என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.
    • பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.

    பின்னர் மதியம் உச்சிகால பூஜைக்குப் பின்பு மலைக்கோவிலில் உள்ள முருகபெருமான், துவார பாலகர்கள், வாகனம் ஆகியவற்றிற்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    இதேபோல் உப கோவில்களிலும் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது.

    கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு இதில் சிறுவர் சிறுமிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

    10ம் நாளாக வருகிற 12ம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து முத்துக்குமார சாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்களம் சென்று வில், அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் முத்துக்குமார சாமி பெரியநாயகி அம்மன் கோவில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • பூசாரி விக்னேஷ் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.
    • தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

    இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் பலருக்கும் சம்மன் அனுப்பியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநாடு எஸ்டேட் மற்றும் சென்னை போயஸ் கார்டனில் பல வருடங்களாக பூசாரியாக பணியாற்றி வந்த கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் புதுச்சேரியை தனியார் வங்கிக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    அதன்படி கோத்தகிரியை சேர்ந்த பூசாரி விக்னேஷ் இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.

    அவரிடம் கொடநாடு சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை பற்றி தெரியுமா? எவ்வளவு நாட்களாக அங்கு வேலை பார்க்கிறீர்கள்.

    கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தெரியுமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.

    இதேபோல் தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் வங்கி கணக்கு மற்றும் பரிவர்த்தனைகள் பற்றி கேட்டு விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை முடிந்த பின்னரே அவர்களிடம் எது தொடர்பாக விசாரித்தனர் என்ற தகவல் தெரியவரும்.

    ஒரே நாளில் 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    • இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
    • சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கீழச்செழியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (70). விவசாயி. இவரது மனைவி விஜயா (60). இவர்களுக்கு இசக்கியம்மாள் (28), சுடலை மணி (20) உள்ளிட்ட 9 மகன், மகள் உள்ளனர்.

    இசக்கியம்மாள் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் அவர்களை விட்டு சென்று விட்டார்.

    இதனால் இசக்கியம்மாள் தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டின் அருகிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இசக்கியம்மாள் வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் சமையல் செய்துள்ளார்.

    அவரது குழந்தைகள் பக்கத்தில் உள்ள தாத்தா கணபதி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இசக்கியம்மாள் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

    அப்போது சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதே போல் மற்ற சுவர்களும் விரிசல் ஏற்பட்டு மேற்கூரையும் பலத்த சேதம் அடைந்தது.

    இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கியாஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டு அதனால் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது இசக்கியம்மாள் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் தான் போதைப் பொருள் அதிக அளவில் விற்பனை ஆகிறது.
    • போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் வருகிற 6-ந்தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 2 கிலோ மீட்டர் தூரம் போதையில்லா தென்காசியை உருவாக்கும் வகையில் மாபெரும் போதை ஒழிப்பு பேரணி நடைபெறுகிறது.


    இந்த பேரணியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் ஷோகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவி கள், பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதுகுறித்து வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி இன்று தென்காசியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதைப் பொருள் அதிக அளவில் விற்பனை ஆகிறது. அதிக அளவிலான நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாபெரும் பேரணியை நடத்துகிறோம் என்றார்.

    பின்னர் அவரிடம், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளாரே? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், மது விற்பனை தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மத்திய அரசு எடுத்தால் சட்டம் ஒழுங்கு, காவல் துறையையும் மத்திய அரசு எடுத்தால் மாநில அரசுகள் சம்மதிக்குமா என கூறினார்.

    மதுவிலக்கு கொண்டுவர மாநில அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். பழியை மத்திய அரசு மீது சுமத்த கூடாது என்றார்.

    காந்தி மண்டபத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக கவர்னர் ரவி சுத்தம் செய்த போது மது பாட்டில் கிடந்ததாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

    கவர்னர் அரசியல் செய்வதாக பலர் கூறுகின்றனர். இதனை அரசியல் செய்யக்கூடாது. இதே கொள்கையை தான் தேசப்பிதா காந்தியும் அறிவுறுத்தினார். அதற்காக அவர் அரசியல் செய்தார் என கூற முடியுமா? எனவும் கூறினார். 

    • போலி ஆதார் கார்டு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
    • புரோக்கர்கள் யார் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் சில நாட்களுக்கு முன் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் சிலருக்கு திருப்பூர் அருள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் போலியாக ஆதார் கார்டு பெற்று கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    போலி ஆதார் கார்டு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் 4 ஆண்டுகளாக மாரிமுத்து உள்ளூர், வெளியூர் நபர்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு ஆதார் பெற்று கொடுத்துள்ளார். மேலும் ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய பல்லடத்தை சேர்ந்த அரசு டாக்டர், இ-சேவையில் உள்ள பெண் பணியாளர் மற்றும் பான் கார்டு வாங்கி கொடுத்த வாலிபர் என 3 பேரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் விசாரித்த பின் இந்த சம்பவம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மாரிமுத்துவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டு வந்த அவர் வங்கதேசத்தில் இருந்து வருபவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்துள்ளார்.

    மேலும் அவர் மாநகராட்சி அலுவலகத்தில் பேக் ஒன்றை வைத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று பேக்கை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் போலியாக ஆதார் கார்டு பெற 200 விண்ணப்பங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது மட்டுமின்றி வங்கதேச தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து வரும் புரோக்கர்கள் போலியாக ஆதார் கார்டு பெற மாரிமுத்துவை அணுகுமாறு தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே புரோக்கர்கள் யார் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியின் முதல்வர் ராபர்ட் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே காட்டூரில் மான்போர்ட் தனியார் சி.பி.எஸ்.இ. உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 3000 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு காலாண்டு விடுமுறை முடித்து பள்ளி திறக்கப்படும் நிலையில் அதிகாலை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    பள்ளி இ மெயில் முகவரிக்கு வந்த தகவலில் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாகவும், மதியம்1 மணிக்குள் இந்த வெடிகுண்டு வெடித்து விடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பள்ளியின் முதல்வர் ராபர்ட் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் மற்றும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் விரைந்து வந்தனர். திருச்சி வெடிகுண்டு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் தலைமையில் சுமார் 7 பேர் மோப்ப நாய்களுடன் பள்ளி வளாகத்திற்குள் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணத்தினால் திறக்கப்பட வேண்டியிருந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனிடையே திருச்சி மாவட்டத்தில் மேலும் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஸ்வேதா பாலகிருஷ்ணன் என்ற பெயரில் இந்த இமெயில் பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மிரட்டல் விடுக்கப்பட்ட ஹோலி கிராஸ் பள்ளி, கல்லூரி, கேம்பியன் ஸ்கூல், சமது மேல்நிலைப்பள்ளி, கேகே நகர் ஆச்சார்யா ஸ்கூல், புனித வளனார் பள்ளி உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சி.பி.எஸ்.இ. பள்ளி தவிர்த்து இதர பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் ஹோலி கிராஸ் கல்லூரி இன்று செயல்படுகிறது.

    எனவே வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் பாம் டிடெக்டர் கருவியுடன் இக் கல்லூரியில் அங்குலம் அங்குகலமாக சோதனை செய்து வருகின்றனர்.

    மாணவிகள் யாரும் வகுப்பறையில் இருந்து இருந்து வெளியேற்றப்படவில்லை. சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • ஜாமின் மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
    • மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

    சென்னை:

    சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 7-ந்தேதி கைது செய்தனர்.

    இந்நிலையில் ஜாமின் ,கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார்.

    மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

    இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.

    இதையடுத்து இன்று ஜாமின் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் மிக முக்கிய போக்குவரத்து சாலையாக ஈரோடு அரசு மருத்துவமனை, ஜி.எச்.ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், எல்லை மாரியம்மன் கோவில். ஈரோடு பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு, காந்திஜி ரோடு, காளைமாட்டு சிலை சாலை என பல பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலையோர ஆக்கிரமிப்பு தான். இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோடு பன்னீர்செல்வம் முதல் எல்லை மாரியம்மன் கோவில் வரையிலும், ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு, பஸ் நிலையம் என பல பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டன. இதனால் மீண்டும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதற்கட்டமாக பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    தற்போது இன்று 2-ம் கட்டமாக கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு, காந்திஜி ரோடு, காளை மாட்டு சிலை சாலை வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் ஆக்கிரமிப்பு பணி அகற்றும் போது கடை உரிமையார்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் இதே சாலைகளில் கடைகளின் முன்புறம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு, அதற்கென மாநகராட்சி இடத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர், மின்சாரத்துறையினர், போலீசார், போக்குவரத்து போலீசார், தொலை தொடர்பு துறையினர், சுகாதார துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

    சாலைகளை ஆக்கிரமித்து உள்ள விளம்பர தட்டிகள், பலகைகள், கழிவுநீர் கால்வாய் மீது அத்துமீறி கட்டப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புகளை பணியாளர்கள் அகற்றினர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து 3-ம் கட்டமாக நாளை பன்னீர்செல்வம் பூங்கா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை மீனாட்சி சுந்தரானார் சாலையிலும், நாளை மறுநாள் ஈரோடு சுவஸ்திக் கார்னர் ரவுண்டானா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வரை மேட்டூர் ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றபட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3-வது அமைச்சராக இடம் பிடித்தார்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

    அதன்படி, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். நாசர், செந்தில்பாலாஜி, ராஜேந்திரன், கோவி.செழியன் ஆகிய 4 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் அதிரடியாக மாற்றப்பட்டன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இதற்கிடையே அமைச்சரவையின் மூப்புப் பட்டியலை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டார். அதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3-வது அமைச்சராக இடம் பிடித்தார்.

    இந்த மாற்றத்திற்கு பிறகு முதல் முறையாக 8-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அழைப்பு, அனைத்து அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வரும் 8-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வருக்கான கூடுதல் அதிகாரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    • வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அவர் 9,140 சிகரெட்டுகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1.55 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதே விமானத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வாசனை பொருட்களை மறைத்து எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47 ஆயிரம். இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக விமானம் மூலமாக வெள்நாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்டவை கடத்தல் குறைந்து இருந்த நிலையில் தற்போது வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    • மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது.
    • மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது கூட சாத்தியமற்றது என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். அமைச்சர் ரகுபதியின் பேச்சு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் குரலாகத் தெரியவில்லை. மாறாக, மது ஆலை அதிபர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுவதைப் போல இருக்கிறது. மதுவுக்கு ஆதரவான சட்ட அமைச்சர் ரகுபதியின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.

    மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது. 2015-ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பேசும்போது அடுத்த காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த காந்தியடிகள் பிறந்தநாளுக்குள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

    2016-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று பா.ம.க.வின் கொள்கை முழக்கத்தை காப்பியடித்து மு.க.ஸ்டாலின் முழங்கினார். 2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இப்போது அதற்கு முற்றிலும் எதிராக அமைச்சர் ரகுபதி பேசுகிறார். அப்படியானால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினா, ரகுபதியா?

    தேசிய அளவில் மதுவிலக்கு என்பதே போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல் தான். அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முழங்கும் திமுக, மக்கள் நலனுக்காக மதுவிலக்கு கேட்டால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும் மக்களை முட்டாள்களாக நினைத்து ஏமாற்றும் செயல்கள்.

    மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது கூட சாத்தியமற்றது என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார். ''பாதி கடையை மூடுங்கள்; பாதியை திறங்கள் என்றால், 1 கி.மீ., தூரம் சென்று குடியுங்கள் என்பது தான் அர்த்தம் என்பதால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது" என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பதையும், திமுகவைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களின் கஜானாக்களை நிரப்புவதற்காக மட்டும் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதை அமைச்சர் ரகுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலின் முதல் இடத்தில் சட்டம்-ஒழுங்கு, பொதுஅமைதி ஆகியவையும், எட்டாவது இடத்தில் மது விலக்கும் உள்ளன. மக்கள் நலன் கருதி இவற்றை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு உள்ளன. அதனால் மதுவிலக்கை மாநில அரசுகள் தான் செயல்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் மது விலக்கு இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதை செயல்படுத்துவது சாத்தியமற்றது என்பது தோல்வியின் வெளிப்பாடு.

    தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும்; அத்தகைய நிலை உருவானால் மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஒழிப்பில் மட்டும் தான் அரசு கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.

    தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகாதா? அப்போது கள்ளச்சாராயத்தை தடுப்பது உள்ளிட்ட மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் திராவிட மாடல் அரசு தாரை வார்த்து விடுமா?

    அண்டை மாநிலத்தில் மது விற்பனை செய்யப்படும்போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்பதெல்லாம் நகைச்சுவையான போலி சாக்குகள். தமிழ்நாட்டைச் சுற்றிலும் மது வெள்ளமாக பாய்ந்து கொண்டிருந்த காலத்தில் தான் உத்தமர் ஓமந்தூரார், குமாரசாமி இராஜா, இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பக்தவச்சலம், அறிஞர் அண்ணா ஆகியோர் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினர்.

    தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கள்ளச்சாராயத்தை தடுப்பது, அரசின் வருவாய் குறையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்தும் சாத்தியம் தான். அதற்கான வழிமுறைகளை பாட்டாளி மக்கள் கட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆவணமாக தயாரித்து வெளியிட்டுள்ளது. திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.

    விருதுநகர்:

    காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த அரசு கள்ளச்சாராயத்தையும், போதை பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அரசுடன் காங்கிரஸ் கட்சி இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் மது இல்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும். தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்றது. அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தை வஞ்சிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வராமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.

    விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து என்றைக்கு இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என தெரியவில்லை.

    பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சி அனைவரோடும் வளர்ச்சி என கூறுகின்றார். ஆனால் மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகின்றது. மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு சிறப்பாக பயன்படுத்துகின்றது என மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பாராட்டினார். தமிழகத்தை பொறுத்தமட்டில் அறிவார்ந்த மக்கள் உள்ளதால் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்த மசோதாவையும் நிறைவேற்ற 272 எம்.பி.க்கள் வேண்டும். அவர்களுக்கு 240 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.

    எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் அது யூடர்ன் எடுக்கின்றது. அல்லது நிலைக்குழுவிற்கு அனுப்பப்படுகின்றது. 2024 தேர்தலுக்கு பின்பு அந்த வீரவசனம் எல்லாம் முடிந்துவிட்டது. ஆந்திராவில் கடந்த ஆட்சியாளர்கள் திருப்பதி உண்டியலில் கை வைத்து விட்டார்கள் என பவன்கல்யாண் புகார் கூறியுள்ளார். பவன்கல்யாண் பாரதிய ஜனதாவின் ஊது குழலாக இருக்கின்றார். அவர்கள் ஆட்சிக்கு வரும் போது பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் ரூ.2,000 நிதி, படிக்கின்ற குழந்தைகளின் குடும்பத்திற்கு ரூ.6,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். அதனை மறக்கடிக்க மத அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். இதை ஆந்திர மக்கள் புரிந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

    பேட்டியின் போது அசோகன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ணசாமி, நாகேந்திரன். நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து மாணிக்கம்தாகூர் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ×