என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னையில் இருந்து 10 மற்றும் 12-ந்தேதிகளில் புறப்படுகிறது.
    • நாகர்கோவிலில் இருந்து 11 மற்றும 12-ந்தேதிகளில் புறப்படுகிறது.

    ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் பண்டிகை விடுமுறை வருவதால் சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.

    அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாளை (10-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் (12-ந்தேதி) ரெயில் புறப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து 11 மற்றும் 13-ந்தேதிகளிலும் ரெயில் புறப்படுகிறது. 

    • மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, மாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதன் எதிரொலியாக பகல் நேரத்தில் மலைப்பாதை மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதற்கிடையே கனமழைக்கு பெருமாள்மலை வழியாக அடுக்கம்-கும்பக்கரை செல்லும் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து வந்து மலைப்பாதையில் விழுந்த பாறைகள், கற்கள், மண்குவியல்களை அகற்றினர். மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது. இதையடுத்து முதல் அடுக்கம் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மலைப்பாதையில் மழைக்காலத்தில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அடுக்கம் மலைப்பாதையை விரைவில் முழுமையாக சீரமைத்து போக்குவரத்து தொடங்க வேண்டும். தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்தினால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனர்.

    • வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க., வெற்றி பெறும்.
    • தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன.

    மதுரை:

    மதுரையில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "அண்ணாவால் வளர்ந்த கட்சி, எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட கட்சி இன்று உதயநிதியிடம் சென்றுள்ளது. கலர் கலராக வண்ணம் தீட்டிய ரெயில்களை இயக்கி மக்களிடம் பணம் சுரண்டும் அரசாக மத்திய அரசு உள்ளது. அதைக் கண்டிக்க வேண்டிய மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க., வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் பாஜகவுடன் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கப்படுமா என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளிக்கையில், "அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. அப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று அவர் கூறினார்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வந்த சூழலில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.


    இந்தநிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இது குறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்து பாதுகாப்பாக வெளியேற்றினர். அத்துடன் தடுப்புகள் வைத்தும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு அருகில் செல்லாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்தநிலையில் சிறிது நேரத்தில் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தடுப்புகளைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளம் அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

    பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • மாணவர்கள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்கின்றனர்.
    • 5 மாணவர்களை கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கடந்த 4-ம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்த மாநில கல்லூரி மாணவரை மற்றொறு கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விவகாரத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் ரெயில்வே காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, இனி வரும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், ரெயில்வே காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் எழும்பூர் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் சென்டிரல் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு கர்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 4-ந் தேதி சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவரை மற்றொரு கல்லூரியை சேர்ந்த 5 பேர் வழிமறித்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்களை கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகமும் சஸ்பெண்ட் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சென்னை சென்டிரலில் இருந்து, மின்சார ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கல்லூரி மாணவர்கள் செல்லும்போது பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் ஒரே நேரத்தில் ரெயில்கள் நிற்கிறது. அந்த நேரத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்கின்றனர்.

    இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தை அணுகி குறிப்பிட்ட ரெயில்களை தாமதமாக இயக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். புதிய சட்டத்தின் அடிப்படையில் மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து சி.சி.டி.வி. கேமரா, செல்போன் வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை உள்ளது.

    ரெயில் நிலையங்கள் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் இருப்பதால் பிரச்சனைகளில் ஈடுபடும் மாணவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று மோதலில் ஈடுபட்டால் புதிய சட்டதிருத்தத்தின் படி, 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.
    • வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழைந்தைகளுடன் வந்த பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    தற்போது தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் மட்டும் செல்கிறது. புரட்டாசி மாதமாக இருந்தாலும், வெயில் தாக்கத்தில், சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் கோவில் பிரகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி, பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. இதனால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    • ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதுப்பொலிவுடன் மெரினா நீச்சல் குளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • மெரினா நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இதில், மெரினா நீச்சல் குளம் 3½ முதல் 5 அடி வரை ஆழம் கொண்டது. மெரினா நீச்சல் குளத்தை முதலில் மாநகராட்சி பராமரித்து வந்தது. பின்னர், ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இங்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நீச்சல் குளத்தை தனியார் முறையாக பராமரிக்காததால் சுகாதாரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதேபோல, கடந்த ஆண்டு பெரியமேட்டில் உள்ள உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். இதன் காரணமாக நீச்சல் குளங்களில் பொதுமக்கள் நீச்சல் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மெரினா நீச்சல் குளம் கடந்த ஆண்டு மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இன்று மாலை ரூ.1.37 கோடி செலவில் புதுப்பொலிவோடு மறுசீரமைக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நாளை முதல் மெரினா நீச்சல் குளத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் காலை 5:30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீச்சல் குளம் திறந்திருக்கும். கழிவறை, உடைமாற்றும் அறைகள் போன்ற வசதிகள் என நீச்சல் குளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மெரினா நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்டுள்ள கியூ.ஆர் கோடை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீச்சல் குளத்தில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அவர்களும் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

    இது தொடர்பான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் எக்ஸ் பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் பலரும் விரும்பிச்செல்லும் நீச்சல் குளத்தைக் கழக அரசு ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதுப்பொலிவுடன் மேம்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன நீச்சல் குளத்தை இன்று திறந்து வைத்து, நீச்சல் பயிற்சியையும் தொடங்கி வைத்தோம்.

    அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்ட பின்னர் பாதுகாப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினோம். மேலும், இப்புதிய நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கான இணையவழி முன்பதிவினையும் தொடங்கி வைத்து வாழ்த்தினோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தீட்சிதர்கள் கோவிலில் கிரிக்கெட் விளையாடியதை வீடியோ எடுத்த விசிக முகாம் செயலாளர் இளையராஜா
    • காயமடைந்த இளையராஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

    சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் நேற்றிரவு 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

    அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா (40) தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

    விசிக நிர்வாகி வீடியோ எடுத்ததற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது கோவிலில் கிரிக்கெட் விளையாடலாமா? இது ஆகம விதிக்கு எதிரானது தானே? இதேபோல் அனைவரையும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா? என கேட்டபோது இது எங்க கோயில் நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம் அதனை கேட்க நீ யார்? என்று ஒருமையில் தீட்சிதர்கள் பேசியுள்ளனர்.

    பின்னர் அங்கிருந்த தீட்சிதர்கள் இளையராஜாவை அடித்து அவரது செல்போனை பறித்துள்ளனர். இதுகுறித்து இளையராஜா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தீட்சிதர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    இளையராஜாவின் செல்போனை பறித்து அவரை தீட்சிதர்கள் மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.
    • தேர்தலில் வெற்றி பெற்ற வினேஷ் போகத்திற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். சமீபத்தில் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட வினேஷ் போகத்திற்கு அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அக்கட்சி வழங்கியது.

    ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6 ஆயிரத்து 15 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் தோல்வியை பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.



    தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்திற்கு தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மற்றும் அரியானாவின் ஜூலானா சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினேஷ் போகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்."

    "மக்கள் பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக செயல்பட அவரது ஆற்றல் அவருக்கு உந்து சக்தியாக தொடரட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

    திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதவியில், "திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நாட்டு வெடிகள் தயாரித்து வந்ததை விடியா திமுக அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்?

    விடியா திமுக ஆட்சியில் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம் என்பது அறவும் செயல்பாட்டில் இல்லை என்பதையே தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்தும் செய்தி.

    தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் விடியா திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

    இந்த விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை மூலம் கண்டறியுமாறும், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் குடியிருப்பு பகுதிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்.

    ரெயில்வே துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் வசந்த் தனது தொகுதியில் கிடப்பில் உள்ள ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "இரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது."

    "இதில் நானும் ஒரு உறுப்பினராக தமிழகத்திற்கு, குறிப்பாக குமரி மாவட்டத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் இரயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
    • பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்

    சென்னை:

    இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது.

    அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஏ.கே.மூர்த்தி பேசும்போது, "கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இலங்கை சிறையில் மொட்டை அடித்து அவமானப் படுத்துகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்த தமிழக அரசுக்கு மீனவர்கள் படும் பாடு தெரியவில்லையா? இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வுகாண முன்வர வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

    எல்லையில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு சிறைகளிலும் வாடும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    உடமைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரு நாட்டு பிரதிநிதிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    அதைத்தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டார்கள் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

    ×