என் மலர்tooltip icon

    இந்தியா

    புயல் காற்றுடன் பலத்த மழை: திருப்பதி மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்தன
    X

    புயல் காற்றுடன் பலத்த மழை: திருப்பதி மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்தன

    • திருப்பதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
    • மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் காற்று வீசியதால் திருப்பதி மலைப்பாதையில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு சென்று உடனடியாக மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர். இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பாபவிநாசம், கபில தீர்த்தம், ஜபாலி உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

    திருப்பதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர் மழை காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீரென நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு உள்ளது. கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சியில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் சாலைகள் முழுவதும் தண்ணீர் ஓடுவதால் நேற்று தரிசனத்திற்கு வந்த திருப்பதியை சேர்ந்த விஜயகுமார் என்ற பக்தர் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் விஜயகுமாரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.

    Next Story
    ×