என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.
    • தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள சக்கத்தா கிராமத்தில் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு நின்ற கோத்தகிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெல்லை கண்ணனின் காரை தனிப்படை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரூ.8 லட்சத்து 500 பணம் காரில் இருந்தது. அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த பணம் ஓட்டுக்காக கொடுக்க வைக்கப்பட்டிருந்ததா அல்லது என்ன நோக்கத்திற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க தனிப்படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் குமரன் நகரில் தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று இருந்தனர்.

    அங்கு பணத்துடன் நின்ற தி.மு.க.வைச் சேர்ந்த நபரை பறக்கும் படை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து அன்னூர் போலீஸ்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் வந்து முற்றுகையிட்டனர். பிடிபட்ட நபர் பணம் எதுவும் கொடுக்கவில்லை எனவும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
    • ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை வருவதாலும் அதன்பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் மற்றும் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்த நிலையில் சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் ரூ.1,200 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    திருநெல்வேலிக்கு ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இதேபோல் கோவை, மதுரைக்கு ரூ. 2 ஆயிரம், திருச்சிக்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் விரைவான சொகுசு பயணம் என்பதால் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    நாளை(வியாழக்கிழமை) சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு 1500 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்பட உள்ளது.

    இதில் 75 சதவீத டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு மூலம் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே ஆம்னி பஸ் கட்டண உயர்வு குறித்து ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் சமூக வலைதள பக்கத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 7,154 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400-க்கு விற்பனையானது.
    • எப்படி ஒரு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    கோவை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    ஏப்ரல் 19-ந் தேதி நீங்கள் போடுகிற ஓட்டு தான் நாம் மோடிக்கு வைக்கிற வேட்டு.

    இந்த முறை பா.ஜ.க.வை விரட்டி அடித்து விட்டு, இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது. அதற்கு ஆரம்ப புள்ளியாக தமிழ்நாடு இருக்கப்போகிறது. 39-க்கு 39 வெற்றி நாம் தான் வெற்றி பெற போகிறோம்.

    மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.400-க்கு விற்பனையானது. தற்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தான்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டர் ரூ.75-க்கும், டீசல் லிட்டர் ரூ.65-க்கும் கொடுக்கப்படும் என வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். செம்மொழி பூங்கா பணிகள் விரைந்து முடிக்கப்படும், கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்படும். நகை தொழில் புத்துயிர் பெறுவதற்கு புதிய சிட்கோ பூங்கா அமைக்கப்படும், ஜி.டி.நாயுடு பெயரில் அறிவியல் ஆய்வு மையம் அமைத்து தரப்படும். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம்.

    2021-ல் தமிழக மக்கள் எல்லாரும் வாக்களித்து, ஆதரித்து, இவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர வைத்தனர்.

    தவழ்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. கடைசியில் தன்னை முதலமைச்சர் ஆக்கியவரின் காலையும் வாரி விட்டதுடன், அவர் யார் என்று கேட்டவர் தான் பழனிசாமி.

    சசிகலாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பச்சை துரோகம் பண்ணியவர் தான் எடப்பாடி பழனிசாமி. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை என அனைத்து உரிமைகளையும் பா.ஜ.கவிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார்.

    இப்போது தேர்தல் வந்ததும். பா.ஜ.க.வுடன் இருந்தால் நமக்கு வரக்கூடிய 10 ஓட்டுகளும் வராது என்பது தெரிந்ததும், நாங்கள் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து விட்டோம் என நாடகம் ஆடுகிறார்கள். அவர்களின் நாடகத்தை மக்கள் யாரும் நம்பி விடாதீர்கள்.

    2021-ல் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அந்த கால கட்டத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஒன்றே ஒன்று பண்ணினார். எல்லாரும் விளக்கு ஏற்றுங்கள். மணி அடியுங்கள். மணி அடித்தால் கொரோனா வைரஸ் ஓடி விடும் என்று சொன்னார். அதனை தவிர வேறு எதனையும் அவர் செய்யவே இல்லை.

    ஆனால் நமது முதலமைச்சர், கொரோனா காலகட்டத்தின்போது கோவைக்கு வந்து, இங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்ததுடன், அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக கொரோனா வார்டுக்குள் தைரியமாக சென்று ஆய்வு செய்தவர் தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வாக்குறுதியாக பெட்ரோல் விலையை ரூ.3 ஆக குறைப்பேன் என்று முதலமைச்சர் சொன்னார். அதன்படியே ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து போட்டு சொன்னதை செய்து காட்டினார். அதேபோல் ஆவின் பால் விலையையும் ரூ.3 குறைத்து நடவடிக்கை எடுத்தார்.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தையும் முதலமைச்சர் கொண்டு வந்தார். இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ் தான். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், திருநங்கைகள் அனைவருக்கும் இலவசமாக பயணித்து வருகிறார்கள். இப்போது அந்த பஸ்சை யாரும் பிங்க் பஸ் என்று அழைப்பதில்லை. ஸ்டாலின் பஸ் என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

    எப்படி ஒரு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. திராவிட மாடல் அரசின் வெற்றி. அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருவது பெரிய விஷயம் அல்ல. அதனை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியமானது.

    பள்ளி படிப்பை முடித்து விட்டு, கல்லூரி படிக்க செல்ல வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம். அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். கோவையில் ஒவ்வொரு மாதமும் 17 ஆயிரம் மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.

    இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் நமது முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டது தான் காலை உணவு திட்டம். தரமான காலை உணவு கொடுத்து, தரமான கல்வியை கொடுப்பது தான் நமது திராவிட மாடல் அரசு. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் 18 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

    இந்த திட்டத்தை கர்நாடகாவிலும் செயல்படுத்தியுள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுவது தான் திராவிட மாடல் அரசு. கோவை மாவட்டத்தில் மட்டும் தினந்தோறும் 80 ஆயிரம் குழந்தைகள் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

    இதேபோல் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    இன்னும் 5 மாதங்களில் அனைத்து பணிகளும் சரி செய்யப்பட்டு, விடுபட்ட அனைத்து தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கொடுக்கப்படும்.

    10 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு வரும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு ஏதாவது செய்துள்ளரா? கொரோனா பாதிப்பு, சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அப்போது பிரதமர் தமிழகத்திற்கு வந்து மக்களை சந்தித்தரா? வரவே இல்லை.

    தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு இழப்பீடு தொகை கொடுத்தது. மத்திய அரசிடம் பேரிடர் நிதியை கொடுங்கள் என கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அவர்கள் வரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவரை இனிமேல் பேரை சொல்லி அழைக்காதீர்கள். 29 பைசா என்று தான் சொல்லி அழைக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி வரி, கூட்ஸ் அண்ட் சர்வீஸ் வரி கட்டுகிறோம். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு அதனை பகிர்ந்து நமக்கு ஒரு ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி தருவது 29 பைசா தான். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் கூடுதலாக கொடுக்கிறது.

    பிரதமர் மோடி போகிற இடமெல்லாம் ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ நடத்தும் பிரதமரை மக்கள் ரோட்டிற்கு தான் அனுப்ப போகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவே இல்லை. ஆனால் அவர் இறந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் புகுந்தது. நீட் தேர்வால் இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படும் என தி.மு.க.வும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். காங்கிரசை சேர்ந்த ராகுல்காந்தியும் நெல்லை கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

    பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் சேர்ந்து காலி செய்து விட்டனர். பா.ஜ.கவின் பொய் பிரசாரம் தமிழகத்தில் எடுபடாது.

    பிரதமர் மோடி கடந்த 10 நாட்களாக தமிழகத்தையே சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மட்டுமே அவர் வருகிறார். தேர்தலுக்கு தேர்தல் அவர் நாடகம் ஆடி வருகிறார். 2019-ல் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவோம் என கூறியிருந்தனர். ஆனால் இன்று வரை மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கவில்லை.

    தி.மு.க. தலைவர், தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்லி வருகிறார். ஆமாம் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் எங்களுக்கு தூக்கம் இல்லை. மானமிகு சுயமரியாதைக்காரர்களுக்கும், இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் நடக்கும் போர் தான் இந்த தேர்தல். இதில் இந்தியா கூட்டணி ஜெயிக்க தமிழகம் ஆரம்ப புள்ளியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாக்குச் சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.
    • திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வருகிற வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினருக்கும் அவர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் இ.டி.சி. எனப்படும் மின்னணு வாக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டது.

    இது தவிர வாக்குச் சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி வரை '12-டி' படிவத்தை வீடு வீடாக வழங்கினர். பின்னர் அந்த படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டது. முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கடந்த 8-ந்தேதி முதலும், போலீசாரிடம் கடந்த 11-ந்தேதி முதல் 137 பேர் வரையிலும் தபால் வாக்கு பெறும் பணி நடந்தது.

    திருச்சி கலை அரங்கம் திருமண மண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியிலிருந்து மாநிலம் முழுவதும் இருந்து கொண்டு வரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்பட்டது.

    39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    திருச்சியில் வைக்கப்பட்டு தபால் வாக்கு பெட்டிகளை தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டார்.

    • எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது.
    • மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் இணைந்து பழங்காநத்தம், மாடக்குளம், சம்பட்டிபுரம், முடக்குச்சாலை, அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். பழங்காநத்தம் நடைபெற்ற பிரசாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். ஏராளமான பெண்கள் டாக்டர் சரவணனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து ராட்சசகிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்தனர்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்தது. மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது. ஆகவே மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், தி.மு.க. அரசு மீது ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி, மகளிர் உதவித் தொகை தொகை வழங்குவதில் குளறுபடி, எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் ஆகிய காரணங்களுக்காக மக்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை புறக்கணித்து அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய முடிவு விட்டார்கள்.

    வைகை நதிக்கரையில் இருந்து டாக்டர் சரவணன் என்ற பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து யமுனை நதிக்கரைக்கு அனுப்பி வையுங்கள் என பேசினார். அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசுகையில், "உங்கள் வீட்டுப் பிள்ளையா நினைத்து என்னை வெற்றி பெறச் செய்தால் மதுரை மக்களவைத் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவேன்" என உருக்கமான பேசினார்.

    • 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய, பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.
    • அரசியல் சட்டத்தை காபாற்ற நடக்கிற தேர்தல் இது.

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால், தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுப் பெறுகிறது.

    இதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இன்று காலை முதலே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பரப்புரை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

    அதில், நாடு காக்க- நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு! என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

    வரும் ஏப்ரல் 19ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள். நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது.

    உங்க வாக்கு உங்க தொகுதியை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு மட்டுமல்ல. 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய, பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வாக்கு.

    இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா ? வேண்டாமா ? என்று முடிவு செய்கிற தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காபாற்ற நடக்கிற தேர்தல்.

    மதம், சாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ, உங்கள் வாக்கு தான் வலிமையான ஆயுதம்.

    இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வரேன் என்று உங்களுக்கே தெரியும்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பேருந்தில் மகளிர் இலவச பயணம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கும், உங்கள் திராவிட அரசின் சாதனைகள் இந்தியா முழுக்க எதிரொலிக்க இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரமே களம் இறங்கி உள்ளார்.
    • பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்த சிவகங்கை மக்களை தேவநாதன் யாதவ் நேரில் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

    சிவகங்கை:

    சிவகங்கை சீமை என்றதும் ராணி வீரமங்கை வேலுநாச்சியார், மாமன்னர் மருதுபாண்டியர்கள், வீரத்தாய் குயிலி போன்றோரின் வீரம் எக்காலத்திலும் போற்றத்தக்கது. இவர்கள் சிவகங்கையின் அடையாளங்கள் என்றே கூறலாம்.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பொறுத்தவரை எம்.பி.யாக தற்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரமே களம் இறங்கி உள்ளார். பா.ஜனதா கூட்டணி சார்பில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனர் தேவநாதன் யாதவ், அ.தி.மு.க. சார்பில் பணங்குடி சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

    இந்த முறை கார்த்தி சிதம்பரத்திற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு நிலவியது. மேலும் கார்த்தி சிதம்பரம் கிராமப்புறங்களுக்கு சென்று மகளிருக்கு ஆயிரம் ரூபாய், 100 நாள் வேலைத் திட்டம், ஏழைப் பெண்களுக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்பதையெல்லாம் சொல்லி வாக்கு கேட்கிறார். ஆனால் மக்கள் கார்த்திக் சிதம்பரத்தை எதிர்த்து கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்கள். பல கிராமங்களில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிர்ப்பு இருப்பதால் வாக்கு சேகரிக்க முடியமால் திணறிவருகிறார்.

    காங்கிரஸ் வேட்பாளரான தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்கு கேட்டு சென்ற ப. சிதம்பரத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் களமானது பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்த சிவகங்கை மக்களை தேவநாதன் யாதவ் நேரில் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.

    அண்ணாமலையின் தீவிர பிரசாரம், மோடியின் திட்டங்கள், களத்தில் தீவிர வேலைப்பாடு, கூட்டணியின் பலம் என தேர்தல் களத்தில் முன்னேறி வருகிறார் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ்.

    • முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
    • வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, ''தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்'', "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.

    எனது இந்த சுற்றுப் பயணத்தின்போது, மக்களைப் பாதுகாக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை நிரூபிக்கின்ற வகையில் கோடானு கோடி மக்கள் திரண்டிருந்து, எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே, முரசு சின்னத்திற்கே என விண்ணதிர முழக்கமிட்டது, இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோர வேண்டும். மேலும், நம் முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

    வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும். வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும்.

    எனதருமை வாக்காளப் பெருமக்களே,

    அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் வெற்றிச் சின்னமாம் ''இரட்டை இலை'' சின்னத்திலும்; தே.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ''முரசு'' சின்னத்திலும்; விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு ''இரட்டை இலை'' சின்னத்திலும், உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.
    • சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் இன்று கடைசிநாள் பிரசாரத்துக்கிடையே அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    ஆள்பலம், பணபலம் இல்லாமல் தேர்தலில் நான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். 1980-ல் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனாப் அப்துல்சமது சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.

    அதே பள்ளப்பட்டி தான் எனக்கு சொந்த ஊர். அங்கு தான் நான் படித்து வளர்ந்தேன். மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவினை கொடுத்து வருகிறார்கள். எனவே நான் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன். பாரதிய ஜனதாவிடம் பணம் வாங்கி கொண்டு வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தலில் நிற்கிறேன் என வதந்தி பரப்புகிறார்கள்.

    ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறேன். சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள். பல பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாக உள்ளனர். அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
    • துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (19-ந்தேதி) நடைபெறுகிறது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை முழுவீச்சில் செய்துள்ள நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதை தொடர்ந்து தொகுதிகளில் தங்கியுள்ள வெளி மாவட்டத்தினர் அனைவரும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதையும் மீறி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்பில்லாத தொகுதிகளில் தங்கியிருந்தால் அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு பிறகு லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை போலீசார் மேற்கொள்கிறார்கள்.

    நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 1½ லட்சம் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரம் போலீசார் இன்று வருகை தருகிறார்கள். இவர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவர்களை தவிர துணை ராணுவ படையினர், ஓய்வுபெற்ற ராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாகவே 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க உள்ளனர்.

    தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவ படையினரை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இதில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் ஏற்கனவே வந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவ படையினரையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில போலீஸ் சார்பில் 2 நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களும் இன்று வருகை தருகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது தெரிய வந்துள்ளது.

    மதுரையில் 511 சாவடிகளும், இதற்கு அடுத்தபடியாக தேனியில் 381 வாக்கு சாவடிகளும் பதற்றமானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற சாவடிகள் அனைத்திலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினருடன் கூடுதல் போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்.

    பதற்றமான சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலையில் துணை ராணுவ படையினர் மற்றும் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

    இன்று மாலையுடன் பிரசாரம் ஓயும் நிலையில் நாளை யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பதால் அதனை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் சந்தேக நபர்கள் மற்றும் ரவுடிகளை பிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

    இதற்காக வாகன சோதனை மற்றும் லாட்ஜூகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முன்எச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நாளில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    • நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார்.
    • பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதையும் அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    நான் இங்கு உங்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக வரவில்லை. உங்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். கடந்த ஒரு வருடகாலமாகவே உங்களை சந்திக்க வேண்டும். உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தேன்.

    இருப்பினும் என் மண், என் மக்கள் யாத்திரை, பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இறுதிகட்ட பிரசாரமான நாளை எங்கும் செல்லக்கூடாது. உங்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி உங்களை பார்ப்பதற்காகவே இன்று வந்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். மற்றொரு நாளில் உங்களை வந்து கட்டாயமாக சந்திக்கிறேன் என்றார்.

    இந்த வார்த்தையை பேசியபோது, அண்ணாமலை திடீரென கண் கலங்கி விட்டார். இதனை பார்த்த முதியோர்கள் அவரை ஆறுதல் படுத்தினர். ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி அவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு ராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய, அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறுகையில் ராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சி அளிக்கிறார். 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி பெருவிழா கடந்த (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை மங்கல இன்னிசையுடன் பல்லக்கிலும், மாலை வண்ண மின் விளக்குகள் ஒளிர இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை வந்தடைந்தது.

    அதனைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனமும், புஷ்பயாகமும், மறுநாள் 21-ந்தேதி ராஜ உபசார திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

    ×