என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
    • எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

    நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.

    இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

    போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குடும்ப சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • பிடிபட்ட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் கீழூரை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் இசக்கிமுத்து (வயது 32). தற்போது திருப்பதிசாரம் அரசு விதைப்பண்ணை அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இசக்கிமுத்து மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இசக்கி முத்துவின் தந்தைக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தக்கலையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி என்பவர் பொன்னையாவுக்கு ஆதரவாக நடத்தி வருகிறார். இந்த வக்கீலை இசக்கிமுத்து ஏற்பாடு செய்திருந்தார். வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதனால் வக்கீல் கிறிஸ்டோபர் சோபிக்கும், இசக்கி முத்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கை விரைந்து முடிக்குமாறு கிறிஸ்டோபர் சோபிடம் இசக்கிமுத்து கூறி வந்தார். இந்த நிலையில் கிறிஸ்டோபர் சோபி திருப்பதிசாரம் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு வைத்து இசக்கிமுத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

    பின்னர் உடலை பீமநகரி சந்தியான் குளக்கரையில் தீ வைத்து எரித்தார். பின்னர் இசக்கிமுத்து ஆரல்வாய்மொழி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குளத்தங்கரைக்கு சென்று பார்த்தபோது கிறிஸ்டோபர் சோபி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    பிணத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்ந்து இசக்கி முத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட இசக்கிமுத்து போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது தந்தையின் குடும்ப சொத்து பிரச்சினை தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு செலவுக்கு கிறிஸ்டோபர் சோபி லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். இந்த சொத்து பத்திரத்தையும் வக்கீல் தான் வைத்திருந்தார். கிறிஸ்டோபர் சோபி தங்களுக்கு எதிராக செயல்பட்டதால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சொத்து பத்திரத்தை திருப்பி தரும்படி கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் பேசி வந்தார். இந்த நிலையில் வக்கீல் கிறிஸ்டோபர் சோபி என்னைதொடர்பு கொண்டு தனக்கு வாழைக்கன்று வேண்டும் என்று கேட்டார்.

    இதையடுத்து அவரை எங்களது ஊருக்கு வரவழைத்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன். அவரும் மோட்டார் சைக்கிளில் எங்கள் ஊருக்கு வந்தார். அங்கு வைத்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். பின்னர் எனது நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் அவரை சந்தியான் குளக்கரையில் வீசியதுடன் தீ வைத்து எரித்ததாக கூறினார்.

    தனிப்படை போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை வழக்கில் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் இசக்கிமுத்து நண்பர்கள் 4 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விசாரணையில் வக்கீலை கொலை செய்து விட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் அவரது உடலை குளத்தின் கரையில் வீசி சென்றவுடன் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறினார்கள். தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் அவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பிரேத பரிசோதனை அறிக்கையில் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.
    • போலீசார் ராணுவத்தில் பணியாற்றிய மருதுபாண்டியை ஓராண்டுக்கு பின் கைது செய்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (27). இருவரும் நண்பர்கள்.

    ராணுவத்தில் வேலை பார்த்து வந்த மருதுபாண்டி ஊருக்கு வரும்போது ராஜபாண்டியுடன் வெளியே செல்வது வழக்கம். மேலும் 2 பேரும் சேர்ந்து அடிக்கடி மதுகுடித்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி புலியூர் பகுதியில் ராஜபாண்டி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரது நண்பர் மருது பாண்டியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக ராஜபாண்டிக்கு மதுவில் விஷம் கலந்து மருதுபாண்டி கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராணுவத்தில் பணியாற்றிய மருதுபாண்டியை ஓராண்டுக்கு பின் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகால தொற்றுநோய்களும் தீவிரமடைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    காய்ச்சல், சளி, தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

    அடுத்த சில மாதங்களுக்கு டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

    எனவே, இனியாவது விளம்பர அரசியலை தவிர்த்து, மக்களை பெருமளவு பாதிக்கும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உயிரிழப்புகளை தடுப்பதோடு, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • பால் விலை உயர்வு தொடர்பாக, அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.
    • தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பால், தயிர் விற்பனை விலையை இன்று காலை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    பால் விலை உயர்வு தொடர்பாக, அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.

    அதன்படி, நிறை கொழுப்பு பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.36-ல் இருந்து 37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.65-ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.31-ல் இருந்து 32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.58-ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30-ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37-ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்ப்டடுள்ளது.

    தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ, தட்டுப்பாடோ இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், "இது பொதுமக்கள் தலையில் பெரும்பாரத்தை சுமத்தும் செயலாகும் என்பதோடு, இந்த பால், தயிர் விற்பனை விலை உயர்வானது மற்ற தனியார் பால் நிறுவனங்களையும் விற்பனை விலையை உயர்த்த தூண்டுவது போல் ஆரோக்யா நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந்து உள்ளது கண்டிக்கத்தக்கதாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள், வாகன எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகளில் மட்டுமல்ல பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்புடையதல்ல என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை ஆரோக்யா நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி அன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாள்.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த மாதம் 31ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்தது.

    இதைதொடர்ந்து, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் எனவும், இதனால் வெளி ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக இருக்கும் எனவும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.

    இதைஅடுத்து தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி அன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை (9-11-24) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
    • இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பட்டியல்இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

    அவ்வகையில் 2024 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம். சென்னை-05 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

    • விஷக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    பாம்பு, தேள், நாய் மற்றும் பிற விலங்குகள் கடிக்கு சிகிச்சைக்காக, ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர சிகிச்சையை அரசு வழங்கி வருகிறது. மேலும் விஷக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில், பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக (Notifiable Disease) தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    பாம்பு கடி தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. 

    • அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தனர்.

    சென்னையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமரன் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்சிப்படுத்தியிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனால், திரையரங்குகளை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்த நிலையில் காவல்துறை போலீஸ் பாதுகாப்பு போட்பபட்டுள்ளது.

    சென்னை ராயப்பேட்டை வெஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டுள்ளது.

    இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் திரையரங்கம், சத்யம் சினிமாஸ் திரையரங்கிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல், அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளராக நடிகர் கமல்ஹானின் ஈசிஆர் இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • 10-க்கும் மேற்பட்ட பறவைகளை சுட்டு வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது.
    • திருப்பூர் மத்திய போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரம் எஸ்.ஆர். நகர் பின்புறம் உள்ள தனியார் கார்டன் பகுதியில் நேற்று மாலை நவீன துப்பாக்கியுடன் இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் மரத்தில் அமர்ந்திருந்த பறவையை சுட்டு வேட்டையாடினர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் எதுவும் தெரிவிக்காமல் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

    அப்போது அங்கிருந்த நபர்கள் அவர்களை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அதில் 3 பேரும் வேட்டையாட வந்திருப்பதும், உயர்மட்ட கட்டிடங்கள் மற்றும் காலியான நிலப்பரப்பு உள்ள இந்த பகுதியில் ஏராளமான பறவைகள் இரை தேடி வந்து செல்லும் நிலையில் அவர்கள் எஸ்.ஆர். நகர் பகுதியை தேர்ந்தெடுத்து வந்து வேட்டையாடி இருப்பது தெரியவந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி சமயத்தில் இதே போல இவர்கள் அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பறவைகளை சுட்டு வேட்டையாடி இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி ஏர்கன் வகையை சேர்ந்ததா? அல்லது லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியா? என எதுவும் தெரியாத நிலையில் ஸ்கோப் வைக்கப்பட்ட நீண்ட தூர இலக்குகளை குறிவைக்கும் துப்பாக்கி வைத்திருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இதையடுத்து திருப்பூர் மத்திய போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் கரும்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறுகையில், கருப்பசாமி வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கிக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை. இருந்த போதிலும் அவர் பறவைகளை வேட்டையாடியதாலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார்.
    • 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

     

    மேலும், கருணை அடிப்படையில் 49 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

    மாணவர்களுக்கான கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

    • இப்போது பந்தல்குடி வாய்க்காலில் வேலை பார்ப்பவர்கள் மழை வருவதற்கு முன் ஏன் செய்யவில்லை.
    • கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கக்கூடியது.

    மதுரை:

    திமுக கூட்டணி புயலில் அடித்துக்கொண்டு போகும் என்று சொல்கிறீர்களே...

    துளி கூட அசையாது... ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு... ஆலமரத்தை அழிக்க சில பேர் வேரெடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்று உதயநிதி சொல்கிறார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சொல்வது எல்லாம் சரிதான். வெள்ளத்தில் ஆலமரமே பிடுங்கிக்கொண்டு போயிருக்கிறது.

    உலகமே அழிந்திருக்கிறது. உதயநிதிக்கு தெரியவில்லை.

    எத்தனை கூட்டணி பலம் இருந்தாலும் மக்கள் பலம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் நமக்கு எஜமானர். அந்த மக்களுக்கு செய்யாமல், கூட்டணி பலத்தோடு மக்களை போய் சந்திப்போம் என்று சொன்னால் என்ன அர்த்தம்.

    பந்தல்குடி வாய்க்காலில் எத்தனை ஜேசிபி கொண்டு வேலை நடக்கிறது என்று பாருங்கள்.

    இப்போது பந்தல்குடி வாய்க்காலில் வேலை பார்ப்பவர்கள் மழை வருவதற்கு முன் ஏன் செய்யவில்லை.

    மக்கள் பணியை மட்டும் பாருங்கள் என்று பொதுச்செயலாளர் சொல்லி இருக்கிறார்.

    மக்களுக்கான திட்டங்கள் சென்றடைகிறதா?, கட்டமைப்பை வலுப்படுத்துங்கள், மக்கள் குறைகளை எடுத்துச்சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாமக கட்சி கூட்டணி குறித்து எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். 10 நாளைக்கு முன்பு எங்களுடன் தான் கூட்டணி என்றார்கள். 10 நாளில் எல்லாம் மாறி விட்டது.

    கூட்டணி என்பது இப்போது பேசக்கூடிய தருணம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கக்கூடியது. இப்போது கூட்டணி பற்றி பேசுவது வேஸ்ட்.

    கிழக்கு பகுதியில் உள்ள 28 வார்டுகளில் மாநகராட்சி பணி மெத்தனமாக உள்ளது. 100 வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    அமைச்சர் மூர்த்தி இருக்கும் தொகுதியிலே இதுபோல் இருக்கிறது என்று கூறினார்.

    ×