என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர் - அமித் ஷா
    X

    ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர் - அமித் ஷா

    • உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்
    • பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் தப்பிச் சென்றுவிடாமல் தடுத்தோம்.

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.

    அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மக்களவையில் இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டு கொன்றனர். அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் மதத்தைக் கேட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தோம்.

    தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி நடந்தது. ஆபரேசன் மகாதேவ் தேடுதல் வேட்டை கடந்த மே மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்தது. இதில் இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எப் , ஜம்மு-காஷ்மீர் காவல் துறை ஆகியவை இணைந்து பணியாற்றின. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் நாட்டை விட்டு தப்பி செல்லக்கூடாது என்று பாதுகாப்புப் படை யினருக்கு அறிவுறுத்தப் பட்டது.

    அதன்படி பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் தப்பி செல்ல விடாமல் தடுத்தோம். அவர்களை ஜூலை 22-ந்தேதி கண்டு பிடித்தோம். நேற்றைய ஆபரேசன் மகா தேவ் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதில் பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட சுலேமான் என்கிற பைசல், ஆப்கான், ஜிப்ரான் ஆகிய 3 பயங்கரவாதிகளும் இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையால் கொல்லப்பட்டனர்.

    சுலேமான் லஷ்கர்-இ-தொய்பாவின் ஏ-பிரிவு தளபதியாக இருந்தார். ஆப்கானும் ஏ-பிரிவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஆவார். பைசரன் பள்ளத்தாக்கில் நமது குடிமக்களைக் கொன்ற இந்த 3 பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு உணவு வழங்கியவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மூலம் பயங்கரவாதிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×