என் மலர்
ஆந்திர பிரதேசம்
- சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
- நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
பின்னர் ஜாமீனில் வெளிய வந்தார். சந்திரபாபு நாயுடு நேற்று தனது மனைவி புவனேஸ்வரியுடன் திருப்பதிக்கு வந்தார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருப்பதி மலைக்கு வந்த சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
ஏழுமலையான் காலடியில் பிறந்து படிப்படியாக வளர்ந்தவன் நான். கஷ்டம் வரும் காலங்களில் காப்பாற்றுவார்.

அலிபிரியில் தன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்த போது ஏழுமலையான் தான் என்னை காப்பாற்றினார். நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
உலகில் இந்தியா முதல் இடத்திலும் தெலுங்கு இனம் உலகின் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் ஆற்றலை தர வேண்டும் என சாமியிடம் வேண்டிக் கொண்டேன். தனது செயல்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 58,278 பேர் தரிசனம் செய்தனர். 17,220 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
#WATCH | Former Andhra Pradesh CM and Telugu Desam Party president N Chandrababu Naidu along with his wife offered prayers at Sri Venkateswara Swamy Temple in Tirupati. pic.twitter.com/1hmqNY8MXo
— ANI (@ANI) December 1, 2023
- கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை
- உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா
திருமலை:
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடந்தது. அதன்பிறகு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை நடந்தது.
மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தொடர் மழையின் காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே இரவு முதல் காலை வரை கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தற்போது இடைவிடாது பலத்த மழை பொழிவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடி கடும் குளிரில் வரிசையில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர் மழையின் காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. நடைபாதையாக செல்லும் பக்தர்கள் நீர்வீழ்ச்சிகளில் ஆனந்த குளியல் போடுகின்றனர்.
தொடர் மழையால் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டுகள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 61,403 பேர் தரிசனம் செய்தனர். 19,126 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ் (வயது 21). இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் 27-ந் தேதி லட்சுமி சாய் சந்தோஷ் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை வரிசையில் சென்றனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசித்து விட்டு தங்கம் மண்டபம் அருகே புதுமணப் பெண் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமி சாய் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து லட்சுமி சாயின் பெற்றோர் கூறுகையில்:-
அவருக்கு சிறு வயது முதலே சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்து இறந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிணத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் புது மணப்பெண் அணிந்து இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது.
- கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும்.
திருப்பதி:
கார்த்திகை மாதத்தில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் விஷ்ணு பூஜைகளின் ஒரு பகுதியாக திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று கோபூஜை சாஸ்திர பூர்வமாக நடந்தது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து 10 மணி வரை நடந்த கோபூஜையை உலக பக்தர்களின் நலனுக்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பினர்.
முன்னதாக ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்களான வேணுகோபாலசாமி, ருக்மணி மற்றும் சத்யபாமாவை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர். அங்கு, வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றுகையில், சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது. கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும் என்றார்.
முன்னதாக கார்த்திகை விஷ்ணு பூஜை சங்கல்பம், பிரார்த்தனை சூக்தம், விஷ்ணு பூஜை மந்திர பாராயணம் நடந்தது. அப்போது உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு பசு மற்றும் கன்றுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து பிரசாதம் மற்றும் ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கோபிரதட்சணை செய்யப்பட்டது. நிறைவாக பிரார்த்தனை மற்றும் மங்களம் வேண்டி கோபூஜை முடிந்தது. அதில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
- குழந்தை கடத்திச்சென்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குட்லூருவை சார்ந்தவர் தேவரகொண்டா ஆனந்த ராவ்.
இவரது மனைவி ரஜினி தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. தம்பதி இருவரும் ஊர் ஊராக சென்று வாத்து மேய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொப்போலி மேம்பாலத்தின் அடியில் தற்காலிக கூடாரம் அமைத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இரவு 11 மணிக்கு ஒரு ஆண், பெண் பைக்கில் வந்தனர்.
கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.
குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை கடத்திச் சென்றது குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.
மேலும் குழந்தை கடத்திச்சென்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் குழந்தையை கடத்தி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
விரைவில் குழந்தையை கடத்திச் சென்றவர்களை கண்டுபிடித்து குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம்.
- நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு கார்த்திகை மாதத்தையொட்டி கருடசேவை நடந்தது. கோவிலில் இருந்து ஊழியர்கள் உற்சவர் மலையப்பசாமியை வாகன மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு உற்சவரை தங்கக் கருட வாகனத்தில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்தனர். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப்பூஜைகள் செய்து வாகனச் சேவை தொடங்கியது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏலுகுண்டல வாடா.. வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
- பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி அணிந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
- மத்திய அரசின் கொள்கைகள் விவசாயத் துறையை கார்ப்பரேட் துறைக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆந்திர மாநில விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி அணிந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
மின்சார மசோதா 2020 உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விவசாய மோட்டார்களுக்கு முன்பணம் செலுத்திய ஸ்மார்ட் மின் மீட்டர்களை மாநில மற்றும் மத்திய அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆட்சிக்கு வந்தவுடன், பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை வசதியாக புறக்கணித்தது. மத்திய அரசின் கொள்கைகள் விவசாயத் துறையை கார்ப்பரேட் துறைக்கு தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
- கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார்.
- எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மஹபூப் நகரை சேர்ந்தவர் சிரிஷா என்ற பரெலக்கா. பட்டதாரி பெண்ணான இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு சிரிஷா தான் வளர்த்து வரும் மாடுகளுக்கு மத்தியில் வீடியோ எடுத்து, எருமை மாடுகளால் எப்படி வருமானம் கிடைக்கிறது, தன்னால் எப்படி படிப்பை தொடர முடிகிறது என விவரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
ஆயிரகணக்கான வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சிரிஷாவின் வீடியோவை பார்த்து அவருடன் சமூக வலைத்தளத்தில் இணைந்தனர்.
இந்த நிலையில் கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முதலில் சிரிஷாவின் தேர்தல் பிரசாரத்தை கண்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அலட்சியம் காட்டினர்.
நாளுக்கு நாள் சிரிஷாவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வந்தது. ஆதரவு பெருகி வருவதால் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து தூக்கத்தை தொலைத்தனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த சிரிஷா மற்றும் அவரது சகோதரரை சரமாரியாக தாக்கினர். சிரிஷா ரத்த காயங்களுடன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் மேலும் அவருக்கு ஆதரவு பெருகியது.
தனக்கு அரசியல் கட்சிகளால் ஆபத்து உள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பெற்றார்.
பல்வேறு தரப்பில் இருந்து சிரிசாவுக்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
தற்போது சிரிஷாவிற்கு சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அவருக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
- பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.
- வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஆத்ரேயபுரம் மண்டலம், உச்சிலியை சேர்ந்தவர் ரித்து சாந்திராஜ். விவசாயி.
இவரது நிலத்தில் பக்கிஸ் வகையை சேர்ந்த வாழை பயிரிட்டு இருந்தார். இவர் பயிரிட்டு இருந்த வாழை மரத்தில் 6.5 அடி உயரம் உள்ள வாழைத்தார் விளைந்தது.
பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.
இதனை நேற்று ராவுல பாலத்தில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். வாழைத்தாரை தொழிலதிபர் சீனிவாசரெட்டி என்பவர் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.
வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.
- விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.
- பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு 4-வது முறையாக திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் நேற்று இரவு 7.50 மணிக்கு ரேணிகுண்டா வந்தடைந்தார்.
விமான நிலையம் வந்த அவருக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.
சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்றனர். நேற்று இரவு திருமலையில் உள்ள ரச்சனா சிறப்பு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார்.
இன்று காலை 8 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். நெற்றியில் பெரிய நாமமிட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு வந்திருந்தார்.
சுமார் 45 நிமிடங்கள் கோவிலில் இருந்தார். பிரதமர் மோடிக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்டோர் ஏழுமலையான் படம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.

தரிசனம் முடிந்து 9.30 மணிக்கு வெளியே வந்தார். அவரை பார்த்து பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் ஹக்கீம் பேட்டை விமான நிலையத்திற்கு சென்றார்.
திருப்பதி கோவிலில் வழிபாடு செய்த புகைப்படங்களை பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காக திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்தேன் என தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
- ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி:
பிரதமர் மோடி நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக இன்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி திருமலைக்கு வருகிறார். திருமலையில் உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து ரேணிகுண்டா விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மத்திய, மாநில உளவுத்துறை போலீசார், மதிய பாதுகாப்பு படை போலீசார் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
மேலும் பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையல் ஆந்திர மாநிலம், விஜயவாடா, பொரங்கியை சேர்ந்தவர் கிருபாகர். இவர் மத்திய உளவுத்துறை பாதுகாப்பு பிரிவில் டிஎஸ்பியாக வேலை செய்து வந்தார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மற்ற போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






