என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- பக்தர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. அதையொட்டி கண்காட்சி ஒருவாரம் நடைபெற்றது. அப்போதும் அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். அதனை தொடர்ந்து வாரவிடுமுறை நாட்களில் தமிழகத்தில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இன்று மாத கார்த்திகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்தனர்.
இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர். பக்தர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இருந்தபோதும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வந்ததால் பஸ்களில் இடம்பிடிக்க முண்டியடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. இன்று மாத கார்த்திகை என்பதால் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து கனகா பிரபலமானார்.
- 40-க்கும் மேற்பட்ட படங்களில் கனகா நடித்துள்ளார்.
மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் கனகா நடித்துள்ளார். கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்த பின் சினிமாவை விட்டு விலகினார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகர் ஒருவர் கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது
கனகாவா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டாரே என்று நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.
- மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 7-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த இரு வாரங்களுக்குள் ஒரே நேரத்தில் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 51 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து நடப்பாண்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ள விவரத்தை எடுத்துக்கூறி அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் கொடுத்தார்.
- காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.
விழுப்புரம்:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் நடந்த இக்கட்சியின் கொடி அறிமுக விழாவின் போது, கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து முதல் மாநில மாநாட்டில் அறிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை இம்மாதம் 23-ந்தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு ஏற்கனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர்.
இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லை என்பதாலும், இதனிடையே விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வெளியானதாலும், மாநாடு தேதி தள்ளிப்போனது.
மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதையடுத்து அந்த தகவலை மீண்டும் மனு மூலம் காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெறுவதற்காக நேற்று மாலை அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலை சந்தித்து, மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ள விவரத்தை எடுத்துக்கூறி அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் கொடுத்தார்.
அந்த மனுவில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மாநாட்டை நடத்துவதாகவும், ஏற்கனவே காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை எந்தெந்த முறைகளில் பின்பற்ற இருப்பதாகவும், அது தொடர்பான விரிவான விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன. அம்மனுவுடன், மாநாட்டு திடல், மேடை, வாகனங்கள் நிறுத்துமிடங்கள், வழித்தடங்கள், தேசிய நெடுஞ்சாலை இவற்றை உள்ளடக்கிய மாதிரி வரை படத்தையும் இணைத்துக் கொடுத்தனர்.
இம்மனுவை பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து பதில் தெரிவிப்பதாக கூறினார்.
அதன் பின்னர் வெளியே வந்த புஸ்சி ஆனந்த், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி நடத்தப்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்ட விவரம் குறித்து காவல் துறையிடம் மனு அளித்துள்ளோம். அதில் காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.
இம்மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும். மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விவரம் உள்ளிட்ட எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதனை எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார். மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ந்தேதி நிச்சயம் நடைபெறும். மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விழுப்புரம்-கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, மாவட்ட தலைவர் குஷிமோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஜி.பி.சுரேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மாநாட்டையொட்டி செஞ்சி, விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக்கழகத்தினர் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கிராம புறங்களில் அதிகளவில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.
- வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.
- கடந்த மாதம் கரிசல்குடியிருப்பு ஊருக்குள் யானை ஒன்று புகுந்தது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீ.ப.தெரு, உ.மு. சந்து, காவல்கார தெரு, சாம்பவர் காலனி ஆகிய பகுதிகளில் 4 யானைகள் புகுந்து சுற்றி வந்தன. தொடர்ந்து அங்கிருந்த தென்னை மரம் ஒன்றை அந்த யானைக்கூட்டம் வேரோடு சாய்த்தது. வேலி கற்களையும் உடைத்து தள்ளியது.
இதை பார்த்ததும் அங்கிருந்த கிராம மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் யானைகளை பொதுமக்கள், விவசாயிகளுடன் சேர்ந்து வெடி வெடித்தும், கூட்டாக சத்தம் எழுப்பியும் வனப்பகுதிக்குள் நேற்று விரட்டினர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் 3 யானைகள் வடகரை மேட்டுக்கால் சாலையில் உச்சாமடை அருகே சேக் உசேன் என்பவருடைய தோப்பில் நிற்பதை கண்டு அலறி அடித்து ஓடி உள்ளார். அதன் பின்னர் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.
ஆனால் இந்த யானைகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து சுற்றி வருவதால் மீண்டும் வரக்கூடும் என இப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம் கரிசல்குடியிருப்பு ஊருக்குள் யானை ஒன்று புகுந்தது. கடந்த வாரம் 2 யானைகள் வடகரை குளத்தில் குளியல் போட்ட வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவியது.
இங்கு அடிக்கடி ஊருக்குள் வரும் யானை களை விரட்ட வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த யானைகளை மீண்டும் மீண்டும் ஊருக்குள் வராத படி சோலார் மின்வேலிகள், அகலிகள் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதல் இன்னிங்சில் அஸ்வின் சதமடித்து அசத்தினார்.
- 2-வது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.
பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.
இந்திய வீரர் அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 82 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 6 விக்கெட்டும் ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- விமானத்தில் 176 பயணிகள் பயணம் செய்தனர்.
- ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவையை முதல் துவங்கியது.
இந்த விமானம் ஆனது நேரடியாக திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு இயக்கப்படும். இதன் முதல் சேவை துவக்கமானது நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது.
இந்த சேவையானது வாரத்திற்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பேங்காக்கிற்கு இயக்கப்பட உள்ளது.

இந்த விமான சேவை துவக்க நாளான நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விமானமானது மேற்கண்ட மூன்று நாட்களில் இரவு 10:35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்து அடைந்து மீண்டும் இரவு 11 05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து பேங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பேங்காக்கில் இருந்து திருச்சி வந்து விமானத்தில் 46 பயணிகளும் மீண்டும் திருச்சியில் இருந்து பேங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணிகளும் பயணம் செய்தனர்.
- மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் ஒன்று மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் கணேஷ் (55). நெசவு தொழிலாளி. இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளி நோக்கி சென்றனர். அப்போது ஓசூரில் இருந்து தனியார் நிறுவனம் தனது தொழிலாளர்களை ஏற்றி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.
குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் ஒன்று மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கணேஷ், குமார் பலியானார்கள்.
இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் விபத்தை ஏற்படுத்திய தனியாக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தையும், அதனை தொடர்ந்து ஒன்றான் பின் ஒன்றாக வந்த அதே நிறுவனத்திற்கு சொந்தமான 9 வாகனங்களையும் கட்டையாலும், கற்களாலும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார், அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் நிறுவன பஸ் டிரைவரும், ஜி.பி.தொட்டே கானப்பள்ளியைச் சேர்ந்தவருமான சீனிவாசன் (வயது35) என்பவரை கைது செய்தனர்.
- அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது.
- அணைக்கு நீர்வரத்து குறைந்தது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
உடுமலை:
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு கடந்த 66 நாட்களாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது. ஆனாலும் நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு நீர்வரத்து குறைந்தது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
இதனால் வடகிழக்கு பருவ மலையை எதிர்நோக்கி காத்துள்ளனர். அதற்கு முன்பாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் அணையில் நீர் இருப்பு குறைந்து வடகிழக்கு பருவ மழையால் ஏற்படுகின்ற நீர் இருப்பை தேக்கி வைக்க இயலும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.98 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- குடிநீர் கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கரம்பை, 8 நம்பர் கரம்பை, சிவகாமிபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் 8 கரம்பை பகுதி மெயின் சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இது பற்றி தகவல அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனத்தில் அணிவகுத்து நின்றன.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது ரூ.100 கோடி கேட்டு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
- கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சில எம்.பி.க்கள் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.
தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெட்டி கொல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் மாயாவதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாநில காவல்துறை நடவடிக்கை எடுத்து பாரதிய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 28 பேரை கைது செய்துள்ளது . ஒரு ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கைதாகி இருப்பதால் அரசியல் ரீதியாகவும் பலரது தலைகளை உருட்டுகிறது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஸ்வத்தாமன் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கிறார். அவரை பதவியில் இருந்தும் கட்சி நீக்கி இருக்கிறது.
இதற்கிடையில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது பகுஜன் சமாஜ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. அவரையும் விசாரிக்க வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் என்பவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த கடிதம் வெளியானபோது டெல்லி காங்கிரஸ் பார்வையாளர்கள் அஜய்கு மார், சூரஜ்ஹெக்டே ஆகியோர் சென்னையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இருக்கிறார்கள். இதுபற்றி அவர்களும் விசாரித்து டெல்லி மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மாநில செயற்குழு கூட்டம் நடந்த போது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக மாநில காங்கிரஸ் கமிட்டி கூறி இருக்கிறது.
தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது ரூ.100 கோடி கேட்டு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் செல்வப்பெருந்தகை சந்தித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகை மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் அந்த கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சில எம்.பி.க்கள் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது தலைவர் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்து இருப்பது துரதிருஷ்டவசமானது. கட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் உருவாகும். எனவே அவர் பதவியில் தொடர்வது நல்லதல்ல என்று தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக டெல்லி தலைமையும் தமிழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.
- அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
- ஓரளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது.
தென்காசி:
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தில் முடிவுற்ற நிலையில் அவ்வப்போது கேரளா மற்றும் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த சாரல் மழையின் காரணமாக கடந்த வாரம் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தற்போது மழைப் பொழிவு முழுவதுமாக குறைந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருவதால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் ஓரளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் பாறைகளை ஒட்டி மிதமாக விழும் குறைந்த அளவு தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குற்றால அருவிகளில் குளிக்க குவிந்திருந்தனர்.
கேரளாவிலும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை நோக்கி கேரளா சுற்றுலாப் பயணிகள் படை யெடுத்து வருகின்றனர்.






