என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அண்ணாமலை மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் உழைக்கக்கூடியவர்.
    • மக்கள் உங்களை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

    சென்னை:

    பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த உடன் மிகவும் பயந்தது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான். அவரது வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவ்வப்போது அவரை குறை சொல்லி பேசுவதும் விமர்சிப்பதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்களுக்கும் இன்றைய நிர்வாகிகளுக்கும் பொழுதுபோக்காக இருந்தது.

    பாஜக-அண்ணா திமுக கூட்டணி இருக்குமா இல்லையா என்பதை ஒருபோதும் பாஜக பேசாத போதும், ஏதோ பாஜக அண்ணா திமுக தான் எங்களுக்கு வேண்டும் என்று அழுது அடம் பிடித்ததை போல இவர்களே கதவுகளை மூடி விட்டோம். ஜன்னல்களை மூடிவிட்டோம், நாங்கள் பிஜேபியை விட்டு ஓடி விட்டோம் என்று கதை அளந்து கொண்டிருந்தார்கள்.

    கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சாதனை படைத்த அண்ணாமலை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்று அமைத்து தமிழகத்தில் ஒரு சாதனை படைத்து விட்டார். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 80 லட்சம் வாக்குகளும் பாஜகவிற்கு மட்டும் 50 லட்சம் வாக்குகளும் கிடைத்தது. ஏறத்தாழ 7300 பூத்துகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திமுகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார்கள். 12 நாடாளுமன்ற தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார்கள். பல்வேறு தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு டெபாசிட் பறிபோனதை நாம் பார்த்தோம். இவையெல்லாம் தமிழக பாஜக எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    இவற்றையெல்லாம் உற்றுநோக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஏதாவது ஒரு பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு தவறான தகவலை முரண்பட்ட தகவலை அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய தகவலை தொடர்ந்து பேசி வந்தார்கள். இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் எங்கள் கட்சியில்லை.

    அண்ணாமலை மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் உழைக்கக்கூடியவர். ஆற்றல் மிக்கவர் அப்படிப்பட்டவரை விமர்சிக்கிற பொழுது அதற்கு பதில் சொல்லாமல் அவர் கடந்து போக முடியாது. அப்படி பதில் சொல்கிற போது இவர்களுக்கு எல்லாம் வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது. இவர்களுடைய மனங்களில் பதட்டம் ஏற்படுகிறது.

    ஏற்கனவே நான்காக சிதறி இருக்கக்கூடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, போன்ற தலைவர்கள் இல்லாத நிலையில் தொண்டர்கள் பரிதவித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இவற்றின் வெளிப்பாடு தான் எங்கள் தலைவரை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.. இன்றைக்கு உதயகுமார். கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, முனுசாமி போன்றவர்கள் எல்லாம் வாய்க்கு வந்தபடி, மனசுக்கு வந்தபடி பேசுகிறார்கள். வசை பாடுகிறார்கள். இதன் மூலம் நாங்களும் அரசியலில் இருக்கிறோம் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதை காட்டுவதற்காகவே அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது அவர்களுடைய இயலாமையை தான் காட்டுகிறது.

    அண்ணாமலை சொன்னது போல வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நான்காவது இடத்தை இப்பொழுதே ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து பேசுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க தயாராக இல்லை. உங்கள் மீது இருக்கக்கூடிய ஊழல் வழக்குகளை ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்திலே அடுக்குவோம். உங்கள் மீது இருக்கிற வழக்குகள் விரைவுப்படுத்துவதற்கு நீதிமன்றங்களை நாடுவோம். உங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை நாட்டு மக்களுக்கு கொண்டு வருவோம். ஏதோ உங்கள் விமர்சனங்களுக்கு எல்லாம் பயந்து அரசியல் செய்யாமல் இருந்து விடுவோம் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

    நீங்கள் தமிழக அரசியலில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அண்ணா திமுகவில் எழுச்சிமிக்க தலைவர்கள் இல்லை என்று அதிமுக தொண்டர்கள் மனம் நொந்து போய் இருக்கிறார்கள் புரட்சித்தலைவி அம்மாவை தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்டு ஒரு தலைவர் "அம்மா" என்று குறிப்பிட்டு பேசுகிறார் என்று சொன்னால் அது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான். அவர் மீது காட்டிய உண்மையான அன்பும் பாசமும் அனைவரும் அறிந்ததே.

    அப்படிப்பட்ட பிரதமரை இப்பொழுது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புகழாத நாளே இல்லை. இப்படி சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முடிவு செய்துவிட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் மன்றத்திலிருந்து தூக்கி எறியப்பட போவது உறுதி.

    பதிலுக்கு பதில் நீங்கள் பேசுவதற்கு திரும்ப பதில் சொல்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நீங்கள் என்னதான் கூறினாலும் கூச்சல் போட்டாலும் உங்களால் இனிமேல் வெற்றி பெறவே முடியாது. மக்கள் உங்களை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தன்மானத் தலைவர் அண்ணாமலை தலைமையில் 2026 தேர்தலை சந்திக்கத்தான் போகிறோம். அதற்கு முன்பாக வருகிற உள்ளாட்சி தேர்தல்களையும் சந்திக்க தான் போகிறோம்.

    புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான நோக்கம். லட்சியங்களை செயல்படுத்தக்கூடிய இயக்கம் பாரதிய ஜனதா கட்சி தான் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். எனவே வழக்கு, நீதிமன்றம். செயற்குழு பொதுக்குழு இவையெல்லாம் தற்காலிகமாக பதவியில் அமர்வதற்குத் தான் பயன்படுமே ஒழிய மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒருபோதும் பயன்படப்போவதில்லை. அப்படி ஒரு கனவு இனிமேல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கக் கூடாது. இருக்க முடியாது. வார்த்தைகளை அளந்து பேசுங்கள் நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் அண்ணாமலை இன்றைக்கு மக்கள் தலைவர், அவரை விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • வீடுகளில் இருந்த பொருட்கள், பீரோ ஆகியவை நகர்ந்ததாக தெரிவித்தனர்.
    • பொதுமக்கள் பலர் தூங்காமல் தவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த சத்தத்துடன் பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதில் நில அதிர்வு ஏற்பட்டபோது கடையின் ஷட்டர், தகரம் சீட்டுகள் குலுங்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

    திருப்பூர் காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குறிப்பாக நேற்று மாலை நில அதிர்வு உணரப்பட்ட போது பல்வேறு வீடுகளில் பொருட்கள் நகர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் தங்களது பகுதியில் பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு, இயற்கையாகவே ஏற்பட்ட நில அதிர்வா? இல்லை கல்குவாரியில் பாறைகளை பெயர்ப்பதற்காக வைக்கப்பட்ட வெடிச்சத்தமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று மாலை ஊரே குலுங்கும் வகையில் அதி பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தமானது சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உணர முடிந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர். அப்போது வீடுகளில் இருந்த பொருட்கள், பீரோ ஆகியவை நகர்ந்ததாக தெரிவித்தனர்.

    இந்த வெடி சத்தமானது வானில் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதால் ஏற்பட்ட சத்தமா? அல்லது தாராபுரம் அருகே புகளூர் பவர் கிரிட் நிறுவனத்தில் அதிக சக்தி கொண்ட மின் டிரான்ஸ்பார்மர்களில் மின் அழுத்தத்தால் ஏற்பட்ட சத்தமாக இருக்குமா? அல்லது நில அதிர்வு காரணமா? என ஒருவருக்கு ஒருவர் செல்போன் மூலம் விசாரித்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல் துறை, வருவாய் துறை சார்பில் முறையான விளக்கம் பொது மக்களுக்கு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    பயங்கர சத்தம் கேட்டதும் தாராபுரம் நகர் குடியிருப்பு பகுதியில் இருந்த பொது மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்தபடி வெளியே அதிர்ச்சியுடன் ஓடி வந்தனர். தாராபுரம், மூலனூர், குண்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இரவு முழுவதும் பொதுமக்கள் பலர் தூங்காமல் தவித்தனர் .

    இது குறித்து பொது மக்கள் கூறுகையில்,

    தாராபுரம் நகர் பகுதியில் வீட்டில் இருந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயங்கரமான வெடிசத்தம் கேட்டது. இந்த வெடிச்சத்தம் மூன்று முறை தொடர்ச்சியாக கேட்டது. ஒரு நிமிடங்கள் வரை சத்தம் நீடித்தது.

    இதுகுறித்து வெளியில் வந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர்களும் வெடிச்சத்தம் கேட்டது என தெரிவித்தனர். அதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்களுக்கு எதனால் வெடிச்சத்தம் ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

    மீண்டும் வெடிச்சத்தம் கேட்குமோ? என பயத்தில் உள்ளோம். இதய நோயாளிகள், பலவீனமானவர்கள் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த வெடிச்சத்தம் பாதிப்பை ஏற்படுத்துமோ? என அச்சமாக உள்ளது. இரவில் நிலநடுக்கம் அல்லது கல் குவாரிகளில் ஆழ்துளையிட்டு வெடி வைக்கிறார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா என அதிகாரிகள் விசாரித்து பொதுமக்களின் பதட்டத்தை போக்க வேண்டும். புவியியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

    இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாநகர் மற்றும் தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட பயங்கர சத்தம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சூலூர் விமான படை தளத்தில் இருந்து பறக்கும் போர் விமானங்களால் அவ்வப்போது பயங்கர சத்தம் கேட்டது. நேற்று ஏற்பட்ட சத்தம் போர் விமானங்களால் ஏற்படவில்லை. எனவே அது குறித்து இன்று ஆய்வு செய்கிறோம். நில அதிர்வு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சத்தத்திற்கு பிறகு ஒரு மணி நேரத்தில் அசாம் மாநிலத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 2ஆக பதிவாகி உள்ளது. எனவே நில அதிர்வு ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றனர்.

    • மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே உள்ளது.
    • வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே காளை மாட்டு சிலை ரவுண்டானா உள்ளது. இந்த பகுதி ஈரோட்டின் மைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எப்போது பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த வழியாக கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பகுதியாக அமைந்துள்ளதால் பஸ்கள், கார், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.

    அதே போல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம், கடை வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வானங்கள் பெரும்பாலும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது. கொல்லம் பாளையம், சோலார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் செல்லும் மக்கள் காளை மாட்டு சிலை வழியாக சென்று வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் 24 மணி நேரமும் இருந்து கொண்டே உள்ளது.

    மேலும் இந்த ரவுண்டானா பகுதியில் தமிழர்களின் வீர விளையாட்டை குறிக்கக்கூடிய ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் காளை மாட்டை வாலிபர் அடக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிலை ஈரோட்டின் மையப்பகுதியில் மிகவும் கம்பீரமாக இருந்து வருகிறது. இந்த சிலை ஈரோட்டின் நினைவு சின்னமாகவும் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காளை மாட்டை அடக்கும் இந்த சிலையை முதியவர் ஒருவர் கயிறு கட்டி இழுத்து கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் காளையை அடக்குபவரிடம் அவர் பேசுவது போன்றும் அவர் தொடர்ந்து காளை மாட்டு சிலையை கயிறு கட்டி சுற்றி கொண்டே இருந்தார்.

    இந்த வீடியோ தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் ஈரோட்டில் இருக்கும் காளை மாட்டின் உரிமையாளர் கிடைத்து விட்டார் என்றது போன்ற பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வீடியோவில் முதியவர் காளையை அடக்குபவரிடம் பேசுவது போன்றும்காளை மாட்டை அடக்கியதற்கு பாராட்டு தெரிவிப்பது போன்றும் காட்சி பதிவாகியுள்ளது.

    அந்த முதியவர் மது போதையில் இருந்தாரா? என தெரியவில்லை. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர். இதையடுத்து அந்த முதியவர் அங்கு இருந்து சென்று விட்டார்.

    • இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
    • இன்னொரு வேண்டுகோள் வழிவிட்டு வழி நடத்தி கைபிடித்து கூட்டி செல்ல வேண்டும்.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் தி.மு.க. பொறியாளர் அணி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலைவாணர் அரங்கத்தை இரண்டு நாட்கள் குத்தகை எடுத்துக்கொண்டு மிக சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி இருக்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்ற புத்தகத்தை நமது முதலமைச்சர் வெளியிட்டார். இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி.

    அதில் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட 45 நிமிடம் நம்முடைய தலைவரைப் பற்றியும், கலைஞரைப் பற்றியும் பாராட்டி பேசினார்.

    அதன் தொடர்ச்சியாக பொறியாளர் அணி சார்பில் நிகழ்ச்சி நடக்கிறது. அண்ணன் பொன்முடி பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்.

    அவருக்கு ஒரு ஏக்கம் என்ஜினீயரிங் படிக்க முடியவில்லையே என்றார். எனக்கெல்லாம் அந்த ஏக்கம் இருந்தது கிடையாது. நான் அதற்கான முயற்சி எடுக்கவே இல்லை.

    நாங்கள் படிக்கும் போதெல்லாம் எம்.பி.பி.எஸ். பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று நினைப்போம். எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங் பக்கமே போக மாட்டோம். நேராக பி.காம் முடித்து விட்டு அப்படியே பிசினஸ் பார்க்க போய் விடுவோம்.

    அதே மாதிரி அண்ணன் பொன்முடி பேசும்போது சொன்னார் தயாநிதி மாறனுக்கு மூத்தவர்களை கண்டால் பிடிக்கவே பிடிக்காது என்றார். அப்படியெல்லாம் கிடையாது. நான் ஏன் இதைசொல்கிறேன் என்றால், அண்ணன் தயாநிதி மாறனே எனக்கு மூத்தவர்தான். எனக்கு எல்லோருமே சமம்தான். இன்னும் சொல்லப் போனால் இங்கு இருப்பதிலேயே மிகவும் சின்னவன் நான்தான்.

    தி.மு.க. இளைஞரணி அறிவித்து கிட்டத்தட்ட 17 ஆயிரம் மாணவர்கள் கலைஞரின் உயிரினும் மேலான பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

    இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். நம்ம பக்கம் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். நாம்தான் அவங்களுக்கு வழிவிட்டு அரவணைத்து அவங்களை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இன்னொரு வேண்டுகோள் வழிவிட்டு வழி நடத்தி கைபிடித்து கூட்டி செல்ல வேண்டும்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் பேசும்போது எதற்கு அதிகமான கைத்தட்டல்கள் என்பதை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். நான் சொல்லக்கூடாது. நான் சொன்னால் ஏதோ மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறேன் என்று நினைத்து கொள்வீர்கள். தொலைக்காட்சிகளில் நீங்களே பார்த்திருப்பீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை இளைஞரணியினர் வரவேற்கும் நிலையில் மூத்தவர்களுக்கு இப்போது 'கிலி' ஏற்பட்டு உள்ளது.

     

    ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தும் இதே கருத்தை வலியுறுத்தி துரைமுருகனை பார்த்து பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அமைச்சர் துரைமுருகனும் காட்டமாக பதில் தெரிவித்திருந்தார். அதன் பிறகே இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அண்ணா கட்சி ஆரம்பித்த காலத்தில் தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு 35 வயதுதான். ஆனால் இப்போது 50 வயதை தாண்டியவர்கள்தான் அதிகம் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் கூட இப்போது 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதனால்தான் இளைஞரணியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல ரஜினிகாந்தும் அதை வலியுறுத்தி இருக்கிறார்.

    எனவே இந்த கருத்துக்களால் தி.மு.க.வில் மாற்றங்கள் தொடங்கி விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். அதனால்தான் கட்சியில் மூத்தவர்களுக்கு இப்போது 'கிலி' ஏற்படுகிறது" என்றார்.

    • சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் செல்கிறார்.
    • நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புவார்.

    சென்னை:

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.

    இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

    இதற்காக அண்ணாமலை நாளை (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்கிறார்.

    3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.

    • போலீசார் சமீம் கடையை ஆய்வு செய்ததில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம்:

    லப்பைக்குடிக்காட்டில் போலியாக வாக்காளர் அட்டையை தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அபுபக்கர் தெரு பேரூரை சேர்ந்தவர் முகமது சமீம் (வயது 33). இவர் அங்கு கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தெற்கு தெருவை சேர்ந்த அபுதாஹிர் மகன் சாஜித் என்பவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணபிக்க வாக்களர் அடையாள அட்டையை பதிவு செய்து உள்ளார்.

    3 மாதமாகியும் அட்டை வராததால், கம்பியூட்டர் சென்டரில் சென்று கேட்டுள்ளார். முகமது சமீம் உடனடியாக வாக்காளர் அட்டையை தயார் செய்து கொடுத்துள்ளார். இதனை கொண்டு சாஜித் பாஸ் போர்ட் பெற விண்ணப் பித்துள்ளார்.

    பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்பின் போது, சாஜித்தின் வாக்காளர் அட்டை போலி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வேறு ஏதேனும் அரசு ஆவணம் உள்ளதா என கேட்டுள்ளனர். பின்னர், தபாலில் வந்த வாக்காளர் அட்டையை கொடுத்துள்ளார்.

    பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முதலில் கொடுத்த வாக்காளர் அட்டை போலி என்பதால் இது குறித்து, லப்பைக் குடிக்காடு வி.ஏ.ஓ ஐயப்பனிடம் புகார் செய்யப்பட்டது. அவர் இதுபற்றி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் முகமது சமீம் கடையை ஆய்வு செய்ததில் அங்கு இதுபோல ஏராளமான போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் வீரன் (47), என்பவர் பக்ரைன் நாட்டில் இருந்து, தனது மனைவி விஜயலட்சுமி மூலம் பாஸ்போர்ட்டை போலி வாக்களர் அட்டை மூலம் விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்தது.

    தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதை தொடர்ந்து முகமது சமீம் மீது குற்றப்பிரிவு 330/2024 u/s 318(2), 318(4), 336(3),340(2) பி.என்.எஸ். ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்பு அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் சிறப்பு வார்டுகள்.

    சென்னை:

    சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் குரங்கம்மை நோய்க்கான சிறப்பு சிகிச்சை வார்டுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை நோய் இங்கும் பரவி விடாமல் தடுக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இதுவரை யாருக்கும் இந்த தொற்று இல்லை. தொடர்ந்து விமான நிலையங்களில் கண்காணித்து வருகிறார்கள்.

    குரங்கம்மை அறிகுறியுடன் யாராவது வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    10 படுக்கைகளுடன் தொற்று நோயை தகுந்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளுடன் இந்த வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. உயிரிழப்புகள் கடந்த 3 ஆண்டுகளை விட குறைந்து உள்ளது.

    இந்த ஆண்டு தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களை கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாநகரில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோரால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    இதனை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சொந்த வாகனங்களில் மது அருந்த வருவோர் திரும்பி செல்லவதற்கு வசதியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுபான கூடங்களுக்கு கோவை மாநகர போலீசார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 3 நாட்கள் மாநகரில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 126 இருசக்கர வாகன ஓட்டிகள், 18 கார்களில் வந்தவர்கள் உள்பட 52 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதை தடுப்பு தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை பார் உரிமையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

    பார்களுக்கு சொந்தமாக வாகனம் ஓட்டி வருபவர்கள் திரும்ப செல்லும் போது மது அருந்தி இருந்தால் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இருப்பினும் மதுக்கூட உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மது கூடத்திற்கு மது அருந்த வருவோர், கார் உள்ளிட்ட சொந்த வாகனத்தில் வந்தால் அவர் ஓட்டுநருடன் வர வேண்டும் என்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மது அருந்திய ஒருவர், ஓட்டுநர் இல்லாத சூழலில், அவர் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவரை தொடர்புடைய பார் சார்பில் ஏற்பாடு செய்து மது அருந்தியவரின் சொந்த வாகனத்திலேயே அவரை வீட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மது அருந்த பார்களுக்கு வருபவர்கள், வேறு போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனரா? என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர் தான் என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.

    மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

    பார்களில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்த வேண்டும். மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய பார் நிர்வாகம் தவறி, அதன் மூலம் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தொடர்புடைய மதுக்கூடத்தின் மீது சட்டப்படி நடவடிக்கையுடன் மதுக்கூட உரிமமும் ரத்து செய்யப்படும்.

    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி முதல்முறை பிடிபட்டால் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

    அதே தவறை 2-வது முறையாக செய்வோர் மீது ரூ.15 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.

    இதில் தொடர்புடையவர்களின் வாகனம் முடக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வர தொடங்கி உள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    பெருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

    இவர்கள் வெயில் நேரங்களில் ஓய்வு எடுத்தும், காலை மற்றும் மாலை நேரங்களில் மாதா பாடல்களை பாடியவாறும் நடைபயணம் மேற்கொள்வர்.

    அதன்படி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை கடந்து பேராலயம் சென்றடைவர்.

    அவ்வாறு, இரவில் சாலையில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக விபத்தில்லாமல் சாலைகளில் நடந்து செல்லும் வகையில் அவர்களது பைகள், உடைமைகளில் இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதன் மூலம் எதிர்பாராத வகையில் ஏற்படும் அசம்பாவிதங்கைளை தடுக்கலாம். இதற்கு மக்கள் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    • 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • புதிய பொருட்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தற்போது தினசரி 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்புசத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீலநிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்கப்படுகின்றன. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், மோர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின் பாலகங்கள், சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    ஆவின் பால் மற்றும் பால்பொருட்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர, புதிய பொருட்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கடந்த வாரம் நிருபர்களிடம் கூறும்போது, "மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகியவற்றை விரைவில் மக்களுக்கு கொடுக்க உள்ளோம்" என்று தெரிவித்து இருந்தார்.


    இந்நிலையில், இந்த 3 புதிய பொருட்கள் தொடர்பாக தீவிர ஆய்வு நடைபெறுகிறது. இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆவினில் மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகிய 3 புதிய பொருட்களை அறிமுகப்படுத்த ஆராயப்படுகிறது. இதற்காக ஒரு தொழில்நுட்ப குழு, இவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ஆவின் சார்பில் ரோஸ் மில்க் அறிமுகப்படுத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுபோல, இந்த 3 பொருட்களுக்கு எங்கு எல்லாம் தேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, சோதனை அடிப்படையில் விநியோகிக்கப்படும். தேவை அடிப்படையில், இவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமேசுவரத்தைச் சேர்ந்த மரியசியா என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்தனர்.
    • மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மண்டபம்:

    இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சு றுத்தல்களால் தமிழக மீன வர்கள் கடுமையான அவ திக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த வாரம் நாகை மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத சிலர் மீது இந்திய கடலோர காவல் படையினர் வழக்குப்பதிவு செய்தபோதிலும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அச்சம் தெரிவிக்கிறார்கள்.

    கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் அதற்கான பேச்சு வார்த்தை பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஒரு வார காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்து இருந்தது.

    காற்றின் வேகம் சற்றே குறைந்த நிலையில் 6 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இதில் நேற்றும் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையாக கருதப்படும் பாரம்பரிய கடற்பகுதியான தனுஷ் கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே வலைகளை விரித்து இடையே மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது நள்ளிரவு அங்கு இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான கடற்படை ரோந்து கப்பல் வந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியில் வலைகளை விரித்திருந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு புறப்பட தயாரானார்கள். ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த மரியசியா என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்தனர்.

    அதில் இருந்த தங்கச்சி மடத்தை சேர்ந்த கிங்சன் (வயது 40), மெக்கான்ஸ் (37), ராஜ் (43), இன்னாசிராஜா (45), சூசை (40), மாரியப்பன் (45), அடிமை (33) மற்றும் ராமேசுவரத்தை சேர்ந்த முனியராஜ் (23) ஆகிய 8 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரகள் உறுதியான நடவடிக்கை எடுக்க மீனவ சங்கங்கள் வலியுறுத்தி உள்ளது.

    • பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.
    • மாணவர்களுக்கு நாளை கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடந்து வருகிறது. 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.

    இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்களில் பொதுப் பிரிவில் 58 ஆயிரத்து 889 பேர், 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4 ஆயிரத்து 954 பேர் என மொத்தம் 63 ஆயிரத்து 843 பேருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    இதை உறுதி செய்ய அவர்களுக்கு இன்று மாலை 5.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு நாளை காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

    ×