என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.
- தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கோட்'படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படமான கில்லி 20 ஆண்டுகளுக்கு பிறகு மீ்ணடும் நேற்று திரைக்கு வந்துள்ளது.
தமிழகமெங்கும் கில்லி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூரை அடுத்த ஜடையனூரை சேர்ந்த விஜய் ரசிகரான கதிர்வேல் என்பவர் கில்லி படம் மீண்டும் திரைக்கு வந்த மகிழ்ச்சியில் விஜய்யை பற்றி 10 ஆயிரம் வரிகள் கொண்ட ஒரு முழு கவிதையை 36 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.
விஜய் ரசிகரின் இந்த சாதனையை கேரள மாநிலத்தை சேர்ந்த யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர்கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்து விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி இருக்கிறது.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 23-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
24 மற்றும் 25-ந்தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
26.04.2024 மற்றும் 27.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று முதல் 25-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும், இதர தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 25-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- திருத்தணி, முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும்.
- தேரோட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
திருத்தணி:
திருத்தணி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் புலி வாகனம்,
வெள்ளி மயில் வாகனம், சிம்ம வாகனம், ஆட்டுக்கிடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் கோவில் மாட வீதியில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மரத்தேரினை கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து கோவில் மாட வீதிகளில் இழுத்து வந்தனர், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா அரோகரா என்ற கோஷம் மலைக்கோவில் முழுவதும் பக்தி மயமாக காட்சி அளித்தது.
கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் திரிபுராந்தக சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 23-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் இந்த பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாளான நேற்று காலை திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திரிபுராந்தக சுவாமி, திரிபுரசுந்தரி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர். இரவு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் நாகேஸ்வர சாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபா ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு உற்சவ மூர்த்திகளான நாகவல்லி சமேத நாகேஸ்வரர் சாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
- தொடர் போராட்டம் காரணமாக வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
- போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தொடர் போராட்டம் காரணமாக வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணிகள் தொடங்கியது.
போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகின்றது.
- 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரத்திற்கு ஒரு காரில் 3 பேர் இன்று காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இவ்விரு கார்களும் மொளச்சூர் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தைலாபுரம் செல்லும் காரில் வந்த ஒருவரும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காரில் வந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 4 பேரையும், அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். தொடர்ந்து மீதமிருந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 வழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது எப்படி? இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயிலாடுதுறையில் இருந்து சுமார் 74 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது.
- சிறுத்தையை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அரியலூர்:
மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தானியங்கி கேமராக்கள் பொருத்தியும், கூண்டுகள் வைத்தும் சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
ஆனால் அங்கிருந்து குற்றாலம் பகுதிக்கு சிறுத்தை இடம் பெயர்ந்தது. காஞ்சிவாய், பேராவூர், நண்டலாறு, வீரசோழன் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் 89 நவீன கேமராக்களும், 7 குண்டுகளும் வைக்கப்பட்டது. இருப்பினும் சிறுத்தை சிக்கவில்லை.
இந்நிலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 74 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகி இருந்தது. இதனால் அரியலூர் செந்துறை, மஞ்சுநாதபுரம் பகுதிகளில் உள்ள முந்திரி தோப்பு, கால்வாய் என 11 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. போலீசார் மற்றும் வனத்துறையினர் 45 பேர் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை யார் கண்ணிலும் படவில்லை.
தற்போது சிறுத்தை எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து சிறுத்தையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். குத்தாலம் பகுதியில் 4 இடங்களில் கூண்டு, 20 இடங்களில் கேமராக்கள், அரியலூர் மாவட்டம் குன்னூர் வனப்பகுதி, மங்காரம் ஓடை பகுதியில் 2 இடங்களில் கூண்டு, 15 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி வனத்துறை வட்டாரத்தினர் கூறியதாவது:-
மயிலாடுதுறை பகுதியில் உலாவிய சிறுத்தை கடலூர் அல்லது விழுப்புரம் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கலாம். இது புலி மாதிரி ஒரே இடத்தில் இருக்காது. நகர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மனித நடமாட்டம் இருந்தால் பதுங்கிக் கொள்ளும். சத்தமே காட்டாது. இரவிலேயே அதிகம் நடமாடும். அதனால்தான் சிறுத்தையை அதிகமாக யார் கண்ணிலும் சிக்கவில்லை. சிறுத்தையை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைய தேவை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "ஹஜ்ரத் முகமது ஷா காதிரி ஒலியுல்லா" அவர்களின் 351-ம் ஆண்டு கந்தூரி எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஜமாத்தார் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவளம் முஸ்லிம் ஜமாத்தார் மற்றும் மீனவ சமுதாய மக்கள் செய்திருந்தனர்.
- வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
- சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.
ராயபுரம்:
ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை
விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினார்கள். இதனால் காசிமேட்டுக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க இன்று காலையில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பெரிய மீன்கள் எதுவும் இல்லாததால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
மேலும் விலையை பொருத்தவரை சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.400-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், கவளை மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.
- காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னி மங்கலம் மாதாகோயில் தெரு சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது 41). இவர் ஜல்லிக்கட்டு வீரர். இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவியும் 15 வயதுக்குட்பட்ட 2 மகன்களும் உள்ளனர். அருண்ராஜ் ஜல்லிக்கட்டு வீரர் என்பதால் ஜல்லிக்கட்டு காளை அடக்குவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தயாளன் உள்ளிட்டோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பான முன் விரோதத்தில் கடந்த பிப்ரவரி மாதம் லால்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது அருண்ராஜை தயாளன் தரப்பினர் தாக்க முயன்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு அருண்ராஜ் வாக்கு செலுத்த சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள பாசன வாய்க்கால் கரையில் மது அருந்தி கொண்டிருந்த தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ் உள்ளிட்டோர் அருண் ராஜை வழிமறித்து கட்டையால் தலையில் தாக்கினர்.
இதில் அருண்ராஜ் பலத்த காயம் அடைந்தார். உடனே தயாளன் உள்ளிட்ட் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அருண்ராஜின் மனைவி லாரன்ஸ் மேரி கொடுத்த புகாரின்பேரில் தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ், அலெக்சின் சகோதரர் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அருண்ராஜ் உடல்நிலை இன்று காலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகி றார்கள்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமார கோவில் திருப்பணி முடிந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி யாகம், கோ பூஜை, லஷ்மி ஹோமம், நவகரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை யாகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, பிரம்மசுத்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்ட்டது. பின்னர் கைலாய இசை வாசிக்கப்பட்டு கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பி சாமியை வணங்கினர். கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.
- கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை மற்றும் சித்திரை என ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் இரு வேளைகளில் உற்சவர் வீரராகவ பெருமாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் வீரராகவ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் அதிகாலை 5.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. பனகல் தெரு, குளக்கரை வீதி, பஜார் வீதி, வடக்குராஜ வீதி, மோதிலால் தெரு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இந்த விழாவில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ன பக்தி பரவசத்துடன் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 9-வது நாளான வருகிற 23-ந்தேதி காலை தீர்த்தவாரி நடக்கிறது. 10-வது நாளான 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
- தமிழகத்தில் நியாயமான வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை.
- தி.மு.க.வினரின் இந்த ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்குப்பதிவு நாளன்றே அம்பலப்படுத்தி உள்ளார்.
சென்னை:
தமிழக பா.ஜனதா சார்பில் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் என்றாலும், உண்மையிலேயே தேர்தலை நடத்துவது மாநில அரசு அதிகாரிகள் தான். ஏனெனில் தேர்தல் ஆணையத்திற்கு என்று தனியாக கட்டமைப்பு இல்லை. அது உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறு குழு மட்டுமே.
தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்த்தல், இறுதிப்பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவு என தேர்தலை நடத்தி முடிப்பது தமிழக அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும் தான். மாவட்ட ஆட்சியர்கள் தான் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் முழுக்க முழுக்க தி.மு.க. வினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
கோவை உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர்களாக தி.மு.க. நியமித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நியாயமான வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் நடைபெற்ற குளறுபடியில் இருந்தே இதை நன்கு உணர முடிகிறது.
தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் மூலம் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கூடிய வட இந்தியர்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகளை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நீலகிரி, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தென் சென்னை, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் போட்டியிடும் திருப்பூர், பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ் போட்டியிடும் வடசென்னை, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம் போட்டியிடும் மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொகுதிக்கு தலா ஒரு லட்சம் வாக்குகள் வீதம் நீக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
தி.மு.க.வினரின் இந்த ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்குப்பதிவு நாளன்றே அம்பலப்படுத்தி உள்ளார்.
எங்கெல்லாம் கொத்துக்கொத்தாக கடைசி நேரத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களோ, அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






