என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக் லைஃப் பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கமல்ஹாசன் பேசும் போது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக பேசினார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    கமல்ஹாசனை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கன்னட அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    மேலும், தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கிடையே கர்நாடக கலாச்சாரஅமைச்சர் சிவராஜ் தங்கட்சி கூறியதாவது:-

    கன்னட நிலம், நீர், மற்றும் மொழி பிரச்சினையில் ஈடுபட்டுள்ள எந்த வொரு பெரிய நபரையும் பொறுத்து கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. கமல்ஹாசன் உடனடியாக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது அனைத்து படங்களும் மாநிலத்தில் தடை செய்யப்படும்.

    நடிப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் நம் மொழி தேவை. இப்போது விளம்பரத்துக்காக இதைப்பற்றி பேசுகிறீர்களா? முன்னதாக சோனுநிகம் கன்னடர்களை பற்றி இதே போல் பேசினார். பின்னர் மன்னிப்பு கேட்டார். அவர்கள் அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

    கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ஒரு மூத்த நடிகர் இது போன்ற அறிக்கையை வெளியிடுவது சரியல்ல. அவரது படங்கள் வெளியிடுவதை தடை செய்ய திரைப்பட வர்த்தக சபைக்கும் கடிதம் எழுதப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் அசோகா கூறுகையில்," கன்னட மொழியை அவமதித்த கமலின் புதிய அல்லது பழைய படங்களை திரையிட கன்னடர்கள் அனுமதிக்கக்கூடாது.

    அரசாங்கமும், கன்னட ஆதரவு அமைப்புகளும் இந்த படங்களை புறக்கணிக்க வேண்டும். கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் பல தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துள்ளார்.

    கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களின் கடனை அடைக்க அவர் நியாயமாக பேசியிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர் கன்னடத்தை அவமதித்துள்ளார். அவரது செயல் சகிக்க முடியாதது" என்றார்.

    • இன்று கடலோர, மலை மாவட்டங்களில் 6-வது நாளாக மழை பெய்து வருகிறது.
    • காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுந்தது உள்ளிட்ட பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வீடு இடிந்து விழுந்து, மரம் சாய்ந்து விழுந்து இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 5-வது நாளாக நேற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இன்று கடலோர, மலை மாவட்டங்களில் 6-வது நாளாக மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தோனிகல்லு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த தோனிகல்லு கிராமத்தில் 80 குடும்பங்கள் பரிதவித்தது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    • புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.
    • கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.

    அந்தவகையில் சென்னையில் நடந்த தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.

    இதில் பேசிய கமல், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.

    கன்னம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன. இந்த விஷயத்தில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசன், அவருக்கு அது தெரியாது" என்று தெரிவித்தார்.

    பாஜக தலைவர் ஆர். அசோகா, கமல்ஹாசன் கன்னடத்தையும் கர்நாடகாவையும் மீண்டும் மீண்டும் அவமதிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், "கர்நாடகாவில் கமல்ஹாசனின் அனைத்து படங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று நான் அரசாங்கத்தை வலியுறுத்துவேன், இல்லையெனில் அவர் ஒரு மனநோயாளியைப் போல நடந்து கொள்வார்" என்று அசோகா கூறினார்.

    • டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுப்பதுபோல போலி விளம்பரங்களும் AI-உருவாக்கிய வீடியோக்களும் பயன்படுத்தப்பட்டன.
    • பயனர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்காக இந்த செயலி ஆரம்பத்தில் சிறிய தொகையை சரியான நேரத்தில் செலுத்தி உள்ளது.

    கர்நாடகாவில் 'Trump Hotel rentals' என்ற போலி செயலி மூலம் மிகப்பெரிய முதலீட்டு மோசடி நடந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் படங்கள் மற்றும் வீடியோக்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்து, அதை வைத்து 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டனர்.

    கடந்த ஆறு மாதங்களில் இந்த செயலியைப் பயன்படுத்தி சுமார் 2 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது.

    தொலைதூர வேலை வாய்ப்புகள் மற்றும் லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் போன்ற பொய்யான வாக்குறுதிகளால் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டதாக சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதற்காக, டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுப்பதுபோல போலி விளம்பரங்களும் AI-உருவாக்கிய வீடியோக்களும் பயன்படுத்தப்பட்டன.

    பெங்களூரு, துமகுரு, மங்களூரு, ஹுப்பள்ளி, தார்வாட், கலபுராகி, ஷிவமொக்கா, பல்லாரி, பிதார், ஹாவேரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    பயனர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்காக இந்த செயலி ஆரம்பத்தில் சிறிய தொகையை சரியான நேரத்தில் செலுத்தி உள்ளது.

    இந்த மோசடியில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதிக வருமானத்தை உறுதியளிக்கும் முதலீட்டு மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி கொட்டி வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இந்த நிலையில் தட்சிணகன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மற்றும் சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்தமழை கொட்டி வருகிறது. இதனால் அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் மலையோர மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள பல்குனி ஆறு, குமாரதாரா ஆறு, நேத்ராவதி ஆறுகளிலும் தண்ணீர் இருகரைகளை தொட்டப்படி கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடகாவில் கொட்டி வரும் மழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கொட்டி வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி, ஹாரங்கி, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    தட்சிண கன்னடம் மாவட்டம் புட்டிகே அருகே எருகுண்டி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் 6 பேர் பலத்த மழை காரணமாக பாறையில் சிக்கி கொண்டனர். இதையடுத்து அவர்களை உள்ளூர்வாசிகள் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து வடக்கு கர்நாடகாவின் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

    மழை காரணமாக மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள எச்சகள்ளியில் மின் கம்பியை மிதித்த சித்தராஜூ (55), என்பவர் பலியானார். இதே போல் பெலகாவி மாவட்டம் கோகாக்காவின் மகாலிங்கேஷ்வர் காலனியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கிருத்திகா நாகேஷ் பூஜாரி என்ற 3 வயது சிறுமி பலியானார்.

    • ஹெப்பல் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • உடலையும், நான்கு பக்க தற்கொலைக் குறிப்பையும் போலீசார் மீட்டனர்.

    கர்நாடக மாநிலம் மைசூரில் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணின் தாய், தந்தை மற்றும் சகோதரி தற்கொலை செய்து கொண்டனர்.

    இறந்தவர்கள் மகாதேவ சுவாமி (55), மஞ்சுளா (45) மற்றும் ஹர்ஷிதா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தக் குடும்பம் புதனூர் கிராமத்தில் வசித்து வந்தது. ரியல் எஸ்டேட் முகவரான சுவாமிக்கு இருந்து வந்தார்.

    சுவாமியின் மூத்த மகள் காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை. பின்னர் அந்த பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து பெண்ணின், தாய், தந்தை, சகோதரி மூவரும் ஹெப்பல் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடலையும், நான்கு பக்க தற்கொலைக் குறிப்பையும் கடந்த சனிக்கிழமை போலீசார் மீட்டனர்.

    அந்தக் கடிதத்தில், மூத்த மகள், மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்களின் இறுதிச் சடங்குகளில் அவள் பங்கேற்கக் கூடாது என்றும், சொத்துக்களை அவளுடைய சகோதரனுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

    • கர்நாடகத்தில் 2 வாரத்திற்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
    • மலைநாடு பகுதியில் உள்ள சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தம் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தின் கடலோர பகுதிகளிலும், மலைநாடு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதாவது, வழக்கமாக கேரளாவில் ஜூன் 1-ந்தேதியும், கர்நாடகத்தில் அதற்கு அடுத்த வாரமும் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

    ஆனால் கேரளாவில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவும், கர்நாடகத்தில் 2 வாரத்திற்கு முன்னதாகவும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், குடகு உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது.

    இந்த நிலையில், கர்நாடக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதையடுத்து இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும். குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, பெலகாவி, தார்வார் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். பாகல்கோட்டை, விஜயாப்புரா, கதக் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், பீதர், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், யாதகிரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    மலைநாடு பகுதியில் உள்ள சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சாம்ராஜ்நகர், ஹாசன், மண்டியா, மைசூருவில் கனமழை பெய்யக்கூடும். பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே, கோலார், ராமநகர், துமகூரு, விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். உத்தர கன்னடா, சிவமொக்கா, உடுப்பி, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, குடகு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) அதி கனமழை பெய்யக்கூடும். அதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்படுகிறது.

    தார்வார், பெலகாவி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக், ஹாசன், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

    • டெலிவரி ஊழியர் விஷ்ணுவர்தன் தவறான முகவரியைக் கொடுத்ததற்காக தனது மைத்துனி மீது கோபமடைந்தார்.
    • விரைவில் குணமடையவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    பெங்களூருவில் ஜெப்டோ டெலிவரி ஊழியர் வாடிக்கையாளரைத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பெங்களூருவின் பசவேஸ்வரநகர் பகுதியில் மே 21 அன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    வாடிக்கையாளர் ஷஷாங்க் கூறுகையில், தனது வீட்டிற்கு டெலிவரி வந்தபோது, டெலிவரி ஊழியர் விஷ்ணுவர்தன் தவறான முகவரியைக் கொடுத்ததற்காக தனது மைத்துனி மீது கோபமடைந்தார்.

    டெலிவரி ஊழியர் நடத்தையைப் பற்றி தான் கேள்வி எழுப்பியபோது, அவர் தன்னை திட்டி அடித்தார்.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்ததில் கண்ணுக்குக் கீழே உள்ள எலும்பு உடைந்துள்ளதாகவும், அது விரைவில் குணமடையவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஷஷாங்க் தெரிவித்தார்.

    காவல்துறையில் புகார் அளித்து, இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

    • ராய்ச்சூரில் விடுதிக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
    • பாகல்கோட்டில் உள்ள விடுதிக்கு கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.

    கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.

    இவர், 17 வயது சிறுமி ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன்,லிப்ட் தருகிறேன் என கூறி அவரை காரில் அழைத்து ராய்ச்சூரில் விடுதிக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.

    தொடர்ந்து, பாகல்கோட்டில் உள்ள விடுதிக்கு கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.

    பின்பு பெலகாவியில் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் அந்த சிறுமியை  இறக்கிவிட்டார்.

    வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து பூசாரிக்கு எதிராக பாகல்கோட்டில் உள்ள நவநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்ஸோ பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். 

    • முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகள் வீட்டார், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.
    • மணமகன் வீட்டார் சம்பவம் பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ஹாசன்:

    தாலிக்கட்டும் நேரத்தில் காதலனிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பால் திருமணத்தை மணமகள் நிறுத்திவிட்டார். இதனால் மணமகனான அரசு பள்ளி ஆசிரியர், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூரை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர். இவருக்கு பெற்றோர் ஹாசன் அருகே பூவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த முதுகலைப்பட்டம் பெற்ற பெண்ணை திருமணம் பேசி நிச்சயம் செய்திருந்தனர். இவர்களது திருமணம் நேற்று காலை நடத்த திட்டமிட்டு இருந்தது.

    இதனால் நேற்று முன்தினம் இரவே மணமகள், மணமகன் வீட்டார் ஹாசனில் உள்ள ஆதிசுஞ்சனகிரி திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டனர். இல்லற வாழ்வில் இணையப்போகும் சந்தோஷத்தில் மணமகன் மகிழ்ச்சியில் திளைத்தப்படி இருந்தார். ஆனால் மணமகளோ அமைதியாக இருந்துள்ளார்.

    நேற்று காலை முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகள் வீட்டார், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர். முதலில் மணமகன் திருமண மேடையில் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து மணமகள் பட்டுப்புடவை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து மணக்கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

    இதையடுத்து புரோகிதர் மந்திரங்கள் ஓத கெட்டிமேளம் ஒலிக்க மணமகன் தனது கைகளில் தாலியை எடுத்து, மணமகளின் கழுத்தில் தாலிக்கட்ட முயன்றார். இதற்கிடையே முகூர்த்த நேரத்திற்கு சற்று முன் மணமகளுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.

    அந்த செல்போன் அழைப்பை ஏற்று பேசி முடித்தார். உடனே மணமகன் தாலிக்கட்ட நெருங்கியபோது, திடீரென்று மணப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி அணுகுண்டு வார்த்தையை வீசினார். இதனால் திருமண மண்டபம் களேபரமானது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன், மணமகளிடம் என்னை திருமணம் செய்ய ஏன் மறுக்கிறாய்? என கேள்வி கேட்டார். அதற்கு அவர், நான் ஒருவரை காதலித்து வருகிறேன். ஆனால் அவரை எனது வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.

    எனது காதலன் தான் தற்போது செல்போனில் பேசி திருமணத்தை நிறுத்திவிட்டு வா. நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். நான் காதலனை திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.

    இதனால் மணமகன் மேற்கொண்டு பேச முடியாமல் வாயடைத்து போய் நின்றார். இதை கவனித்த மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். உடனே மணமேடையில் இருந்து இறங்கி ஓடிய மணமகள், திருமண மண்டபத்தில் இருந்த மணமகள் அறைக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். இதன் காரணமாக மணமகனும் இனி நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.

    இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வெளிப்படுத்தினர்.

    பின்னர் மணமகன் வீட்டார் சம்பவம் பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருவீட்டாரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால் மணமகள் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் காதலனை கரம்பிடிக்க போகிறேன். இந்த திருமணத்தை நிறுத்திவிடும்படி கூறினார். இதனால் அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இருப்பினும் மணமகள் திட்டவட்டமாக திருமணம் செய்ய சம்மதிக்காததால், அவரது விருப்பப்படி விடும்படி போலீசார் கூறினர். இந்த முடிவால் மணமகன் வீட்டார் ஏமாற்றம் அடைந்தனர். திருமணத்திற்கு செய்த செலவு தொகையை பெற்றுத்தர அவர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாலும் திரைப்படங்களில் தான் தாலிகட்டும் நேரத்தில் மணமகளோ அல்லது மணமகனோ திருமணத்தை நிறுத்தும் பரபரப்பு காட்சிகள் வரும். ஆனால் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ஹாசனில் காதலன் செல்போனில் அழைத்து பேசியதை தொடர்ந்து திருமணத்தை இளம்பெண் நிறுத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டது.

    • பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு துறையில் (Accounts Dept) பணியாற்றி வந்துள்ளார்.
    • அவர் வேலைக்கு மெட்ரோ ரெயிலில் செல்லும்போது இந்த வீடியோக்களை எடுத்துள்ளார்.

    பெங்களூரு நகர மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ்' என்ற பெயரில் இயங்கும் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் மெட்ரோ ரயில்கள் மற்றும் நடைமேடைகளில் பெண்களின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கணக்கை 5,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இருப்பினும், இந்தப் புகைப்படங்கள் அந்தப் பெண்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவது தெரியவந்தது.

    புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 27 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கர்நாடகாவின் ஹசான் நகரை சேர்ந்த திஹந்த் ஆவார். இந்த இளைஞர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு துறையில் (Accounts Dept) பணியாற்றி வந்துள்ளார்.

    அவர் வேலைக்கு மெட்ரோ ரெயிலில் செல்லும்போது அதில் பயணிக்கும் பெண் பயணிகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட திஹந்த் இடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    அந்தக் கணக்கில் இருந்த அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டன. பின்னர் அந்தக் கணக்கு இன்ஸ்டாகிராமிலிருந்தும் நீக்கப்பட்டது. 

    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதியவர் மோகன் நதிகாவை உங்களை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு துரஹள்ளி வனப்பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன் நதிகா (71). இவரை கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி வாட்ஸ் அப்பில் அழைத்த சிலர் தங்களை மகாராஷ்டிரா போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

    பின்னர் மோகன் நதிகாவிடம் நீங்கள் உங்கள் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாக மிரட்டியுள்ளனர். மேலும் உங்களது அடையாள அட்டை மற்றும் வங்கி ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    இதனால் பயந்து போன முதியவர் மோகன் நதிகா தனது வங்கி ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தார். பின்னர் வீடியோ அழைப்பில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதியவர் மோகன் நதிகாவை உங்களை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டினார்.

    மேலும் அவரிடம் இருந்து பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 1கோடியே 13 லட்சத்தை பெற்றுக் கொண்டனர். பின்னர் தான் சைபர் மோசடி கும்பலால் மிரட்டப்பட்டது பற்றி தெரியவந்ததும் முதியவர் பெங்களூரு தெற்கு பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×