என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
- ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.
தருமபுரி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் டீ போடுவது, புரோட்டா மற்றும் தோசை சுட்டு தருவது, ஆட்டோ ஓட்டுவது, விவசாய நிலங்களில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பது என்று விதவிதமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ரோபோக்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஒரு ரோபோ அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அம்மு என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.
இந்த ரோபோவுக்கு அருகில் யாராவது சென்றால் அந்த ரோபோவின் கையில் உள்ள 'லேப்டாப்பில்' எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களுடன் அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்குகிறது. மேலும், மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா, தே.மு.தி.க. நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்த் ஆகியோர் பழைய பிரசார ஆடியோக்களையும் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது போலவும், குறிப்பிட்ட தூரம் மட்டும் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அந்த ரோபோ பிரசாரமும் செய்கிறது.
இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அந்த ரோபோவிடம் சென்று 'செல்பி' எடுத்து செல்கின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்வத்துடன் அதன் அருகில் சென்று துண்டு பிரசுரங்களை எடுத்து செல்கின்றனர்.
- திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி.
- எப்படியாவது முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள் 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரைக்கு ஆதரவாக தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி. இப்போதும் சுற்றுலாத் துறையிடம் ஒப்படைப்போம் என்கிறார்கள். அதற்கு விடமாட்டோம்.
அ.தி.மு.க.விடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வரவிடாதீர்கள். எப்படியாவது முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள் 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.1 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 630 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3 கோடியே 73 லட்சத்து 40 ஆயிரத்து 813 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 34 லட்சத்து 83 ஆயிரத்து 183 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 630 பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மாலை 6.30 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
- எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஆரணி, திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆரணி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜீ.வி.கஜேந்திரனை ஆதரித்து ஆரணி-சேவூர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையடுத்து மாலை 6.30 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
இதற்காக பிராமண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஆரணி, திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு அவரது மகனையும் அழைத்து செல்கிறார்.
- ’வளர்த்த கடமைக்குப் பிரசாரமாவது செய்யி’ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்” என்று பையனையும் கலாட்டா செய்தார்.
வேலூர்:
வேலூர் தொகுதியில் 'பலாப்பழம்' சின்னத்தில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் பிரசாரத்தில் சினிமாவில் வருவது போது போல தன்னுடைய பாணியிலேயே வசனங்கள் பேசி வருகிறார்.
தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு அவரது மகனையும் அழைத்து செல்கிறார். இதோ, இவன்தான் நான் பெத்த பையன். சோத்தைத் தின்னுட்டு வீட்டுல கிடந்தான்.
'வளர்த்த கடமைக்குப் பிரசாரமாவது செய்யி'ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்" என்று பையனையும் கலாட்டா செய்தார்.
நேற்று வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்த அவர் எனது சின்னம் பலாப்பழம் உங்களுக்கு இனி நோ ப்ராப்ளம் என பஞ்ச் வசனம் பேசி ஆதரவு கேட்டார்.
- ஆசிரியப் பணியிலும் இறைத்தொண்டிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்து உள்ளார் அருட்தந்தை சின்னத்துரை.
- அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், மாணவர்களுக்கும், அவரால் பயிற்றுவிக்கப்பட்ட அருட்பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் முதலிய பல சான்றோர்களை உருவாக்கிய அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை சே.ச (101) வயது மூப்பின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
ஆசிரியப் பணியிலும் இறைத்தொண்டிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்து உள்ளார் அருட்தந்தை சின்னத்துரை.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், மாணவர்களுக்கும், அவரால் பயிற்றுவிக்கப்பட்ட அருட்பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு இதுவரை 63 புகார்களும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 44 புகார் என மொத்தம் 107 புகார்கள் வந்துள்ளன.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு, செலவின கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தம் 25 பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி, டோல்பிரி எண் ஆகியவற்றில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 107 புகார்கள் வந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு இதுவரை 63 புகார்களும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 44 புகார் என மொத்தம் 107 புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் 106 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.
- 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.
கொல்லங்கோடு:
தமிழக-கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மீன பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அம்மன்கள் இருவரும் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தூக்கக்காரர்கள் குளித்து முடித்ததும் கோவிலை சுற்றி முட்டு குத்தி நமஸ்காரத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலாவதாக அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்க தேரில் அம்மன் தூக்கம் நடத்தப்பட்டது. பிறகு வரிசையாக ஒவ்வொரு தூக்கமும் நடத்தப்பட்டது. இதற்காக ஒன்று முதல் 50 வரை உள்ள தூக்கக் காரர்கள் கோவிலில் வரிசையாக காத்திருக்க, மீதமுள்ள தூக்கக்காரர்கள் கச்சேரிநடை பகுதியில் உள்ள தறவாடு வீட்டிற்கு சென்று உடல் மற்றும் முகத்தில் கரும்புள்ளிகள் குத்தி வாளும் பரிவட்டமும் வாங்கி ஊர்வலமாக திருவிழா கோவிலை வந்தடைந்தனர்.
திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு குழந்தைபேறு கிடைக்கப் பெற்றால் அவ்வாறு கிடைக்கப்பெற்ற குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டி இந்த கோவிலில் தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர் இதற்காக வடிவமைக்கப்பட்ட 48 அடி உயர தேரில் தூக்கக்காரர்கள் தொங்கியபடி நான்கு குழந்தைகளை தூக்கியபடி ஒரு முறை கோவிலை சுற்றி வலம் வர தூக்க நேர்ச்சையானது முடித்து வைக்கப்படுகிறது.

இந்த தூக்க நேர்ச்சை நள்ளிரவு நேரத்தையும் கடந்து சென்றது. அந்த வகையில் மொத்தம் 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.
இந்த திருவிழாவின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு தூக்க நேர்ச்சையானது நடத்தப்பட்டது.
தூக்க திருவிழாவை காண குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது. திருவிழாவிற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணைத் தலைவர் சசிகுமாரன் நாயர், இணைச்செயலாளர் பிஜூகுமார், உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீ குமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் உள்பட கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.
- பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார்.
- பங்குனி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது.
நாகர்கோவில்:
பைங்குளம் அருகே கீழமுற்றம் பகுதியில் உள்ள நெடுவிளை பத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் பங்குனி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை நண்பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம், பஜனை, மாலை லட்சுமி பூஜை ஆகியவை நடக்கிறது.
பங்குனி திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்கள் தினமும் காலை நவ கலச பூஜை, அம்மனுக்கு பால் மற்றும் கலசாபிஷேகம், உஷபூஜை, சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, தீபாராதனை, இரவில் சிறப்பு பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
விழாவில் 13-ந் தேதி சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், இரவு சமய மாநாடு, 14-ந்தேதி பால்குட ஊர்வலம் தொடர்ந்து அம்மனுக்கு நெய், தேன், தயிர், பால், இளநீர் அபிஷேகம், 15-ந் தேதி அம்மனுக்கு களபாபிஷேகம், இரவு மகளிர் சமய வகுப்பு மாநாடு, பரிசு வழங்குதல், 16, 17-ந் தேதிகளில் அம்மனுக்கு குங்குமம், சந்தனத்தால் அபிஷேகம், 18-ந் தேதி இரவு அம்மனுக்கு பூப்படைப்பு, நள்ளிரவில் சிறப்பு பூஜை, 19-ந் தேதி காலை அம்மனுக்கு பூப்படைப்பு, பகலில் இசக்கியம்மன் கோவில் நேர்ச்சைகள், இசக்கியம்மனுக்கு பூப்படைப்பு, சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
- பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது.
- கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டுகட்டி தரிசனம் செய்வதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு கடந்த மாதம் 3-ந் தேதி மாசிக்கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 12-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது.
தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது. ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்த பூஜை மாசி திருவிழாவின் ஆறாம் நாள், மீனபரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும்தான் இந்த பூஜை நடத்தப்படும்.
வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல் பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வலியபடுக்கை பூஜை நடந்தபோது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன.
- பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார்.
- ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து.
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஹண்டர்ஸ் சாலையில் டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஹண்டர்ஸ் சாலையில், டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மற்றும் வணிக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜெர்மியா சாலை சந்திப்பு வரையில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சாக்கடை வடிகால் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நேற்று முதல் வருகிற 13-ந் தேதி வரை வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள ஹண்டர்ஸ் சாலை - நாராயணகுரு சாலை சந்திப்பில் இருந்து ஈ.வி.கே. சம்பத் சாலை - ஜெர்மியா சாலை சந்திப்பு வரையிலும் தற்காலிகமாக மூடப்பட உள்ளது.
* ஹண்டர்ஸ் சாலையில் டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் ஜெனரல் காலின்ஸ் சாலை, மெடெக்ஸ் சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
* ஹண்டர்ஸ் சாலையில், டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மற்றும் வணிக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






