என் மலர்tooltip icon

    டெல்லி

    • உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இந்திய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம்.
    • அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை.

    டெல்லியில் நடந்த 'எகனாமிக் டைம்ஸ் வேர்ல்ட் லீடர்ஸ் ஃபோரம் 2025' நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு குறித்து பேசிய ஜெய்சங்கர், "நாட்டின் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் நலன்கள் தான் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்.

    விவசாயிகளின் நலன்களில் சமரசத்திற்கு இடமில்லை. இந்திய தயாரிப்புகளை வாங்க அமெரிக்காவை யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இந்திய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்தியா - பாகிஸ்தான் மோதலை சமரசம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கூற்றையும் ஜெய்சங்கர் நிராகரித்தார். 1971 இந்தோ-பாக் போர் முதல் கடந்த 50 வருடங்களாக இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று அவர் கூறினார்.

    மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து விமர்சித்த ஜெய்சங்கர், அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை. அதிபர் டிரம்ப் உலகைக் கையாளும் விதம், தனது சொந்த நாட்டைக் கையாளும் விதம் கூட, பாரம்பரிய மரபுவழியில் இருந்து மிகப் பெரிய அளவில் விலகிச் செல்வதாக தெரிவித்தார். 

    • புதிய கேமிங் மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.
    • தடையை மீறி பணம் வைத்து விளையாடினால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.

    இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாக மாறியுள்ளது.

    இதன்மூலம் பணம் செலுத்தி விளையாடும் ரம்மி, போக்கர், பெட்டிங் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை அமலானது.

    தடையை மீறி பணம் வைத்து விளையாடினால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கசட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் தளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • கடந்த 11 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் அரசாங்கம் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது.
    • விரைவில் ககன்யான் திட்டத்தைத் தொடங்க உள்ளோம்.

    தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, விஞ்ஞானிகள் மற்றும் அனைத்து இளைஞர்கள் உட்பட விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    தேசிய விண்வெளி தினம் இளைஞர்களிடையே உற்சாகத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. விண்வெளித் துறை ஒன்றன்பின் ஒன்றாக மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் அரசாங்கம் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது.

    இன்று, இந்தியா அரை-கிரையோஜெனிக் என்ஜின்கள் மற்றும் மின்சார உந்துவிசை போன்ற திருப்புமுனை தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் ககன்யான் திட்டத்தைத் தொடங்க உள்ளோம். வரும் காலங்களில், இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும்.

    செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மீனவர்கள் செயற்கைக்கோள்கள் மூலம் பாதுகாப்புத் தகவல்களைப் பெறுதல், பேரிடர் மேலாண்மை ஆதரவு மற்றும் பிரதமர் கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தில் புவிசார் தரவுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் விண்வெளி தொழில்நுட்பமும் இந்தியாவில் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. விண்வெளித் துறையில் இந்தியாவின் இன்றைய முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது என்றார்.

    • பிரதமர் மோடி முதலில் 2 நாள் பயணமாக ஜப்பானுக்கு செல்கிறார்.
    • 7 ஆண்டுகளுக்கு பிறகு மோடி சீனாவுக்கு செல்ல உள்ளார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை வருகிற 29-ந்தேதி தொடங்குகிறார்.

    பிரதமர் மோடி முதலில் 2 நாள் பயணமாக ஜப்பானுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

    மேலும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கிறார்கள். பிரதமராக மோடி 8-வது முறையாக ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு 31-ந்தேதி பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார். அங்கு தியான்ஜின் நகரில் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் மோடி ஜப்பான் பயணத்துக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் தியான்ஜினில் நடைபெறும். ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு பயணம் செய்வார் என்று தெரிவித்து உள்ளது. மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    மேலும் மாநாட்டில் பங்கேற்க உள்ள ரஷிய அதிபர் புதின் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கடைசியாக 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சீனாவுக்கு பயணம் செய்திருந்தார்.

    7 ஆண்டுகளுக்கு பிறகு மோடி சீனாவுக்கு செல்ல உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டது.

    பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லையில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இரு நாடுகளின் உறவில் பெரிய முன்னேற்றம் ஏற்படாமல் இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-சீனா தங்களது வர்த்தகத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளன.

    இதனால் பிரதமர் மோடியின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • பா.ஜ.க. புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    • பீகார் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா இருந்து வருகிறார். அவரது பதவி காலம் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டது.

    இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மத்திய மந்திரியாகவும் தேர்வு செய்யப்பட்டு விட்டார். எனவே அவருக்கு பதில் புதிய பா.ஜ.க. தேசிய தலைவரை தேர்வு செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து வருகிறது.

    புதிய பா.ஜ.க. தலைவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுபவராக இருக்க வேண்டும் என்று அந்த இயக்கம் விரும்புகிறது. அதன் மூலம் நாடு முழுவதும் பா.ஜ.க.வை மேலும் பலப்படுத்த முடியும் என்று அந்த இயக்கம் வலியுறுத்தி வருகிறது.

    இதன் காரணமாக பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஆனால் இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை புதிய தேசிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அதை பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித் ஷாவும் ஏற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அவர்கள் இருவரும் முன்னாள் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை பா.ஜ.க. தேசிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். தர்மேந்திர பிரதான் தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் வல்லவராக உள்ளார். முக்கிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிக்கு அவர் வகுத்து கொடுத்த வியூகங்கள்தான் உறுதுணையாக இருந்தன.

    எனவே அவர் பா.ஜ.க. தேசிய தலைவராக இருந்தால் நாடு முழுவதும் பா.ஜ.க. வெற்றிக்கு கை கொடுப்பவராக இருப்பார் என்று பிரதமர் மோடி கருதுகிறார். ஆனால் இதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    இந்த நிலையில் பா.ஜ.க. புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கவர்னர் பதவிகள் காலியாக உள்ளன. அந்த பதவிகளுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களில் பலர் போட்டியில் இறங்கி உள்ளனர்.

    எனவே அதிருப்தியில் இருப்பவர்களை கவர்னர்களாக மாற்றி விட்டு பா.ஜ.க. புதிய தேசிய தலைவர் தேர்தலில் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பீகார் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    அதற்கு முன்னதாக பா.ஜ.க. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித் ஷாவும் தீவிர மாக உள்ளனர். எனவே விரைவில் பா.ஜ.க. புதிய தலைவர் யார்? என்பது தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி இருந்தார்.
    • சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமிக்கு திரும்பினர்.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். அங்கு சுமார் 18 நாட்கள் தங்கி பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமிக்கு திரும்பினர்.

    இதன்மூலம் 41 ஆண்டுகளில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.

    இதற்கிடையே, விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து கடந்த 17-ம் தேதி இந்தியா வந்தார். அவர் கடந்த 18-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்தித்தார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது, சுபான்ஷு சுக்லா விண்வெளியில் தனது அனுபவங்களை ஜனாதிபதியிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது ககன்யான் திட்டம் வெற்றி பெற சுபான்ஷு சுக்லாவை ஜனாதிபதி முர்மு வாழ்த்தினார்.

    • வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளார் என கூறப்பட்டது.
    • பிரதமர் மோடியின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த மாதம் 26-ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த விழாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை, முப்பெரும் விழாவில் பங்கேற்று ரூ.1,000 மதிப்பிலான, பேரரசர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.

    இதையடுத்து, வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளார் என்று கூறப்பட்டது. சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்வார் என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 26-ந்தேதி பிரதமர் தமிழகம் வரவிருந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

    மாற்றுப் பணி மற்றும் முக்கிய அலுவல்கள் காரணமாக இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    • டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.
    • டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.

    புதுடெல்லி:

    சீன வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு இந்திய அரசு 5 ஆண்டுக்கு முன் தடை விதித்தது.

    இதற்கிடையே, டிக் டாக் மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது என செய்திகள் நேற்று மாலை முதல் தீயாகப் பரவின. டிக் டாக் அல்லது அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், டிக் டாக் தடையை நீக்கும் எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற எந்தவொரு அறிக்கையும், செய்தியும் தவறானது மற்றும் தவறாக வழிநடத்தும் என இந்தியா அரசு தெரிவித்துள்ளது.

    • தேசிய விண்வெளி தினம் ஆகஸ்ட் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • 2028-ம் ஆண்டுக்குள் முதல் விண்வெளி ஆய்வுமையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை ஆய்வகமான 'பாரதிய அந்தரிக்ஸ்' நிலையத்தின் மாதிரியை டெல்லி பாரத் மண்டபத்தில் இஸ்ரோ காட்சிக்கு வைத்துள்ளது.

    ஆகஸ்ட் 23-ம் தேதி, தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாட்டை இஸ்ரோ செய்துள்ளது.

    உலகின் 5 முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் சார்பில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. அதுதவிர, சீனா சார்பில் ஒரு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமும் உள்ளது. இந்தியா சார்பிலும் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    பாரத் அந்தரிக்ஸ் எனப்படும் ஆய்வு நிலையங்களை விண்வெளியில் நிலைநிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ள இந்தியா, அவற்றை 10 டன் எடை கொண்டதாகத் தயாரித்து வருகிறது.

    பி.ஏ.எஸ்-01 தொகுதி 10 டன் எடையுள்ளதாக இருக்கும். பூமியிலிருந்து 450 கி.மீ. உயரத்தில் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இவை இளைய தலைமுறையினர் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.

    வரும் 2028-ம் ஆண்டுக்குள் முதலாவது விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. 2035ம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 5 ஆய்வு மையங்களை விண்வெளியில் நிலைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

    விண்வெளி, உயிர் அறிவியல், மருத்துவம் மற்றும் கோள்களுக்கு இடையேயான ஆய்வு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் ஆய்வு செய்வதற்கான தளமாக பாரதிய அந்தரிக்ஸ் நிலையம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இது மனித ஆரோக்கியத்தில் நுண் ஈர்ப்பு விசையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்கும், விண்வெளியில் நீண்டகால மனித இருப்புக்குத் தேவையான அத்தியாவசிய தொழில்நுட்பங்களை சோதிப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என கூறப்படுகிறது.

    • கடந்த 2017, ஜூலை 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3, 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் கடந்த 2017, ஜூலை 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும், வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் ஆவார். அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

    தற்போது, ஜி.எஸ்.டி. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பூஜ்யம் அல்லது 5 சதவீத வரி அடுக்கிலும், ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற பாவ பொருட்கள் 28 சதவீத வரி அடுக்கிலும் வருகின்றன.

    சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று கூறினார்.

    இந்நிலையில், 56வது ஜி எஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காலணி மீதான ஜி.எஸ்.டி.யும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாகக் குறைந்தது.
    • நீக்கப்பட்ட 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் உதவவில்லை.

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது தேர்தல் ஆணையம். கடந்த ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்.

    இதனால் பீகார் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாகக் குறைந்தது. இந்த திருத்தத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

    இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் வசிப்பிடச் சான்றாக ஆதார் கார்டை பயன்படுத்தவும் ஏற்கனவே உள்ள 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் தேர்தல் ஆணையம் சேர்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டனர்.

    மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். நேரில் மட்டுமின்றி ஆன்லைன் முறையிலும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையே வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய வக்கீல் தெரிவித்தார்.

     நீக்கப்பட்ட 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் உதவவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "உங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்கிறார்கள்? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்" என்று தெரிவித்தனர். 

    இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    • இந்த பெஞ்ச் முந்திய 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை இன்று பிறப்பித்தது.
    • ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு தனித்தனி தங்குமிடங்களில் வைக்க வேண்டும்.

    டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 8 அன்று உச்சநீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து நாய் பிரியர்கள் செய்த மேல்முறையீடு 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. இந்த பெஞ்ச் முந்தைய 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை இன்று பிறப்பித்தது. 

    அதில், 

    பொது இடங்களில் மக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்க அனுமதிக்கப்படாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி வார்டுகளில் நிர்வாகம், உணவளிக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும்.

    இந்த உத்தரவை டெல்லி உடன் நிறுத்திக்கொள்ளாமல் நாடு முழுவதும் விரிவு படுத்த இந்தியா முழுவதும் அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புகிறோம்.

    கருத்தடை, தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கத்திற்குப் பிறகு நாய்களை அதே பகுதிக்கு விடுவிக்க வேண்டும். இருப்பினும், ரேபிஸ் அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு தனித்தனி தங்குமிடங்களில் வைக்க வேண்டும்.

    விலங்கு ஆர்வலர்கள் நாய்களைத் தத்தெடுக்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். நாய்கள் மீண்டும் தெருக்களுக்குத் திரும்பாமல் இருப்பதை உறுதி செய்வது அவர்களின் பொறுப்பாகும்.

    எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்பும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தலையிட முடியாது.

    ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த நாய் பிரியர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ரூ.25,000 மற்றும் ரூ.2 லட்சத்தை பதிவாளரிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

    ×