search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி பெருவிழா தேரோட்டம் கோலாகலம்
    X

    ராமநவமி பெருவிழாவையொட்டி கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி பெருவிழா தேரோட்டம் கோலாகலம்

    • 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு ராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய, அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறுகையில் ராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சி அளிக்கிறார். 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி பெருவிழா கடந்த (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை மங்கல இன்னிசையுடன் பல்லக்கிலும், மாலை வண்ண மின் விளக்குகள் ஒளிர இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை வந்தடைந்தது.

    அதனைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனமும், புஷ்பயாகமும், மறுநாள் 21-ந்தேதி ராஜ உபசார திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

    Next Story
    ×