என் மலர்
இந்தியா

பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக பதவி ஏற்றார் நிதிஷ்குமார்
- புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
- விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு.
பீகார் மாநில சட்டசபை தோ்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பா.ஜ.க. 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ் தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டீரிய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.
ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக தொகுதி களில் வென்றாலும் நிதிஷ் குமாா் முதல்-மந்திரியாகத் தொடா்வார் என்று கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்தன.
இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடை பெற்றது. கட்சியின் சட்ட சபை குழு தலைவராக நிதிஷ் குமாா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
பின்னா், தேசிய ஜன நாயக கூட்டணி புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடை பெற்றது. அதில், பீகார் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அதன் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்த நிதிஷ் குமாா், தனது ராஜினாமா கடிதத்தை சமா்ப்பித்தாா். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டாா்.
அதன்படி, நடப்பு சட்டசபை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதிஷ் குமாருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தாா்.
இதைத்தொடர்ந்து பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
முதலமைச்சராக 10-வது தடவையாக 74 வயது நிதிஷ்குமார் பதவி ஏற்றார். விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாய கூட்டணியின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனர்.






