என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
    • ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று இரவு வெட்டி கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிவேதனுக்கு எந்த ஒரு ஒப்பந்த வேலையும் வாங்கி தரவில்லை.

    குளித்தலை:

    குளித்தலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் நிவேதன் (வயது 31). இவர் சொந்தமாக தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் இவருக்கு பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இதையடுத்து மணிகண்டன், நிவேதனிடம் தமிழ்நாடு அரசின் எர்த் ஒர்க் காண்ட் ராக்ட் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

    இதனை நம்பிய நிவேதன், மணிகண்டனிடம் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிவேதனுக்கு எந்த ஒரு ஒப்பந்த வேலையும் வாங்கி தரவில்லையாம்.

    வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மணிகண்டன் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிவேதன் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் குளித்தலை போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி லட்சுமி கமலாதேவி மீது வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு சென்றனர்.
    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, தி.மு.க., நாம் தமிழர் கட்சியினரை சமாதானப்படுத்தினர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தொரவி கிராமத்தில் தி.மு.க.வினர் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் பிரசாரத்தில் ஈடுபட திரவுபதி அம்மன் கோவில் அருகே ஒன்று திரண்டு நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு சென்றனர். தி.மு.க.வினர் நிற்பதை பார்த்த நாம் தமிழர் கட்சியினர், அங்கே நின்று பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது தி.மு.க.வை தாக்கி பேசியதால் தி.மு.க.வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, தி.மு.க., நாம் தமிழர் கட்சியினரை சமாதானப்படுத்தினர். இருந்த போதும் போலீசாரின் முன்னிலையிலையே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் நெட்டித் தள்ளிக்கொண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
    • தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற் நுட்பக்கல்வி, ஐ.டி.ஐ. படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில், மலைப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், துறைச் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில் தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    13.2.2024 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட 200 பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    பயிற்சி ஆணைகள் பெற்ற 200 பழங்குடியின இளைஞர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பயிற்சி நிறுவனத்தின் மூலம் மூன்று மாதக்காலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

    பயிற்சியின்போது அந்த இளைஞர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் அனைத்தும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.

    திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற இளைஞர்களில், 146 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனமான ரானே ஆட்டோ மோடிவ் இந்தியா லிமிடெட் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தலைச் சிறந்த இந்திய நிறுவனங்களின் மூலம் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வழங்கி, வாழ்த்தினார்.

    பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட 146 இளைஞர்களில், 106 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் ஆவர்.

    • கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. 3-வது இடத்தை பிடித்தது.
    • தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் குறைந்ததற்காக எடப்பாடி பழனி சாமி வருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    கோவை:

    முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் கடந்த மாதம் என்னை பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்து குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த வழக்கில் இன்று ஆஜர் ஆனேன். நேற்றும் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அவர் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்து தொடர்ந்து கிளைச் செயலாளர் போல் செயல்படுவதையே காட்டியுள்ளார்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. 3-வது இடத்தை பிடித்தது. தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 2-வது இடம் பிடித்தார். ஆனால் இதற்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட 50 ஆயிரம் வாக்குகள் அண்ணாமலை குறைவாக தான் பெற்றுள்ளார் என்று கூறி உள்ளார். சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட போது அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது.

    இதை மறந்து எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறியிருப்பது தி.மு.க.வின் வெற்றிக்கு மகிழ்ச்சியை தெரிவிப்பது போல் உள்ளது. தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் குறைந்ததற்காக எடப்பாடி பழனி சாமி வருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    ஒரு கட்சியின் தலைவர் என்பவர் அனைவரையும் அரவணைத்து சென்று கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பவராக இருக்க வேண்டும். யாருக்கு என்ன பதவி கொடுப்பது, யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்று முடிவு செய்பவராக இருக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீர் குலைந்து வருகிறது. நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் கொலை, நேற்று முன்தினம் சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகி, நேற்று சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்த வேண்டும். கள்ளச்சாராய சாவு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

    போட்டியிடாததன் மூலம் அ.தி.மு.க. ஓட்டுக்களை பா.ம.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எடப்பாடி பழனிசாமி மாற்றி விட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்.
    • மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை வளர்க்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம், உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்; உடற்கல்வி வகுப்புகளை வேறு ஆசிரியர்கள் யாரும் கடன் வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார். ஆனால், அவரது நண்பர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக இருக்கும் பள்ளிக்கல்வித் துறையோ, உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆணையிட்டுள்ளது. இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா?


    பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும்.

    மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் கொலை, கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது.
    • தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடி கொண்டிருக்கிறது.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை, தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

    * சுவையான மாம்பழம் இருக்கும் மரத்தில் கல்லடி படத்தான் செய்யும்.

    * தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

    * தமிழகத்தில் கொலை, கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது.

    * நேற்று தேசிய கட்சியின் மாநிலத்தலைவரை அவரது வீட்டு வாசலில் வைத்து கூலிப்படையினர் வெட்டி கொலை செய்துள்ளனர்.

    * தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடி கொண்டிருக்கிறது.

    * தமிழகத்தில் சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்று கூறினார்.

    • மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இப்போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    போராட்டத்தில் பேசிய துரைமுருகன், ''ஒன்றிய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்று சட்டங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. நாக்கில் தர்ப்பைப் புல்லை தேய்த்தாலும் இந்த வார்த்தைகள் வாயில் வராது. இந்த கொடுமை வேண்டாம் என்பதற்காகதான் ஆதியிலிருந்து இந்தியை நாம் எதிர்க்கிறோம்" என்று பேசினார்.

    இதனையடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "பிரிட்டிஷ் காலனிய சட்டங்களை தூக்கி எறிவதாக சொல்லித்தான் இச்சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையில் காலனிய சட்டங்களை இயற்றிய மெக்காலேவுக்கும் சர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸுக்கும் இவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 90 முதல் 95 சதவிகிதம் வரை அந்தச் சட்டங்களிலிருந்து copy அடித்து இதில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • கடந்த சில நாட்களாக விசாரணை மந்தமாக நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திசையன்விளையில் முகாமிட்டுள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

    ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது. இதற்கிடையே நேற்று திசையன்விளை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துறை நிர்வாகி விவேக் முருகன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். 2 பேரிடமும் 4 அதிகாரிகள் கொண்ட குழு தலா 2 மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தியது.

    அப்போது அவர்களிடம் ஜெயக்குமாருக்கு ஏதேனும் பெண்களுடன் தொடர்பு இருந்ததா? அவருடன் யாரேனும் அடிக்கடி உடன் வருவார்களா? அவர் தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களுடன் ஜெயக்குமாருக்கு எந்த வகையில் பழக்கம் இருந்தது என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு 2 பேரும் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    இதனால் கடந்த சில நாட்களாக விசாரணை மந்தமாக நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனிடையே இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திசையன்விளையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே ஒரு வேன் மற்றும் 3 ஜீப்புகளில் திசையன்விளை சென்று விசாரணையை தொடங்கினர்.

    செல்லும் வழியில் மணியன்குடி என்ற கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி விசாரித்து விட்டு பின்னர் கரைசுத்துபுதூர் நோக்கி விரைந்தனர். சுமார் 30 போலீசார் வந்துள்ளதால் திசையன்விளை சுற்றுவட்டார பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தற்போது சரண் அடைந்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
    • இல்லம் அருகே மாநில தலைவர் கொல்லப்பட்டது தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் மிகப்பெரிய சவால்

    சென்னை:

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சமூக விரோத கும்பலால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

    * ஏழை, எளிய மக்களுக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் ஆம்ஸ்ட்ராங்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தற்போது சரண் அடைந்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை.

    * சரணடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்று இருந்துவிடாமல் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள், கொலை செய்ய தூண்டியவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    * இல்லம் அருகே மாநில தலைவர் கொல்லப்பட்டது தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் மிகப்பெரிய சவால்

    * பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைத்து அஞ்சலி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

    * பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
    • கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது நகலூர் கிராமம். இங்கு கலியுக ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

    நகலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தனர். இந்த கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கோசலராமன் திடீரென கோவிலுக்குள் சென்று மூலவரான ரங்கநாதர் சாமி சிலை மீது அமர்ந்து தான் கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

    அதனைத்தொடர்ந்து அங்கு இருக்கும் பூசாரி ஒருவர் கோசலராமன் மீது பாலை ஊற்றி பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர்.
    • போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா புகைத்தபடி வாலிபர்கள் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவில் 2 வாலிபர்கள் போதை அதிகரிக்கவே அவர்களை மற்றவர்கள் தூக்கிச் செல்வது போலவும், அதற்கேற்றபடி சினிமா பாடலும் இடம் பெற்றிருந்தது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர். அப்போது கஞ்சா போதையில் வீடியோ பதிவிட்டது பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்திக், பாலசுப்பிரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகியோர் என தெரியவரவே அவர்களை கைது செய்தனர்.

    இவர்கள் அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிலும் சாமி வேடமணிந்து ரீல்ஸ் பதிவிட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மதி, கஞ்சா விற்பனை செய்த பாலசமுத்திரத்தை சேர்ந்த பாஸ்கர், முத்துராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இதுபோல குடிபோதை மற்றும் கஞ்சா போதையில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×