என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சீமான் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
- தேர்தல் பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தெருமுனைப் பிரசாரம், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இதில், தேர்தல் விதிகளை மீறியும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக ஏற்கனவே வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சீமான், கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சீமான் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஈரோடு நெரிக்கல்மேட்டில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பொதுக்கூட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சியினர் அனுமதி பெற்றிருந்தனர்.
ஆனால், தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மாலை 6.15 மணிக்கு பொது க்கூட்டத்தை தொடங்கி இரவு 9.15 மணிக்கு முடித்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் தேர்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியினர் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது.
- சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த காரை, திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த சிலர் வழிமறித்து காரில் இருந்த பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா? அல்லது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.
சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடிகட்டப்பட்ட காரில் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
- பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது.
- வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.
மதுரையில் நடந்த வருமான வரித்துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு ரொம்ப நன்றி.
அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும் என்பது கஷ்டமாக இருக்கும்.
நாம் எளிமையாக தெரிந்து கொள்ள, எல்லோருக்கும் புரியும் அளவிற்கு இணையதளத்தை ஆரம்பித்து வங்கி கணக்கு எப்படி ஆரம்பிப்பது, சிக்கல்கள் என்ன? என்று குழந்தைகளுக்கு புரிவதுபோல் கார்ட்டூன் வடிவத்தில் கொடுத்து இருப்பது சுவாரசியமாக இருந்தது.
பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது. நிறைய பேருக்கு அது புரிவது கடினமாக உள்ளது. இது தமிழிலும் இருந்தால் புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.
உங்களின் இந்த முயற்சி எல்லோரும் எளிமையாக போய் சேர வேண்டும் என்பதற்கான முயற்சி தான். இதை நான் வரவேற்கிறேன். ஆனால் அது தமிழிலும் இருந்தால் இன்னும் எளிமையாக எல்லோருக்கும் போய்ச்சேரும்.
திடீரென்று ஏதாவது பிரச்சனை வரும்போது தான் அது என்ன பிரச்சனை என்று ஒரு படபடப்பில் அதை தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பே அது பற்றிய விளக்கமும் தெளிவும் நமக்கு புரியும் மொழியில் இருந்தால் நாம் இன்னும் தெளிவாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
இல்லையென்றால் அதற்கும் ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டியது இருக்கும். அது நிகழ்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
இந்த முயற்சி ரொம்ப அற்புதமானது. வரி செலுத்துவது மிகவும் முக்கியம். அவசியம்.
நம்முடைய உரிமைக்காக நமது அரசிடம் எப்படி கோரிக்கை வைக்கிறோமோ அதே போல் வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.
அதனால் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி எல்லாம் கட்டுகிறோம். ஏதாவது benifit இருந்தால் நன்றாக இருக்கும். அதையும் யோசித்து பாருங்கள்.
நன்றாக சம்பாதிக்கும்போது வரி கட்டி இருப்போம். ஒரு காலத்திற்கு மேல் வருமானம் இல்லாமல் போய் நிலைமை சரியில்லாமல் போனால் நல்ல tax payer ஆக ஒரு சிட்டிசனாக வரி கட்டி இருந்தால் அவருக்கு என்று சில benefits இருக்கலாமே என்று தோன்றுகிறது. இதையும் நீங்கள் consider செய்ய வேண்டும்.
ஷூட்டிங் நடுவில் வந்துள்ளேன். இங்கிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டும். எல்லாரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. நன்றி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஆரம்பித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
- செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்றம் விசரணை நடத்தியது.
- ஜாமின் நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாமல் 104 பேர் சிறையில் உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.
ஜாமின் நிபந்தனைகள் எளிதில் நிறைவேற்றக் கூடியதாக விதிக்கப்பட வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜாமின் கிடைத்தும் பிணை செலுத்த முடியாமல் 800 கைதிகள் சிறையில் இருப்பதாக செய்தி வெளியானது.
செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்றம் விசரணை நடத்தியது.
அப்போது, ஜாமின் நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாமல் 104 பேர் சிறையில் உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.
மேலும், நீதிமன்ற உத்தரவின்படி இதுவரை 32 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்ட பணிகள் ஆணையம் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜாமின் நிபந்தனைகள் எளிதில் நிறைவேற்றக் கூடியதாக விதிக்கப்பட வேண்டும் என்றும், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் எந்த பயனும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
- திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் நள்ளிரவில் பெண்களை துரத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
சென்னை:
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈ.சி.ஆர் பகுதியில் நடந்த சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது. தி.மு.க கட்சி கொடி கட்டிய காரில் சென்று பெண்ணிடம் மோசமாக நடந்துள்ளனர்.
தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்து செய்த செயலை பார்க்கும்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் உதாரணம்.
இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு முழு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை.
இரவு, பகல் என எந்த நேரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
எனவே மாநில அரசு காவல் துறைக்கு பேட்ரோல் வாகனங்களை வாங்கிக் கொடுத்து ரோந்து போகச் சொல்ல வேண்டும்.
கையாலாகாத தி.மு.க. அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என தெரிவித்துள்ளார்.
- வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கல்லூரியில் அடிப்படை வசதிகளான குடிநீர் குழாய், கழிப்பிடம் மற்றும் விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் செய்தனர்.
ஆனால் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-
மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. எனவே இனியும் அலட்சியம் காட்டாமல் குடிநீர் மற்றும் கழிப்பிடம் வசதியை உடனே செய்து தர வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு ஒத்திவைப்பு.
சென்னை:
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் வாக்கா ளர்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், தொகுதி யின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈ.வெ.ரா மரணத்தை தொடர்ந்து 2023-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும் ஒவ்வொரு வார்டிலும் கொட்டகைகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைக்கப்பட்டனர்.
கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
ஓட்டுக்குக்கு பணம் வழங்கப்பட்டது. அதனாலேயே அந்த தேர்தலில் நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். தற்போது நடக்க உள்ள தேர்தலில் கொட்டகை பாணி பின்பற்றக் கூடும்.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 8-ந்தேதி மனு அளித்தேன்.
அதில், தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அதனை பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர், மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும். யார் தான் சலுகைகள் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர், மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
- பிரம்ம குமாரிகள் மையத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93-ம் ஆண்டு மாநாடு.
- சென்னை நகரத்தை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பொடவூர் பகுதியில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93-ம் ஆண்டு மாநாடு நடை பெற்றது.
இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாநாட்டினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்கள் அனைத்து துறையிலும் இருக்க வேண்டும். பெண்கள் தற்போது பட்டம் பெற்று விட்டார்கள். தங்கபதக்கம் பெறுகிறார்கள். ஆனால் வேலை செய்யும் இடங்களில் அவர்களுடைய இடம் குறைவாகவே உள்ளது.
பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளிடம் பேசுவேன். அப்போது பெண்கள் பலரும் கண்களில் கண்ணீருடன் நான் சென்னைக்கு சென்று படிக்க மாட்டேன் என்று கூறுவார்கள்.
சென்னைக்கு சென்று படிப்பது பாதுகாப்பில்லை என்று தங்களது பெற்றோர் கருதுவதாக அந்த மாணவிகள் வேதனையுடன் தெரிவிப்பார்கள். இதுதான் தற்போது இருக்கக்கூடிய பிரச்சனை.
சென்னை நகரத்தை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும். நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். படித்த பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மதுரை மக்கள் காட்டிய அன்பின் மகிழ்வுடன் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு சென்று வந்தேன்.
- உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் எப்பாடு பட்டேனும் நிறைவேற்றித் தரும் உறுதியுடன் செயல்படும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு மாவட்டங்கள்தோறும் மக்கள் அளித்து வரும் ஆதரவினையும் வரவேற்பினையும் ஒவ்வொரு முறையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்கிறேன்.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, பாராளுமன்றத்தில் கழகம் அதனை எதிர்த்து முழங்கியதுடன், மதுரை மாவட்ட மக்கள், வைகை-முல்லைப்பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்து-களையும் அறிந்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, "நான் முதல்-அமைச்சராக இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது" என்ற உறுதியையும் வழங்கினேன்.
டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக பா.ஜ.க. அரசு பணிந்தபிறகு, மதுரை மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற உங்களில் ஒருவனான எனக்கு அவர்கள் அளித்த வரவேற்பையும், அவர்கள் பொழிந்த அன்பையும் கடந்த கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். மதுரை மக்கள் காட்டிய அன்பின் மகிழ்வுடன் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு சென்று வந்தேன்.
உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதற்குக் காரணம், மக்களின் நலன் காப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் செயல்படுவதுதான். அரசியல் கண்ணோட்டத்தில் எதிரணியினர் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், கழக அரசின் சாதனைகளைப் பொறுக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தாலும், மக்கள் அவர்களைப் புறக்கணித்து தங்கள் நலன் காக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் பக்கமே நிற்கிறார்கள்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் ஆதரவு நமக்குத்தான் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கையை நமக்கு வழங்குகின்ற மக்களுக்கு என்றும் துணை நிற்போம். அவர்களின் ஆதரவுடன் ஏழாவது முறையாகத் தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் என்ற வெற்றிக்கு அச்சாரமாக விழாக்கோலம் கண்டது விழுப்புரம் மாவட்டம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிப்படும் இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 6, 7 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறேன். அப்போது உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- பிப்ரவரி 6, 7-ந்தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.
- யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.2-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான ஆலோசிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,
பிப்ரவரி 6, 7-ந்தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, பாராளுமன்றத்தில் தி.மு.க. எதிர்த்தது. நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்ற உறுதியையும் வழங்கினேன்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் ஆதரவு நமக்கு தான் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது என்று கூறினார்.
இதையடுத்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்,
* அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்திட பாராளுமன்றத்தில் தி.மு.க. வலியுறுத்தும்.
* ஆளுநர் பதவியை நீக்கும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காக்க நடத்தை விதி உருவாக்க வேண்டும்.
* டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதல்வருக்கும் துணை நின்ற மக்களுக்கும் நன்றி.
* சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.
* மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த முறை தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்க வேண்டும். புதிய ரெயில்வே திட்டங்கள், பேரிடர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
* யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.2-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும். டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
- த.வெ.க. திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி த.வெ.க. மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று அதிகம் பேசப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்கள் இதற்கு மாறான சூழலை உணர்த்துகிறது.
வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் உடன் தேர்தல் பணிகள் சார்ந்து மட்டும் பணியாற்ற ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
- ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு.
- 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). அதிமுக பிரமு கரும் சமூக ஆர்வலருமான இவர் திருமயம் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் நடைபெறும் முறை முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தார்.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப் பட்டார்.
இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராசு, ராமையா ஆகிய 2 கல் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் குவாரி உள்ளிட்ட வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் கைதான ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி புதுக்கோட்டை இரண்டாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் ஒவ்வொருத்தரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
நீதிமன்றம் அனுமதிக்கும் நாட்களில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.






