என் மலர்tooltip icon

    டெல்லி

    • தெற்கும், தெற்கும் மோதிக்கொள்வதாக டெல்லியில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    காலியாக இருக்கும் துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நேற்றோடு முடிவடைந்தது.

    இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி மற்றும் பல முக்கிய மந்திரிகள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் போட்டி இருக்காது என முதலில் கருதப்பட்டது.

    ஆனால் 'இந்தியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி பேசி, போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் வேட்பாளராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 'இந்தியா' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் 2 பேருமே தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தெற்கும், தெற்கும் மோதிக்கொள்வதாக டெல்லியில் தலைவர்கள் பேசுகிறார்கள்.

    வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று சுதர்சன் ரெட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் தமிழ்நாடு வர உள்ளார்.

    அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். மேலும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.

    • 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • நபரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற வளாகத்தில் அத்துமீறி மர்ம நபர்கள் ஊடுருவதை தடுப்பதற்காக 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதற்கு சாவல் விடும் வகையில் இன்று காலை 6 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பாராளுமன்ற வளாக சுற்றுச்சுவர் ஓரம் இருந்த மரத்தில் ஏறி சுவரை தாண்டி உள்ளே குதித்தார்.

    இதை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பார்த்து உடனடியாக அவரை பிடித்தார். அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பாராளுமன்ற வளாக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது.

    டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும்.

    இதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்ச் கவனித்தும் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தது. ஆகஸ்டு 14ஆம் தேதி இது தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது. 

    இந்த நிலையில் இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.

    பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    • இந்த திட்டத்தின் மூலம் குறைவான கட்டண இருப்பு இன்றி வங்கி கணக்கை பராமரிக்க முடியும்.
    • கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.

    மத்திய-மாநில அரசுகளின் பெரும்பாலான நிதி உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ஏழைகள் பலர் வங்கி கணக்கு இல்லாமல் இருந்த நிலையில் அனைவரும் வங்கி கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி 'ஜன்தன்' திட்டத்தைத் கொண்டு வந்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் குறைவான கட்டண இருப்பு இன்றி வங்கி கணக்கை பராமரிக்க முடியும். இதன்மூலம், கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர். 'ஜன்தன்' திட்டத்தின் கீழ் 56 கோடியே 16 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 755 கோடி பணம் இருப்பு உள்ளது.

    இந்தநிலையில், கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்) என்ற வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும், முகவரியையும் வங்கிகள் சரிபார்க்கப் பயன்படுத்தும் செயல்முறையை (அப்டேட்) சேர்க்கவில்லை என்றால் 'ஜன்தன்' வங்கி கணக்குகள் செப்டம்பர் 30-ந்தேதிக்கு பிறகு செயல்படாது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் வங்கிகள் கேட்கும் அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களுடன் கே.ஒய்.சி. செயல்முறையில் கூடுதல் விவரங்களை இணைக்க 'ஜன்தன்' வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    இதுகுறித்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்த தகவலில் உண்மை இல்லை. கே.ஒய்.சி. விவரங்களை வாடிக்கையாளர்கள் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயம்தான். அதேநேரத்தில் கே.ஒய்.சி. தகவல் சேர்க்கப்படவில்லை என்றாலும் வங்கி கணக்கு செயல்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
    • விதிகளின்படி பெரிய வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி உள்ளன.

    இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. விதிகளின்படி பெரிய வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.

    • கணவர்-மனைவி இருவரும் தங்களது பிரச்சனைகளை பேசித்தீர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
    • திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று சேருவது.

    புதுடெல்லி:

    சிங்கப்பூரில் வசித்து வரும் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி அவரை பிரிந்து ஐதராபாத்தில் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே, இளைய மகனின் பிறந்தநாள் 23-ந் தேதி வருவதால், அதை கொண்டாட கணவர் இந்தியா வந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பெண், காணொலி காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜரானார்.

    அவரிடம், கணவர்-மனைவி இருவரும் தங்களது பிரச்சனைகளை பேசித்தீர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

    அந்த பெண், தனது கணவர் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பவில்லை என்றும், தனக்கு ஜீவனாம்சம் கூட அளிக்கவில்லை என்றும் கூறினார்.

    நீதிபதிகள், ''நீங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிங்கப்பூரில் கணவருடன் வாழ்வதில் என்ன பிரச்சனை?'' என்று கேட்டனர்.

    அதற்கு அப்பெண், ''கணவரின் செயல்பாடுகளை பார்த்தால், அவருடன் சிங்கப்பூரில் வாழ்வது கடினம். வாழ்வாதாரத்துக்கு வேலை தேவை'' என்று கூறினார்.

    நீதிபதிகள், ''வேலை கிடைக்கிறதோ, இல்லையோ நீங்கள் அங்கு சென்றால் உங்களை அவர் பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால், உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பணம் டெபாசிட் செய்யுமாறு கணவரிடம் கேட்கலாம்'' என்று கூறினர்.

    அந்த பெண்ணோ, ''நான் யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை'' என்று கூறினர்.

    அப்போது நீதிபதிகள் அவருக்கு அறிவுரை கூறினர். அவர்கள் கூறியதாவது:-

    எங்களை பழைய ஆள் என்று நினைத்தாலும் பரவாயில்லை. திருமண உறவு நீடிக்கும்போது, கணவரோ, மனைவியோ தாங்கள் அடுத்தவரை சார்ந்திருக்க விரும்பவில்லை என்று சொல்வது சாத்தியமில்லை. யாராவது சுதந்திரமாக இருக்க விரும்பினால் அவர்கள் திருமணமே செய்திருக்கக்கூடாது.

    திருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று சேருவது. பிறகு எப்படி நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்?

    நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். குழந்தைகள் வேறு சிறிய வயதில் உள்ளனர். அவர்கள் உடைந்த குடும்பத்தை பார்க்க வேண்டுமா? அவர்கள் என்ன தவறு செய்தனர்?

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அந்த பெண், இதுபற்றி சிந்திப்பதாக தெரிவித்தார்.

    பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை கணவரிடம் ஒப்படைக்குமாறு மனைவிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனைவி மற்றும் குழந்தைகளின் செலவுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செலுத்துமாறு கணவருக்கு உத்தரவிட்டனர்.

    • ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
    • ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில், ஆசிய போட்டிக்கான இந்திய அணி குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:

    இந்த இந்திய அணியை கொண்டு ஆசிய கோப்பையை வேண்டுமென்றால் வெல்லலாம். ஆனால் இந்த வீரர்களைக் கொண்டு டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை.

    இந்த அணியை உலகக் கோப்பைக்கு எடுத்துச்செல்ல போகிறீர்களா? 6 மாதத்தில் தொடங்கும் உலகக் கோப்பைக்கான தயாரிப்பு பணிகள் இதுதானா?. இது இந்திய அணியை பின்நோக்கி எடுத்துச் செல்கிறது.

    துணை கேப்டன் பதவியில் இருந்து அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா எப்படி அணியில் இடம் பிடித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    ஐ.பி.எல். தொடரே அணி தேர்வுக்கான முக்கியமானது. ஆனால் தேர்வாளர்கள் அதற்கு முன்பு வீரர்கள் செயல்பட்டதை கருத்தில் கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தார்.

    10-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
    • உக்ரைன் விவகாரம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசப்பட்டது.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.

    இந்த உரையாடலின்போது உக்ரைன் விவகாரம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் அதிபர் மேக்ரானுடன் மிகச் சிறந்த உரையாடலை நடத்தினேன். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம் என பதிவிட்டுள்ளார்.

    அதேபோல் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியுடன் பேசினேன். உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான வலுவான உத்தரவாதங்களுடன், நீடித்த அமைதியை நோக்கி நகர்வதற்காக, உக்ரைன் போர் குறித்த எங்கள் நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ல் நடக்கிறது.

    புதுடெல்லி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.

    இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன.

    இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடாது என்று கூறியுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியதாவது:

    பாகிஸ்தான் உடனான விளையாட்டு நிகழ்வுகளுக்கான அணுகுமுறை, இந்திய நாட்டின் ஒட்டுமொத்த கொள்கையை பிரதிபலிக்கிறது.

    பாகிஸ்தான் உடனான இருதரப்பு தொடர்களை இந்திய அணி புறக்கணிக்கும். இந்திய அணிகள் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது. அதேபோல், பாகிஸ்தான் அணிகளை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம்.

    ஆனால் ஆசிய கோப்பையில் விளையாடுவதை நாங்கள் தடுக்க மாட்டோம். ஏனெனில் அது பன்முக நிகழ்வாகும். இருதரப்பு போட்டிகளுக்கு பாகிஸ்தானை இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஐ.சி.சி. தொடராகவே இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என தெரிவித்தது.

    • இரண்டு நாடுகளும் கூட்டாளிகள். எதிரிகள் அல்ல.
    • ஆசியாவில் இரட்டை இன்ஜின் பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கான சீனத் தூதர் ஷியு பெயிஹாங் கூறியதாவது:

    இந்தியாவும், சீனாவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். சந்தேகிப்பதை நிறுத்த வேண்டும்.

    இரண்டு நாடுகளும் கூட்டாளிகள். எதிரிகள் அல்ல. நமது கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் களைய வேண்டும்.

    இரண்டு பெரிய அண்டை நாடுகளான இந்தியாவும், சீனாவும் பொதுவான வளர்ச்சிக்கு ஒற்றுமையாகவும், ஒத்துழைப்புடன் செயல்படுவதே ஒரே தீர்வு. இரு நாடுகளின் நட்பு ஆசியாவுக்கு பலனளிக்கும்.

    ஆசியாவில் இரட்டை இன்ஜின் பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள். இரண்டு நாடுகளின் ஒற்றுமை, உலகிற்கு பெரிய அளவில் பலனளிக்கும்.

    உலகில் சமத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதில் இரண்டு நாடுகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்தியாவும், சீனாவும் இரண்டு முக்கியமான அண்டை நாடுகள். வளர்ச்சி அடையும் நாடுகள்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க விரைவில் பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இதன்மூலம் இரு நாட்டு உறவில் புது உத்வேகம் பிறக்கும். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது என தெரிவித்தார்.

    • தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் வைத்து பராமரிக்க உத்தரவு.
    • இரண்டு நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், வழக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

    டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும். இதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்ச் கவனித்தும் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தது. ஆகஸ்டு 14ஆம் தேதி இது தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது.

    இந்த நிலையில் நாளை மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

    • 12 மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி அடுக்கு நீக்கப்பட்டது.
    • இனிமேல் 5 மற்றும் 18 சதவீதம் அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும்.

    சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளி போனஸ்-ஆக ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் ஜிஎஸ்டி-க்கான மந்திரிகளின் ஜெனரல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய அடுக்கு (Slap) வரியை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகிய இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வரி வசூல் வசூலிக்கப்படும். இதனால் 90 சதவீதம் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

    வரி சிஸ்டத்தை எளிமையாக்கப்படும் திட்டத்தின் ஜிஎஸ்டி 2.0-வின் தொடக்கமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

    ×