என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 4-வது நினைவு தினம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு எஸ்.பி.பி.சரண் நன்றி.

    சென்னை:

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

    இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார்.


    அவரது 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" என பெயரிடப்படும் என்று அறிவித்தார்.

    இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி. சரண் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பிரம்மோற்சவ விழாவில் பிரதான நிகழ்வான கருட சேவை அக்டோபர் 8-ந் தேதி நடைபெற உள்ளது.
    • திருப்பதிக்கு 30-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளது.

    சென்னை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடத்தப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்ற விழாவான பிரம்மோற்சவம் வருகிற அக்டோபர் 4-ந் தேதி தொடங்கி அக்டோபர் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் பிரதான நிகழ்வான கருட சேவை அக்டோபர் 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமானது சிறப்பு பஸ்களை இயக்க முன்வந்துள்ளது.

    அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருப்பதிக்கு தினசரி 35 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி, வருகிற 30-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை தினசரி 150 கூடுதல் பஸ்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆந்திர அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு 30-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளது.

    மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பஸ்களில் பயணம் மேற்கொள்ள www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
    • செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் உள்ளார்.

    இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


    அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை சில மாதங்கள் கடந்தது.

    இதை அடுத்து, இரு தரப்பினரும் வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள் இன்று தீர்ப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வழங்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சிறைவாசம் முடிவுக்கு வருமா? என்பது தெரியவரும்.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தில்லை கங்கா நகர்: சக்தி நகர், பாலாஜி நகர் 1 முதல் 15-வது தெருக்கள் வரை, நேதாஜி காலனி 5 முதல் 9-வது தெருக்கள் வரை, ஏ.ஜி.எஸ். காலனி, வேல் நகர், தாமரை தெரு, நவீன் பிளாட்ஸ், நேதாஜி காலனி மெயின் ரோடு, எம்.ஜி.ஆர். நகர்.

    சிட்கோ திருமுல்லைவாயல்: எல்லம்பேட்டை, அம்பேத்கர் நகர், அன்னை இந்திரா நினைவு நகர், வீரப்பாண்டி நகர், நாகாத்தம்மன் நகர், இ.ஜி.நகர்.

    பெரியார் நகர்: எஸ்.ஆர்.பி.கோவில் தெற்கு மற்றும் வடக்கு தெரு, ஜி.கே.எம்.காலனி மற்றும் பெரியார் நகர் அனைத்து தெருக்கள், வெங்கட்ராமன் சாலை, ஜெகநாதன் சாலை, ஜவ ஹர் நகர், ஜவஹர் நகர் வட்ட சாலை, லோகோ திட்டம், லோகோ ஒர்க்ஸ் சாலை, கார்த்திகேயன் சாலை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
    • காவல்துறையே நீதிபரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படும் எவரையும் கைது செய்து முறையாக விசாரித்து சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறையே நீதிபரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல.

    குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்மூடித்தனமாக தாக்குவதும், தங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக கூறி என்கவுண்டர் செய்வது போன்ற சூழ்நிலைகள் தற்போதைய விடியா திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • 80 ஆயிரத்து 50 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
    • புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    புதிய ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பிக்கப்பட்ட 2 லட்சத்து 89 ஆயிரத்து 591 விண்ணப்பங்களில் இதுவரை 80 ஆயிரத்து 50 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்தவுடன், ஒரே குடும்பத்தில் வசித்து வந்தவர்கள் பலரும் தனி ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால், புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    இதனால், 2023 ஜூலை 6-ந் தேதி முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 17 ஆயிரத்து 197 ரேஷன் அட்டைகளும், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 10 ஆயிரத்து 380 ரேஷன் அட்டைகளும் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டன.

    மேலும், 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 45 ஆயிரத்து 509 ரேஷன் அட்டைகள் அச்சடித்து வழங்கப்பட்டன.

    அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மீண்டும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர், நாடாளுமன்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த பிறகு மீண்டும் புதிய ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களின் விவரங்களை சரிபார்க்கும் கள விசாரணை மற்றும் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

    அதைத்தொடர்ந்து புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி, புதிய ரேஷன் அட்டைகளுக்காக பெறப்பட்ட 2 லட்சத்து 89 ஆயிரத்து 591 விண்ணப்பங்களில் 1 லட்சத்து 22 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் 80 ஆயிரத்து 50 ரேஷன் அட்டைகள் அச்சடித்து வினியோகிக்கப்பட்டு உள்ளன.

    இதுவரை சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களில் 99 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

    மேலும் 68 ஆயிரத்து 291 விண்ணப்பங்களை சரிபார்க்கும் மற்றும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
    • காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிமுகம்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிகள் காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறைகளை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 395 பஸ்களும், 28-ந் தேதி (சனிக்கிழமை) 345 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 70 பஸ்களும், 28-ந் தேதி (சனிக்கிழமை) 70 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாதவரத்தில் இருந்து 27-ந் தேதி 20 பஸ்களும் 28-ந் தேதி 20 பஸ்களும் இயக்கப்படுகிறது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிரைவர் சீட்டின் பின்பக்கம் உள்ள பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுங்கியது.
    • தொடர்ந்து நாயை அடித்து விரட்டி சிறிது தூரத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி - குடியாத்தம் இடையே இயங்கிவரும், அரசு டவுன்பஸ் மிகவும் பழுதான நிலையில் ஓடிக்கொண்டு இருந்தது. இதை புதியதாக மாற்றவேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்த நிலையில் தானியங்கி கதவுகளுடன் கூடிய புதிய டவுன்பஸ் அண்மையில் விடப்பட்டது.

    இந்த பஸ் கே.வி.குப்பம் வழியாக சென்னறாயனபள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்று சில பயணிகளை இறக்கிவிட்டது. அப்போது குடியாத்தம் செல்ல ஒரு பயணி ஏறினார். அப்போது முன்னதாக ஒரு தெரு நாய் திடீர் என்று பஸ்சின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே ஏறிக்கொண்டது. அழையா விருந்தாளியான அந்த நாய் ஏறியதும் பஸ்சின் தானியங்கி கதவுகள் மூடி பஸ் புறப்பட்டது.

    சிறிது தூரம் சென்றதும் பஸ்சுக்குள் நாய் சத்தம் கேட்டது. இதனால் நாய் கடித்துவிடுமோ என்று பயணிகள் அலறினர். இருக்கையை விட்டு இங்கும் அங்குமாக ஓடினர். எனினும் பின்பக்கம் ஏறிய நாய் இருக்கைகளுக்கு இடையே நகர்ந்து நகர்ந்து டிரைவரிடம் வந்து, என்ஜின்மீது ஏறி படுத்துக்கொண்டது. அதை அங்கிருந்து விரட்டியதும் டிரைவர் சீட்டின் பின்பக்கம் உள்ள பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுங்கியது.

    தொடர்ந்து நாயை அடித்து விரட்டி சிறிது தூரத்தில் பஸ்சை நிறுத்தி இறக்கிவிட்டனர். உடனே தானியங்கி கதவை மூடியபடி பஸ், குடியாத்தம் நோக்கி புறப்பட்டு சென்றது. நாய் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இவ்வளவு நடந்தும் நாய் ஒருமுறைகூட குரைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

    • முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.
    • 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்காக கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்காக அனுமதியை வழங்கியுள்ளது.

    ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மேலும் 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முன்னதாக மாநாட்டிற்கு மது அருந்தி வரக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளைத் தொண்டர்களுக்கு விஜய் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • போலி பத்திரப்பதிவுக்கு டிஐஜி ரவீந்திரநாத் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை காந்தம்மாள் என்பவர் பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் தென் சென்னையில் பணியாற்றியபோது தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவரணம் மூலம் மாற்றியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    பத்திரப் பதிவு உதவியாளர்கள், சார்பதிவாளர் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் போலி பத்திரப்பதிவுக்கு டிஐஜி ரவீந்திரநாத் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் எட்டு முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனவே அவர் மீதான வழக்கின் அடிப்படையில் தற்போது டிஐஜி ரவீந்திரநாத்தை சென்னை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

    • உரிய அனுமதியின்றி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நடத்தப்படும் கன்சல்டன்சிகள் மீது நடவடிக்கை.
    • சட்டவிரோத கன்சல்சிக்கு தொடர்புடையவர்களை அழைத்துச் சென்று விசாரணை.

    சென்னையில் 10க்கும் மேற்பட்ட சட்டவிரோத கன்சல்டன்சி தொடர்பான இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    உரிய அனுமதியின்றி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நடத்தப்படும் கன்சல்டன்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    70க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சட்டவிரோத கன்சல்சிக்கு தொடர்புடையவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினர்.
    • சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பதுங்கி இருப்பவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படையினர் திருப்பூர் மத்திய பஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் போல் வேலைக்கு வந்துள்ளனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்தபோது, பனியன் நிறுவன தரப்பில் இருந்து அவர்களின் அடையாள ஆவணங்களை சரிபார்த்தபோது வங்கதேசத்தினர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை வேலைக்கு அமர்த்தாமல் அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

    இதைத்தொடர்ந்து 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினர். உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து திருப்பூர் வந்தது தெரியவந்தது. அவர்கள் வங்கதேச நாட்டின் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்த தன்வீர் (வயது 39), ரசிப் தவுன் (43), முகமது அஸ்லம் (41), முகமது அல் இஸ்லாம் (37), முகமது ராகுல் அமின் (30), சவுமுன் ஷேக் (38) என்பது தெரியவந்தது. 6 பேரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர். 

    ×