என் மலர்tooltip icon

    அரியானா

    • மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது.
    • காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார்.

    அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு கார் ஒன்று மின்கம்பத்தில் ஏறி அதில் சிக்கிக் கொண்டது. பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதால் விபத்து நடந்துள்ளது.

    மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் எஸ்யூவி மின்கம்பத்தில் ஏறி, சாய்ந்த நிலையில் அதில் சிக்கியது.

    உள்ளூர் மக்களின் உதவியால் காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார். மின்கம்பத்தில் ஏறிய காரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    விபத்து ஏற்படுத்திய ஹோண்டா அமேஸ் காரில் இருந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பிச் சென்றுவிட்டனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த குருகிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்னல் நகரில் போடப்பட்ட ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளது என பல புகார்கள் வந்தன.
    • கொட்டும் மழையில் மோசமான சாலைகளில் தாரை கொட்டி சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

    அரியானாவில் உள்ள கர்னல் நகரில் போடப்பட்ட ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளது என்று இந்தாண்டு பல்வேறு புகார்கள் வந்தன.

    இந்நிலையில், கொட்டும் மழையில் கர்னல் நகரில் உள்ள மோசமான சாலைகளில் தாரை கொட்டி சாலைகள் சரிசெய்யப்பட்டு வரும் வீடியோவை கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், அரசு ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று யார் சொன்னது. ஹரியானாவில் உள்ள கர்னல் நகரில் போர்க்கால அடிப்படையில் மோசமான சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. சிறப்பான வேலை நரேந்தர் ஜி" என்று கேரளா காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.

    • எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
    • மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன்.

    அரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வீர்சிங். இவர் செயலி ஒன்றில் இணை நிறுவனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

    அதில், கடந்த 2 மாதங்களில் மொத்தமாக ரூ.45 ஆயிரத்து 491 ரூபாய் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு மின் கட்டணம் செலுத்தியதற்கான ஸ்கிரின்ஷாட்டையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். அதனுடன், அதிக மின் கட்டண உயர்வு காரணமாக மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் எப்படி இவ்வளவு கட்டணம் வந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் தங்கள் வீடுகளுக்கும் அதிகப்படியான மின் கட்டணம் செலுத்துவது குறித்து பதிவிட்டு வருகின்றனர். 

    • ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
    • அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.

    அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.

     

    இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



     


    • டிரைவர் மதுபோதையில் இருந்ததை அறிந்த போலீசார் அபராதம் விதிக்க முயன்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • பரபரப்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அரியானாவில் ஃபரிதாபாத் பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் டிரைவரிடம் ஆவணங்களை கேட்டார். அப்போது, டிரைவர் மதுபோதையில் இருந்ததை அறிந்த போலீசார் அபராதம் விதிக்க முயன்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது திடீரென டிரைவர் காரை இயக்கியதால், போக்குவரத்து போலீஸ் காரின் கதவில் தொங்கிய படியே சில மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார். இதைக்கண்ட மற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் காரை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "ஆவணங்களை சரிபார்ப்பதற்காக போலீசார், டிரைவரின் பக்கவாட்டில் உள்ள கதவு வழியாக கேட்டபோது, திடீரென டிரைவர் காரில் போக்குவரத்து போலீசை இழுத்து சென்றார். சில மீட்டர் தூரத்துக்கு சென்ற காரை மற்றவர்கள் மடக்கி பிடித்தனர்," என்றனர்.

    மதுகுடித்து விட்டு காரை ஓட்டியது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான் உயிரோடு இருக்கும் வரை தலித்கள் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.
    • காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை.

    பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் மகேந்திரகார்ஹில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    அரியானா என் மீது ஏராளமான அன்பை காண்பித்துள்ளது. உங்களுடன் ஆழமான உறவை நான் கொண்டுள்ளேன். நீங்கள் நாட்டின் பிரதமரை மட்டும் தேர்வு செய்யாமல், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பீர்கள்.

    ஒருபக்கம் நீங்கள் முயற்சி செய்து சோதித்த சேவகன் மோடி. மறுபக்கத்தில் தலைமை தாங்குவது யாரென்றே தெரியவில்லை.

    இந்தியா கூட்டணி வகுப்புவாதம், ஜாதி மற்றும் குடும்ப அரசியலை கொண்டுள்ளது. நான் உயிரோடு இருக்கும் வரை தலித்கள் மற்றம் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.

    இந்தியா கூட்டணி ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் பற்றி பேசி வருகிறது. இது பசு பால் கொடுக்கவில்லை. ஆனால், நெய்க்கு சண்டை தொடங்கிவிட்டது என்பதுபோது உள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    அரியானா மாநிலத்தில் 10 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 25-ந்தேதி (நாளைமறுதினம்) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார்.
    • பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தப்படும்.

    நாடு முழுவதும் 5 கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6 மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும்.

    இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல. முதல் முறையாக இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்து, அவர்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தப்படும்.

    22 பில்லியனர்களுக்கு தள்ளுபடி செய்தது போல், தங்கள் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் மோடியிடம் ஒவ்வொரு முறையும் கேட்கின்றனர்.

    கேட்கும் ஒவ்வொரு முறையும், பிரதமர் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லுவார். ஆனால் செய்ய மாட்டார்.

    ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அல்ல, மீண்டும் மீண்டும் தள்ளுபடி செய்யப் போகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எங்கள் போட்டி என்பது குடும்பச் சண்டை அல்ல. இது குறிக்கோள்களை அடைய எங்களுக்குள் நடக்கும் போட்டி.
    • தேவிலால் குடும்பத்தில் யார் ஜெயித்தாலும் சவுதாலா குடும்பத்துக்கு ஒரு வெற்றி மாலை உறுதிதான்.

    ஒரு குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும்போது, ஒரு வீட்டையோ, குறிப்பிட்ட நிலத்தையோ கேட்டு வாரிசுகள் சண்டையிடுவது உண்டு.

    அதுபோல் ஒரு பாராளுமன்ற தொகுதியை கைப்பற்ற ஒரே குடும்பத்தில் 3 பேர் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள்.

    அரியானா மாநிலம் கிசார் பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றத்தான் அந்த போட்டா போட்டி நடக்கிறது.

    தேர்தல்களத்தில் குதித்து இருக்கும் அந்த 3 பேரும் முன்னாள் துணை பிரதமர் தேவிலால் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு தேவிலால் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

    விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான், தேவிலால். பச்சைநிற தலைப் பாகையுடன் எப்போதும் எளிமையாக காணப்பட்ட ஓர் உயரமான மனிதர். விவசாயிகளின் தலைவராக இருந்தவர். சாட் சமூகத்தை சேர்ந்தவர். 1991-ம் ஆண்டுகளில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதும், அவரைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமராக இருந்தபோதும் அவர்களின் மந்திரிசபைகளில் துணைப் பிரதமராக இருந்தவர்.

    இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான அவர், அரியானா மாநிலத்தில் இருமுறை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தவர். அவரைத் தொடர்ந்து அவருடைய மகன் ஓம்பிரகாஷ் சவுதாலா சிலமுறை அரியானா முதல்-மந்திரியாக இருந்திருக்கிறார்.

    அரியானாவில் தற்போது முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்காக அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் 25-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்குள்ள கிசார் தொகுதியைக் கைப்பற்றத்தான் தேவிலால் குடும்பத்தினர் இடையே போட்டி நிலவுகிறது. அந்த 3 பேரையும் இனி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

    1. ரஞ்சித்சிங் சவுதாலா (பா.ஜனதா) தேவிலால் மகன்களில் ஒருவரான இவருக்கு வயது 78 ஆகிறது. சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சமீபத்தில் பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பாராளுமன்றத்துக்கு போட்டியிடுகிறார்.

    கடந்த முறை வீசிய மோடி அலையில் அரியானாவில் 10 இடங்களிலும் பா.ஜனதா ஜெயித்தது போல் இந்த முறையும் வெற்றி உறுதி என்கிறார்.

    2. நைனா சவுதாலா (ஜனநாயக ஜனதா கட்சி) சுருக்கமாகச் சொல்வது என்றால் இவர் தேவிலால் பேரனின் மனைவி. அதாவது தேவிலால் மகன் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் மகன் அஜய் சவுதாலாவின் மனைவி ஆவார்.

    57 வயதாகும் இவர், 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மாநிலம் முழுவதும் பெண்கள் பேரணியை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன், அது எனது வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். அரியானா துணை முதல்-மந்திரியாக இருந்த துஷ்யந்த் சவுதாலா, இவருடைய மகன் என்பது கூடுதல் தகவல்.

    3. சுனைனா சவுதாலா (இந்திய தேசிய லோக் தளம்) இவரும் தேவிலால் இன்னொரு பேரன் ரவி சவுதாலா என்பவரின் மனைவி ஆவார். 47 வயதான இவர் கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளராக இருக்கிறார்.

    ஒரே தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் போட்டியிடுவது பற்றி இவர் கூறுகையில், ''எங்கள் போட்டி என்பது குடும்பச் சண்டை அல்ல. இது குறிக்கோள்களை அடைய எங்களுக்குள் நடக்கும் போட்டி'' என்கிறார்.

    வெற்றி யாருக்கு என்பதை கிசார் தொகுதி வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு அரசியல்வாதிக்கு 2 மகன்களாம். தேர்தலில் எந்தக் கட்சி ஜெயித்தாலும் எங்கள் வீட்டுக்கு வெற்றி மாலை வரும் என்று அவர் நம்பிக்கையோடு சொல்வாராம். காரணம் அவருடைய ஒரு மகன் ஆளுங்கட்சியிலும், இன்னொரு மகன் எதிர்க்கட்சியிலும் இருக்கிறார்களாம். அதுபோல் தேவிலால் குடும்பத்தில் யார் ஜெயித்தாலும் சவுதாலா குடும்பத்துக்கு ஒரு வெற்றி மாலை உறுதிதான்.

    இந்த 3 பேருக்கும் மத்தியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜெய்பிரகாஷ் என்பவர் இடையில் களத்தில் இருக்கிறார். இவர் இதே கிசார் தொகுதியில் ஜனதா தளம் கட்சி சார்பில் 1989-ம் ஆண்டு வெற்றிபெற்று வி.பி.சிங் மந்திரிசபையில் இடம் பிடித்து இருந்தவர்.

    1996-ம் ஆண்டு அரியானா விகாஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு இதே தொகுதியை வென்றார். அதுபோல் 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    தற்போது காங்கிரஸ் சார்பில் மீண்டும் களம் காணுகிறார். தொகுதி மக்களிடம் தனக்கு இருக்கும் நீண்ட நாள் தொடர்பு தனது வெற்றிக்கு உதவும் என்று உறுதியோடு வலம் வருகிறார். அந்த 3 பேருக்கும் இவர் சவாலாக இருப்பாரா? அல்லது சவுதாலா குடும்பத்திடம் வெற்றியை தாரை வார்ப்பாரா என்பது ஜூன் 4-ந் தேதி தெரிந்துவிடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.
    • மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

    நாடு முழுவதும் 5கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6 மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். பேரணியில் அவர் பேசுகையில், நான் அரசன் இல்லை, பிரதமர் மோடி தான் அரசன். நான் ஒருபோதும் அரசனாக இருக்க விரும்பவில்லை. நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் மட்டுமே, அரசன் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

     

    மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் மோடியை ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் உள்ள கடவுளான ஜெகநாதரே மோடியின் பக்தர்தான் என்று பாஜக பிரமுகர் பேசியது சர்ச்சையானது.

    அதுமட்டுமின்றி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் மோடி, தான் மனிதப் பிறவியே அல்ல என்றும் பரமாத்மாதான் தன்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது, பயாலஜிகளாக தான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. 

     

    • பா.ஜனதா மெஜாரிட்டி பெற்றுவிட்டால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என காங்கிரஸ் பொய்யை பரப்பி வருகிறது.
    • நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில், மோடி ஜி 270 இடங்களை தாண்டிவிட்டார்.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா இன்று அரியானா மாநிலம் ஜாஜ்ஜரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அமித் ஷா பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜனதா மெஜாரிட்டி பெற்றுவிட்டால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என காங்கிரஸ் பொய்யை பரப்பி வருகிறது. இந்த நேரம் வரை பா.ஜனதா பாராளுமன்றத்தில் இருக்கும்வரை யாரும் இடஒதுக்கீட்டை தொட முடியாது. ராகுல் காந்தி தேர்தல் தொடங்குவதற்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். தேர்தல் முடிந்த பிறகு அது காங்கிரஸ் துண்டோ யாத்திரையாகும். தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் உதவியுடன் கூட காங்கிரரை பார்க்க முடியாது.

    நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில், மோடி ஜி 270 இடங்களை தாண்டிவிட்டார். 400-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல் பாபா 40 இடங்களை கூட தாண்டாது. ஒரு பக்கம் பிரதமர் மோடி இடஒதுக்கீடடை பாதுக்கும் வேலையில், மறுபக்கம் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது.

    வாக்கு வங்கிக்காக சட்டப்பிரிவு 370-ஐ காங்கிரஸ் நீண்ட காலமாக அப்படியே வைத்திருந்தது. மோடி ஜி 370-ஐ நீக்கி பயங்கரவாதத்தில் இருந்து காஷ்மீரை விடுவிக்க வேலை செய்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. நம்முடையதாக இருக்கும். அதை திரும்பவும் எடுத்துக் கொள்வோம்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும்.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள்.

    பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் சோனிபட் கோஹனாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    2024 மக்களவை தேர்தல் ஒரு போர் போன்றது. ஒரு மக்கள் வளர்ச்சி, மறுபக்கம் வாக்கு ஜிஹாத். யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை அரியானா மக்களிடம் கேட்க விரும்புகிறேன். (சிறிது நேரம் காத்திருந்த மோடி, மோடி ஆட்சி என்று மக்கள் முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி) உங்கள் பதில் முடிவு செய்துள்ளது.

    காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும் என தைரியத்திற்கு பெயர்போன அரியானா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் சொல்ல விரும்புகிறேன்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள். நீங்கள் முயற்சி செய்தால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். தடையாக விளங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் மயானத்தில் புதைத்துவிட்டோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார்.

    • அரியானாவில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், சுற்றுலா பேருந்தில் மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர் என்றும், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.

    ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து தீவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×