என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
    • அமராவதி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    நேற்று காலை அணையின் நீர்மட்டம் 87.60 அடியாக இருந்த நிலையில், அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு 372 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். நேற்று அணையில் இருந்து 953 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்நிலையில் அமராவதி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 36,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    அமராவதி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    • நேற்று மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது.
    • ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 23.29 அடிக்கு நீர் நிரம்பியதையடுத்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

    அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது.

    இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மெல்ல அதிகரித்தது. நேற்று காலை ஏரிக்கு நீர்வரத்து 713 கன அடியாக இருந்த நிலையில், கனமழை காரணமாக படிப்படியாக நீர்வரத்து மளமளவென்று அதிகரித்தது.

    நேற்று மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தும் 6,622 கன அடியாக அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.43 அடியை தொட்டதால், ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23.29 அடியை எட்டியதையடுத்து காலை 8 மணிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 23.29 அடிக்கு நீர் நிரம்பியதையடுத்து 1,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 3,456 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு 6,500 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுவதால் 6 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியப்பேடு, திருநீர்மலை, அடையாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

    இதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நீர்வரத்து அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    • தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடியில் காலை 10 மணி வரை லேசான இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும்போதுதான் எதிர்பார்க்கப்படுகின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்.
    • தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மட்டுமே வானிலை நிகழ்வுகளை கணித்துவிட முடியாது.

    சென்னை:

    சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் கணிப்பில் வானிலை ஆய்வு மையம் சற்று தடுமாறியது. இதுபோன்று வானிலை நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியாமல் போவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வானிலையியலை முழுமையாக அறிந்து கொள்ள அறிவியல் கிடையாது. 100 சதவீதம் முழுமையாக கணிக்க முடியாது. வானிலை நிகழ்வுகள் பல காரணங்களால் நிகழக்கூடியது. வானிலையை கணிப்பதற்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது. கருவிகள் புள்ளிவிவரங்களைதான் கொடுக்கும். அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அறிவியல் வளரும் போது தொழில்நுட்பமும் வளரவேண்டியது அவசியம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்து வளரும்போதுதான் எதிர்பார்க்கப்படுகின்ற துல்லியத்தன்மை கிடைக்கும்.

    புயலை பொறுத்தவரையில், கடல் உள்ளடக்க வெப்பம், கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று விரிதல், காற்றுக்கும், வளிமண்டலத்துக்கும் உள்ள தொடர்பு, மேகக்கூட்டங்கள் எப்படி உருவாகிறது?, அதனால் என்ன வெப்பம் வெளியாகிறது?, புயலின் நகர்வு வேகம் போன்ற பல காரணிகளால் அறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது.

    புயல் உருவாகாதபோது காற்று நேர் திசையில் செல்லும். புயலாக மாறும் போது சுழல் காற்றாக மாறும். அப்போது திசை மாறும். ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது அதற்கு பின்னால் சக்தி பரிமாற்றம் இருக்கிறது. இதையெல்லாம் முழுமையாக அறியப்பட வேண்டும். இன்றைய காலகட்டங்களில் அவை முழுமையாக அறியப்படவில்லை.

    ஃபெஞ்சல் புயல் நேரத்தின்போது கூட அது செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை பார்க்கும்போது, புயலாக மாற சாத்தியம் இல்லை என்று சொன்னோம். பின்னர் இரவில் அது வளர்ச்சி பெற்றதால் புயலாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ''ஓடீஸ்'' புயலுக்கு 112 கி.மீ. வரைக்கும்தான் காற்று இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 260 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டது. புயலுக்குள் ஆய்வு விமானங்களை செலுத்தியும் விவரங்கள் பெறப்படுகிறது. ஆனால் அப்படி பெறப்பட்ட விவரங்களின் கணிப்புகளும் தவறுகிறது. அறிவியலின் வித்தியாசம் அதில் தெரிகிறது.

    எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மட்டுமே வானிலை நிகழ்வுகளை கணித்துவிட முடியாது. முழுமையாக அறிவியல் அறியப்படவேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பம் இப்போது வந்து இருக்கிறது. தொடர்ந்து முயற்சிகளும் நடக்கிறது.

    காலநிலை மாற்றத்தினால் புயல் வலிமையாக உருவாகிறது. திசை மாற்றத்திலும் வேறுபாடு ஏற்படுகிறது. நகர்வு பாதையில் வேறுபாடு ஏற்படுகிறது. புயலை சுற்றியுள்ள மேகக்கூட்டங்கள் சமச்சீராக உருவாகாது. வானிலை கணிப்புகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளோம். தொடர் முயற்சிகளும் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பல மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பே தமிழக அரசு பணிகளை தொடங்கி விட்டது. எனவே இந்த திட்டம் மாநில அரசின் திட்டமாக கருதப்பட்டு, அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் மத்திய அரசு, இந்த நிதியை ஒதுக்குவதாக அறிவித்து விட்டது.

    இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்த இந்த நிதியில் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி மனோகர்லால் கட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் 'மத்திய அரசு ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் மத்திய தொகை, திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் கேட்கும் கோரிக்கைக்கு ஏற்ப விடுவிக்கப்படும். அதில் சென்னை மெட்ரோ நிறுவனம், இதுவரை மத்திய நிதி உதவி குறித்து எந்த கோரிக்கையும் எழுப்பவில்லை' என்றார்.

    மேலும் அவர் மதுரை-கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று பகுப்பாய்வு அறிக்கை ஆகியவற்றை கடந்த 5-ந் தேதி தான் தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையை மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்யும். இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு மற்றும் நிதி ஆதாரம் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்த அடிப்படையில் தமிழக அரசு மதுரை, கோவை மெட்ரோ திட்டத்திற்கு தந்த அறிக்கையை ஆய்வு செய்து, மத்திய அரசு அதற்கு விரைவில் அனுமதி அளிக்கும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

    மேலும் அவர், பல மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இப்போதைக்கு சென்னையில் மட்டும் தான் மெட்ரோ திட்டம் உள்ளது.

    எனவே மதுரை-கோவைக்கு நிச்சயம் அனுமதி வழங்கப்படும். வரும் பாராளுமன்ற பட்ஜெட்டில் கூட இதற்கான நிதியும் ஒதுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது' என்றும் அவர் கூறினார்.

    • முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏரி திறக்கப்படுவதை அடுத்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஏரிக்கு நீர்வரத்து 6500 கன அடியாக உயர்ந்ததை அடுத்து நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் தற்போது 23.29 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதை அடுத்த அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை கோவில் கருவறை முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.

    இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    நினைத்தாலே முக்தி தரும் தலமாகக் கருதப்படுவது திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • இந்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் பல்வேறு அருவிகள் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

    இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிக்கரை ஓரமாக யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கனமழைபெய்து வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

    தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

    திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. நீர்நிலைகள் முழுக்கொள்ளவை எட்டிய நிலையில், நீர் திறந்துவிடப்பட்டதால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாக நிலையில், தற்போது கனமழை எச்சரித்துள்ளது.

    • சின்னமனூர் தென் பழநி வன சோதனை சாவடியில் விவசாயிகள் போராட்டம்.
    • அரசு நாற்று பண்ணையில் கிடைக்கும் காபி, ஏல நாற்றுகளை செக்போஸ்டில் தடுக்கப்படுகிறது.

    மேகமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

    பட்டா விவசாய பூமியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புக்கு குடிநீர் வசதி செய்யவும், பழுது அடைந்த குடியிருப்புகளை சரி செய்ய தேவையான உபகரணங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது, அரசு நாற்று பண்ணையில் கிடைக்கும் காபி, ஏல நாற்றுகளை செக்போஸ்டில் தடுப்பது, பட்டா விவசாயிகள் ஏலம், தேயிலை, காபி ஸ்டோர்களை பழுது பார்க்க தடை செய்வது உள்பட பல செயல்களை கண்டித்து மேகமலை விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

    சின்னமனூர் தென் பழநி வன சோதனை சாவடியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். விடியலை மறைக்கும் மேகமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

    ×