என் மலர்tooltip icon

    இந்தியா

    • கர்னல் சோபியா குரேஷி குறித்து பேசிய பா.ஜ.க. அமைச்சர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
    • தமிழர்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை ஒவ்வொரு தேர்தலின்போதும் பா.ஜ.க. கண்டறிந்து விடுகிறது.

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * புல்வாமா தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

    * மும்பை தாக்குதல் நிகழ்ந்தபோது பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர்.

    * பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்.

    * விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி தீவிரவாத தாக்குதலின்போது என்ன செய்தார்.

    * பஹல்காம் தாக்குதலுக்கு மோடி பொறுப்பேற்றாரா?

    * RAW மற்றும் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது.

    * மக்களை பாதுகாப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து விட்டது.

    * அரசாங்கம் உங்களிடம் தான் உள்ளது. மக்களை காக்க தவறி விட்டீர்கள்.

    * கேள்வி எழுப்பினாலே தேச விரோதி என முத்திரை குத்துவதா?

    * அரசியல் என்ற பெயரில் நாட்டை ஏன் பிளவுபடுத்த நினைக்கிறீர்கள்.

    * தேர்தலின்போது தமிழர் பெருமை பேசும் பா.ஜ.க. அரசு கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கிறது.

    * தேர்தல் நேரத்தில் மட்டும் சோழர்கள், தமிழர்கள் மீது பாசம் ஏற்படுகிறது.

    * தமிழர்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை ஒவ்வொரு தேர்தலின்போதும் பா.ஜ.க. கண்டறிந்து விடுகிறது.

    * விக்ரம் மிஸ்ரி என்ற அதிகாரியை அவதூறு செய்தபோது என்ன செய்தீர்கள்.

    * கர்னல் சோபியா குரேஷி குறித்து பேசிய பா.ஜ.க. அமைச்சர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

    * போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது நான் என டிரம்ப் 25 முறை கூறுகிறார்.

    * இதுதான் பா.ஜ.க.வின் வெளியுறவுக் கொள்கையா?

    * வெளியுறவுக் கொள்கையில் மத்திய பா.ஜ.க. அரசு சாதித்தது என்ன?

    * வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது.

    * ஆணையத்தின் உதவி, சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக இல்லாமல் ஜனநாயகத்தின் மூலம் தேர்தல் வெற்றி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேருவை காங்கிரசை விட பா.ஜ.க. தான் அதிகம் நினைவில் வைத்துள்ளது.
    • ஆபரேஷன் சிந்தூருக்காக முதன்முறையாக ஆதரவு பேரணி நடத்தியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டை எந்தவிதத்திலும் தமிழ்நாடு விட்டுக்கொடுத்ததில்லை.

    * எங்களுக்கு தேசப்பற்று இல்லை என்பது போல் அமித்ஷா பேசுகிறார்.

    * ஆளுங்கட்சியை சேர்ந்தோர் எப்போதும் நேருவை பற்றி பேசுவதால் இளைஞர்கள் நேருவை குறித்து படிக்கின்றனர், அதற்கு நன்றி.

    * அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் குறித்த விமர்சனங்களால் மாணவர்கள் அவர்களை குறித்தும் அதிகம் படிக்கிறார்கள்.

    * நேருவை காங்கிரசை விட பா.ஜ.க. தான் அதிகம் நினைவில் வைத்துள்ளது.

    * ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக குழு அமைத்து அனுப்பியதற்காக மத்திய அரசுக்கு நன்றி.

    * முதன்முறையாக பா.ஜ.க. எதிர்க்கட்சியினர் மீது நம்பிக்கை வைத்து குழு தலைவர்களாக வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

    * ஆனால் வெளிநாட்டிற்கு சென்று விளக்க வேண்டிய நிலை வராமல் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    * தீவிரவாத தாக்குதலில் உயிர்பலி ஏற்பட்டதால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    * ஆபரேஷன் சிந்தூருக்காக முதன்முறையாக ஆதரவு பேரணி நடத்தியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டும் வகையிலேயே அமித்ஷாவின் பேச்சு இருந்தது.

    * தேசப்பற்றில் தமிழர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் கிடையாது.

    * தேர்தல் நடைமுறை, ஜனநாயகத்தை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

    * கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் வந்தார். கங்கையை வெல்வான் தமிழன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினார்.

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது கவர்னர்-ஜனாதிபதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயம் செய்தது.

    இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், மாநில சட்டசபை அனுப்பும் மசோதாக்கள் தொடர்பாக 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்.

    கவர்னர்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 கேள்விகளை எழுப்பி கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினார்.

    இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் பி.எஸ்.நரசிம்மா, சூர்யகாந்த், விக்ரம்நாத், ஏ.எஸ். சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதி களை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடந்து வருகிறது. இவ்வழக் கில் கடந்த 22-ந்தேதி விசாரணைக்கு வந்த மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டு வழக்கை 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா அரசுகள் பதில் மனுதாக்கல் செய்தன.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கில் கால அட்ட வணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதிக்குள் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யு மாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.

    ஜனாதிபதி விளக்கம் கோரிய இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 19-ந் தேதி தொடங்கும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இதில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் தாக்கல் செய்த ஆரம்ப ஆட்சேபனைகள் முதலில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    ஜனாதிபதியின் பரிந்துரையை ஆதரிக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மனுக்கள் ஆகஸ்ட் 19, 20, 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும், ஜனாதிபதியின் பரிந்துரையை எதிர்க்கும் மனுக்கள் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 2, 3, 9 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஏதேனும் மறு சமர்ப்பிப்புகள் இருந்தால், செப்டம்பர் 10-ந்தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • பயங்கரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கிகள், சாக்லேட்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை
    • ப.சிதம்பரம் பாகிஸ்தானை காப்பாற்ற முயல்கிறாரா?

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.

    அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவையில் இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    "பயங்கரவாத தாக்குதலில் இருந்து தோட்டாக்களின் அறிக்கை ஏற்கனவே தயாராக இருந்தது. நேற்று கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளின் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு அந்த அறிக்கைகளுடன் பொருத்தப்பட்டன.

    நேற்று சண்டிகரில் மேலும் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு இந்த 3 பேரும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் என்பது உறுதி செய்யப் பட்டது. அவர்களிடம் பாகிஸ்தான் அடையாள அட்டைகளும், பாகிஸ்தான் சாக்லெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பொது மக்களை சுட்டு கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் சந்தித்தேன். திருமணமான 6 நாட்களுக்குப் பிறகு விதவையான ஒரு பெண் என் முன் நிற்பதைக் கண்டேன். அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளை அனுப்பியவர்களை பிரதமர் மோடி தண்டித்தார்.

    இன்று நமது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியவர்களை கொன்றனர் என்பதை அனைத்து குடும்பங்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்.

    பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து பழித்தீர்க்கப்பட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூரை தொடர்ந்து ஆபரேசன் மகாதேவும் முழு வெற்றியை பெற்று உள்ளது. நாங்கள் பயங்கரவாதத்தின் முது கெலும்பை உடைத்து உள்ளோம். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டி உள்ளோம்.

    பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்கும்போது அவர்கள் (எதிர்க்கட்சிகள்) மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.ஆனால் அவர்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைய வில்லை.

    பஹல்காம் தாக்குதல் குறித்து ராஜ்நாத்சிங் விளக்க ளித்த பின்பும் எதிர்க்கட்சி யினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி செய்கிறது. பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், அதற்கு யார் பொறுப்பு என்று காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து கேட்கிறார்கள். பாகிஸ்தானை காப்பாற்ற காங்கிரஸ் ஏன் இவ்வளவு தீவிரமாக உள்ளது.

    நேற்று காங்கிரஸ் முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் ஒரு கேள்வி எழுப்பினார். பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டார். பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் காங்கிரசுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இதைச் சொல்லும் போது, அவர்கள் பாகிஸ்தானுக்கு ஒரு நற்சான்று வழங்குகிறார்கள் என்று அர்த்தம்.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தானின் பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தபோது தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றனர். தீவிரவாத பிரச்சினைகளை அப்போதைய காங்கிரஸ் அரசு உதாசீனப்படுத்தியது.

    சிந்து நதி ஒப்பந்தம் காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு ஆகும். ஆபரேசன் சிந்தூரின்போது பாகிஸ்தான் பொதுமக்கள் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 125 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.

    பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஊக்கம் தருகிறது என்பதை உலகிற்கு அம்பலப்படுத்தி உள்ளோம். பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரும், அந்நாட்டுடனான வர்த்தகமும் நிறுத்தப் பட்டுள்ளது.

    நேரு செய்த தவறால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. அவரது தவறால் இந்தியா தனது 80 சதவீத நீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கிறது. மோடி அரசு, மன்மோகன்சிங் அரசை போல் தீவிர வாதத்தை வேடிக்கை பார்க்காது.

    பாகிஸ்தானைக் காப்பாற்ற அவர்கள் செய்யும் சதித்திட்டத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்."

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பினர்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி சொத்துவரி முறைகேடு புகாரில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த 5 மண்டல தலைவர்கள் மற்றும் 2 நிலை குழு தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் கருப்பு சேலை அணிந்திருந்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சண்முகவள்ளி, பைக்காரா கருப்புசாமி, ரூபிணி குமார், நாகஜோதி, ரவி, மாயத்தேவன் ஆகியோர் எழுந்து நின்று மேயர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கிளம்பியது. இதனால் மாமன்ற கூட்டம் தொடங்கியதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சோலை ராஜா தலைமையில் கூட்ட மன்ற அரங்கின் மையப்பகுதிக்கு வந்து மேயர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

    அப்போது மேயர் இந்திராணி பேசுகையில், இது மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டிய இடம். அ.தி.மு.க.வினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள், கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வந்து கபட நாடகம் ஆட வேண்டாம் என்று தெரிவித்தார்.

    மேயரின் பேச்சுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. கவுன்சிலர்களை உடனடியாக வெளியேற்றும்படி மேயர் இந்திராணி மாமன்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாமன்ற அறைக்கு வெளியே இருந்த போலீசார் உள்ளே வந்து அ.தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றினர்.

    வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சொத்துவரி முறைகேட்டில் தொடர்புடைய மண்டல தலைவர்கள் பதவிகளை மட்டுமே ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மேயர் இந்திராணியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தெரிவித்தார்.

    இதனிடையே மாநகராட்சி சொத்து வரி விவகாரத்தில் மண்டல தலைவர் பதவியை ராஜினாமா செய்து மேயரிடம் கடிதம் அளித்த மண்டல தலைவர்கள் வாசுகி, சுவிதா, பாண்டிச்செல்வி, சண்முக புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, நிலைகுழு தலைவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி ஆகியோரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் ஒப்புதல் அளித்த தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.
    • தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உலகப் புலிகள் நாளில் தமிழ்நாடு பெருமிதத்துடன் முழங்குகிறது!

    தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தரவுகளின்படி, 306 புலிகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. இந்த வெற்றிக்குக் காரணம், கடினமான பகுதிகளில், முக்கியத்துவம் மிகுந்த புலிகளின் வாழிடங்களைப் பாதுகாக்கும் நமது வனத்துறைப் பணியாளர்களும், வேட்டைத் தடுப்பு அணியினரும்தான்.

    வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேம்படுத்திட, 1,947 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, வனத்துறையினருக்கு நவீன உடைகள், தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்படுகின்றன, கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அயல்-ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, புலிகளின் வாழிடங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. காடுகளின் வளம் மேம்படுத்தப்படுகிறது. கானுயிர் மீதான குற்றங்கள் புரியும் கும்பல்களை அடக்க, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு எனும் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை நாம் பாதுகாக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்
    • பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் தப்பிச் சென்றுவிடாமல் தடுத்தோம்.

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.

    அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மக்களவையில் இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டு கொன்றனர். அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் மதத்தைக் கேட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தோம்.

    தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி நடந்தது. ஆபரேசன் மகாதேவ் தேடுதல் வேட்டை கடந்த மே மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்தது. இதில் இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எப் , ஜம்மு-காஷ்மீர் காவல் துறை ஆகியவை இணைந்து பணியாற்றின. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் நாட்டை விட்டு தப்பி செல்லக்கூடாது என்று பாதுகாப்புப் படை யினருக்கு அறிவுறுத்தப் பட்டது.

    அதன்படி பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் தப்பி செல்ல விடாமல் தடுத்தோம். அவர்களை ஜூலை 22-ந்தேதி கண்டு பிடித்தோம். நேற்றைய ஆபரேசன் மகா தேவ் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதில் பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட சுலேமான் என்கிற பைசல், ஆப்கான், ஜிப்ரான் ஆகிய 3 பயங்கரவாதிகளும் இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையால் கொல்லப்பட்டனர்.

    சுலேமான் லஷ்கர்-இ-தொய்பாவின் ஏ-பிரிவு தளபதியாக இருந்தார். ஆப்கானும் ஏ-பிரிவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஆவார். பைசரன் பள்ளத்தாக்கில் நமது குடிமக்களைக் கொன்ற இந்த 3 பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு உணவு வழங்கியவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மூலம் பயங்கரவாதிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன" என்று தெரிவித்தார். 

    • சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது.
    • சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு!

    சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது - இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!

    சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி வத்திராயிருப்பில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. உடனே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு காட்டுத்தீ பரவாமல் தடுத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் சாப்டூர் வனச்சரகம் வருசநாடு வழியாக சதுரகிரிக்கு செல்லும் பாதையில் உள்ள கள்ளிச்சுனை என்ற இடத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக அந்தப்பகுதியில் உள்ள மரங்களுக்கு தீ பரவியது. இதனால் வன விலங்குகள் பாதிக்கப் பட்டன.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறண்ட சூழ்நிலை காரணமாக தீ வேகமாக பரவி கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 2-வது நாளாக இன்றும் சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள மணிக்கட்டி என்ற இடத்தில் காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த தீயில் மூலிகை மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.

    தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில் நிலைய தூணில் பயங்கரமாக மோதியது.
    • விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோரும், ஏனோசும் தூக்கி வீசப்பட்டனர்.

    குரோம்பேட்டை அடுத்த அஸ்தினா புரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர்(வயது 17). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஏனோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகரில் உள்ள நண்பர்களை பார்க்க புறப்பட்டார்.

    இரவு 10 மணியளவில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஆசர்கானா வளைவில் திரும்பினர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில்நிலைய தூணில் பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கிஷோரும், ஏனோசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஏனோசை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விபத்து நடந்து உள்ள இதே இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட் பார்த்து திரும்பியபோதும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மோதி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை மாநகராட்சி கழிப்பறைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் உள்ள பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய ₹1,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்ட பிறகும், அவை பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இந்நிலையில், மீண்டும் பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சி ரூ.1,000 கோடியை செலவிட திட்டமிட்டுள்ளது

    சென்னை நகரத்தில் 1,260 இடங்களில் 10,000 பொது கழிப்பறை இருக்கைகளை சுத்தம் செய்தல், பராமரித்தல் மற்றும் கட்டுதல் ஆகியவற்றிற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் கழிப்பறைகளை 9 ஆண்டுகள் தனியார்மயமாக்க 430 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இது தவிர, மொபைல் கழிப்பறைகள், மின் கழிப்பறைகள் மற்றும் சிங்காரா சென்னையின் 'ஒப்பனை கழிப்பறைகள்' ஆகியவற்றைக் கட்டவும் பராமரிக்கவும் சுமார் 50 கோடி செலவிட்டுள்ளது.

    ரூ.1000 கோடி செலவு செய்த பின்னரும் சென்னை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக பயன்படுத்தப்பட முடியாத நிலையில் தான் உள்ளது. அப்படியெனில் இந்த 1000 கோடி ரூபாய் எங்கே போனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள்.
    • உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ’பாட்டிகளின் வடை கடைகள்’ வரலாற்றில் மட்டுமே இருக்கும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கிராமப்புற பொருளாதாரத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை ஆகும்.

    கிராமப்புற கடைகளுக்கு ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருவாயும், இலாபமும்

    தரக்கூடிய கடைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்குவதில் தவறு இல்லை. ஆனால், வாழ்வாதாரத்திற்காக செய்யப்படும் தொழில் - வணிகத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

    கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்கான தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தேநீர்க்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றை அமைத்திருப்பார்கள். அதேபோல், ஆதரவற்ற மூதாட்டிகள், பிறரை எதிர்பார்த்திருக்கக் கூடாது என்ற சுயமரியாதை உணர்வுடன் இடலி சுட்டு விற்பது, மாலையில் வடை சுட்டு விற்பது போன்ற தொழில்களை செய்வார்கள். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி. இது அவர்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக அழித்து விடும்.

    கிராமப்புற கடைகள் உரிமம் பெறுவதுடன் மற்றும் இந்த நடவடிக்கை நின்று விடப் போவதில்லை. உரிமம் பெற்ற கடைகளுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த உதவியும் செய்யப்படாது. அதே நேரத்தில் உரிமம் வைத்திருப்பவர்களைத் தேடித் தேடி தொழில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபடும். வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அதையே காரணம் காட்டி, அந்த வீட்டுக்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற மின்வாரியம் முயலும்.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், அதிகாரத்தையும் வழங்காமல் தன்னிடம் வைத்துக் கொள்ளும் திமுக அரசு, உள்ளாட்சிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும். இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 'பாட்டிகளின் வடை கடைகள்' வரலாற்றில் மட்டுமே இருக்கும்; நடைமுறையில் இருக்காது. எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×