என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
    • இதையடுத்து, தலைவனே இளம் தலைவனே என்ற பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தலைவனே இளம் தலைவனே என்ற பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய Deputy CM ஒருநாள் Definitely CM என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், கழக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக, கழக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் ஜோயலின் வரிகளோடு உருவாகியுள்ள "தலைவனே... இளம் தலைவனே..." பாடலை அன்பகத்தில் வெளியிட்டோம்.

    இசையமைத்த மாரிசக்திக்கும், பாடகர் மனோ சாருக்கும், இளைஞரணி தம்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.

    • 1 மற்றும் 2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று காலை 8.30 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும், தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    29-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    30-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    1 மற்றும் 2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தரைக்காற்று

    நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை மறுநாள் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    29-ந்தேதி வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
    • அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது.

    இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில அரசியலமைப்பு தினமாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    என்றும் பரிணமித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது.

    அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களையும் - அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்ட முகப்புரையை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உள்பட அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்பட அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து துறைகள், ஐகோர்ட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துறைகளின் தலைமை அலுவலகங்களிலும் துறைகளின் தலைவர்கள் சட்ட முகப்புரையை வாசித்தனர்.

    இதே போல் பள்ளி, கல்லூரிகளிலும் வாசித்தனர். வாசிக்க வேண்டிய முகப்புரையை அரசு அனைத்து துறைகளுக்கும் அனுப்பி இருந்தது. அதன் விவரம் வருமாறு:-

    இந்திய மக்களாட்சிக்கு இது பெருமைமிகு தருணமாகும். நமது அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் 75 ஆண்டுகாலம் பயணித்து. நாட்டின் ஒருமைப்பாட்டையும் கூட்டாட்சிக் கட்டமைப்பையும் எல்லாத் தருணங்களிலும் அப்படியே தக்க வைத்திருக்கிறது. இத்தருணத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்களின் பேரறிவுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம். வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க அவர்கள் கண்ட கனவுகளுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் ஏற்பப் பயணிப்போம்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மிக உயரிய விழுமியங்களைக் கடைப்பிடிக்க நாம் பாடுபடுவோம்.

    • திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது.
    • அதானி சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    அதானி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமதாசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. அவதூறாக பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானி சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். 

    • வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;
    • திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோவில் குளத்தை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி; திருச்சி மாவட்டம் முசிறி, காட்டுப்புத்தூர் மற்றும் உப்பிலியாபுரம்; திருவாரூர் மாவட்டம் குடவாசல்; நாகப்பட்டினம் மாவட்டம்-வேதாரண்யம் மற்றும் நாகூர்; கடலூர் மாவட்டம்-மங்கலம் பேட்டை, புதுப்பேட்டை, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி;

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி; செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்; காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்; திருவள்ளூர் மாவட்டம்-திருத்தணி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 39 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 30 அலுவலகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழு யான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;

    வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;

    நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையை முக்கிய சுற்றுலாத்தலமாக மேம்படுத்திடும் வகையில் 2 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;

    திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் 1 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் நிலசீரமைப்பு, சாலை மற்றும் நடைபாதை, மின்சாரப் பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்;

    கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் 2 கோடியே 84 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள்;

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மேம்பாட்டுப் பணிகள்;

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோவில் குளத்தை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக முறையைத் தான் கடைபிடித்துள்ளோம்.
    • வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதுவும் தற்போது பறிக்கப்படுகிறது.

    சென்னை:

    இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சியில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இல்லை. அதை பாதுகாக்க வேண்டும் என்று தான் இன்று உறுதிமொழி ஏற்கிறோம்.

    இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக முறையைத் தான் கடைபிடித்துள்ளோம். மற்றொரு முறை ஆயுதம் ஏந்திய முறை இருக்கிறது. அதை நாம் கடைபிடிக்கவில்லை. இந்த நிலையில் பாராளுமன்ற ஜனநாயக முறையை சிதைக்கும் வகையில் தான் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.

    மகாராஷ்டிரா தேர்தலில் இஸ்லாமிய பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது எந்த ஜனநாயக முறை?

    வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதுவும் தற்போது பறிக்கப்படுகிறது. இது பேராபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே தான் இதை பாதுகாக்க வேண்டும்.

    அதானி விவகாரத்தில் பா.ஜ.க. விளக்கெண்ணெய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. யோக்கியமான பிரதமராக இருந்தால் அதானியை கைது செய்யட்டும்.

    யார் யாருக்கு லஞ்சம் கொடுத்தனர் என்ற பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்கட்டும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, டெல்லி என்பதல்ல பிரச்சனை.

    பா.ஜ.க. குரலும் பா.ம.க. குரலும் ஒன்றாக இருக்கிறது. ஏன் ஒன்றாக இருக்கிறது என்றால் அதானியை காப்பாற்றுவதற்கு தான்.

    தோழர் என்ற வார்த்தை மிக சிறப்பானது. அதை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். இதை தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பேசுவதால் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    இளம்வயதில் இருந்து சிறப்பாக செயல்படும் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்று திறன்பட செயல்பட்டு கொண்டு இருக்கிறார். இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக்கொகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
    • ரூ.17,710 திருடியதும் தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் 20-ந் தேதிக்கு மேல் கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்படுவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

    இந்நிலையில் நேற்று சங்கரநாராயண சுவாமி கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் 4 பேர் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து புறக்காவல் நிலைய போலீசார், சந்தேகத்திற்கு இடமான 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மகளிர் காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் மகேஸ்வரி (வயது 42) என்பது போலீசாரை மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

    அவருடன் சிக்கியவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ. மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் என்பதும், 4 பேரும் ஒன்றாக இணைந்து உண்டியல் பணம் எண்ணும் போது ரூ.17 ஆயிரத்து 710-ஐ திருடியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் உண்டியல் பணம் திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் மற்றும் 3 பெண்களை கைது செய்தனர்.

    • தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஃபெங்கல் புயல் என பெயரிடப்படும்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை திரிகோண மலையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு தென் கிழக்கே 750 கி.மீ. தொலை விலும், சென்னையில் இருந்து தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைந்தது. அதன் பிறகு அடுத்த 2 நாட்களில் வட மேற்கு திசையில் தமிழகம் -இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஃபெங்கல் புயல் என பெயரிடப்படும்.

    இதனிடையே, சென்னையில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 28-ந்தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஒரு மதத்தினரை பிற மதத்தினர் இழிவுபடுத்துவதையும் நிச்சயமாக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்.
    • பிரிவினைகளுக்கு ஒட்டுமொத்தமாக மதிப்பளிக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி அல்ல.

    திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய நிகழ்ச்சியில், கானா பாடகி இசைவாணி பங்கேற்றார். அப்போது அவர், சபரிமலை ஐயப்பசாமி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பாடிய பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சியின் மாநில மகளிரணி தலைவி சுசிலா தேவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த ஆட்சியை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்று ஆட்சி செய்பவர் நம்முடைய முதல்வர்.

    எந்த மதத்தினரை இழிவுபடுத்துவதையும், ஒரு மதத்தினரை பிற மதத்தினர் இழிவுபடுத்துவதையும் நிச்சயமாக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்.

    ஐயப்பன் பாடல் விவகாரம் தொடர்பாக நேற்று புகார் அளித்துள்ளதாக பத்திரிகை வாயிலான அறிந்து கொண்டேன்.

    சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மதத்தால் இனத்தால் மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க முடியாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.

    பிரிவினைகளுக்கு ஒட்டுமொத்தமாக மதிப்பளிக்கக்கூடிய ஆட்சி இந்த ஆட்சி அல்ல. அனைரும் சமம் என்பது தான் இந்த ஆட்சியின் கொள்கை. அதே நேரத்தில் சட்டத்தை மதிக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி. சட்டப்படி இந்து சமய அறநிலையத்துறையின் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம்.

    டைரக்டர் தங்கர்பச்சான் முதலமைச்சரை புகழ்ந்து பேசிய பேச்சின் ஒலிநாடாவை தருகிறேன். கடந்த ஆண்டு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வேப்பேரி ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் தங்கர் பச்சான் புகழ்ந்த புகழ் இதுவரையில் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருக்கிற பேச்சாளர்கள் கூட பேசி இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு புகழ்ந்தவர். இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

    • துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு அருள்ஜோதி நகர் பகுதியில் சாலை போடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளதால் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    அதேபோல் அப்பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் மாத கணக்கில் அள்ளப்படாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலரிடம் முறையிட்டபோது அவர் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கவுன்சிலரை கண்டிக்கும் விதமாகவும், உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்றக்கோரியும் கார்மேகம் என்பவர் அப்பகுதியில் தேங்கி இருந்த சாக்கடை கால்வாயில் இறங்கி சாக்கடை கழிவுகளை கைகளால் வாரி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
    • டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்.

    சேலம்:

    தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமாக லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன.

    டிரைவர்கள், கிளீனர்கள், பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இதனை நம்பி உள்ளனர்.

    இந்தநிலையில் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் டிரைவர், கிளீனர் தட்டுப்பாட்டால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே போக்குவரத்து போலீசார் விதி முறைகளை மீறி விதிக்கும் ஆன்லைன் அபாராதத்தால் லாரி தொழில் மேலும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறி உள்ளனர். இதனால் விரைவில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறுகையில், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் முடங்கி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான லாரிகளை இயக்க முடியாமல் சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து லாரிகளும் ஆண்டுதோறும் எப்.சி. காட்டி தான் சாலையில் ஓட்டுகிறோம். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.

    மேலும் லோடு, ஏற்றி இறக்கும் போதும் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். இதுதவிர வணிக நிறுவனங்கள் முன்பு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளுக்கு சில நேரங்களில் வாரத்திற்கு இரு முறை கூட ஒரே லாரிக்கு போக்குவரத்து போலீசார் ஏதாவது காரணம் கூறி ஆன்லைனில் அபராதம் விதித்து வருகிறார்கள். இது சென்னையில் தான் அதிக அளவில் நடக்கிறது.

    இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடமும் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் லாரிகளில் உள்ள ஒளிரும் பட்டைகள் நல்லபடி இருந்தாலும் அடிக்கடி மாற்றும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள்.

    புதிதாக டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் போது அன்று மாலையே லைசன்ஸ் எடுப்பவரிடம் புதிய லைசன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது லைசன்ஸ் எடுப்பவரின் ஆவணங்களில் உள்ள முகவரிக்கு தான் லைசன்ஸ் செல்கிறது . அதற்கு ஒரு வாரம் ஆகிறது. இதனால் காலவிரயம் ஆகிறது.

    லாரிகளை ஒரு வாரம் இதனால் நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது. எனவே முன்பு போல லைசன்சை உடனடியாக அவர்களிடமே போக்குவரத்து அதிகாரிகள் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகள் குறித்து பல முறை வலியுறுத்தியும் நிறைவேறவில்லை.

    இதனால் ஒரு லாரிக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூடுதல் செலவாகிறது. இதனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.

    இனி வரும் காலங்களிலும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
    • பெயர் மாற்றத்திற்காக போராடிய பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்றுறு, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி' என்ற பெயரை அழித்து, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்தார்.

    மேலும், பெயர் மாற்றத்திற்காக போராடிய ஊர்ப் பெரியவர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்த அமைச்சர், இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

    இதனிடையே பெயர் மாற்றத்திற்காக போராடிய பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

    இந்த நிலையில், 'அரிசன் காலனி' என்ற பெயரை அழித்து மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றம் செய்த அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். 

    ×