search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தினமும் தலா 1 அடி குறையும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம்
    X

    தினமும் தலா 1 அடி குறையும் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம்

    • பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • விட்டு விட்டு மழை பெய்வதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்த வண்ணம் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த புரட்டாசி மாத காலக் கட்டங்களில் வெயிலின் தாக்கம் இந்த அளவுக்கு இருக்காது.

    இந்நிலையில் நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. நெல்லையை பொறுத்தவரை மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. நேற்று பிற்பகலில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    அதிகபட்சமாக நாலுமுக்கு மற்றும் ஊத்து எஸ்டேட் பகுதிகளில் தலா 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. காக்காச்சியில் 4 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மணித்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    அணைகளை பொறுத்தவரை கடுமையான வெயில் காரணமாகவும், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணைகளின் நீர் இருப்பு குறைந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிரதான அணைகளான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தினந்தோறும் 1 அடி என்ற வீதத்தில் குறைந்து வருகிறது.

    கடந்த 20-ந்தேதி 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 106.30 அடியாக இருந்தது. ஆனால் இன்று அதன் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கடந்த 20-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 113.91 அடியாக இருந்த நிலையில் இன்று 106.59 அடியாக குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களில் அந்த அணையில் 7 அடி நீர் இருப்பு குறைந்துள்ளது. அதே நேரம் தண்ணீர் தேக்கி மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66 அடியிலேயே நீடிக்கிறது.

    எனினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து அணைகளிலும் தண்ணீர் இருப்பு அதிகமாகவே இருக்கிறது. பாபநாசத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் 71 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 101 அடி உள்ளது. சேர்வலாறு அணையில் கடந்த ஆண்டு 83 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. தற்போது அங்கு 106 அடி நீர் இருக்கிறது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இருக்காது.

    ஆனால் விட்டு விட்டு மழை பெய்வதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்த வண்ணம் உள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காலாண்டு விடுமுறை விடப்படுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×