என் மலர்
இந்தியா
- தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- தமிழகத்தில் வருகிற 25-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நாளை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும்,
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 22, 23ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வரும் 24ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 25ம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது.
- தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது.
* தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது.
* தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
* தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலாப் பயணிகள் செல்வது தடை விதிக்கப்படுவது நடைமுறை, கடந்த சில நாட்களாக சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்துச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திருமூர்த்தி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. மேலும் பஞ்சலிங்க அருவியின் மேற்பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சீரான அளவில் தண்ணீர் வந்ததை அடுத்து பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர்.
- சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.
- ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலர் பதவியில் இருந்தும் அக்கட்சியில் இருந்தும் மல்லை சத்யா நீக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய கட்சியின் பெயர் நவ.20-ந்தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். அவர் 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார்.
ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.
தி.மு.க.வில் அங்கம் வகித்த வைகோ, கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி ம.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதே போன்று ம.தி.மு.க.வில் அங்கம் வகித்த மல்லை சத்யா துரை வைகோவுடனான மோதல் போக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
- கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.
- மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.
தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் பதில் அளித்துள்ளார்.
* தமிழக அரசின் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டது.
* மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்லை.
* தமிழக அரசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம் மற்றும் வேகம் மக்களை கோவை மெட்ரோ ரெயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை.
* கோவை புறநகர் மக்கள் மெட்ரோ ரெயில் திட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதை திட்ட அறிக்கையில் சரியாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை.
* கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.
* சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அரசு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கியதை முதலமைச்சர் மறைத்துவிட்டார்.
* மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+2
- இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது.
- கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் 'சாகர் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், கடலோர காவல்படை வீரர்களே பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில் டம்மி வெடிகுண்டு, துப்பாக்கியுடன் தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.
இரு குழுக்களாக மீனவர்கள் உதவியுடன் கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் கடலுக்கு சென்று மீனவர்கள் போர்வையில் எவரேனும் புதிய ஆட்கள் உள்ளனரா? என சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலை 6மணி வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது.
- புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
- விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு.
பீகார் மாநில சட்டசபை தோ்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பா.ஜ.க. 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ் தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டீரிய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.
ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக தொகுதி களில் வென்றாலும் நிதிஷ் குமாா் முதல்-மந்திரியாகத் தொடா்வார் என்று கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்தன.
இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடை பெற்றது. கட்சியின் சட்ட சபை குழு தலைவராக நிதிஷ் குமாா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
பின்னா், தேசிய ஜன நாயக கூட்டணி புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடை பெற்றது. அதில், பீகார் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அதன் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்த நிதிஷ் குமாா், தனது ராஜினாமா கடிதத்தை சமா்ப்பித்தாா். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டாா்.
அதன்படி, நடப்பு சட்டசபை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதிஷ் குமாருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தாா்.
இதைத்தொடர்ந்து பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
முதலமைச்சராக 10-வது தடவையாக 74 வயது நிதிஷ்குமார் பதவி ஏற்றார். விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாய கூட்டணியின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனர்.
- பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான்.
- மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24-ந் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எஸ்.ஐ.ஆர். என்பது பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்துகிற ஒரு கூட்டுச் சதி. அவர்கள் குடியுரிமையை பறிப்பதற்கான ஒரு செயல் திட்டமாகவும் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான ஒரு செயல் திட்டமாகவும் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.
எனவே, இது உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய முறைப்படி எஸ்.ஆர்.என்கிற திருத்த முறையையே இந்த தேர்தலுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான். பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
மேலோட்டமாக வாக்காளர் பட்டியல் சீராய்வு என்று சொல்லப்பட்டாலும் குடியுரிமையை பறிக்கிற தேசிய குடிமக்கள் பேரேட்டை உருவாக்குகிற சட்டத்தை நடை முறைப்படுத்துகிற சதி முயற்சிதான் இது. வெளிப்படையாக அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அதுதான் உண்மை என்பதை உணர வேண்டும். இது நாட்டுக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய், இதன் மீது 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.
அதன்படி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது.
கடந்த செப்டம்பர் 11-ந்தேதி விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,
* ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதை சட்டப்பேரவைக்கு அவர் அனுப்பி வைக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
* ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தால் அதை கட்டாயமாக சட்டமன்றத்திற்கு தகுந்த காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்.
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும்.
* ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்க முடியாது.
* தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
* ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது.
* ஆளுநருக்கு மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுங்கள் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தல் வேண்டுமானால் கொடுக்க முடியும்.
* ஒரு நியாயமான காலத்திற்குள் முடிவெடுங்கள் என கேட்டுக்கொள்ள தான் முடியும் என்று தீர்ப்பளித்தது.
இதன் மூலம் மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தி இருக்கிறது.
- நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.
- நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த தினம் நேற்று. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் கர்நாடகாவில் நேற்று இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கர்நாடகா துணை முதல்-மந்திரியும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான டி.கே.சிவகுமார் பங்கேற்று பேசினார்.
அப்போது டி.கே. சிவகுமார் பேசுகையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு மற்ற தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் டி.கே.சிவகுமார் கூறுகையில், நான் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. டெல்லி மேலிடம் ஆர்வம் காட்டிய எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை என்னிடம் கேட்டுள்ளனர். ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அனுப்புகிறேன். சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர், சிலர் ஆர்வம் காட்டவில்லை, சிலர் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு டெல்லி மேலிடம் ஒரு பதிலைக் கொடுக்கும்.
எனது பதவிக் காலத்தில் குறைந்தது 100 காங்கிரஸின் அலுவலகங்களையாவது கட்டுவேன். நான் அங்கே இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அது முக்கியமல்ல என்றார்.
இதனிடையே, தனது பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்களிடையே பேசிய டி.கே. சிவகுமார்,
* நான் இங்கு (கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ) நிரந்தரமாக இருக்க முடியாது. நான் உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.
* நான் 5.5 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன், மார்ச் மாதத்தில், நான் 6 ஆண்டுகளை நிறைவு செய்வேன்.
* மற்றவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட வேண்டாம், நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேன். நான் முன்னணியில் இருப்பேன்.
* நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.
* கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையை இழக்காதீர்கள்.
* நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
* நமக்கு அதிகாரம் கிடைக்கும், கவலைப்படாதீர்கள். ஆனால் அதை அடைய நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.
2020-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றதுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முதலில் திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
- மசோதா பற்றிய வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
புதுடெல்லி:
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.
செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.
அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள மசோதா மீது முடிவெடுக்கும் உச்சவரம்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்தது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,
* மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
* சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்கக்கூடாது.
* மசோதா பற்றிய வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
* மசோதாவிற்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடாது.
* அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
* மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும்.
* ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மசோதாவை நிராகரிக்கலாம்.
* மத்திய அரசு கூறுவதுபோல் மசோதா தொடர்பாக ஆளுநருக்கு 4-வது வாய்ப்பு இல்லை.
* மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று அதிரடி தீர்ப்பளித்தது.
- மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.
- இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் (இன்றும், நாளையும்) நடைபெறுகிறது.
அதன்படி இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு ஆகிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 6 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.
இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் "சாகர் கவாச்" என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






