என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்க தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள் கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். இதற்காக பக்தர்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதே போல் பேய்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபம், தனுஷ்கோடி கடற்கரை, கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார்.
    • விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து ரூ 1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து அவர் விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி. இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று உத்திர உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    • கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.
    • மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதாபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கனவாய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள், மற்றும் கோழித்தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கனவாய் ரூ.400, நன்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 விலை இருந்து வந்தது.

    இந்த நிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற பின்னர் இறால் ரூ. 350-400, நன்டு ரூ. 250, கனவாய் ரூ. 180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றினைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை குறைந்துள்ளனர்.

    இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.

    இதனால் படகுகளை இயக்க முடியாத நிலையில் கடந்த 8-ந்தேதி முதல் காலவரையற் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்கள் ஆன நிலையில் பெரும்பால மீனவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்லும் தங்களுக்கு இலங்கை கடற்படை அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்கவும். பிடித்து வரும் இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • கடல் வழியாக கஞ்சா, புகையிலை, பீடி இலைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
    • போலீசார் வேதாளை பஸ் ஸ்டாப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்த கடல் வழியாக தங்கம், கஞ்சா, புகையிலை, பீடி இலைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களாகன கடல் குதிரை, திமிங்கல எச்சம் போன்றவையும் கடத்தப்படுகிறது. இந்த நிலையில் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதிக்கு இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடல் அட்டைகள் கொண்டு வருவதாக மண்டபம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வேதாளை பஸ் ஸ்டாப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்த போது அதில் 5 மூடைகளில் 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது. இதுதொடர்பாக மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த வாகன ஓட்டுநர் சுல்தான் மகன் சாகுல் ஹமீது (37) போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்திருந்த தாக தெரிய வந்தது, இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • பட்டாசு ஆலையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வந்துள்ளார்கள்.
    • பன்னீர்செல்வம் மற்றும் குணசேகரன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வந்துள்ளார்கள்.

    கடந்த 9-ந் தேதி இந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்க மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த முத்து முருகன், மாரியப்பன் ஆகிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

    மேலும் விபத்தில் சிக்கிய சரோஜா மற்றும் சங்கரவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பலத்த தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகவேல், மேலாளர் பன்னீர்செல்வம், போர் மேன் குணசேகரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் பன்னீர்செல்வம் மற்றும் குணசேகரன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு சரோஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அதிகாலை சங்கரவேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.200-ம் நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும் விற்பனையானது.

    இந்நிலையில் வார இறுதி நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,440-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,805-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வீராணம் ஏரி சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
    • ஏரி நீர் நிறம் மாறியது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பசுமை தீர்ப்பாயம் விளக்கம் கேட்டுள்ளது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வீனஸ் மதகில் தொடங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ. தூரமும் 5 கி.மீ., பரப்பளவில் 32 பாசன மதகுகளை கொண்டுள்ளது. 1,468 மில்லியன் கனஅடி. (47.50 அடி) கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 1,300 மில்லியன் கனஅடி (46 அடி) தண்ணீர் உள்ளது.

    இந்த ஏரிமூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. தற்போதுவரை சென்னைக்கு 73 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. கடந்த 17-ந் தேதி மேட்டூரில் இருந்து 2,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 26-ந் தேதி கீழணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து சேருகிறது.

    இந்நிலையில் தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுகிறது. இதனை கண்டு விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரி நீரை மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ஏரி நீர் நிறம் மாறியது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பசுமை தீர்ப்பாயம் விளக்கம் கேட்டுள்ளது.

    ஏரி நீர் நிறம் மாறியிருப்பதால், விவசாயிகள் கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவும், பொதுமக்கள், குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தவும் அச்சப்படுகின்றனர். எனவே, ஏரியின் நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணத்தை ஆராய்ந்து பொதுமக்கள், விவசாயிகளின் அச்சத்தை போக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 

    • தாம்பரத்தில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12615) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.
    • சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மதுரையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12651) நாளை முதல் செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் நிற்காது.

    திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (09420) நாளை முதல் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17651) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17643) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12615) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    தாம்பரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12759) தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் அனைத்தும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிற்காது. சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்லும்.

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி, காலை 9.20 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 24 சிறப்பு மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.
    • வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

    இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைத்து, அறையை பூட்டி சீல் வைத்தார்.

    இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்படும்.
    • பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு.

    தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாகமின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.

    மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏற்படும் என்பதால், சிரமங்களை குறைக்க பொது மக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படுகிறது.

    அதன்படி, சென்னையில் இன்று முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணாசாலை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அண்ணாசாலையில் உள்ள ஒயிட்ஸ் சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலையின் ஒரு பகுதி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஹோட்டல், வாசன் அவென்யூ, ரஹேஜா டவர், ஜிபி சாலை ஒரு பகுதி, சத்திய மூர்த்தி பவன், இபி காம்ப்ளக்ஸ், ஈபி லிங்க் சாலை, கிளப் ஹவுஸ் சாலை, சிட்டி டவர், பட்டுலால்ஸ் சாலை, அண்ணாசாலையின் ஒரு பகுதி , எக்ஸ்பிரஸ் அவென்யூ, கலைக் கல்லூரி, பின்னி சாலை, விசி சாலை, ஹோட்டல் காஞ்சி, டிஎல்எஃப் இன் ஒரு பகுதி, இந்தியன் வங்கி, ஃபகான் கட்டிடம், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி பேங்க், மதுரா வங்கி, ஐஓபி வங்கி, பின்னி சாலை, ராணி மெய்யம்மாள் விடுதி மற்றும் திருமண மண்டபம் , ஏர் இந்தியா, அப்பல்லோ மருத்துவமனை, மார்ஷல் சாலை, மான்டித் சாலை, கனரா வங்கி, கன்னர்மாரா ஹோட்டல், ஐஓபி வங்கி, டேட்டா சென்டர், தாஜ் ஹோட்டல், அண்ணாசாலை பகுதியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி பகுதியில், சிப்காட் I, II மற்றும் IV, பஞ்செட்டி, ஓபிஜி, பிர்லா கார்பன் மற்றும் துல்சியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சிப்காட் தொழில்துறை வளாகம், சிப்காட் பைபாஸ் சாலை, புதிய GPD, கங்கன் தொட்டி, பாப்பான் குப்பம், சிந்தலக்குப்பம், சித்தராஜ கண்டிகை, பெத்திகுப்பம், எலாவூர், பெரியகுப்பம் ஓபுலாபுரம், சுன்னம்புகுளம், எட்டூர், கொண்டமநல்லூர், நாயுடுகுப்பம், ஆரம்பாக்கம், எழுமதுரை, கும்மிடிப்பூண்டி பஜார், புதிய ஜிபிடி, வேர்காடு, ஏனாதிமேல்பாக்கம், பெத்திக்குப்பம், மா.பொ.சி. நகர், ஆத்துப்பாக்கம், மங்காவரம், ரெட்டம்பேடு, குருவியாகரம், நத்தம், டவுன் கும்மிடிப்பூண்டி, ஜிஎன்டி சாலை, பெத்திக்குப்பம் ரயில்வே பாலம், பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி., நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், பாலவாக்கம், பாலவாக்கம், சோலியம்பாக்கம். , மங்காவரம் மற்றும் குரு வியாகரம் கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தற்போது காவிரி அணைகளில் 60 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது
    • சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது.

    சென்னை:

    கர்நாடகத்தில் இந்த முறை இயல்பான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அணைகளில் 28 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு பற்றாக்குறையாக உள்ளது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம். அதனால் இந்த மாத இறுதி வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என்று கூறினோம். ஆனாலும் அந்த குழு, தினமும் ஒரு டிஎம்சி நீர் தமிழகத்திற்கு திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    தற்போது காவிரி அணைகளில் 60 டி எம் சி நீர் இருப்பு உள்ளது. இது எங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. அதே நேரத்தில் கடந்த 3 நாட்களாக கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த உத்தரவை எதிா்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து ஆலோசிக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்துள்ளோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளார்.

    கர்நாடக அரசின் இந்த முடிவு தமிழக விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் காவிரிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

    காவிரியில் தினமும் ஒரு டிஎம்சி நீர் இந்த மாதம் (ஜூலை) இறுதி வரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

    இந்த ஒழுங்காற்று குழு என்பது தமிழ்நாடு குழு அல்ல. தமிழகம், கர்நாடகம் என 2 மாநிலத்திற்கும் பொதுவான குழு. இது சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட குழு.

    இந்த குழு கர்நாடக அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பை கணக்கெடுத்து கர்நாடகத்தின் தேவைக்கு போக தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்வது சிறுபிள்ளைகள் விளையாடுகிறபோது அழுகுணி ஆட்டம் ஆடுவதுபோல் இருக்கிறது. இதே ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு கூட பாதகமாக பலமுறை கருத்து சொல்லி இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டால் உருவாக்கப்பட்ட ஒழுங்காற்று குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் ஆணையை எதிர்த்து சொல்வது போன்றதாகும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு சொல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுமைக்கும் பொதுவானது.

    தமிழ்நாட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு வழி தெரியும். இந்த விவகாரத்தில் பிரச்சனை எழாமல் இருக்க ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்துவதுதான் அண்டை மாநிலங்களுக்கு இடையே நட்புறவை பலப்படுத்துவதாக இருக்கும். இது தெரியாதவரல்ல கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா. அதுபோலவே நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருக்கும் இது நன்றாக தெரியும்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    • 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன.
    • சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.

    மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    சென்னையில் மழை இரவு முழுவதும் நீடித்தது. இந்நிலையில், சென்னையில் இரவில் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன.

    சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.

    சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் வானிலை காரணமாக பல மணி நேரமாக தாமதமாகி வருகின்றன.

    ×