என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை பிரசாரத்திற்காக தென்காசி வருகிறார்.
- அமித்ஷா வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தென்காசி:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினரின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள நிலையில் அடுத்த வாரமும் பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரத்திற்காக தென்காசி வருகிறார். இதற்காக நாளை சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு மதியம் ஹெலிகாப்டரில் தென்காசி வருகிறார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்திற்கு நாளை மதியம் 12.30 மணிக்கு வந்து இறங்கும் அமித்ஷா அங்கிருந்து நேரடியாக காரில் பிரசாரத்திற்கு புறப்படுகிறார்.
தென்காசி மத்தளம் பாறை விலக்கு பகுதியான ஆசாத் நகர் பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரத்தை தொடங்கும் அமித்ஷா அங்கிருந்து பழைய பஸ் நிலையம் வரையிலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் 1.15 மணிக்கு காரில் மீண்டும் ஹெலிபேடு சென்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக அதே ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு செல்கிறார்.
முதலில் அவர் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அதாவது ஆசாத் நகர் தொடங்கி புதிய பஸ் நிலையம் வரையிலும் 'ரோடு-ஷோ' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வந்த நிலையில், போக்குவரத்து நெருக்கடி காரணமாக 2 கிலோமீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.
சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவரது வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே உள்துறை மந்திரி அமித்ஷா வருகையை ஒட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமித்ஷா வந்திறங்கும் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமித்ஷா 'ரோடு-ஷோ' செல்லும் சாலையிலும் போலீசார் ரோந்து வாகனங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்படுகிறது.
- தேர்தலில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அமைக்கப்படும் வாக்குச்சாவடிகள் எந்தெந்த பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும் என்ற பட்டியல் பாகம் வாரியாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நிழற் பந்தல்கள், நாற்காலிகள், குடிநீர் வசதி அமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளமும் அமைக்கப்படுகிறது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு உள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஊழியர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி விளக்கம் பெற்றுள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல்நலம் சரியில்லாத பணியாளர்கள், மருத்துவ காரணங்கள் கூறி இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எனவே தேர்தல் பணிக்கு யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. பயிற்சி வகுப்புக்கு வராத ஊழியர்கள் அடுத்து நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு வந்து விடுகிறார்கள்.
இந்த தேர்தலில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எவ்வளவு பேர் வராமல் உள்ளனர் என்ற விவரம் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் பட்டியல் சேகரித்து அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் தேர்தல் நடத்தும் ஊழியர்கள் முழுவதும் பெண்களாக இருப்பார்கள். இதேபோல் ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் பணியை முற்றிலும் மாற்றுத் திறனாளிகள் கவனிப்பார்கள்.
இளம் தலைமுறையாக உள்ள அரசு ஊழியர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் மாவட்டத்துக்கு ஒன்று அமைக்கப்படும்.
தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 702 பறக்கும் படைகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் இப்போது கூடுதலாக 191 படைகள் உருவாக்கப்படடு 893 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 702 நிலைக் குழுக்களின் எண்ணிக்கையும் இப்போது 906 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு கணக்கு வேண்டும். இந்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வணிக அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளன. இதேபோல வேறு சிலரும் மனு கொடுத்திருந்தனர்.
இவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் அதற்கு அங்கிருந்து பதில் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
- வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். இவருடைய உறவினர் நவீன் குமார் (வயது 42).
இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை திருநாத முதலியார் தெருவில் வசித்து வருகிறார்.
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ பேனர் கடை வைத்துள்ளார். மேலும் திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று இரவு வருமானவரி துறை அதிகாரிகள் நவீன் குமார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.
மேலும் நவீன் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் வரை பணம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரி துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.
- நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.
மதுரை:
முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகத்தில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகம் வருகை தரும் அவர் 3 இடங்களில் ரோடு-ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.
அதற்காக அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்கிறார். அங்கு சிவகங்கை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் யாதவிற்கு வாக்குகளை கேட்டு ரோடு-ஷோ நடத்துகிறார்.
முன்னதாக காலை 10 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழக ஹெலிபேட் தளத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பெரியார் சிலை வந்தடைகிறார். தொடர்ந்து பெரியார் சிலை முதல் அண்ணாசிலை வரை சாலையில் நடந்து சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்கிறார். அவருடன் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.
இதையடுத்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார். தொடர்ந்து தென்காசி ஆசாத் நகர் முதல் பழைய பஸ் நிலையம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று ரோடு-ஷோ மூலம் ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் அவர் நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். முன்னதாக மதுரையில் இன்று இரவு பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பிரசார திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
- மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?
சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.
கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?
இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.
இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.
- போதைப்பொருள்கள் குஜராத்தில் உள்ள 2 துறைமுகங்களில் இருந்து தான் வருகிறது.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக கோவை கணபதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ ப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியா கூட்டணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி ட்டனர். பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையுமே நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.
தற்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. அந்த போதைப்பொருள்கள் குஜராத்தில் உள்ள 2 துறைமுகங்களில் இருந்து தான் வருகிறது. அந்த துறை முகத்தை நடத்துவது யாரென பிரதமர் மோடிக்கு தெரியாதா? இந்த நாட்டை குட்டிச்சுவராக்க பா.ஜனதா துடித்துக்கொண்டு இருக்கிறது.
இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை எது சொன்னாலும் பொய் தான். தற்போது பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். இந்திராகாந்தி தேசநலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்ந்தவர். அவரை பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கிண்டல் செய்கின்றனர்.
வெஜ் பேங் என்ற ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ளட்டும். 1976-ம்ஆண்டு மார்ச் 23-ந்தேதி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம்.
வெஜ் பேங்குக்கு ஒரு ஒப்பந்தம் என்று 2 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும்.
அதுதொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? இந்திராகாந்தி போட்ட அந்த ஒப்பந்தத்தின்படி தான் கன்னியாகுமரியில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தூரத்திலும், கொழும்புவில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் தூரத்திலும் உள்ள இந்திய எல்லையில், உலகத்தில் இல்லாத அளவுக்கு கனிம வளங்கள், கடல் வளங்கள் கடலுக்கு அடியில் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். எனவே அண்ணாமலை கச்சத்தீவு-வெஜ்பேங் ஒப்பந்தம் குறித்து தெரியாமல் எதுவும் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
- 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.
- அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர்.
தருமபுரி:
பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று (4-ந் தேதி) தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.
அதன்படி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தபால் ஓட்டுப் பெறத் தகுதியான 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவில் 1897 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 1228 வாக்காளர்களும் என மொத்தம் 3125 வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர், உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர், நுண் பார்வையாளர் ஒருவர், போலீசார் அலுவலர் ஒருவர் மற்றும் வீடியோகிராபர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு வாக்காளர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குகளை பெற்று கொண்டனர்.
முதியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் காலை 7 மணி முதல் தபால் வாக்கு வழங்குதல் மற்றும் பெறும் பணியை மேற்கொண்டனர். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் தபால் மூலம் தங்களது விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்தினர்.
அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும், ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் காணொளி பதிவாக பதிவு செய்யப்பட்டது.
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரி ரமணசரன் தலைமையில் தேர்தல் நடத்தும் குழுவினர் அன்னசாகரம், கொல்ல அள்ளி, எரகாட்டு கொட்டாய், மதிகோன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 33 தபால் வாக்குகளை சேகரித்தனர். இதேபோன்று பென்னாகரம் வாணியர் தெருவில் இன்று முதற்கட்டமாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தேர்தல் நடத்தும் குழுவினர் தபால் வாக்குகளை செலுத்தினர்.
தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பதை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் நேரில் பார்வையிடலாம். இப்பணிக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியில் மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- சென்னையில் 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
- வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர்.
சென்னையில், உள்ள 39,01,167 வாக்காளர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். மொத்தம், 75,120 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதாக கூறி உள்ளனர். 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 366 பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களான 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட படிவம் 120-ன்படி வீட்டில் இருந்த படியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
மேற்படி நபர்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.
வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களின் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு எந்த தேதியில் எந்த நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மூலம் வாக்காளர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கத்தினை அளித்து அதன்பேரில் அவர்களிடம் ரகசிய வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையிலும் திங்கட்கிழமை தபால் வாக்குகள் வீடு தேடி சென்று வாங்க உள்ளனர்.
மேற்படி வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.
மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 மற்றும் படிவம் 12A ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதர மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன. இதர மாவட்டங்களில் பணிபுரிய உள்ள காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில் தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (5-ந்தேதி) முதல் 7-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் 8, 9-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 14 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 102 டிகிரி வெயில் பதிவானது.
ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-
ஈரோடு-106.16, பரமத்திவேலூர்-105.8. தர்மபுரி-103.64, திருச்சி-103.46. மதுரை விமான நிலையம்-103.1, திருப்பத்தூர்-102.92, மதுரை நகரம்-102.56, சேலம்-102.56, நாமக்கல்-102.2 வேலூர்-102.02, திருத்தணி-101.84, கோவை-101.12, சென்னை மீனம்பாக்கம்-101.76, தஞ்சாவூர்-10.04.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார்.
- பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கொடைக்கானலில் நடிகை ரோகினி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக மக்கள் நலனுக்காக தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் ஆகியவை காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். இது போன்ற திட்டங்கள் தமிழகத்தை கடந்தும் பல்வேறு மாநிலங்களில் போற்றப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு சமூக நீதி திட்டங்களால் பெண் கல்வி உயர்ந்து வருகிறது. பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் அவருக்கு அழைப்பு இல்லை. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார். இதுதான் அவர்கள் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை.
கோவிலின் கருவறைக்குள் கூட பெண்கள் வரக்கூடாது. கோவிலை நாங்கள்தான் திறப்போம் என்று பா.ஜ.க. கூறுவது எந்த விதத்தில் நியாயம். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் போது நம் நாட்டுக்காக பதக்கம் பெற்றுத் தந்த வீரர், வீராங்கனைகள் நடுரோட்டில் போராட்டம் நடத்தினர்.
ஆனால் அவர்களது கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை. பா.ஜ.க. அரசின் அடக்குமுறைகளை வெளிக் கொண்டு வருபவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல மருந்து நிறுவனங்கள் மீது புகார் எழுந்த நிலையில் தரச்சான்று வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க. அரசுக்கு ரூ.பல கோடி மதிப்பில் அந்த நிறுவனம் தேர்தல் பத்திரம் வாங்கியதால் அந்த நிறுவனத்துக்கு உடனடியாக தரச்சான்று வழங்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தியது மத்திய பா.ஜ.க. அரசு. எனவே இது போன்ற அரசை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை தமிழகம் முழுவதும் வெற்றிபெற வைப்பதன் மூலம் நாம் மத்திய அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
- அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.
மேட்டுப்பாளையம்:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- இதுவரை தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறல்கள் தொடா்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- வேட்பாளா்களின் தோ்தல் செலவினப் பணிகளைப் பாா்வையிட சிறப்பு செலவினப் பாா்வையாளராக பி.ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், கடந்த 18 நாள்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட 63,482 சுவா் விளம்பரங்கள், 14,237 சுவரொட்டிகள், 608 பதாகைகள், 2,050 இதர வகை விளம்பரங்கள் என மொத்தம் 80,377 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், தனியாா் இடங்களில் இருந்த 5,643 சுவா் விளம்பரங்கள், 7,974 சுவரொட்டிகள், 612 பதாகைகள் மற்றும் 1,160 இதர வகை விளம்பரங்கள் என 15,389 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதுவரை தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.62 கோடி மதிப்பிலான 8,589.16 கிராம் தங்கம், ரூ. 3.63 கோடி ரொக்கம், 12 'ஐ-போன்கள்' (ரூ. 15 லட்சம்), 25 மடிக்கணினிகள் (ரூ.7.50 லட்சம்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரூ.14.16 லட்சம் மதிப்பிலான 131.6 கிலோ போதைப் பொருள்கள், ரூ.28.74 லட்சம் மதிப்பிலான 1,624.28 லிட்டா் மதுபானம் என மொத்தம் ரூ. 9.90 கோடி மதிப்பிலான பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
இதுவரை, தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறல்கள் தொடா்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை 1950 மற்றும் 1800 425 7012 என்ற எண்களிலும், சி-விஜில் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் வேட்பாளா்களின் தோ்தல் செலவினப் பணிகளைப் பாா்வையிட சிறப்பு செலவினப் பாா்வையாளராக பி.ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 93452 98218 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






