என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காளிதாஸ் ஜெயராம் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை காளிதாஸ் ஜெயராம் காதலித்து வந்தார்.
பிரபல நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகின ராயன் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை காதலிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு காளிதாஸ் ஜெயராம் தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்துள்ளது. இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதால் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஜெயராமின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
கேரளாவை சேர்ந்த நடிகர் ஜெயராம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து திருமண பத்திரிக்கை வழங்காமல் தமிழக முதல்வருக்கு முதல் பத்திரிக்கை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
- மாநில அரசு நிதியில் இருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் விடுவிக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் போலராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, செப்டம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, எஸ்.எஸ்.ஏ.ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய கல்வி அமைச்சரிடம் 2 முறை கோரிக்கை வைத்தும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி இதுவரையில் வரவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அரசு நிதியில் இருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றார்.
- உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி நேரத்தில் பட்டாசுத் தொழில் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக முறைகேடான வழியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உரிமம் இல்லாமல் வெடிகள் தயாரிக்கக்கூடாது என்பதை பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோரும் மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.
உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும். அதற்காக வெடி தயாரிக்கும் நிறுவனத்தினர், பொது மக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இப்போது மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- மக்கள் பிரச்சனைகளை ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பேசுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
மதுரை:
தி.மு.க. அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
அண்ணா தலைமை தாங்கிய தி.மு.க. இன்றைக்கு கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது. கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின், தற்போது அவரது மகன் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.
தி.மு.க.வில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்கும் போது உதயநிதிக்கு ஏன் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. தி.மு.க. கருணாநிதி குடும்ப சொத்தாக மாறி விட்டது. துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தி.மு.க. தொடங்கிய வரலாறு தெரியுமா? எப்போதுமே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. மக்கள் பிரச்சனைகளை ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பேசுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
புரட்சி தலைவி அம்மாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக சிறப்பான முறையில் ஆட்சியை தந்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று தி.மு.க.வோடு சேர்ந்து கங்கணம் கட்டி செயல்பட்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் போன்றவர்கள். இவர்கள் அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தது மட்டுமின்றி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டார்கள். ஆனால் அ.தி.மு.க.வை எதிர்த்து அவர்கள் அனைவரும் மண்ணை கவ்வி விட்டனர்.
இப்போது ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு ஒருபோதும் அ.தி.மு.க.வில் இடமில்லை.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இப்போது மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பொதுவுடமை பேசும் அதன் கூட்டணி கட்சிகள் தி.மு.க. அரசை கண்டிக்க தவறிவிட்டன. ஆனால் அ.தி.மு.க. மட்டுமே உண்மையான மக்களுக்கு பாடுபடும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தீட்சிதர்கள் கோவிலில் கிரிக்கெட் விளையாடியதை இளையராஜா என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
- இளையராஜாவின் செல்போனை பறித்து தீட்சிதர்கள் மிரட்டும் வெளியாகி பரபரப்பு
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா (40) தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
விசிக நிர்வாகி வீடியோ எடுத்ததற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது கோவிலில் கிரிக்கெட் விளையாடலாமா? இது ஆகம விதிக்கு எதிரானது தானே? இதேபோல் அனைவரையும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா? என கேட்டபோது இது எங்க கோயில் நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம் அதனை கேட்க நீ யார்? என்று ஒருமையில் தீட்சிதர்கள் பேசியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த தீட்சிதர்கள் இளையராஜாவை அடித்து அவரது செல்போனை பறித்துள்ளனர். இதுகுறித்து இளையராஜா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தீட்சிதர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இளையராஜாவின் செல்போனை பறித்து அவரை தீட்சிதர்கள் மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது குறித்து பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை கோயில் கருவறையில் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு" என்று தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு ஆதரவாக எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
- சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
தமிழக-கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் சுற்றுலுா பயணிகள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- 12-ந்தேதி 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.
- 13-ந்தேதி 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
லட்சத்தீவு மற்றும் அதனை யொட்டிய தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதால் குறிப்பாக தமிழகம், லட்சத்தீவு மற்றும் அரபிக் கடல் போன்ற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருப்பூர், தஞ்சாவூர், கோவை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,
மேலும் 5 மாவட்டங்களுக்கு 12-ந்தேதி ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு 12-ந்தேதி கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேமூட்டத்துடன் காணப்படும், பரவலாக மழைக்கு வாய்ப்பு.
13-ந்தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள்.
- அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது.
சென்னை:
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.
தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.
அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.
கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததாக சி.ஐ.டி.யு. குற்றச்சாட்டு
- போராட்டம் நடத்த போடப்பட்டிருந்து பந்தலை அகற்றிய போலீசார், தொழிலாளர்களை கைது செய்தனர்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்கர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
* பேச்சுவார்த்தை காரணமாக சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க முன்வந்துள்ளது.
* சம்பளத்துடன் சிறப்பு ஊக்கத்தொகை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளர்கள் உயிரிட நேர்ந்தால் சிறப்பு நிவாரணத் தொகை ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.
* அனைத்து தொழிலாளர்கள் சென்று ஏ.சி. பேருந்து வசதி செய்த தரப்படும். உணவு உள்ளிட்ட பல்வேறு வசிதிகள் மேம்படுத்த சாம்சங் நிறுவனம் சம்மதம்.
* தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு.யின் பதிவு குறித்து கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* படித்த இளைஞர்களின் எதிர்கால நலன் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு. இந்த பேராட்டத்தை கைவிடுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
* வீடு புகுந்து கை செய்யப்படவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பிணையில் வந்துள்ளார்கள். அரசாங்கம் யாரையும் ரிமான்ட் செய்யவில்லை. அரசுக்கு அந்த நோக்கம் இல்லை.
* சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை. தமிழகத்தில் நிறுவனங்கள் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை நிலவுகிறது.
* சிஐடியு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக பார்க்கவில்லை. நாங்கள் அதை விரோமாக பார்க்கவில்லை.
* தொழிலாளர்களுக்கு எதிராக அடக்கு முறை கையாளவில்லை. அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தப்படும்போது எந்த அரசும் எடுக்கும் நடைமுறைதான் எடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அந்த நடைமுறையை எடுத்துள்ளது. இந்த இடங்களில் உள்ள பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை தொழிலாளர் துறை பதிவு செய்துள்ளது.
* பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்ப்பதில் தெளிவாக இருக்கிறோம்.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- ஆயுதக் கிடங்கை அழித்து தியாகச் சுடராகி சிவகங்கை வெற்றிக்கு வழிவகுத்தார்.
- எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலி வூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்ட பொம்மன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச்சிலை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு திருவுருவச் சிலை, என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணி மண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று "தானம் என்றால் கேள் தருகிறேன். வரி யென்றால் ஒருநெல்மணி கூட கட்டமாட்டேன்" என்று முழங்கி நெல்கட்டான் செவல் எனப்பேர் படைத்த பூலித்தேவனின் முக்கிய தளபதியாகத் திகழ்ந்து வெள்ளையரை வென்றழித்து பூலித்தேவன் மடியில் உயிர்நீத்த மாவீரன் வெண்ணி காலாடியின் தியாக வீரத்தைப் போற்றிடும் வகையில், 2023-24-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தென்காசி மாவட்டம், நெல்கட்டும் செவல் கிராமம், பச்சேரியில் வெண்ணி காலாடிக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரைக் கொன்று வஞ்சகத்தால் சிவகங்கையை கைப்பற்றிய, வெள்ளையரை வென்று சிவகங்கையை மீட்டிடச் குளுரைத்துத் திண்டுக்கல் விருப்பாட்சி கோபால் நாயக்கரிடம் உதவிகேட்டுத் தஞ்சமடைந்தார் அவருடைய மனைவி வேலுநாச்சியார்.
அவர் தம்முடைய படைத் தளபதியாக விளங்கிய வீரத்தாய் குயிலி, மருதுபாண்டியர்களுடன், திப்புசுல்தான் உதவியோடு சிவகங்கையை மீட்டிடப் படைதிரட்டி, வழியில் எதிர்ப்பட்ட பகைவர்களை எல்லாம் வென்றழித்து சிவகங்கையில் முகாமிட்டிருந்த வெள்ளையரைத் தாக்கினார்.
வீராங்கனை வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி மெய் முழுதும் எரியெண்ணெயைத் தடவிக் கொண்டு வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் குதித்து அழித்துத் தியாகச் சுடராகி சிவகங்கை வெற்றிக்கு வழிவகுத்தார்.
2023-24-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலிக்கு சிவகங்கையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை வட்டம், ராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் குயிலித்தாய்க்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் வீரத்தை போற்றி 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் திருவுருவச் சிலையையும், தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர்நா. முருகானந்தனம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மருத்துவர்வைத்தி நாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறிப்பட்டு உள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 27 அன்று பிரதமரை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார்கள்.
- செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.
சென்னை:
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2151.59 கோடி ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 27 அன்று பிரதமரை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார்கள். ஆனாலும், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை.
நமது திராவிட மாடல் அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒன்றிய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நம் திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை.
- பிழையை மாற்றக் கோரி முதலமைச்சருக்கு கடிதம்.
கோவை:
கோவை பீளமேடு அடுத்த காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கிருத்திகா. இந்த தம்பதிக்கு பிரணவிகா (வயது10). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள பிரபல மாலில் படம் பார்க்கச் சென்றார்.
தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதில், "புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரைக் கொள்ளும் என்ற வாசகம் வந்தது.
அதை பார்த்த சிறுமிக்கு கொல்லும் என்பதற்கு பதிலாக கொள்ளும் என தவறாக இருப்பதாக சிறுமி தனது தந்தையிடம் கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த வாசகம் எழுத்துப் பிழையுடன் வருவதால் இதனை பார்க்கும் பல லட்சம் மக்களும், குழந்தைகளும் எழுத்துப் பிழையுடனே அதனை எழுத வாய்ப்புள்ளதாக கருதிய சிறுமி, தனது தந்தையுடன் சென்று திரையரங்கு மேலாளரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.
அதற்கு அவர், இந்த படத்தின் காப்பி மும்பையில் இருந்து வந்துள்ளது. அதனை தங்களால் மாற்ற இயலாது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவி இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் உள்ள எழுத்து பிழையை சுட்டிக்காட்டியும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கடிதம் எழுதி அனுப்பினார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை பழனிச்சாமி கூறியதாவது:-
கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்கச் சென்றபோது, படம் துவங்கும் முன்பு வந்த விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப் பிழை இருப்பதை எனது மகள் பார்த்தார்.
அதனை என்னிடம் தெரிவித்த அவர், எழுத்துபிழையை சரி செய்யாவிட்டால் அதனை பார்க்கும் அனைவரும் அதே எழுத்துப் பிழையுடன் எழுத வாய்ப்புள்ளது. அதனால் அதனை மாற்ற கோரி தமிழக முதலமைச்சருக்கு எனது மகளே கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
தமிழை ஊக்குவிக்க தமிழக முதலமைச்சர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். எழுத்து பிழையை உடனடியாக மாற்றுவார்கள். மேலும் தன்னுடைய மகள் கொரோனா காலத்திலும், மழை வெள்ள பாதிப்புகளுக்கும் தான் சேர்த்து வைத்திருந்த தொகையைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






