என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெரியகுளம் வடகரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
- பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திலகர் (வயது 70) என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி பதறி அடித்து கோவிலில் இருந்து வெளியே வந்து நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவில் முன்பாக திரண்டனர். இதனை சற்றும் எதிர்பாராத பூசாரி அவர்கள் தன்னை தாக்கி விடுவார்கள் என எண்ணி கோவிலை பூட்டிக் கொண்டு உள்ளே ஒளிந்து கொண்டார்.
இதனை அடுத்து பெரியகுளம் வடகரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கோவிலுக்குள் ஒளிந்திருந்த பூசாரியை வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் பூசாரியை தாக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் கோவில் பூசாரி திலகரை பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பக்தர்கள் வழிபடும் கோவிலிலேயே குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- விட்டு விட்டு மழை பெய்வதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்த வண்ணம் உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த புரட்டாசி மாத காலக் கட்டங்களில் வெயிலின் தாக்கம் இந்த அளவுக்கு இருக்காது.
இந்நிலையில் நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. நெல்லையை பொறுத்தவரை மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. நேற்று பிற்பகலில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது.
அதிகபட்சமாக நாலுமுக்கு மற்றும் ஊத்து எஸ்டேட் பகுதிகளில் தலா 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. காக்காச்சியில் 4 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மணித்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
அணைகளை பொறுத்தவரை கடுமையான வெயில் காரணமாகவும், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணைகளின் நீர் இருப்பு குறைந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிரதான அணைகளான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தினந்தோறும் 1 அடி என்ற வீதத்தில் குறைந்து வருகிறது.
கடந்த 20-ந்தேதி 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 106.30 அடியாக இருந்தது. ஆனால் இன்று அதன் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த 20-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 113.91 அடியாக இருந்த நிலையில் இன்று 106.59 அடியாக குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களில் அந்த அணையில் 7 அடி நீர் இருப்பு குறைந்துள்ளது. அதே நேரம் தண்ணீர் தேக்கி மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66 அடியிலேயே நீடிக்கிறது.
எனினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து அணைகளிலும் தண்ணீர் இருப்பு அதிகமாகவே இருக்கிறது. பாபநாசத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் 71 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 101 அடி உள்ளது. சேர்வலாறு அணையில் கடந்த ஆண்டு 83 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. தற்போது அங்கு 106 அடி நீர் இருக்கிறது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இருக்காது.
ஆனால் விட்டு விட்டு மழை பெய்வதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்த வண்ணம் உள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காலாண்டு விடுமுறை விடப்படுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வயது மூப்பின் காரணமாக கடந்த 22-ந்தேதி காலமானார்.
- பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
சென்னை:
இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனரும் இ.சி.ஐ. திருச்சபைகளின் தந்தையுமான பேராயர் எஸ்றா சற்குணம் வயது மூப்பின் காரணமாக கடந்த 22-ந்தேதி காலமானார்.
அவரது மூத்த மகள் அமெரிக்காவில் இருந்து வரவேண்டி இருந்ததால் அஞ்சலி செலுத்துதல், அடக்க ஆராதனை தள்ளி வைக்கப்பட்டது.
பேராயர் எஸ்றா சற்குணத்தின் உறவினர்கள், மத போதகர்கள் வெளிநாடுகளில் இருந்து வர வேண்டும் என்பதால் அவரது அஞ்சலி செலுத்தும நிகழ்வு மற்றும் அடக்க ஆராதனை 3 நாட்களுக்கு பிறகு இன்று நடந்தது.
சென்னை வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் இன்று காலை 6 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இ.சி.ஐ. திருச்சபைகளின் பேராயர்கள், ஆயர்கள், குடும்பத்தினர் மற்றும் பாடல் குழுவினர் ஜெபத்துடன் பாடல் இசைக்க மக்கள் வரிசையில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜி.முத்துசெல்வன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
- நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கடுமையாக பாதிப்பு.
- இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
பாம்பன்:
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.
அவர்கள் பாக்ஜலசந்தி உள்ளிட்ட இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்புகிறார்கள். இதற்கிடையே எல்லை தாண்டி வந்தாக கூறி அண்டை நாடான இலங்கையை சேர்ந்த கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுளை பறிமுதல் செய்வதும் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
அதிலும் சமீப காலமாக சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டு கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதுடன், அதனை கட்டத்தவறினால் கூடுதல் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிடுகிறது.
இதனால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இலங்கையில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடங்களில் சுமூகமான முறையில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்கள் பாதியில் கரை திரும்பியுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று காலை 470 விசைப் படகுகளில் 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்வளம் நிறைந்த பகுதியில் வலைகளை விரித்திருந்தனர்.
வழக்கமான நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தான் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்து அவர்களை எச்சரிப்பதும், சிறைபிடிப்பதும் நடக்கும்.
ஆனால் நேற்று ஒரே நேரத்தில் 6 ரோந்து கப்பலில் வந்த கடற்படையினர் தமிழக மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர்.
இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தங்களிடமிருந்த எந்திர துப்பாக்கிகளை உயர்த்திப்பிடித்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
எங்கள் நாட்டின் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க வந்தால் உங்களையும் சுட்டுத்தள்ளுவோம் என்று எச்சரித்துள்ளனர்.
உடனடியாக ராமேசுவரம் மீனவர்கள் அங்கு தொடர்ந்து மீன்பிடிக்கும் சூழ்நிலை இல்லாததால் பாதியிலேயே புறப்பட்டனர்.
ஒரு சில படகுகளில் இருந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் கடலில் வீசியிருந்த வலைகளை தாங்களே அறுத்துக்கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று கரையை நோக்கி படகை செலுத்தினர்.
ஒரே பகுதியில் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் மீன்பிடித்த நிலையில் சில படகுகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடத்திற்கு சென்றது. 15-க்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் கரை திரும்பினர்.
இதனால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புலம்பினர். ஆனால் இதுதொடர்பாக அவர்கள் போலீசில் எந்தவித புகாரும் தெரிவிக்க வில்லை.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபர் பதவியேற்ற ஒரு சில நாட்களில் அந்நாட்டு கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை குறிவைத்து அராஜக செயல்களில் ஈடுபடுவது பெரும் கொந்தளிப்பையும், பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
ஏற்கனவே புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமல் மீனவர்கள் தவித்துவருகிறார்கள். இதற்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்களை மத்திய, மாநில தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
- அமைச்சரவையை முதலமைச்சர் 4 முறை மாற்றி அமைத்துள்ளார்.
- 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 3 வருடங்கள் நிறைவு பெற்று 4-வது ஆண்டில் சென்று கொண்டிருக்கிறது.
தமிழக அமைச்சரவையை இதுவரை 4 முறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்துள்ளார்.
முதலாவதாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் சில மாதங்களில் 2-வது முறையாக மிகப்பெரிய அளவில் இலாகா மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் உள்ளிட்ட சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டன.
2022-ம் ஆண்டு டிசம்பரில் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டர். இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற்ற சில மாதங்களுக்குள் மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு மே மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது ஆவடி சா.மு.நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது. இந்த துறையை பார்த்து வந்த மனோ தங்கராஜுக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையுடன் நிதித்துறையும் கிடைத்தது.
இந்தநிலையில் இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி 2024 பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார்.
மீண்டும் இப்போது அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான முடிவில் முதலமைச்சர் உள்ளார். அடுத்த மாதம் செய்யப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப் பட உள்ளது.
அப்போது 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
அந்த வகையில் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும். ஆவடி சா.மு.நாசர் மீண்டும் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளது.
இதுதவிர சேலம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரது பெயர்களும் அமைச்சர் பட்டியலில் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த மாதம் 2-ந்தேதி அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் நல்ல நாளில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- மாணவி சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தது தெரியவந்தது.
- மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலையை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்த போது அவர் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடினர்.
விசாரணையில், அந்த மாணவி சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்திய போது தலைவாசலை அடுத்த வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (19) என்பவர் மாணவியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- சம்பவம் நடந்த இடத்தை பார்த்து விட்டு, முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.
- முகமதுவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்கவிடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி அடுத்துள்ளது சப்பந்தோடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முகமது(வயது54).
இவருக்கு வீட்டிற்கு பின்புறம் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான பாக்குமரங்களை வளர்த்து பராமரித்து வந்தார்.
இன்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறி 2 காட்டு யானைகள் சப்பந்தோடு கிராமத்திற்குள் புகுந்தன. குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள், முகமதுவின் பாக்கு தோட்டத்திற்குள் புகுந்தது.
அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு மரங்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. வெளியில் ஏதோ சத்தம் வருவதை கேட்டதும் தூங்கி கொண்டிருந்த முகமது எழுந்து விட்டார்.
பின்னர் வீட்டிற்கு வெளியில் வந்து டார்ச்லைட் அடித்து என்னவென்று பார்த்தார். அப்போது தோட்டத்திற்குள் 2 காட்டு யானைகள் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் வீட்டிற்குள் செல்ல முயன்றார்.
அதற்குள் அங்கு நின்றிருந்த 2 காட்டு யானைகளில் ஒன்று முகமதுவை நோக்கி விரட்டி வந்தது. இதனால் அச்சம் அடைந்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை துரத்தி வந்து, முகமதுவை தாக்கி தூக்கி வீசியது.
இதில் பலத்த காயம் அடைந்த முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.
அப்போது அங்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. பொதுமக்கள் சத்தம் போட்டு விரட்டியதும் யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றன. இதையடுத்து அவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது முகமது உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தை பார்த்து விட்டு, முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் முகமதுவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்கவிடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானையிடம் இருந்து நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வனத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கோரியும், இங்கு சுற்றி திரியும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தியும் சேரம்பாடி சுங்கம் பகுதியில் உடலை எடுக்க விடாமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் வந்து யானையிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தால், தமிழக-கேரள எல்லையின் முக்கிய சாலையாக கருதப்படும் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததில் மன்மோகன் சிங்கின் சேவை என்றும் நினைவுகூரத்தக்கது.
சென்னை:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததில் மன்மோகன் சிங்கின் சேவை என்றும் நினைவுகூரத்தக்கது.
மன்மோகன் சிங்கின் ஞானம் மற்றும் அர்ப்பணிப்பு அடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
- சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- கருஞ்சிறுத்தை உலா வரும் காட்சிகள் கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் மிளிதேன் பகுதியில் கடந்த 2 நாட்களாக கருஞ்சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளன.
குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரணமாக அந்த கருஞ்சிறுத்தை நடமாடுகிறது. சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாட வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்து பின்பு வெளியே செல்லும் காட்சிகளும், சாலையில் அமர்ந்து நோட்டமிடும் காட்சிகளும் காமிராவில் பதிவாகி தற்போது அவை வலைதளங்களில் பரவி வருகின்றன.
கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் மிளிதேன் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் மாலை நேரங்களில் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்ப முடியவில்லை. குழந்தைகளை வெளியில் அனுப்பினால் சிறுத்தை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.
எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.
- லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது
- பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும்.
சென்னை:
சென்னையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வசித்த பகுதி சாலைக்கு அவரது பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது.
பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரித்தாகட்டும் என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை ஆவடி, அம்பத்தூர், வானகரத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவானது.
- சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆவடி, அம்பத்தூர், வானகரத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவானது.
திருவாலங்காட்டில் 11 செ.மீ., மணலியில் 10 செ.மீ., கே.கே. நகர், அண்ணா நகர், கத்திவாக்கத்தில் 9 செ.மீ., கொளத்தூர், கோடம்பாக்கம், புழலில் 8 செ.மீ., செங்குன்றத்தில் 7.5 செ.மீ., ஊத்துக்கோட்டையில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
ராயபுரம், திருவொற்றியூர், மாதவரம், ஆலந்தூரில் 7 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. மதுரவாயில் மற்றும் சோழிங்கநல்லூரில் 6 செ.மீ அளவில் கனமழை பெய்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சுரங்கப்பாதையில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. அடுத்த ஓரிரு மணிநேரத்தில் மழைநீர் வடியும். மற்ற சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை. போக்குவரத்து சீராக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கனமழையால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்ட நிலையில் 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.
- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 4-வது நினைவு தினம்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு எஸ்.பி.பி.சரண் நன்றி.
சென்னை:
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார்.

அவரது 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" என பெயரிடப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி. சரண் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






