என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது.
- ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே யுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கையை சூழலுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அனுராக் திசநாயக் அதிபராக தேர்வு செய்யபட்டுள்ளார்.
இவர் சிங்களர்களையும், தமிழர்களையும் இணைத்து செயல்படுவேன் என கூறினாலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை.
ஜனதாமுக்தி சிங்கள பேரினத்தின் தலைவராக தற்போதைய அதிபர் இருந்துள்ளார். அவர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர்.
இடது சாரி இயக்கம் என்று கூறிகொண்டாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட திசநாயக் அரசு 1½ லட்சம் தமிழர்களுக்கு நீதி பெற்று எதுவும் செய்ய மாட்டார் என கூறினார்.
இந்தியா-இலங்கை உறவை வலுபடுத்த திசநாயக் இருப்பார் என்பது ஐயமாக தான் உள்ளது. சீன அரசுக்கு சாதகமாக திசநாயக் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துதல், ஈழத்தமி ழர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், போர் குற்றங்களுக்கு தண்டித்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது. மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது. மதுகடை திறப்பது, மூடுவது போன்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ள போது மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என கூறுவது ஏமாற்று வேலை.
மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் முத்துசாமி மத்திய அரசு தேசிய அளவில் கொள்கை உருவாக்க கூறுவது அபத்தமானது.
மது ஆலைகளை வைத்துள்ள தி.மு.க. மதுவிலக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடாது. 2 ஆட்சி பணிகள் அதிகாரிகள் வீட்டில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தியதற்கு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.
பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்கள் போராட்டம் செய்வதாக அறிவித்தனர்.
அதன் பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கைவிட்ட ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
லோக் ஆயுக்தா வலுபடுத்தபட வேண்டும். ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுக்தா வலிமையானதாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ளது போன்று தமிழகத்தில் வலிமையாக இல்லை.
முதல்வரை விசாரிக்கும் அதிகார லோக் ஆயுக்தாவிற்கு இல்லை என்பதால் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் முதல்-அமைச்சரை விசாரிக்கும் அதிகாரத்தினை கொண்டு வர வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறித்து கூறுவதற்கு எதுவுமில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
- வடசென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகிறது.
கோவை:
கோவை விளாங்குறிச்சி அருகே டைட்டில் பார்க் வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவையில் உள்ள மிகப்பெரிய துறை இது. பல்வேறு காரணங்களால் கட்டிடம் தாமதம் ஆகியது. இருந்தாலும் உரிய விதிமுறைகள், சான்றிதழ்கள் பெற்று இந்த கட்டிடத்தை திறக்க இருக்கிறோம். இந்த தகவல் தொழில்நுட்ப கட்டிடம் திறக்கப்படுவதன் மூலம் 3,250-க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும்.
இதில் ஒரு சில நிறுவனங்கள் இடத்தை முழுமையாக கேட்கின்றன. ஆனால் அது நியாயமாக இருக்காது. இதற்கு என்று விதிமுறை உருவாக்க தெரிவித்துள்ளேன்.
அதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு என்று 15 ஆயிரம் சதுரடியாவது வழங்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கிறேன்.
தமிழகத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. வடசென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுகிறது.
பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நிதி துறையில் சீர்திருத்தம் செய்த மாதிரி, தகவல் தொழில்நுட்பத் துறையில் சீர் திருத்தம் செய்ய வேண்டும்.
அதற்காகவே உங்களை அங்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். அதன்படி நான் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தகவல் தொழில்நுட்ப துறையில் சில இடங்களில், அணுகு முறையில் திருத்தம் தேவைபடுகின்றது.
நான் வேறு துறையில் இருப்பதால் ஜி.எஸ்.டி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. நான் உறுப்பினராக இருந்த போது ஜி.எஸ்.டி. திட்டமிடுதலில் உள்ள குறைகளை சுட்டிகாட்டி இருக்கிறேன்.
ஜி.எஸ்.டி. விவகாரத்தில் மத்திய அரசின் மனப்பான்மை சரியாக இருக்க வேண்டும். ஜி.எஸ்.டியில் உள்ள தவறுகளை வேகமாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது எல்காட் நிறுவன மேலாண் இயக்குனர் கண்ணன், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன் அனுப்பியது.
- 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
2015: தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை.
2016: உயர்நீதிமன்றத்தில் வழக்கு – செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்தது.
2019: அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன் அனுப்பியது. அதனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
2021: திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது.
2022: தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார்.
2023 மே: இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2023 ஜூன் 13: செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2023 ஜூன் 14: செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமின் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தொடர்ந்தார். அவருக்கு நீதிமன்றக் காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.
2024 ஆகஸ்ட் 8: செந்தில்பாலாஜி மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
2024 ஆகஸ்ட் 20: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
2024 செப்டம்பர் 26: 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
- செந்தில் பாலாஜி, மாநில அரசின் ஆதரவை பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர்.
- சமூக ஊடகங்களில் போடப்படுகின்ற சிறு கருத்துக்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கைகளை எடுக்கிறது.
கோவை:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியிருப்பது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர்கள் அனைவரும் வழக்கு விசாரணையை விரைந்து நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் சாட்சிகளை அவர்கள் மிரட்டுவது என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய தி.மு.க. அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்போதும் நியாயமான விசாரணைக்கு அனுமதிப்பது இல்லை. இது அவர்களுடைய வரலாறு.
தி.மு.க. அரசு இன்று அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போகாமல் குறிப்பாக குற்றச்சாட்டு கொடுத்திருப்பவர்களை மிரட்டுவதோ, வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என்பது எங்களின் எண்ணம்.
செந்தில் பாலாஜி மீது என்னென்ன ஊழல் வழக்குகள் உள்ளன என்பதை வேறு யாரோ சொல்லவில்லை. அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை முதலமைச்சர் மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள். இது ஆயிரக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட வழக்கு. நீதிமன்றமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த அரசு செயல்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
செந்தில் பாலாஜி, மாநில அரசின் ஆதரவை பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர். இவர் உள்ளேயே இருந்தால் கூட வெளியில் அரசியல் நடத்தியவர் என ஊடகங்கள் சொன்னதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மீண்டும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், செல்வாக்கு மிக்க பதவிக்கு வந்தால் நிச்சயமாக அது சாட்சிகளை பாதிக்கும். எனவே முதலமைச்சர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அரசு ஊழலுடன் சமரசம் செய்து கொள்ளாது என எப்படி முதலமைச்சர் பேசிக் கொண்டு இருக்கிறாரோ அதனை செயலிலும் காட்ட வேண்டும்.
சமூக ஊடகங்களில் போடப்படுகின்ற சிறு கருத்துக்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கைகளை எடுக்கிறது. கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிற தி.மு.க. அரசுக்கு அவர்கள் மீதே நம்பிக்கை இல்லை. சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகளை போட்டு தி.மு.க. அரசு துஷ்பிரயோகம் செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
- முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக.
கோவை:
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.
செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இது தொடர்பாக கோவையில் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. சுப்ரீம் கோர்ட்டு இதில் சரியாக ஒரு நல்ல முடிவாக கொடுத்துள்ளது.
நிச்சயமாக இதனை நாங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக தான் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதலமைச்சர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக. இதற்கும், தற்போது வந்த தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை. செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளதை ஒரு வெற்றி, மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம்.
அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும், முதல்-அமைச்சரும் முடிவெடுப்பார்கள்.
விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
- 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதால் கரூரில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கரூர்:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கோர்ட்டு தீர்ப்பு வெளியானதும் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் மனோகரா கார்னர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

கரூரில் திரண்ட தி.மு.க.வினரை காணலாம்.
15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதால் கரூரில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அமைச்சராக எந்த தடையும் இல்லை என்று செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கூறியிருப்பதால் அவரை மீண்டும் அமைச்சர் ஆக்கவேண்டும் என்றும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
- கடந்த மாதம் மத்திய அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு நடைபெற வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.
- நாளை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை.
செஞ்சி:
வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோட்டையை காண தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது சம்பந்தமாக மத்திய அரசு யுனெஸ்கோ குழுவினருக்கு பரிந்துரை செய்தது. அதனை ஏற்று யுனெஸ்கோ குழுவினர் செஞ்சிக்கோட்டையை ஆய்வு செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தர உள்ளனர். இதனை அடுத்து செஞ்சி கோட்டையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிதிலமடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டு புதிய தார்சாலை போடப்பட்டு உள்ளன.
மேலும் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தொல்லியல் துறை அலுவலர்கள் செஞ்சிக்கோட்டையில் முகாமிட்டு இந்த பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு நடைபெற வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் செஞ்சிக்கோட்டைக்கு ரோப் கார், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே வந்த மத்திய அரசு அதிகாரியிடம் மனு கொடுத்து இருப்பதாகவும் மேலும் தற்போது வரும் குழுவினரிடமும் மனு அளிக்க உள்ளதாகவும் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் தெரிவித்தனர். யுனெஸ்கோ குழுவினர் ஆய்வுக்குப் பின் செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டால் செஞ்சிக்கோட்டை உலக அளவில் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் எனவும் அப்போது மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் இதனால் செஞ்சியின் வளர்ச்சி பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
யுனெஸ்கோ குழுவினர் வருகையையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை.
இத்தகவலை கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
- எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! என்று தெரிவித்துள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உள்ளது.
- ரூ.25 லட்சம் பிணைத்தொகை செலுத்தி செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.
செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தனக்கு ஜாமின் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கடிதம், முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.
ஜாமின் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்து இருந்தது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடிந்து 37 நாட்களுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா மற்றும் ஏ.ஜி.மாசி ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் இளங்கோ கூறுகையில்,
15 மாதங்களுக்கு மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக இருப்பதால் ஜாமின் வழங்கப்பட்டது. அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக எந்த கட்டுப்பாடும் தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என்று கூறினார்.
சுப்ரீம் கோர்ட் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
சாட்சிகளை கலைக்கக்கூடாது. வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.
ரூ.25 லட்சம் பிணைத்தொகை செலுத்தி செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது.
இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய கட்டுப்பாடுகள் போன்று, செந்தில் பாலாஜிக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், அவர் மீண்டும் அமைச்சராவார் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்று பரபரத்துக்கொண்டிருக்கும் வேளையில், அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் இடம் பிடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள்.
- இல்லாவிட்டால் தொழில் முதலீடுகள் ஈர்ப்பதில் தனது தோல்வியை தமிழக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளில் 60 சதவீத பணிகள் நிறைவேறியிருக்கின்றன; மீதமுள்ள 40 சதவீத பணிகளை நிறைவேற்ற ஆணையிட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்த குழப்பங்களைத் தீர்க்கும்படி பா.ம.க. வலியுறுத்தி வரும் நிலையில், திமுக அரசு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வெளியிட்டு வரும் புள்ளிவிவரங்கள் குழப்பத்தை அதிகரித்திருக்கின்றன.
ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அதை மதித்து தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீடுகள் ஈர்ப்பதில் தனது தோல்வியை தமிழக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வாரத்திற்கு இரண்டு முறை அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும்.
- பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த அண்டு ஜூன் 14-ந்தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது.
உள்ளூர் நீதிமன்றம் (சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்) மூன்று முறை ஜாமின் மனுவை நிராகரித்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அண்டு அக்டோபர் மாதம் நிராகரித்தது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
விசாரணை குற்றவாளியை நீண்ட நாளைக்கு சிறையில் வைக்க முடியாது என்ற வகையில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.
அவருக்கு நீதிபதிகள் அபய் எஸ். ஒகா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியுள்ளனர்.
வாரத்திற்கு இரண்டு முறை அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை சிதைக்கக் (குலைப்பது) கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதித்துள்ளனர். நிபந்தனைகள் குறித்து முழு விவரம் மாலை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், 25 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தில் ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது.
- தமிழிசை சவுந்திரராஜன் தேவையற்ற கருத்துகளை கூறிவருகிறார்.
போடி:
தேனி மாவட்டம் போடியில் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது. ஆனால் இவரைப்பற்றி தமிழிசை சவுந்திரராஜன் தேவையற்ற கருத்துகளை கூறிவருகிறார்.

குமரிஆனந்தன் மகள் என்பதை தவிர தமிழிசைக்கு என்ன தகுதி உள்ளது. அவர் இல்லையென்றால் தமிழிசையை யார் என்று கூட தெரிய வாய்ப்பில்லை.
அமைச்சர் உதயநிதி இளம் பருவத்திலிருந்தே தி.மு.க.வில் உழைத்தவர். இளைஞர் வழிகாட்டியாக உள்ளார். படிக்கும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்க நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.
படிக்கும் போதே தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகள் மூலம் பாடம் நடத்தும் முறையை உருவாக்கியுள்ளார்.
உயர்கல்வி பெறவேண்டும் என்பதற்காக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் ஐ.டி.ஐ.யிலும், பிளஸ்-2 தேர்ச்சி பெறாதவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியிலும் சேர்ந்து உயர்கல்வி பெறலாம்.
உயர்கல்வி சுகாதாரம் ஆகியவற்றை 2 கண்களாக கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.






