருவதாக கூறி வருவது கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
- பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தொண்டி:
உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவபெருமான் கடும் தவம் இருந்தார். தேவலோகத்தில் தலைவனாக இருப்பவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் சிவனின் தவத்தை கலைக்க வேண்டும் என்று பலரையும் நாடினர். ஆனால் சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்து விடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான். தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதி தேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுதலாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று அழுது புலம்பி முறையிட்டாள். ரதிதேவியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவரிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார்.
இந்த புராண சம்ப வத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி, பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் காமன் பண்டிகையை யொட்டி காமன் மேடையில் காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படி தாரர்களால் பூஜைகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காமன் மேடையில் எரியூட்டப்பட்டு தகனம் நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர். மேலும் குழந்தை இல்லாத தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
காம தகன ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராம மூர்த்தி, நாகராஜ், ராஜாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
- சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
- பக்தர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் ஆழித்தேரோட்ட விழாவை போன்று திருவாதிரை திருவிழா, பங்குனி உத்திர திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதன்படி, இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு வலது பாதத்தை காண்பித்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூஜையில் இறைவன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடது பாதத்தையும், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வலது பாதத்தையும் காட்டுவதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த பங்குனி திருவிழாவில் முதல்நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனையும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. அதனை, தொடர்ந்து, இன்று காலை தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை, மகா அபிஷேகம் நடைபெற்று, தியாகராஜர் வலது பாத தரிசனம் காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பார்கள்.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து வலது பாதத்தை தரிசனம் செய்தனர்.
- நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
- 108 மகாதேவர் முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.அங்கிருந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி பந்தல் மண்டபம் முகப்பிற்கு வந்து அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்நதுனர். இரவு 10 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
திருக்கல்யாணத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
- பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சென்னை:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!
நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.
பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!
— M.K.Stalin (@mkstalin) March 25, 2024
நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி… pic.twitter.com/o2DC7A0JBb






