என் மலர்
ஆந்திர பிரதேசம்
- கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.
- நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி:
மிச்சாங் புயல் காரணமாக ஆந்திராவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டை தடா இடையே காலங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சூலூர்பேட்டை சுங்க சாவடி அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே சாலை சேதம் அடைந்தது.
அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.
கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.
நேற்று காலங்கி ஆற்றில் மழை வெள்ளம் குறைந்தது. இதையடுத்து நாயுடு பேட்டை டிஎஸ்பி ராஜகோபால் தலைமையிலான போலீசார் சேதமடைந்த சாலைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர்.
மேலும் அப்பகுதியில் போலீசார் நிற்கவைக்கப்பட்டு அந்த வழியாக வரும் வாகனங்கள் சாலை சேதம் அடைந்த இடத்தில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் சென்னை-நெல்லூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மிச்சாங் புயல் ஆந்திர மாநிலத்தில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.
- ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார் என சாடியிருக்கிறது.
திருப்பதி:
தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஆந்திர மாநிலத்தில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.
10 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை மந்திரியான ரோஜாவும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
புத்தூர் பேரூராட்சி பிள்ளாரிப்பட்டு அலுவலகம் தா்மாம்பா புரத்தில் கனமழை பெய்தது. அப்போது ரோஜா குடையை வைத்தபடி மழையில் நடனமாடியபடி ரசித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் மந்திரி ஒருவர் மழையில் நனைந்தபடி நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது புயல் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் அமைச்சர்கள் அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தோம்.
ஆனால் ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார் என சாடியிருக்கிறது. இதையடுத்து ரோஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ஐதராபாத் நகரில் போலி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர்.
- போலி மருந்துகள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் இல்லாத நிறுவனங்களின் பெயர்களில் போலி மருந்துகள் விற்பனையாகி வருகிறது.
இந்த போலி மருந்துகள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
இந்த மருந்துகள் நோயை குணப்படுத்துவதில் தோல்வி அடைவது மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு பேரழிவு மற்றும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
புற்றுநோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் போல போலி மருந்துகள் தெலுங்கானாவில் விற்பனையாவது தெரியவந்தது. இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். அதில் ஒரு மருந்து பாட்டிலில் உள்ள முகவரி மூலம் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அந்த மருந்து எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது என்பதை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தில் விசாரித்தனர்.
அங்குள்ள ஊழியர் ஒருவர் மருந்துகள் பார்சல் செய்யப்படும் இடம் தனக்கு தெரியும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஐதராபாத் நகரில் போலி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர்.
அங்கிருந்து லட்சக்கணக்கான மருந்துகளை கைப்பற்றினர். மேலும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 36 வகையான போலி புற்றுநோய் மருந்துகளை கைப்பற்றினர். மொத்தம் ரூ.4.3 கோடி மதிப்புள்ள மருந்துகளை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளி ஒருவரை தேடி வருகின்றனர்.
- ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வீட்டில் இருந்த இடிபாடுகளில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திருப்பதி:
மிக்ஜம் புயல் காரணமாக ஆந்திராவில் திருப்பதி, பாபட்லா, என்.டி.ஆர், கிருஷ்ணா, நெல்லூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் பல ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது.
இதனால் ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பதி அடுத்த ஏர்பேடு மண்டலத்தில் உள்ள சிந்தேபள்ளி, எஸ் டி காலனியை சேர்ந்த சிறுவன் யஷ்வந்த் (வயது 4). கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் சிறுவனின் வீட்டு சுவர் நேற்று இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த இடிபாடுகளில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
- பாபட்லா- ஓங்கோல் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்தது.
- மிச்சாங் புயல் எதிரொலியால் ஆந்திராவில் 314 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பாபட்லா அருகே மிச்சாங் புயல் கரையை கடந்தது. பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை மிச்சாங் புயல் அதிதீவிர புயலாக கரையை கடந்தது.
பாபட்லா- ஓங்கோல் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்த நிலையில் ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், மிச்சாங் புயல் எதிரொலியால் ஆந்திராவில் 314 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.
- தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள பல ஓடைகள் நிரம்பி, அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடித்தன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் மிச்சாங் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடும் வெள்ளம் சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது.
திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை அருகே உள்ள கோகுல் கிருஷ்ணா என்ஜினியரிங் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்துக்கு வெள்ளநீர் செல்கிறது. மேலும் சூலூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள கலங்கிய ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வெள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக சென்னை- நெல்லூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் சாலையில் இருபுறமும் நின்று வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.
அனைத்து வாகனங்களும் சூலூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து திருப்பி விடப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள பல ஓடைகள் நிரம்பி, அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடித்தன. பல இடங்களில் தாழ்வான பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை-நெல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன.
இந்த வழியாக யாரும் பயணம் செய்ய வேண்டாம் என திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
- திருப்பதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
- மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் காற்று வீசியதால் திருப்பதி மலைப்பாதையில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு சென்று உடனடியாக மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர். இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பாபவிநாசம், கபில தீர்த்தம், ஜபாலி உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
திருப்பதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர் மழை காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீரென நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு உள்ளது. கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சியில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் சாலைகள் முழுவதும் தண்ணீர் ஓடுவதால் நேற்று தரிசனத்திற்கு வந்த திருப்பதியை சேர்ந்த விஜயகுமார் என்ற பக்தர் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் விஜயகுமாரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.
- சென்னையில் இருந்து விலகிச் சென்ற மிச்சாங் புயல் ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது.
- திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சாங் புயல் ஆந்திர மாநிலம் சீராலா- பாபட்லா இடையே கரையை கடக்க இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கோண சீமா, உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலை முதலே 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.
புயல் காற்றுடன் கனமழை பெய்ததால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக 10-க்கும் மேற்பட்ட மத்திய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 300 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கிருஷ்ணா மாவட்டத்தில் காற்று வீசியதால் கடலில் 10 அடி உயரத்திற்கு மேல் அலை எழும்பி கடலோரங்களில் இருந்த மீனவர்களின் வீடுகளில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 63 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்த 11 ஆயிரத்து 876 மீனவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 110 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைந்தன.
பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது.
நெல்லூர், விஜயவாடா நகராட்சி பகுதிகளிலும் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வீட்டில் உள்ள குழந்தைகள் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#WATCH | Andhra Pradesh: NDRF team present at Bapatla beach as #CycloneMichaung is likely to make landfall today on the southern coast of the state between Nellore and Machilipatnam pic.twitter.com/YwQv0tOsG9
— ANI (@ANI) December 5, 2023
#WATCH | Tirupati, Andhra Pradesh: TTD Chairman, Tirupati MLA Bhumana Karunakara Reddy and City Commissioner Haritha take stock of Pulavani Gunta and Gollavani Gunta areas which are inundated following rainfall#CycloneMichuang pic.twitter.com/t9lF9LGzIC
— ANI (@ANI) December 5, 2023
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்த மாதம் 23-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
- நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.
திருப்பதி:
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 10-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட்டுகள் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்த மாதம் 23-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
நாள் ஒன்றுக்கு ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இலவச தரிசன டிக்கெட் வழங்குவதற்காக திருப்பதியில் இந்திரா மைதானம், ராமச்சந்திர புஷ்கரணி, சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சாமி 2-வது செல்டர், எம்.ஆர். பள்ளி ஜில்லா பரிசத் மேல்நிலைப்பள்ளி, ஜீவகோணா இசட். பி பள்ளி, திருப்பதி மலையில் கவுஸ் துபம் ஓய்வு இல்லம் ஆகிய10 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்படும்.
நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 56,950 பேர் தரிசனம் செய்தனர். 20,463 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.75 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர்.
- படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று மீனவர்கள் 11 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென படகு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படையினர் விரைந்து வந்து படகில் இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியது. படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- லாரி முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
- விசாரணையில் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிகரெட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த தொரவாரி சமுத்திரம் , கொல்கத்தா சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திருப்பதி விஜிலென்ஸ் போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
லாரி முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கன்டெய்னர் லாரியுடன் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிகரெட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் களின் மதிப்பு ரூ. 1. கோடியே 81 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஸ்வப்ன பிரியாவின் தாய் தனது மகள் மீது போலீசில் புகார் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலத்தில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் துணை மேலாளராக ஸ்வ்ப்ன பிரியா என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்த வங்கியில் சுற்றுவட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்க நகைகளை அடகு வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சில வாடிக்கையாளர்கள் நகை கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்தி நகையை கேட்டனர்.
அப்போது வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. சுமார் 2400 பேர் அடகு வைத்த நகைகள் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படுகிறது. காணாமல் போன நகைகளின் மதிப்பு ரூ. 4½ கோடி என கூறப்படுகிறது.
இந்த தகவல் காட்டுத்தீயாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு பரவியது.
நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி துணை மேலாளர் ஸ்வப்ன பிரியா விடுமுறையில் சென்றார்.
வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மண்டல மேலாளர் ராஜு போலீசில் புகார் செய்தார். வங்கியில் அடகு வைத்த நகைகள் காணாமல் போனதற்கு வங்கி ஊழியர்கள் 6 பேர் காரணம் என கூறப்படுகிறது.
போலீசில் புகார் செய்யப்பட்டதால் துணை மேலாளர் ஸ்வப்ன பிரியா விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து ஸ்வப்ன பிரியாவின் தாய் தனது மகள் மீது போலீசில் புகார் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்தார்.
வங்கியில் காணாமல் போன நகைகள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும், கணக்கெடுப்பு முடிந்த பிறகு வாடிக்கையாளர்களின் நகைகள் திருப்பித் தரப்படும் என மண்டல மேலாளர் ராஜு தெரிவித்தார்.






