என் மலர்
உள்ளூர் செய்திகள்
- SIR-க்கு எதிராக நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- தி.மு.க. மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அ.தி.மு.க.வும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடக்கும் திருவரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எதற்கும் அஞ்சாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதால் 75 ஆண்டுகளாக இளமையுடன் இருக்கிறது தி.மு.க.
* உடன்பிறப்பே வா என்ற பெயரில் தொகுதிவாரியாக தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன்.
* புதுப்புது யுக்திகளுடன் நம்மை அழிக்க எதிரிகள் முயன்று வருகின்றனர்.
* நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதற்கு பெயர் தான் இயக்கம்.
* பல்வேறு மத்திய அமைப்புகள் மூலம் நம்மை மிரட்டலாம் என எண்ணுகின்றனர். அது நடக்காது.
* தி.மு.க.வினரும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
* SIR-க்கு எதிராக நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
* மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR-ஐ அ.தி.மு.க. ஆதரிக்கிறது.
* தி.மு.க. மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அ.தி.மு.க.வும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
* SIR-ஐ எதிர்க்க இ.பி.எஸ்.-க்கு தைரியமில்லை. டெல்லியில் உள்ள பிக்பாசுக்கு ஆமாம் சாமி என சொல்லித்தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு தள்ளியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.
அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருக்கிறது.
கடந்த 6-ந்தேதி ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலிலும் இதேபோல் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது.
இதனை தொடர்ந்து 7-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,160 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
8-ந்தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.90,400 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் வார தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410-க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160
06-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,560
05-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
08-11-2025- ஒரு கிராம் ரூ.165
07-11-2025- ஒரு கிராம் ரூ.165
06-11-2025- ஒரு கிராம் ரூ.165
05-11-2025- ஒரு கிராம் ரூ.163
- கேரள மாநில போக்குவரத்துத்துறை ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடித்தது.
- அண்டை மாநிலங்கள் சாலை வரி விதிப்போம் எனக் கூறுவதால் நடவடிக்கை.
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமார் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத்துறை சிறைப்பிடித்து 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி விதிப்போம் என கேரள மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சாலை வரி விதிப்போம் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் இன்று மாலை முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் 6,500 கனஅடியாக நீடித்து வருகிறது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தேசிய விருதினை மத்திய அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.
- அமைச்சர் சிவசங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று அரியானாவில் குருகிராம் பகுதியில் நடைபெற்றது.
மத்திய அரசியின் இந்த உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது. இந்த விருதினை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.
இந்நிலையில், தேசிய விருது வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்திற்கும், அமைச்சர் சிவசங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும் பாராட்டுகள்!
#LastMileConnectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
- கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
சீர்காழி:
தமிழகம், பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடிதொழில் உள்ளது. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை சூழல்களால் அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கிடையே இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி தொழில் நுட்பபொருட்கள், மீன்கள், வலைகள், செல்போன்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளிடம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
இதனால் வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்தகட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
- ஓரிரு இடங்களில் மட்டும் மழைக்கான சூழல் ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை முதல் 2 சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து பருவமழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்பச்சலன மழை சற்று கைகொடுத்தாலும், இம்மாதத்துக்கான வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யாத நிலையே இருந்து வந்தது.
இந்த நிலையில், தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது.
இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) இரவில் இருந்தே பருவமழை பெய்யத் தொடங்க இருக்கிறது. அதிலும் நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினமும் (புதன்கிழமை) கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து 13 முதல் 15-ந் தேதி வரை சற்று இடைவெளி ஏற்படும் என்றும், அந்த நாட்களிலெல்லாம் இரவில் பனிப்பொழிவு அதிகமாகவும், பகலில் மேகக்கூட்டங்களுடனும் வானிலை இருக்கும் எனவும், ஓரிரு இடங்களில் மட்டும் மழைக்கான சூழல் ஏற்படும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது. அதன்படி, இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 16-ந் தேதியில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து வடகிழக்கு பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
இதனால் 16, 17-ந் தேதிகளில் காவிரி டெல்டா, தென் மாவட்டங்களிலும், 17-ந் தேதி இரவில் இருந்து 19-ந் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறி உள்ளார்.
20-ந் தேதிக்கு பிறகு தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி வருகிறது. இதில் 21-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், 25-ந் தேதிக்கு பின் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுவடையவும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன்படி, இம்மாத இறுதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் கூறியிருக்கிறார். அதன் பின்னரும் அதாவது, டிசம்பர் மாதம் முதல் பாதி வரை நல்ல மழைக்கான சூழல் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசார பயணத்தை திருப்போரூரில் தொடங்கினார்.
- இந்த நடைபயணத்தை 100ம் நாளில் தர்மபுரியில் நேற்று நிறைவு செய்தார்.
தர்மபுரி:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பிரசார பயணத்தை திருப்போரூர் தொகுதியில் கடந்த ஜூலை 25-ம் தேதி தொடங்கினார்
100 நாட்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்ற அவர், தனது நடைபயணத்தை தர்மபுரியில் நேற்று நிறைவு செய்தார்.
இந்நிலையில், தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
மன உளைச்சல், மன அழுத்தத்தில் தான் இந்த நடைபயணத்தை தொடங்கினேன். அடுத்த 108-வது நாளில் தி.மு.க. ஆட்சி அகற்றப்படும்.
தி.மு.க. ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றி இருக்கிறார்கள். 13 சதவீத வாக்குறுதிகள்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். 100-க்கு 13 மதிப்பெண்தான். எனவே பெயிலான கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு விடமாட்டோம்.
இந்த நடைபயணத்தில் நிறைய கத்துக்கிட்டேன். இந்த நடைபயணம் வாயிலாக நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிட்டது.
திமுக டெல்டாவை அழித்துவிட்டார்கள். 60 ஆண்டு காலம் ஆண்டு கொண்டிருக்கின்ற திமுக இந்த டெல்டாவை எந்த ஒரு அடிப்படையும் இல்லாதவையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மோசமான ஒரு ஆட்சி இதுவரைக்கும் நாம் பார்த்தது கிடையாது என தெரிவித்தார்.
- தீயசக்தி தி.மு.க-வின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது.
- தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை.
தீயசக்தி தி.மு.க-வின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொடுமையின் உச்சம்.
பல ஊடகங்களின் பலத்தைப் பயன்படுத்தி, 54 மாத கால விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகளை மறைத்துவிடலாம், தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் இருப்பது, அவர்களின் குரூர புத்தியின் வெளிப்பாடாகும்.
அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழக காவல்துறை, தற்போது, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் செயல்பாடற்ற நிலையினால் சீர்கெட்டிருப்பது வேதனையான ஒன்று. இந்த ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற காவல் துறையின் அனைத்து அவயங்களும் செயலிழந்துவிட்டதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்ற நிகழ்வுகளிலும், குற்றவாளிகளுடன் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைகோர்த்து இருப்பதும், அவர்களைக் காப்பாற்றும் பணியில் காவல் துறை சட்டப்படி செயல்படாத நிலை மற்றும் இந்த ஆட்சியின் அவலங்களை தைரியமாக எடுத்துரைக்கும் சமூக ஊடகங்களை முடக்குவது மற்றும் சட்ட விரோத என்கவுண்டர்களில் ஈடுபடுவதும்தான் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் சாதனை.
மேலும், தங்களது குற்றங்களில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளைக் காப்பாற்ற CBI விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடும் இந்த விடியா திமுக அரசு, கிட்னி மாற்று முறைகேடு மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல், அவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதிடாததால், தவறிழைத்த மருத்துவமனை மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.
சமூக நலத்துறை அமைச்சர் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில், 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி உள்ளனர் என்றும்; அவர்களுக்கு சுமார் 104 கோடி ரூபாயை நிவாரணமாக மாநில அரசு வழங்கி உள்ளதாகவும் கூறி இருப்பது, தமிழ் நாட்டின் சட்டம்-ஒழுங்கு தோல்வியின் வெளிப்பாடா? அல்லது வெட்கக்கேடா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக 104 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது என்று பெருமையுடன் குறிப்பிட்டது அரசின் சாதனையா? அல்லது சட்டம்-ஒழுங்கின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதா? என்பதை அமைச்சர்தான் விளக்க வேண்டும்.
ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கடந்த 4 மாதங்களில், தமிழ் நாட்டில் சுமார் 501 கொலைகளும், சுமார் 156 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
* செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் இரண்டு காவலர்களே, அண்டை மாநிலப் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது.
* சென்னை அடையாறு அருகே காந்தி நகரில் குணா என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.
* தேனி அருகே இரண்டரை சவரன் தங்க நகைக்காக இளைஞரை அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசியது.
* திருப்பூரில் மதுபோதையில் அசாம் இளைஞரை வெட்டிக் கொன்றது.
இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையும்; பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக 'Compromise' செய்திருப்பதையும் பார்க்கும்போது, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.
'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' என்று கூறிய ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சி, 'சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது'.
புரட்சித் தலைவி அம்மா ஆட்சி காலத்திலும்; தொடர்ந்து எனது தலைமையிலான அம்மா அரசிலும், சட்டப்படி சிறப்பாக இயங்கிய காவல்துறை, கடந்த 54 மாத கால விடியா திமுக ஆட்சியில் தனது கம்பீரத்தை இழந்துள்ளது.
விடியா திமுக ஆட்சியில் நிரந்தர DGP இருந்தபோதே காவல்துறை சிறப்பாக செயல்படாத நிலையில், தற்போது காவல் துறையின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் DGP பதவி காலியானவுடன் தகுதியான காவல் உயர் அதிகாரிகள் பலர் இருக்கும் நிலையில், விடியா திமுக அரசின் தாளத்திற்கு ஏற்ப ஆடக்கூடிய ஜூனியர் அதிகாரிகளின் பெயர்களை மத்திய தேர்வாணையம் பரிந்துரைக்காத நிலையில், வேண்டுமென்றே DGP நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு, தற்காலிக DGP-யை நியமித்துள்ளார் பொம்மை முதலமைச்சர். தமிழகத்தில் DGP நியமிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தும், இன்றுவரை இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத விடியா திமுக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி 7.11.2025-அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தமிழ் நாடு அரசுக்கு 3 வார காலத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிர்வாகத் திறனற்ற இந்த செயல்பாடுகளைப் பார்க்கும் போது, புரட்சித் தலைவரின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.
காட்டு புலியை வீட்டில் வைத்தாலும்,
கறியும், சோறும் கலந்து வைத்தாலும்,
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும்,
மாறாதய்யா மாறாது, மனமும், குணமும் மாறாது
என்ற வரிகள் ஸ்டாலினுக்கு அப்படியே பொருந்துகிறது.
நான்கரை ஆண்டு கால நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி. குறிப்பாக, மக்களைக் காக்கும் சட்டம்-ஒழுங்கின் தோல்வியால் தமிழகம் பாதிப்படைந்து வருவதை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் சாசன சட்டப்படி மக்களைக் காப்பதாக உறுதிமொழி ஏற்று ஆட்சியமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் சுயநலத்திற்காக விளம்பர மடல் ஆட்சி நடத்துவதை தமிழக மக்கள் இனியும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்துவதோடு, மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை தலைமை DGP-ஆக உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் 20-ந்தேதிக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
- ஆனாலும் 15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறோம்.
ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை கோதுமை ஒதுக்கீடு மாதம் 8,576 மெட்ரிக் டன் மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டினை உயர்த்திட ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 8,576 மெட்ரிக் டன்னிலிருந்து 17,100.38 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுப் பொது மக்களுக்குத் தங்குதடையின்றி நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக்கீட்டைப் பழைய அளவிற்கே குறைத்துத் தற்போது மாதம், 8,576 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 2025 மாதத்திற்கு 8722 மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங்களுக்கு நுகர்வின் அடிப்டையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களில் கோதுமையின் நுகர்வு சதவீதம் சராசரியாக 92% எனப் பதிவாகி உள்ளது. நவம்பர் மாதத்தில் 08.11.2025 வரை 63% (5,386 மெட்ரிக் டன்) கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யபட்டுள்ளது.
இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 20-ஆம் நாளுக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனாலும் 15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம்போல் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்.
நடப்புக் குறுவைப் பருவத்தில் 9/11/25 வரை 1923 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1.75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கடைசி ஆண்டில் இதே காலகட்டத்தில் 4.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அவர் ஆட்சியில் பொது ரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.1918, சன்ன ரகத்திற்கு ரூ1958 மட்டுமே வழங்கப்பட்டது.
ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 2500, சன்ன ரகத்திற்கு ரூ2545 வழங்கப்பட்டு வருகிறது.
ஆதலால் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சக்கரபாணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- பழைய பஸ் நிலையம், பழைய நீதிமன்ற சாலை, கொண்டிராஜபாளையம்,
தஞ்சாவூா்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தஞ்சாவூர் நகரிய உதவி செயற்பொறியாளா் விஜய்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூா் நீதிமன்ற சாலையில் உள்ள நகர துணை மின் நிலையத்திலும், மின் பாதையிலும் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளை கேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு,
தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோவில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணை கால்வாய் சாலை, திவான்நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கம் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்கார தெரு, பழைய பஸ் நிலையம், பழைய நீதிமன்ற சாலை, கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
- நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்பு உள்ள கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும், உள்வாங்கியும் காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.
கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தன.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.






