என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
- ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:
பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சராசரி 200 பேருக்குள் இருந்த பாதிப்பு செப்டம்பர் மாதம் 237 ஆக உயர்ந்தது. கடந்த மாதம் 600 ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2023-ம் ஆண்டு 2029 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அது 2024-ல் 1403 ஆக குறைந்தது. இந்த ஆண்டு சற்று உயர்ந்துள்ளது.
ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
டெங்கு பாதித்தவர்கள் பெரும்பாலும் விரைவாக குணம் அடைந்து விடுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெங்குவை பரப்பும் கொசுக்களை லார்வா பருவத்திலேயே அழிக்க அவை உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்துகள் தெளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், கழிவு பொருட்களில் தேங்கும் நல்ல தண்ணீரில்தான் இந்த கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே அந்த மாதிரி பொருட்களை அப்புறப்படுத்தி சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கும் படி சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.
- கேரள மாநில வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
- கேரள அரசின் உயர்அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
கோவை:
தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு நேற்று புறப்பட்டு சென்ற சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை அந்த மாநில போக்குவரத்து அதிகாரிகள் திடீரென சிறைபிடித்ததுடன், அந்த பஸ்களில் இருந்த பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டனர். மேலும் பல்வேறு காரணங்களை கூறி அந்த பஸ்களுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அபராத தொகையை ரத்து செய்ய கோரியும் தமிழகத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக சுமார் 30 ஆம்னி பஸ்கள் இன்று காலை வாளையாறு சோதனைச்சாவடிக்கு வந்தன.
பின்னர் அந்த பஸ்களின் டிரைவர்கள் வாகனத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டு வாளையாறு சோதனைச்சாவடி முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பஸ்களில் வந்திருந்த பயணிகள் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் நடுரோட்டில் தவிக்க நேரிட்டது.
இதற்கிடையே வாளையாறு சோதனை சாவடி முன்பாக ஆம்னி பஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கேரள அரசின் அதிகப்படியான வரிவிதிப்பை கண்டித்தும், ஆம்னி பஸ்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கேரள மாநில வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கேரள அரசின் உயர்அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
பின்னர் ஆம்னி பஸ் டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு பயணிகளை மீண்டும் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
வாளையாறு சோதனைச்சாவடியில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் போராட்டத்தால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
- வாக்காளர் பதிவு அலுவலக உதவி மையங்களின் போன் நம்பர்களை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்கள் கொடுக்கும்போது குழப்பம் ஏற்படுவதாகவும், பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவர்கள் தலைமையில் இயங்கும் வாக்காளர் பதிவு அலுவலக உதவி மையங்களின் போன் நம்பர்களை வெளியிட்டுள்ளது.
இந்த போன் நம்பர்களில் தொடர்பு கொண்டு அந்தந்த தொகுதி வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கான உதவி மைய எண்கள் விவரம் வருமாறு:-
| எண் | தொகுதி | போன் நம்பர் |
| 1 | ஆர்.கே.நகர் | 9445190204, 8072155700 |
| 2 | பெரம்பூர் | 9445190204, 8015959489 |
| 3 | கொளத்தூர் | 9445190206, 7812811462 |
| 4 | வில்லிவாக்கம் | 9445190208, 7845960946 |
| 5 | திரு.வி.க.நகர் | 9445190206, 9791755291 |
| 6 | எழும்பூர் | 9445190205, 9941634048 |
| 7 | ராயபுரம் | 9445190205, 7867070540 |
| 8 | துறைமுகம் | 9445190205, 8778381704 |
| 9 | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி | 9445190209, 9884759592 |
| 10 | ஆயிரம்விளக்கு | 9445190209, 9626150261 |
| 11 | அண்ணாநகர் | 9445190208, 8680973846 |
| 12 | விருகம்பாக்கம் | 9445190210, 7358275141 |
| 13 | சைதாப்பேட்டை | 9445190213, 7358032562 |
| 14 | தியாகராயநகர் | 9445190210, 7418556441 |
| 15 | மயிலாப்பூர் | 9445190209, 9789895378 |
| 16 | வேளச்சேரி | 9445190213, 9499932846 |
| 17 | மதுரவாயல் | 9445190091 |
| 18 | அம்பத்தூர் | 9445190207 |
| 19 | மாதவரம் | 9003595898 |
| 20 | திருவொற்றியூர் | 9445190201 |
| 21 | சோழிங்கநல்லூர் | 9445190214, 9445190215 |
| 22 | ஆலந்தூர் | 9445190212 |
- எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
- அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது.
மதுரை:
தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த அகமது காஜா, பஷீர் அகமது, அகமது அஸ்லாம், முகமது புகாரி, முகமது ரஷீத் உள்பட 19 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது :-
கடந்த 2022-ம் ஆண்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்து உத்தர விட்டது. மேலும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் வீட்டில் நள்ளிரவில் புகுந்து சோதனை செய்வது போன்ற நடவடிக்கைகள் எதிர்த்து 28.9.2022 அன்று அதிராமபட்டினம் பஸ் நிலையம் முன்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
நாங்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாக கூறி அதிராமபட்டினம் போலீசார் எங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 143, 341, 188, 290 மற்றும் 291 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
காவல்துறை சட்டத்தின் பிரிவு 30(2)-ன் படி அதிராமபட்டினம் போலீசார் அரசியலமைப்பின் வரம்பிற்குள் மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு குடிமகனுக்கு பேச்சு சுதந்திரத்தையும் நியாயமான கட்டுப்பாடுகளுடன் வெளிப்பாடுகளையும் வழங்குகிறது.
அந்த வகையில் எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கலந்த ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக போலீசார் இது தொடர்பான புகார் குறித்து முதல்கட்ட விசாரணையை நடத்தாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்தது ஏற்புடையதல்ல என வாதாடினார்.
விசாரணை முடிவில், போராடியதற்காக வழக்கு பதிந்தால் எந்த ஒரு குடிமகனும் ஜனநாயக முறையில் அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது. அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது. அந்த வகையில் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
- சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் சீமான் இன்று 59-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில்," இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு இளவல் சீமான் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க.வின் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் பரவி விட்டது.
- SIR-க்கு எதிராக சட்டரீதியாக போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.
சென்னையில் தி.மு.க.வின் 75-வது அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க. தொடங்கப்படவில்லை.
* ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம் தி.மு.க. என எழுதி உள்ளார் ராகுல்காந்தி.
* அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைக்க விரும்பும் இயக்கம் என்கிறார் கெஜ்ரிவால்.
* தி.மு.க.வின் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் பரவி விட்டது.
* கியூபா புரட்சி வரை பத்திரிகையில் எழுதி மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.
* தி.மு.க. பெற்றுள்ள வெற்றி என்பது நாம் அடைந்த வரலாற்று சாதனை என்பது பலருக்கு தெரியவில்லை.
* கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாமால் தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது.
* SIR-க்கு எதிராக சட்டரீதியாக போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.
* தமிழகத்திற்குள்ளேயே தி.மு.க.வை முடக்க நினைத்தார்கள். ஆனால் நாம் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறோம்.
* தி.மு.க.வை அழிக்க நினைப்போரின் எண்ணம் என்றும் நிறைவேறாது. இது கூடிக் கலைகின்ற கூட்டமல்ல.
* தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நேரத்தில் குழப்பதை ஏற்படுத்தவே SIR
* களத்தில் பணியாற்றும் தி.மு.க.வினர் போலி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* வாக்காளர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.
- வரலாற்றை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.
சென்னையில் தி.மு.க.வின் 75-வது அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்த துணை முதலமைச்சர் உதயநிதியை 'கொள்கை இளவல்' எனக் குறிப்பிட்டு வாழ்த்தினார். அறிவு திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் வேண்டும் நடத்திட வேண்டும் என உதயநிதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
* திருவள்ளுவர் கோட்டமே திராவிடக்கூட்டமாக மாறியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
* உலகத்தமிழர்கள் உள்ளத்தில் தமிழை உயர்த்திப் பிடிக்கும் பேரியக்கம் தி.மு.க.
* தி.மு.க.வை தொடங்கியது அண்ணா, 50 ஆண்டுகளாக கட்டி காத்தவர் கலைஞர்.
* அறிவொளியை பரப்புவதையே தலையாய கடமையாக கொண்டு செயல்படுகிறது தி.மு.க.
* மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.
* கட்சியை தொடங்கியவுடன் அடுத்த முதலமைச்சர் என அறிவித்து விட்டு நாம் ஆட்சிக்கு வரவில்லை.
* வரலாற்றை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.
* தி.மு.க.வை போல் வெற்றி பெற தி.மு.க.வை போல் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை
* ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான்.
* தி.மு.க.வை போல் வெற்றி பெற வேண்டும் என சில அறிவிலிகள் கனவு காண்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. சார்பில் முக்கிய நகரங்களில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
- கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரங்களை ம.தி.மு.க. அறிவித்து உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதற்கு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிடக்கோரி இந்த கூட்டணி சார்பில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தி.மு.க. சார்பில் முக்கிய நகரங்களில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரங்களை ம.தி.மு.க. அறிவித்து உள்ளது. அதன்படி சென்னையில் வருகிற 11-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஆடிட்டர் அர்ஜுனராஜ், கடலூரில் செந்திலதிபன், திருச்சியில் துரை வைகோ, திருவள்ளூரில் வழக்கறிஞர் அந்திரி தாஸ், செங்கல்பட்டில் ஜீவன், காஞ்சீபுரத்தில் மல்லிகா தயாளன் கலந்து கொள்கிறார்கள்.
- இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.
- இளஞ்சிவப்பு ஆட்டோகளை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பின் படி ரூபாய் 1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் கடந்த 8 மார்ச் 2025-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கப்பட்டது.
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சமூக நலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சில ஆண்கள் ஓட்டுவதாக கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இளஞ்சிவப்பு ஆட்டோகளை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும் ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூகநலத்துறையால் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கி வருவது புகார் பெறப்பட்டுள்ளது. மேலும், இது போல் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
- அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- திற்பரப்பில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் ஓரளவு நிரம்பி உள்ளது. அணைகளிலும், பாசன குளங்களிலும் தண்ணீர் அதிக அளவு உள்ளதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி பகுதிகளில் பயிர் நடவு பணி நடந்து வருகிறது.
அணைகளில் இருந்து விவசாயத்திற்கு சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. காலை 9 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்தது. தக்கலை, இரணியல், குலசேகரம், மார்த்தாண்டம், கன்னியாகுமரி பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை நீடித்தது.
திற்பரப்பில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.96 அடி யாக இருந்தது. அணைக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.30 அடியாக உள்ளது. அணைக்கு 307 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம்கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் கடந்த மாதம் 27ம் தேதி அதிகபட்ச அளவாக 70.24 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பாசனத்திற்காக அக்.27ம் தேதி முதல் 31ம் தேதி வரை 624 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நவ.8ம் தேதி முதல் 772 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 68.21 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1653 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கனஅடியும், மதுரை, ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடி, மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 1000 கனஅடி என மொத்தம் 1219 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5372 மி.கனஅடியாக உள்ளது.
மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு 428 மி.கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். 1000 கனஅடி நீர் 7 சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன்மூலம் 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்மாய்களும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.65 அடியாக உள்ளது. வரத்து 617 கனஅடி, திறப்பு 1778 கனஅடி, இருப்பு 6030 மி.கனஅடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 15 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாகவும் உள்ளது.
- முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.
கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும்.






