என் மலர்
இந்தியா

மேம்பாலத்தின் அடியில் பெற்றோருடன் தூங்கிய 9 மாத குழந்தை கடத்தல்
- குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
- குழந்தை கடத்திச்சென்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குட்லூருவை சார்ந்தவர் தேவரகொண்டா ஆனந்த ராவ்.
இவரது மனைவி ரஜினி தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. தம்பதி இருவரும் ஊர் ஊராக சென்று வாத்து மேய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொப்போலி மேம்பாலத்தின் அடியில் தற்காலிக கூடாரம் அமைத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இரவு 11 மணிக்கு ஒரு ஆண், பெண் பைக்கில் வந்தனர்.
கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.
குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தை கடத்திச் சென்றது குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.
மேலும் குழந்தை கடத்திச்சென்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் குழந்தையை கடத்தி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
விரைவில் குழந்தையை கடத்திச் சென்றவர்களை கண்டுபிடித்து குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.






