என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம்.
- கஞ்சா மற்றும் போதை இல்லாத தமிழகமாக 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டும்.
2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பிறக்கின்ற 2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும்!
கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும்.
2026-இல், 7-ஆவது முறையாக கழக ஆட்சி அமைந்திட 2025-இன் ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம்.
தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் - சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்கிற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம்.
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு, மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
2025ல் நாம் அடியெடுத்து வைக்கும் இத்தருணம், இப்பாதையை நமதாக்கிக்கொண்டு ஒரு சிறந்த அத்தியாயத்தை எழுதுவதற்கான நேரம்.
புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது என்பது மாத்திரமல்ல; ஞானத்தோடு, உறுதியோடு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக்கொள்ளத் தயார் நிலையோடு முன்னோக்கி நகர்வது.
நமது நல்ல கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இப்புத்தாண்டை ஆக்குவோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இன்பம் பெருரும், துன்பம் ஒழியும், என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நன்நாளிலிருத்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் இந்திய நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திடவும் வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் உறுதியாக கிடைத்திட வேண்டும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு, கஞ்சா மற்றும் போதை இல்லாத தமிழகமாக 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டுயென தேமுதிக சார்பில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.
- சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில், 2025-ம் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணைய தேடுபொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடுபொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சென்னை ஐகோர்ட்டின் முதல் அமர்வு எடுத்துள்ள முடிவை அரசின் கவனத்திற்கு அரசு பிளீடர் கொண்டு வந்துள்ளார்.
- சான்றளிப்பவரின் கையெழுத்து, முத்திரை, பதிவு எண், முகவரி போன்றவை அதில் பதிவு செய்யப்பட வேண்டும்.
சென்னை:
தமிழகத்தின் அனைத்துத் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டின் 'ரிட்' மனு 9-ம் விதியின்படி, ஒரு மனுவுக்கு ஆதாரமாக இணைக்கப்படும் உறுதிச்சான்று (அபிடவிட்), முறையாக நோட்டரி வக்கீலின் மூலம் சான்றளிக்கப்பட (அட்டஸ்ட்) வேண்டும். ஆனால் அரசு வழக்குகளில் நீண்டகால நடைமுறையாக, சான்றுரைப்பவரும், துணை நிலை அலுவலரும்தான் உறுதிச்சான்றின் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த விஷயத்தில் சென்னை ஐகோர்ட்டின் முதல் அமர்வு எடுத்துள்ள முடிவை அரசின் கவனத்திற்கு அரசு பிளீடர் கொண்டு வந்துள்ளார். அதன்படி, உறுதிச்சான்றுகள், பதில் மனுக்கள், ஆதார மனுக்கள் உள்ளிட்டவற்றை சான்றளிப்பதில் 'ரிட்' மனு 9-ம் விதி கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே அதன் அடிப்படையில் சில உத்தரவுகளை அரசு தற்போது பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு, துறைத் தலைவர், கலெக்டர் ஆகியோர், மனுவுக்கு ஆதாரமாக தாக்கல் செய்யும் ஒவ்வொரு உறுதிச்சான்றும், சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை, மற்ற கீழ்க்கோர்ட்டுகளில் உள்ள அரசு வக்கீல்களினால்தான் சான்றளிக்கப்பட வேண்டும். அந்த வழக்கில் ஆஜராகும் அரசு வக்கீல் அதில் சான்றளிக்கக் கூடாது. சான்றளிப்பவரின் கையெழுத்து, முத்திரை, பதிவு எண், முகவரி போன்றவை அதில் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு பிளீடர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக நீடிக்கிறது.
- கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் குறைந்துள்ளது.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
இதனையடுத்து மாதந்தோறும் இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.14.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ. ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக நீடிக்கிறது.
கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம்.
- உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம்.
நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
இதையொட்டி த.வெ.க தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-
மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
- மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
- வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.
நெல்லை:
அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான ஆப் லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
மோசடி நடைபெறும் விதம் எப்படி என்றால், உங்களது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும் அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
நீங்கள் அந்த apk file-ஐ ஓபன் செய்துவிட்டால் உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.
எனவே வாட்ஸ்-அப்பில் வரும் இதுபோன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும். அந்த எண்ணிற்க்கு மொபைல் போன் மூலமாக அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை, எதிர்பாராதவிதமாக நீங்கள் பாதிக்கப்பட்டால், சைபர் கிரைம் இணையதளமான cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்கவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவில் சார்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 43 சதவீதத்தை தாண்டியுள்ளது.
- பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகளை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நடைபெற்று வரும் பெருந்திட்டவளாக பணிகளில் 20 பணிகளை ஹெச்.சி.எல். நிறுவனம் செய்து வருகின்றது. அதில் மூன்று பணிகள் நிறைவுற்று திறப்பு விழா நடைபெற்று உள்ளது.
அதேபோல் ராஜகோபுரம் பணி முடியும் தருவாயில் உள்ளது. வருகிற 20-ந் தேதி 7 கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற உள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரைவு திட்டத்தின் படி பக்தர்கள் தங்க 122 அறைகள் கட்டப்பட உள்ளன. இதில் 56 பக்தர்கள் தங்கும் அறைகளை ஆய்வு செய்தோம். இந்தப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவுற்று தமிழக முதலமைச்சரால் திறக்கப்பட உள்ளது.
மொத்தம் 43 பணிகள் என்றாலும் அவை ஒவ்வொன்றாக முடிந்ததும், பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு திறப்பு விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் எடுத்துக்கொண்ட பணிகள் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. கோவில் சார்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 43 சதவீதத்தை தாண்டியுள்ளது. பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 2025-ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
- புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
- புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
'மாலைமலர்' சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- நீண்ட நாட்கள் ஆகியும் ஜாபர் அலி ஆன்மிக பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
கோவை:
கோவை தெற்கு உக்கடம் அமீன் காலனி 3-வது வீதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மனைவி அமீதா(வயது62).
இவர் கோவை பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை புரசைவாக்கம், பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான ஜாபர் அலி என்பவர் அறிமுகம் ஆனார்.
இவர் வெளிநாட்டிற்கு ஆன்மிக பயணம் அழைத்து சென்று வரும் பணி செய்து வருவதாக என்னிடம் தெரிவித்தார்.
மேலும் ஆன்மிக பயணம் செல்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வருகிறேன். யாராவது அங்கு செல்ல விரும்பினால் என்னிடம் தெரிவியுங்கள். நான் அவர்களை அழைத்து செல்கிறேன் என தெரிவித்தார்.
இதனை நம்பி நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் 66 பேர் பயணம் செல்ல விரும்புவதாக கூறி என்னிடம் ரூ.36 லட்சத்து 51 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். நானும் அந்த பணத்தை வாங்கி ஜாபர் அலியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஜாபர் அலி ஆன்மிக பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் என்னிடம் பணம் கொடுத்தவர்கள், பயணம் என்ன ஆனது என கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மேலும் எங்களது பணத்தையும் திரும்ப பெற்று தருமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து நான், ஜாபர் அலியிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
நான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் பணத்தையும் தர மறுத்து அவர் ஏமாற்றி விட்டார். எனவே வெளிநாட்டு ஆன்மிக பயணம் அழைத்து செல்வதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட ஜாபர் அலி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் சென்னையைச் சேர்ந்த ஜாபர்அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.
- பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.

இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றது. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அவ்வாறு சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எப்ஐஏ சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெற தாமதம் ஏற்பட்டதை அடுத்து, முதல் நாளில் தகுதிச்சுற்று போட்டிகள் மட்டுமே நடைபெற்றன.

இரண்டாவது நாளில் முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்த கார் பந்தயத்தில் ஃபார்முலா 4 கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.
இந்த பார்முலா-4 கார் பந்தயத்தை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் கண்டு களித்தனர். இந்திய அணியின் முன்னள் கேப்டன் சவுரவ் கங்குலி, நடிகை த்ரிஷா, யுவன்சங்கர் ராஜா, நடிகர்கள் நாக சைதன்யா, பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் உள்பட பலரும் வருகை தந்து பார்வையிட்டனர்.
கார் பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
- 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக தயாரிக்கப்பட்ட ரூ.100 மதிப்பிலான நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
மறைந்த தலைவர் கலைஞர் பெயரில், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
தொடர்ந்து, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 18ம் தேதி மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் விழாவில் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.






