என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் என்று சீமான் கூறியதால் பரபரப்பு
    • 2019ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்புமணி ராமதாஸ் தான் அடிக்கல் நாட்டினார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது யார்? திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணியில் இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் எய்ம்ஸ் காட்டவில்லை. கடந்த முறை 39 எம்.பி.க்கள் இப்போது 40 எம்.பி.க்கள் பாராளுமன்றம் போனார்களே அவர்கள் பேசி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவேண்டியதுதானே" என்று பேசியுள்ளார்.

    2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். உண்மை இப்படியிருக்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை சீமான் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தமிழ்நாட்டில் இப்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன.
    • தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

    துணை முதலமைச்சர் நியமனம் மற்றும் அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    தமிழகத்தில் மதுக்கடை மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

    இது சம்பந்தமாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    தமிழ்நாட்டில் இப்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன. எப்.எல்.2, எப்.எல்.3 மதுக்கடைகள் 1,685 உள்ளது. மேலும் 400 மதுக்கடைகளுக்கு அனுமதி கேட்டு வந்த விண்ணப்பங்கள் அரசிடம் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் நடத்திய மதுஒழிப்பு மகளிர் மாநாட்டிலும் மதுக்கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.

    தமிழக அரசும் போதைப்பொருளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருவதால் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

    இது தவிர, அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    மேலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

    • கட்சியில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
    • திருப்தி இருக்குற இடத்துல போய் சேர்ந்துக்கற வேண்டியதுதான்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகியுள்ளார். கட்சியில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் சீமானிடம் நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-

    இருக்குற வரைக்கும் இருப்பாங்க. திடீர்னு அதிருப்தி வரும்... திருப்தி இருக்குற இடத்துல போய் சேர்ந்துக்கற வேண்டியதுதான். அது ஒரு பெரிய சிக்கல் இல்லை. இது நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சனை ஒன்னும் இல்லை. பொது வெளியில் பேசினால் பேசட்டும். தாலியை வச்சி கட்சி நடத்துனேன்னு சொல்லுறவங்க, யாராவது ஒருத்தர எங்கிட்ட கூட்டிட்டு வாங்க.. குற்றச்சாட்ட சொன்னவரு யாரு? கட்சி பேரை சொல்லி 5 கோடி வசூல் பண்ணியிருக்காரு. என் முகத்துக்காக எல்லாரும் வழக்கு கொடுக்காம இருக்காங்க. அதை பற்றி பேசினால் எனக்கு தகுதியா இருக்குமா? தரமா இருக்குமா? வளர்ந்து வரும் கட்சியில சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை ஒரு பெரிய பிரச்சனையா பேசிக்கிட்டு இருக்காதீங்க என்றார்.

    • தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
    • மேலிடம் ஒப்புதல் அளித்தால் புதிய மாவட்டங்கள், புதிய மாவட்ட தலைவர்கள், புதிய நிர்வாகிகள் பதவிக்கு பலர் வருவார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். தற்போது 77 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

    இதை சராசரியாக 2 சட்டமன்றங்களுக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் குறைந்தபட்சம் 115 மாவட்டங்களாக பிரிக்க முடிவு செய்துள்ளார்கள். இதற்கான திட்டங்களை தயார் செய்து டெல்லி தலைமையின் ஒப்புதலுக்காக அனுப்பி இருக்கிறார்கள். இதுபற்றி டெல்லி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

    தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. அந்த கட்சிகளை பொறுத்தவரை அமைப்பு ரீதியாக வலிமையான கட்சிகள். முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எனவே மாவட்டங்களை அதிக அளவில் பிரித்தாலும் வலிமையான நிர்வாகிகளும் இருப்பதால் நிர்வாகமும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் காங்கிரசுக்கு அந்த மாதிரியான நிலை இல்லை. மாவட்டங்களை அதிக அளவில் பிரித்தாலும் திராவிட கட்சிகளுக்கு இணையாக எல்லா மாவட்டங்களிலும் நிர்வாகிகள் இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    அதே நேரம் ஏற்கனவே திண்டுக்கல், கன்னியாகுமரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 2 தொகுதிகளை கொண்ட மாவட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. எனவே பிரிப்பது தவறில்லை என்ற கருத்தும் உள்ளது. தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது.

    எனவே இந்த பிரச்சனை மேலிடத்துக்கு சென்றுள்ளது. மேலிடம் பரிசீலித்து வருகிறது. மேலிடம் ஒப்புதல் அளித்தால் புதிய மாவட்டங்கள், புதிய மாவட்ட தலைவர்கள், புதிய நிர்வாகிகள் பதவிக்கு பலர் வருவார்கள்.

    மேலிடத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

    • லால்குடி தாலுகா அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.
    • கைதான துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் மோகன். கடந்த 2002-ம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள் புரத்தில் உள்ள 94 செண்டு நிலத்தை கிரயம் பெற்றுள்ளார்.

    மோகன் தனது தந்தையின் பெயரில் வாங்கி இருந்த நிலத்திற்கு உண்டான பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு மோகன் கடந்த மார்ச் 5 தேதி லால்குடி உதவி கலெக்டருக்கு விண்ணப்பித்தார்.

    விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து லால்குடி துணை தாசில்தாருக்கு அனுப்பி உள்ளார். இதனிடையே தான் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் தனது வேலை முடியாத காரணத்தால் மோகன் லால்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த துணை தாசில்தார் ரவிக்குமாரை சந்தித்தார்.

    அப்போது தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு துணை தாசில்தார் ரவிக்குமார் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் உங்களது மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதாக சொல்லியுள்ளார். பின்னர் பேரம் பேசி இறுதியாக.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மோகனின் மனுவை பரிந்துரை செய்ய முடியும் என ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார். தாலுகா அலுவலகத்தில், மோகனிடமிருந்து 20 ஆயிரம் லஞ்சம் பணத்தை ரவிக்குமார் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையின் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் ரவிக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

    இதன் காரணமாக லால்குடி தாலுகா அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது. கைதான துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • சவுதியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுக்கு பிறகு சென்னை-ஜெட்டா- சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது.
    • சென்னை-ஜெட்டா இடையே இந்த நேரடி விமானத்தின் பயண நேரம் 5 மணி 30 நிமிடங்கள்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகருக்கு நேரடி விமான சேவை ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தன.

    ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தின்போது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சென்னை-ஜெட்டா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின்பும், சென்னை-ஜெட்டா-சென்னை இடையே நேரடி விமான சேவைகள் தொடங்கப்படவில்லை. இஸ்லாமியர்கள் தங்களது புனித தலமான மெக்கா, மதினாவுக்கு ஏராளமான பயணிகள், ஆண்டு முழுவதும் சென்று கொண்டிருப்பதால், சென்னை-ஜெட்டா இடையே, நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சவுதியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுக்கு பிறகு சென்னை-ஜெட்டா- சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது. வாரத்தில் திங்கள், புதன் ஆகிய இரு தினங்கள் நேரடி விமான சேவை, சென்னையிலிருந்து ஜெட்டா நகருக்கு இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு, ஜெட்டா நகரில் இருந்து 132 பயணிகளுடன் புறப்பட்ட சவுதியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மாலை 5.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது. அதன் பின்பு அதே விமானம், நேற்று இரவு 7 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 222 பயணிகளுடன் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது.

    சென்னை-ஜெட்டா இடையே இந்த நேரடி விமானத்தின் பயண நேரம் 5 மணி 30 நிமிடங்கள். இப்போது வாரத்தில் திங்கள், புதன் ஆகிய 2 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் வாரத்தில் 3 நாட்களாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் இந்த விமானம் இயக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை-ஜெட்டா- சென்னை இடையே, 4 ஆண்டுகளுக்குப் பின்பு, மீண்டும் விமான சேவைகள் புதிதாக தொடங்கியுள்ளது, பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    • மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.
    • உங்கள் கண்டுபிடிப்புகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.

    சென்னை:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார். அந்த சைக்கிளில் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்.

    இதை கேள்விப்பட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது 'எக்ஸ்' வலைதள பதிவில் மாணவர் அபிஷேக்கை பாராட்டி அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள்.

    தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம் என பதிவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மாணவர் அபிஷேக்கை தொலைபேசியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் பேசும்போது, உங்கள் கண்டுபிடிப்புகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் நீங்கள் முன் மாதிரியாக திகழ்கிறீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் தெரிவித்தால் அதை நடைமுறை செய்யலாம். உங்களுக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.

    • சிக்குன்குனியா, டெங்கு ஆகியவற்றுக்கு நேரடியான ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை.
    • குழந்தைகளுக்கு 3 அல்லது 4 நாட்களில் காய்ச்சல் குணமாகி விடுகிறது.

    சென்னை:

    பருவநிலை மாற்றம் ஏற்படும்போது, தொற்று நோய்கள், காய்ச்சல் வருவது வழக்கமானது. அது ஒன்றிரண்டு நாட்கள் இருக்கும். அதன் பிறகு தானாகவே சீராகிவிடும்.

    ஆனால் தற்போது சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு களால் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மேலாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    அவ்வாறு வருபவர்களில் பலர் கடுமையான காய்ச்சல் தலைவலி போன்ற டெங்கு அறிகுறிகளுடன் வருகிறார் கள். 3 நாட்கள் வரை பார்த்துவிட்டு அதன் பிறகு பரிசோதனை செய்கிறார்கள். அப்போது சிக்குன்குனியாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சிக்குன்குனியா, டெங்கு ஆகியவற்றுக்கு நேரடியான ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை. எனவே துணை மருந்துகளே கொடுக்கப்படுகிறது. காய்ச்சல் குணமடைந்த பிறகும் உடல்வலியால் முடங்கி விடுகிறார்கள்.

    சிக்குன்குனியா தாக்கத்தால் முடங்கிய செல்வம் என்பவர் கூறியதாவது:-

    தொடர்ந்து நான்கைந்து நாட்கள் காய்ச்சலில் அவதிப்பட்டேன். காய்ச்சல் முற்றிலுமாக குணமடைந்த பிறகும் தாங்க முடியாத உடல்வலி இருக்கிறது. ஒரு மாதமாகவே அவதிப்படுகிறேன் என்றார்.

    டெங்கு மற்றும் சிக்குன் குனியா தாக்கம் அதிகமாக உள்ளது. குழந்தைகள்தான் 80 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும் 3 அல்லது 4 நாட்களில் காய்ச்சல் குணமாகி விடுகிறது. அதன் பிறகும் கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லையால் அவதிப்படுகிறார்கள்.

    இதுபற்றி பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மிதமான காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ பரிசோதனை எடுக்க தேவையில்லை. அவர்கள் தனிமைபடுத்திக் கொண்டு ஓய்வெடுத்தால் போதும்.

    தீவிர பாதிப்பு உடையவர்கள் முதியோர்கள், குழந்தைகள், இணை நோய் உடையவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் ஆகிய பாதிப்புகள் இருந்தால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.

    புளூ காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஆண்டுதோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இருமும்போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கத்தை தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார்கள்.

    சித்த மருத்துவத் துறையினர் கூறும்போது, மிதமான பாதிப்பு இருப்பவர்கள் மருந்துகள் எடுக்க தேவையில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். ஆவி பிடிப்பது நல்லது. துளசி இலை, கற்பூரவல்லி இலைகளையும் சாப்பிடலாம் என்றார்கள்.

     

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இது சீசன் காய்ச்சல்தான் பதற்றப்பட தேவையில்லை. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளன. தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    5-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    6-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    7-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    8-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

    • அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது.
    • 2026 சட்டசபை தேர்தல் குறித்து வியூகம்.

    சென்னை:

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள இந்த குழுவில் இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழு ஏற்கனவே இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி, விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    அப்போது கட்சிப் பணிகளை வேகப்படுத்துவது பற்றி உதயநிதி ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

    இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூடுகிறது.

    இந்த கூட்டம் முடிந்ததும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    • சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.
    • பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.

    பின்னர் மதியம் உச்சிகால பூஜைக்குப் பின்பு மலைக்கோவிலில் உள்ள முருகபெருமான், துவார பாலகர்கள், வாகனம் ஆகியவற்றிற்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    இதேபோல் உப கோவில்களிலும் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது.

    கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு இதில் சிறுவர் சிறுமிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

    10ம் நாளாக வருகிற 12ம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து முத்துக்குமார சாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்களம் சென்று வில், அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் முத்துக்குமார சாமி பெரியநாயகி அம்மன் கோவில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • பூசாரி விக்னேஷ் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.
    • தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

    இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இது தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் பலருக்கும் சம்மன் அனுப்பியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநாடு எஸ்டேட் மற்றும் சென்னை போயஸ் கார்டனில் பல வருடங்களாக பூசாரியாக பணியாற்றி வந்த கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் புதுச்சேரியை தனியார் வங்கிக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    அதன்படி கோத்தகிரியை சேர்ந்த பூசாரி விக்னேஷ் இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ. அலுவலகத்தில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகினார்.

    அவரிடம் கொடநாடு சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை பற்றி தெரியுமா? எவ்வளவு நாட்களாக அங்கு வேலை பார்க்கிறீர்கள்.

    கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தெரியுமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.

    இதேபோல் தனியார் வங்கி சார்பில் 2 அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரித்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் வங்கி கணக்கு மற்றும் பரிவர்த்தனைகள் பற்றி கேட்டு விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை முடிந்த பின்னரே அவர்களிடம் எது தொடர்பாக விசாரித்தனர் என்ற தகவல் தெரியவரும்.

    ஒரே நாளில் 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    ×