என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோவையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்.
- அகில இந்திய மீனவர் சங்கம் தலைவர் சுப்பிரமணியமும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்.
இன்று காலை எடப்பாடி பழனிசாமியை தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னுசாமி, மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் சந்தித்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் கூறும்போது:-
விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி தந்ததுடன் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னெடுப்பு மேற்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
அதேபோல் அகில இந்திய மீனவர் சங்கம் தலைவர் சுப்பிரமணியமும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கினார்.
- பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.
- விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.
சென்னை:
சென்னை தங்க சாலை, அரசு அச்சகம் அருகில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய இரண்டு அணிகள் நம்மை எதிர்க்கிறார்கள் என்று மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது தோன்றும். இரண்டு அணிகளும் ஒன்றுதான். ஒரு அணிதான்.
காரணம் இல்லாமல் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். காரணத்தோடுதான் அவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு முன்னால் வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி நாள்தோறும் நரேந்திர மோடியுடனும், அமித்ஷாவுடனும் பேசிக் கொண்டிருந்தார். கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இப்பொழுது கூட்டணி இல்லை போன்று தோற்றமளிக்கிறது.
தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்று நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
அ.தி.மு.க. மேடையிலே குறிப்பாக பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியை விமர்சிப்பது கிடையாது, பாரதிய ஜனதா கட்சி மேடையிலும் அ.தி.மு.க.வை விமர்சிப்பது கிடையாது.
இரண்டு திசையிலிருந்து அம்பை எய்கிறார்கள் ஒழிய, அந்த இரண்டு அம்புகளும் நம் மீதுதான் பாய்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. ஆக தேர்தலுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு நான் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். மோடி உங்களை தழுவுவார், அது மரணத் தழுவல், உங்களை தழுவியவுடன் கூரு கூராக, உங்கள் கட்சி உடைந்து விடும். இதுதான் நடக்கும்.
மாயாவதி கட்சி இருந்த இடம் தெரியாமல் போச்சு. தெலுங்கானாவில் சந்திர சேகர் ராவ் கட்சியைத் தழுவினார். அந்த கட்சி படுதோல்வி அடைந்து இப்போ அந்த கட்சி சின்னாபின்னமாகி விட்டது.
"மரணத் தழுவல்" என்று தமிழ்ச்சொல் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேடல் எம்பிரேஸ். பாரதிய ஜனதா கட்சி யாரை தழுவினாலும், அவர்கள் பஸ்பம் ஆகிவிடுவார்கள். அந்த விளைவு தான் அ.தி.மு.க.வுக்கும் காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னாடி அந்த கட்சி ஏற்கனவே 2-3 கூறுகளாக பிரிந்து இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்த பிறகு, இன்னும் மோசமாகிவிடும். அதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.
பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் அனைத்து கட்சிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்.
பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமெல்லாம் கட்சியை முடக்க வேண்டும். கட்சி கணக்குகளை முடக்க வேண்டும். ஒடுக்க வேண்டும். பிறகு அழிக்க வேண்டும். எத்தனை கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து அழிந்து போயிருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் மாயாவதி கட்சி பீகாரில் எண்ணற்ற கட்சிகள். ஆந்திராவில் சந்திர சேகர் ராவ் கட்சி எல்லாம் அழிந்து போய்விட்டன.
அவர்கள் நோக்கம் என்ன? இந்தியாவுல நாடு முழுவதும் தடம் பதித்த காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டால் பிறகு மற்ற கட்சிகளெல்லாம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மாநில கட்சிகள் தானே? திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டின் முதல் கட்சி வலிமையான கட்சி, யாரும் மறுக்க முடியாது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக நண்பர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியிலேயே வந்ததால் ஜனநாயகம் நிலைத்திருந்தது. ஜனநாயகத்துக்காக போராடியவர்கள் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் நம்மை தலைமை ஏற்று நடத்தியதால் ஜனநாயகம் இருந்தது. அந்த ஜனநாயகத்துல தான் மோடி தப்பித்தவறி பிரதமராக வந்துவிட்டார்.
விலைவாசி உயர்வை பற்றி நான் சொல்ல வேண்டாம். நாள்தோறும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.
இந்த மூன்று ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த முத்தான திட்டங்களை நான் சொல்கிறேன். 1,15,00,000 குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை. எங்களையும் நெகிழ வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அன்று கேலி பேசினார்கள். ஆனால் இன்று நாடு முழுவதும் மதிய உணவு திட்டம் கட்டாயத்துக்கானது. அதே அளவுக்கு புகழும் பெயரும், இன்றைய தேதியை குறிச்சிக்குங்க, நேரத்தை குறிச்சிக்குங்க. பெருந்தலைவர் காமராஜருடைய மதிய உணவு திட்டம், அவருக்கு நாடு முழுவதும் புகழையும் பெயரையும் பெற்றுத் பெற்றுத் தந்ததோ அதைப்போல் காலை சிற்றுண்டி திட்டம், ஒரு நாள் நாடு முழுவதும் பரவும். நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் பெயரும், புகழும் ஓங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மேயர் பிரியா ராஜன், இந்தியா கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
- சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பட்டிப்பாடி வேலூர் ஊராட்சி சொனப்பாடி கிராமம் உள்ளது. இங்கு திரளான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இதுவரை தார் சாலை அமைக்கவில்லை. பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே இதை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
இது தவிர வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பொதுமக்கள் இன்று காலையில் ஊர் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
- தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.
- கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து அண்டை நாடான இலங்கை கடல் வழியாக 30 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக இருநாட்டில் இருந்தும் சமூகவிரோதிகள் படகு மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், தங்கம், மஞ்சள், மருந்துகள், பீடி இலைகள் போன்றவற்றை சட்ட விரோதமாக கடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது.
இதனை தடுக்க கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. தங்க கடத்தல் குறித்து தகவல் அறிந்து உடனே கடலோர காவல் படை போலீசாரும் நடுக்கடலிலேயே கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டுவரும் தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து ஒரு படகு மூலமாக ராமேசுவரத்துக்கு தங்கம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடலோர போலீசார் ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர். அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடையே ஒரு படகு சந்தேகத்திற்கிடமாக சென்றது. உடனே கடலோர போலீசார் அந்த படகை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். இதை பார்தத கடலில் இருந்த கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை கடலில் வீசியதாக தெரிகிறது. இந்த நிலையில் நடுக்கடலில் படகை மறித்த போலீசார் அதில் இருந்த 3 பேரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தங்கம் கடலில் வீசியது தெரியவந்தது. ஆனால் அதன் அளவு எவ்வளவு என்பது தெரியவில்லை.
கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணிநேரம் நடைபெற்ற தேடுதலில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாலையில் தேடும் பணி கைவிட்ட போலீசார் இன்று காலை அந்த பகுதியில் நீச்சல் வீரர்கள், கடலில் மூழ்கும் பயிற்சி பெற்ற ஸ்கூபா டை வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் மூலம் கடலில் குதித்து 2 நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் மதிப்பு எவ்வளவு? யாருக்காக தங்கம் கடத்தி வரப்பட்டது? மூளையாக செயல்பட்டது யார்? என பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய்துறை அதிகாரிகள், கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் நிலையத்தில் சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும், இங்கும் நடமாடி கொண்டிருந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
ஈரோட்டில் ரெயில் நின்ற போது முகமது ஜசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரெயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரெயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
இதனையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு நடை மேடையாக சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஈரோடு ரெயில் நிலையத்தில் சந்தேகம் படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும், இங்கும் நடமாடி கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியை சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரெயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன.
- யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுவதும், விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதுமாக அலைந்து வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை கூட்டம் உணவு-தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. யானை கூட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீரை தேடி காட்டுயானைகள் கூட்டம் அடிக்கடி சாலையோரம் வருகிறது. வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது.
எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம். அதேப்போல் யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- கோடைக் காலங்களில் அதிகமான குடிதண்ணீர் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
- தேவையை உணர்ந்து கர்நாடக அரசு கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு வழக்கம் போல் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கதக்கது.
கர்நாடகா மாநில அணையில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் கொடுக்க மனது தான் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் தண்ணீர் தேவைதான். கோடைக் காலங்களில் அதிகமான குடிதண்ணீர் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அதே நேரத்தில் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீரை தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க வேண்டும். தேவையை உணர்ந்து கர்நாடக அரசு கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
- திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல்களை கட்டி உள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பணத்தை வாரி வழங்கி வருகிறார்கள்.
இந்த பணத்தை வைத்தே கட்சி நிர்வாகிகள் தங்களுடன் வருபவர்களுக்கு செலவு செய்கிறார்கள். மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களிடம் இது போன்ற பணம் மொத்தமாக வழங்கப்பட்டு பின்னர் பிரித்து கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி அதனை கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு கொடுத்து செலவு செய்ய சொல்லி வருகிறார்கள் .
கூட்டத்துக்கு ஆட்களை சேர்ப்பது பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது என அத்தனை செலவுகளும் இந்த பணத்தை வைத்தே செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் ரூ.4 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
வேட்பாளரிடம் சென்று 500 ரூபாய் கட்டுகளாக பணத்தை வாங்கிய அந்த மாவட்ட நிர்வாகி கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பணத்தை பிரித்துக் கொடுக்காமல் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குறிப்பிட்ட கட்சியின் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் இது பற்றி கட்சியின் மாவட்ட தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை தங்களது பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களிலும் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கட்சியின் பெயர் மாவட்ட செயலாளர் ஆகியோரது பெயரையும் படத்தையும் வெளியிட்டு வேட்பாளரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றவர் தலைமறைவாகி விட்டார். கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அவர் பணத்தை பிரித்து கொடுக்க வில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
தங்களது கட்சியின் பெயரை குறிப்பிட்டு நாங்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள் இல்லை இருப்பினும் மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இதற்கு மேல் பணம் கொடுப்பதாக இருந்தால் அவரிடம் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களிடம் தனித்தனியாக பணத்தை கொடுத்து விடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் திருவள்ளூர் தொகுதி முழுவதும் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது. தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகி சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருக்கும் சம்பவத்தை பார்த்து திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறார்கள்.
- தந்தை இன்னும் 2 நாட்களுக்கு வீட்டை அடமானம் வைத்து பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
- ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவெண்ணைநல்லூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏரி வண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெயராமன் (வயது29). இவர் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அங்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி 18 லட்சம் இழந்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் பல்வேறு கோணத்தில் ஜெயராமனை நெருக்கடி செய்யவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஐதராபாத்திலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் நான் ஆன்லைன் சூதாட்டத்தில் 18 லட்சத்தை இழந்து உள்ளேன் பணத்தை கட்டாவிட்டால் என்னை போலீசில் சிக்க வைத்து விடுவார்கள். என்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என கூறியுள்ளார். அவரது தந்தை இன்னும் 2 நாட்களுக்கு வீட்டை அடமானம் வைத்து பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியிலிருந்து ஜெயராமன் தனியாக யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார் கடைசியாக அவரது அண்ணனிடம். நான் ரெயிலில் அடிபட்டு சாகப் போகிறேன் என கூறிவிட்டு சரியாக 9.50 மணியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் வந்தே பாரத் ரெயில் 15 நிமிடம் நின்றது. வந்தே பாரத் ரெயில் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் ரெயில் கிளப்பி சென்னை நோக்கி சென்றார்.
தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயராமன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆன்லைன் சூதாட்டத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
- தற்போது தேர்தல் காலம் என்பதால் ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.
திருமங்கலம்:
ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மாவட்டங்களில் மிக முக்கிய ஆட்டுச் சந்தையான திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்த ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் விற்பனையாகும் ஆடுகளின் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம், ரூ.3000 வரை விலை உயர்ந்துள்ளதாகவும், ரம்ஜான் பண்டிகையால் வரத்து குறைவு என்பதால் வேறு வழியின்றி வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது தேர்தல் காலம் என்பதால் ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் அதிக பணத்தை கொண்டு வர முடியாததால் பகிர்ந்து கொண்டு செல்வதாகவும், ஏற்கனவே எங்களை நம்பி ஆடுகளை கொடுத்து விடும் மக்களுக்கு நாங்கள் உரிய முறையில் பணத்தைக் கொண்டு செலுத்த வேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியால் அதிக தொகையை கொண்டு செல்வதில் அச்சம் நிலவுவதாகவும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகாலை 2 மணி முதல் ஆடு விற்பனை களை கட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர்.
- மத்திய அரசு திட்டம் கொடுத்தாலும் அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் இருந்து வருகிறது.
- இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
கோவை:
பா.ஜ.க மாநில தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான அண்ணாமலை சூலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள், தொழில்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு என்று மத்திய அரசு பவர் டெக்ஸ் என்ற திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறியாளர்களுக்கு சோலார் தகடுகள் 50 சதவீத மானியத்தில் கொடுக்கப்பட்டு வந்தது.
2021-ம் ஆண்டு வரை இந்த திட்டம் இருந்தது. இந்த திட்டத்தை அப்போது இருந்த எம்.பிக்கள் யாரும் அவ்வளவு ஆர்வமாக செயல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டம் கொடுத்தாலும் அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் இருந்து வருகிறது. இதுவரை இருந்த எம்.பிக்களை அதனை கண்டு கொள்வில்லை.
பா.ஜனதா வெற்றி பெற்றதும் 2024 முதல் 2026-ம் ஆண்டு வரை 2 ஆண்டுக்கு மீண்டும் பவர்டெக்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்.

சோமனூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். அம்ரூத் பாரத் திட்டத்தில் சோமனூர் ரெயில் நிலையத்தை இணைத்து, அதனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
ப.சிதம்பரம் கூறுவது போல நாட்டில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்படவில்லை. இளைஞர்கள் அனைவரும் வேலையில் தான் உள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
ப.சிதம்பரமும், அவரது தலைவருமான ராகுல் காந்தியும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர். எனவே ப.சிதம்பரம், ராகுல் தான் வேலையில்லாமல் உள்ளார் என குறிப்பிட்டு இருக்கலாம். அவர்கள் தான் வேலையில்லாமல் இந்தியா முழுவதும் சுற்றி வந்து பிரச்சனை செய்து வருகின்றனர். மற்றபடி இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பதற்றமான சாவடிகள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பறக்கும் படை சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் எவ்வளவு உள்ளன? என்பது பற்றி 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் உள்ள 68,320 வாக்குச்சாவடிகளில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது.
சென்னையிலும் 3 பாராளுமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்சென்னையில் 456 சாவடிகளும், வடசென்னையில் 254 சாவடிகளும், மத்திய சென்னையில் 192 சாவடிகளும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னையில் மட்டும் 982 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளிலும் தேர்தலின் போது துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு முந்தைய நாளான 18-ந்தேதி அன்றே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த பணிகள் அடுத்த வார இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குச்சாவடி மையத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையில் ஓட்டு போட வரும் வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் இடங்கள், வாக்குப்பதிவு நடைபெறும் இடம் ஆகியவை தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. துணை ராணுவ படையினருடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இப்படி பதற்றமான சாவடிகள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பறக்கும் படை சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.






