என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வனப்பகுதியில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
ஊட்டி:
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா, மாயார், மசினகுடி, சிறியூர் மற்றும் பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதன்காரணமாக அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அப்போது அவர்கள் மலையடிவார பகுதியில் இருக்கும் வனங்களுக்கு சென்று அங்கு தீ மூட்டுவது, மது அருந்திவிட்டு ஆடிப் பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற பகுதிகளில் ரிசார்ட்கள் மற்றும் காட்டேஜ்களில் அதிக சத்தத்துடன் மேற்கண்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டையொட்டி பட்டாசுகள் வெடிக்கவும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும், கேம்ப் பயர் மற்றும் அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தவும் வனத்துறையினர் இந்தாண்டும் வழக்கம்போல தடை விதித்து உள்ளனர்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண் கூறியதாவது:-
பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் சுற்றுலா விடுதிகளில் வருகிற 31-ந்தேதி இரவு மற்றும் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல அதிக சத்தத்துடன் கூடிய நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விலங்குகளுக்கு உணவு கொடுக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
மசினகுடி-முதுமலை சாலைகளில் இரவு 9 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்லக்கூடாது. மேலும் வனவிலங்குகளை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை இயக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளோம். தற்போது பனியின் காரணமாக புற்கள் காய்ந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் தீ மூட்டினால் எளிதில் வனங்களுக்கு பரவும் அபாயம் நீடிக்கிறது. எனவே இதனை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் வனஊழியர்கள் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். வனப்பகுதியில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜூகள் நிரம்பி வழிகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தலமான நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது புத்தாண்டு பண்டிகை நெருங்கி வருவதால் புத்தாண்டை கொண்டாடவும், இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் ஏராளமானோர் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது ஊட்டியில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவுகிறது. இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜூகள் நிரம்பி வழிகிறது.
இரவில் கடும் குளிர் வாட்டி வதைப்பதல், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சுவர்ட்டர் மற்றும் சால்வைகளை அதிகளவில் வாங்குகிறார்கள். இதனால் வெம்மை ஆடை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரியில் உள்ள ஊட்டி-கூடலூர் சாலை, குன்னூர், கோத்தகிரி சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளான தலைகுந்தா, எச்.பி.எப், பிங்கர் போஸ்ட், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேரிங்கிராஸ், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகளால் திட்டமிட்டபடி, சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்க்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் உறைபனி படர்ந்து, அந்த பகுதியே வெண்மை ஆடை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. அங்கு சுற்றுலா வரும் பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.
- முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் ஆரம்பமாகிறது.
- பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார்.
திருச்சி:
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையடுத்து பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது. இதன் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. அன்று காலை 7.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைவார்.
காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான வருகிற ஜனவரி 9-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். மறுநாள் 10-ந் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார்.
இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
11-ந் தேதி முதல் 15ம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 16-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். ராப்பத்து 8-ம் திருநாளான 17-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.
18-ந் தேதி பகல் 1 முதல் இரவு 8 மணி வரையும், 19-ந் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.
ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து 7-ம் திருநாளான 16-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8-ம் திருநாளான 17-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10-ம் திருநாளான 19-ந் தேதி தீர்த்தவாரியும் நடைபெறும். 20-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைஉண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோவில் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.
- பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின.
- யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஜார்க்கலட்டி அருகே உள்ள முத்துார் கிராமத்தில் தனியார் மாந்தோப்பில் 6 யானைகள் முகாமிட்டிருந்தன.
அவற்றை நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது சம்பத் நகர், பாலேகுளி, பேவநத்தம் வழியாக சென்ற யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பேவநத்தம் அருகே உள்ள புதூர் வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.
இந்த யானைகள் எந்த நேரத்திலும் சானமாவு அல்லது ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. 6 யானைகள் நடமாட்டத்தால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது.
- அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்து இருந்தது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பாண்டில் அணை 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. மேலும் டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக தண்ணீர் தேவை குறைந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விடகுறைந்த அளவிலேயே தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரதொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2516 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்து இருந்தது. எனவே அணை நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.15 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
- மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07436) அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது. அதே போல, காச்சிகுடாவில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலும் (07435) அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதியில் இருந்து மார்ச் 28-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது.
காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07191) அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதியில் இருந்து மார்ச் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது. அதேபோல, மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07192) அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒகேனக்கலுக்கு இன்று 10-வது நாளாக 3,500 கனஅடி அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
- எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கலுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்று மகிழ்ந்து செல்வார்.
இதனிடையே ஒகேனக்கலுக்கு இன்று 10-வது நாளாக 3,500 கனஅடி அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து குறைந்த அளவில் வந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
இந்த நீர் வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதாலும், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை விடப்பட்டதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் குடும்பத்தினர் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே கொட்டும் இயற்கை அருவிகளை ரசித்தபடி காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.
பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிப் பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றும் காவிரி ஆற்றை அவர்கள் கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகளின வருகை அதிகரிப்பால், மீன் கடைகள், ஓட்டல்கள், பரிசல் நிலையம், கடைவீதி என ஒகேனக்கல் முழுவதும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் ஒகேனக்கல் பஸ் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல் சுங்க சாவடியில் சுற்றுலா பயணிகளின் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- வழக்கம் போல் அழகு நிலையத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- கிஷோர் வேறு எங்காவது இதுபோல் திருட்டில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமைந்தகரை:
சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான அழகு நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வேலை முடிந்து அழகு நிலையத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம் போல் அழகு நிலையத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது.
இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அழகு நிலையத்தில் சோதனை செய்தனர். ஆனால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை.
அப்போது அழகு நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து குறட்டை சத்தம் அதிகமாக வந்தது. போலீசார் மாடிக்கு சென்று பார்த்தபோது போதையில் ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை போலீசார் தட்டி எழுப்பினர். போலீசாரை கண்டதும் அவர் திடுக்கிட்டு எழுந்தார்.
விசாரணையில் அவர், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிஷோர் (வயது 44) என்பது தெரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் போதையில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த கிஷோர், அங்கு பணம், பொருட்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தார். பின்னர் போதையில் மொட்டை மாடிக்கு சென்று அயர்ந்து தூங்கி விட்டது விசாரணையில் தெரியவந்தது.
கிஷோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வேறு எங்காவது இதுபோல் திருட்டில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிஷோர் வேறு எங்காவது இதுபோல் திருட்டில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது.
- இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடியும் தருவாயில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார்.
இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறும்போது 'கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது. அவர் கட்சியில் சேர்ந்தே 4 மாதம்தான் ஆகிறது. அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டார். அதற்கு பதில் கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு பதவி கொடுக்கலாம்' என்றார்.
உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். இதை யாராலும் மாற்ற முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்'' என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறி அங்கிருந்து காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து ராமதாசும் மேடையில் இருந்து இறங்கிச் சென்றார்.
கூட்டத்தில் இருந்த பா.ம.க. தொண்டர்கள் சிலர், டாக்டர் அன்புமணிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடி வெளியேறினார்கள். டாக்டர் ராமதாஸ் வெளியில் வந்து காரில் ஏறியபோது, அவர் கார் முன்பு சிலர் மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், பா.ம.க.வினரும் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினார்கள்.
பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை இன்று காலை 11 மணிக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
- அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வருகிறார்.
மதியம் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார்.
மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ரூ.32½ கோடி செலவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் தூத்துக்குடி சத்யா ரிசார்ட்சில் முதலமைச்சர் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறுவர்.
இந்த திட்டம் வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவிகளிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதாக அமைந்துள்ளது.
மதியம் நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பிரதான சாலைகளின் இருபுறமும் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் காமராஜ் கல்லூரியில் பிரமாண்ட பந்தல் மற்றும் கல்லூரி முன்பாக அலங்கார வளைவு, தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது.
- பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
- முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.
அந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள். நான் உருவாக்கிய கட்சி. எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் அழுத்தமாகக் கூறினார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அன்புமணியை சமாதானம் செய்ய கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனை கருத்து வேறுபாடு அல்ல, கருத்து பரிமாற்றம் என தெரிவித்தார்.






