என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பந்தலை போலீசார் அகற்றிய நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம்.
    • போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கைது செய்ய முயற்சி செய்யவதாக குற்றச்சாட்டு.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

    இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஒரு பிரிவினருடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில்தான் நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர். இன்று காலை போராட்டத்திற்கு கலந்து கொண்ட தொழிலாளர்களை கலைந்த செல்ல வற்புறுத்தினர். அத்துடன் அவர்கள் இழுத்து கைது செய்ய முயற்சித்தனர். ஏற்கனவே முக்கிய நிர்வாகிகளை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் முயற்சி செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க வலியுறுதியுள்ளார். பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு தெரிவித்துள்ளது.

    • அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.
    • அ.தி.மு.க.விலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன்.

    திருச்சி:

    திருச்சியில் பா.ஜ.க. தமிழக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    3-வது முறையாக அரியானாவில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. தேர்தலில் வெற்றியை பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ஒரு அரசு எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளமாக மெரினாவில் நடைபெற்ற ஏர் ஷோ நடந்துள்ளது.

    இந்த அரசால் மக்களுக்கு குடிநீர் கூட கொடுக்க முடியவில்லை.

    தனது நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்த உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார். தமிழக காவல்துறை இதுவரையிலும் எந்த ஒரு பயங்கரவாதிகளையும் கைது செய்யவில்லை.

    கஞ்சாவை தவிர வேறு எந்த ஒரு போதைப் பொருளையும் தமிழக காவல்துறை பிடித்ததாக தெரியவில்லை. எந்த வகையிலும் தோற்றுப் போன அரசாக திமுக ஆட்சி உள்ளது. 2026-ல் மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.

    ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம். ஆனால் கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை. அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

    அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் தற்போது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம்போட முடியாத நிலை தமிழகத்தில் அடுத்த மூன்றுமாதத்தில் உருவாகும், நிர்வாக திறன்மையின்மைக்கு மத்திய அரசு குறைசொல்வதை ஏற்கமுடியாது.

    அ.தி.மு.க.விலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைய வேண்டும். ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். சமூக நீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். தி.மு.க. என்பது இந்து விரோத அமைப்பு தான். அதன் இந்து விரோத கொள்கைகள் மாறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முரளி, ஸ்ரீராம் சங்கர், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முரளி, ஸ்ரீராம் சங்கர், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர்.
    • இத்தனை நாள் இல்லாமல், தற்போது கலைந்து போகச் சொல்வது ஏன் என போராட்டக்காரர்கள் கேள்வி.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுகளில் சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களில் இன்னொரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

    தொடர்நது ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றிரவு திடீரென போலீசார் போராட்டம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அகற்றினர். அத்துடன் வீடு வீடாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான நபர்களை கைது செய்ததாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையும் தொழிலாளர்கள் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர். பந்தல் அகற்றப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அந்த இடத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இத்தனை நாள் இல்லாமல், தற்போது கலைந்து போகச் சொல்வது ஏன் என தொழிலாளர்கள் கேள்ளி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

    • தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டது அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள தளவாய் சுந்தரம் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், கட்சியின் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார். கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதற்கான உத்தரவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிறப்பித்தார். அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த தகவல் கட்சியின் தலைமைக்கு சென்றுள்ளது.

    அது மட்டுமின்றி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியிலும் தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் வருகையின் போதும் அவரை சந்தித்து பேசி இருக்கிறார். இவையே அவர் நீக்கப்பட்டற்கான காரணமாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக குமரி கிழக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இரு கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சி தலைமைக்கு புகார் சென்றிருக்கிறது. இந்தநிலையில் தான் அவர் வகித்த கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

    தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டது அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறுகையில், "எது நடந்தாலும் ஓகே. ரைட் என சொல்ல வேண்டியத தான். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் அ.தி.மு.க.வின் பலம் குறையும் என்று நினைத்திருக்கலாம் நடப்பதை ஏற்றுக்கொள்வோம்" என்றார்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாத நிலையில் புதிய மாவட்ட செயலாளராக யாரை தேர்ந்தெடுப்பது? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது சேலத்தில் உள்ளார்.

    இதையடுத்து அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சை மால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் சிலர் சேலத்தில் முகாமிட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக புதிதாக யாரும் நியமிக்கப்படுவார்களா? அல்லது பொறுப்பாளர் நியமிக்கப்படுவாரா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள 'சாம்சங்' நிறுவனத்தில் தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


    ஆனால், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.


    மேலும் போராட்டத் திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்துள்ளனர். செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் என அனைத்து கட்சித் தலைவர்களும் போராடும் தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க இருந்த நிலையில், காவல்துறை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


    • திருச்சி-தாம்பரம் (06190) இடையே திங்கள், வியாழன் தவிர வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • தாம்பரம்-கோவை (06184) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக ஆங்காங்கே பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் ஏற்படும் நெரிசலை சமாளிக்க நாடு முழுவதும் இந்திய ரெயில்வே துறை சிறப்பு ரெயில்களை இயக்கும்.

    கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 6,556 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதில் தென்னக ரெயில்வே முதற்கட்டமாக 44 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    இந்த ரெயில்கள் கொச்சுவேலி, சந்திரகாச்சி, ராமநாதபுரம், திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கொல்லம், விசாகப்பட் டினம் உள்பட பல நகரங் களுக்கு இயக்கப்படுகிறது.

    திருச்சி-தாம்பரம் (06190) இடையே திங்கள், வியாழன் தவிர வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    தாம்பரம்-கோவை (06184) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் வெள்ளிக்கிழமை தோறும் தாம்பரத் ல் இருந்தும், ஞாயிறு தோறும் கோவையில் இருந்தும் புறப்படும்.

    இன்று இரவு சென்னை-சென்ட்ரல் நாகர்கோவில் (06178) சிறப்பு ரெயில் புறப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி வரை இயக்கப்படும்.

    • தொண்டர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள்.
    • பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின் பற்ற வேண்டும்.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார். இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி. சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக இடங்கள் கையகப்படுத்த ப்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் மாநாடு பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கட்சியின் உயர் மட்டக் குழு நிர்வாகிகள், மாநில பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் மாநாடு பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டனர்.

    பந்தல் அமைப்பாளர், பாதுகாவலர்கள், ஒளி, ஒலி அமைப்பாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

    மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று இரவு விழுப்புரத்தில் டி.ஐ.ஜி. திஷாமித்தல், போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோரை சந்தித்தார்.

    அப்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குறிப்பிட்டிருந்த முக்கிய நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா, மாநாட்டிற்கான வரை படம் போன்றவற்றை அளிக்குமாறு போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டுள்ளனர்.

    பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின் பற்ற வேண்டும் என டி.ஐ.ஜி. அறிவுறுத்தியதாக த.வெ.க.நிர்வாகிகள் தரப்பினர் தெரிவித்தனர்.

    • மதியம் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது.
    • தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.

    அதேபோல் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை கொட்டும். குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

    நேற்று காலைமுதலே வானம் மப்பும், மந்தார முமாக காணப்பட்டது. தொடர்ந்து மதியம் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது.

    அதிலும் குறிப்பாக குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, எல்லநல்லி, சேலாஸ், குன்னக்கம்பை, தூதூர் மட்டம், கொலக்க ம்பை, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை வெளுத்து வாங்கியது.

    குன்னூர்-மேட்டுப்பா ளையம் மலைப்பாதையில் உள்ள பர்லியார் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

    பர்லியார் அரசு தொடக்க ப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி மாண வர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் பள்ளிக்குள் புகுந்தது.

    இதனால் அங்குள்ள வகுப்பறைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் தற்போது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.இதுகுறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது. தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்

    சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    அதேபோல் நேற்றும் சேலம் மாநகரம், ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, கரியகோவில், ஓமலூர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    சேலத்தில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பள்ளங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது.

    சேலம் மாவட்டத்தில் மாலை, மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் புழுக்கமும் அதிகளவில் இருக்கிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் நேற்று 6 மி.மீட்டர் அளவு மழை பெய்தது. ஆனாலும் நேற்று மாலை முதல் கடுங்குளிர் நிலவியது. குறிப்பாக இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர். காலை நேரத்தில் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர்.

    இதே போல் அயோத்தியாப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இரவில் மழை பெய்த நிலையில் காலையில் குளிருடன், பனிமூட்டமும் நிலவியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    பகலில் வெயில், மாலை, இரவில் மழையுடன் குளிர், காலை நேரத்தில் பனிப்பொழிவு என மாறி, மாறி நிலவிவரும் சீதோஷ்ண நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    சேலம்-26, ஏற்காடு-6, வாழப்பாடி-28.2, ஆணைமடுவு-23, ஆத்தூர்-5.2, கெங்கவல்லி-15, தம்மம்பட்டி-12, ஏத்தாப்பூர்-3, கரியகோவில்-45, வீரகனூர்-10, சங்ககிரி-1.4, ஓமலூர்-8, டேனிஷ்பேட்டை-6.5 என மாவட்டம் முழுவதும் 189.7 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    • பச்சையப்பன், மாநிலக் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில், பஸ் வழித்தடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. பேருந்து மற்றும் ரெயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல தொடர்பாக மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சில நாட்களுக்கு முன்னர் ரூட் தல தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கொடூரமாக தாக்கப்பட்ட சுந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து பச்சையப்பன், மாநிலக் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரெயில், பஸ் வழித்தடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மோதல் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இதற்கிடையே, சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. 

    • தங்கதைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கு விற்பனை.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,030, க்கும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.56,240-க்கு விற்பனையாகிறது.

    தங்கதைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    07-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    06-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    04-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    04-10-2024 ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-10-2024- ஒரு கிராம் ரூ. 102

    07-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    06-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    05-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    04-10-2024 ஒரு பவுன் ரூ. 103

    • உமர் அப்துல்லா புதிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பாரதிய ஜனதா 29 இடங்களை கைப்பற்றி உள்ளது.

    காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இங்கு பா.ஜ.க, காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.

    90 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ்-தேசிய மாநாடு கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இறுதியில் இக்கூட்டணி 49 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பாரதிய ஜனதா 29 இடங்களை கைப்பற்றி உள்ளது.

    காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா புதிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காங்கிரஸ் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துகள். வெற்றியை காட்டிலும் ஜனநாயகத்திற்கும், இந்தியாவிற்கும் முக்கியமானது. மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு-காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஆணை இது. இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையையும் மதிக்கும் நியாயமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.

    • வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தக்காளி விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து விற்பனையானது.

    இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த மார்க்கெட்டில் இந்த விலை என்றால், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது.

    தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், வெங்காயம், தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், அவற்றை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்து பண்ணை பசுமை கடைகளில் தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறது.

    கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.55 வரை, தக்காளி ரூ,60 வரை விற்பனையாகும் நிலையில், இங்கு வெங்காயம் கிலோ ரூ,40-க்கும், தக்காளி கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

    ×