என் மலர்tooltip icon

    இந்தியா

    • கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.50 மணிக்கு டெல்லி சென்றார். டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இன்று டெல்லியில் தங்கி இருக்கும் அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந்தேதி தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த இருக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இன்று முழுவதும் டெல்லியில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை சென்னை திரும்புகிறார்.

    • லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
    • பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என, இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம்.

    குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.

    மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை.

    இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

    இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை.

    மேலும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி அவர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம்.

    நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனையை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.
    • அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை :

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.

    எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்கனை மதுரை உயர்நீதிமன்ற கினை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    • சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார்.
    • மனைவி, சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.  

    கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். குஞ்சனிடம் இருந்து சந்தீப் விவாகரத்து பெற விரும்பினார். அவர் ஒரு வழக்கறிஞரைக் கூட அணுகியதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார். ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கினார்.

    மனைவியும் சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்தார்.

    பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார். அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி போலீசில் சரணடைந்தார். குஞ்சன் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் அறிவித்தனர். சந்தீப்பை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். 

    • ஜாகிர் உசேன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கொலை வழக்கு மட்டுமல்ல எந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த கொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் சட்டசபையிலும் இன்று எதிரொலித்தது.

    சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது ஜாகீர் உசேன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

    * ஜாகீர் உசேன் பிஜிலி வழிமறித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    * 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.

    * ஜாகிர் உசேன் புகார் அளித்த போதே விசாரணை செய்திருந்தால் கொலை நடந்திருக்காது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * ஜாகிர் உசேன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் ஏற்கனவே 2 பேர் சரண் அடைந்துள்ளனர்.

    * ஜாகீர் உசேன் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறோம்.

    * கொலைக் குற்றவாளிகள், பின்னணியில் உள்ளோர் என அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்படுவர்.

    * கொலை வழக்கு மட்டுமல்ல எந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.

    * சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை தி.மு.க. அரசு அனுமதிக்காது என்றார். 

    • பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு.
    • அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை.

    பெங்களூரு:

    துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யாராவ் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து வரலாறு காணாத வகையில் தற்போது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கத்தாரில் இருந்து நேற்று கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு பெண்ணின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 3.2 கிலோ எடை கொண்ட கோகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.38.4 கோடி ஆகும். இதையடுத்து அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தி வந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது பெயர் மற்றும் விபரங்களை இன்னும் வெளியிடவில்லை. பெங்களூருவில் அவர் யாரிடம் சேர்க்க போதைப்பொருள் கடத்தி வந்தார் என்றும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    தங்க கடத்தல் வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.38.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

    திருப்பதி:

    தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சொத்து விவரம் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்த ஆய்வு நடத்தியது.

    இதில் நாட்டில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

    முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் 5-வது இடம் பிடித்துள்ளார்.

    மந்திரி பி.நாராயணா ரூ.824 கோடியுடன் 6-வது இடத்திலும், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ரூ.757 கோடியுடன் 7-வது இடத்திலும் பிரசாந்தி ரெட்டி எம்.எல்.ஏ என்பவர் ரூ.716 கோடியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் ரூ.542 கோடி சொத்துக்களுடனும், நடிகர் பாலகிருஷ்ணா ரூ.482 கோடி மற்றும் மாதவி எம்.எல்.ஏ. ரூ.388 கோடியுடன் முதல் 20 பேர் கொண்ட பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    நாட்டில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ. க்களில் முதல் 20 பேரில் ஆந்திராவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தேசிய சொத்து மதிப்பில் 66-வது இடத்தில் உள்ளார்.

    ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

    சொத்து மதிப்பில் மட்டுமல்லாது குற்ற வழக்குகளிலும் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர்.

    ஆந்திராவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 138 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தேர்தலில் மனுத்தாக்களின் போது தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் 9, தெலுங்கானா 82, பீகார் 158 ,மகாராஷ்டிரா 127, தமிழ்நாட்டில் 132 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

    • பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன.
    • சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.

    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே உள்ள மாங்கரை தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள காட்டாற்று குளத்தில் சஜின் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.

    இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் சஜினின் உறவினர்கள் இன்று காலை கருங்கல்-தொலையா வட்டம் சாலையில் மாங்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
    • சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆண்டுக்கு 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும் போது 'அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள்' என்று ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.

    இதனால் ஒரு ஆண்டுக்கு 15 கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வரை வழங்கப்படும். அதில் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். எனவே அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனென்றால் அந்த சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே 15 கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் வாங்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை விளக்கி கியாஸ் வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் கடிதம் கொடுத்தால் கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆனால் 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று கூறுவதால் பலர் பாதிக்கப்படலாம்.

    எனவே ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும் போதும் அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
    • 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.

    இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் எந்தவித தீர்வும் எட்டப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதனையொட்டி கோவை சோமனூரில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி கிடக்கிறது.

    கோவை, திருப்பூ மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி கூடங்களின் முன்பு இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஜவுளி உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு மேலாக வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.

    அத்துடன் இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் அடைந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்தின் தலைவர் பூபதி கூறியதாவது:-

    விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் முதல்கட்டமாக இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.

    எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினைகளில் தலையிட்டு விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது.
    • செஞ்சி அருகே குழி தோண்டி உடலை புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னையில் தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளர் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் 2-வது லேன் பகுதியில் வசித்து வந்தவர் குமார். 72 வயதான இவர் சென்னை மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

    தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப். உடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தையும் இவர் நடத்தி வந்தார். இந்த சங்கத்தில் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர் தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார்.

    தாம்பரத்தை அடுத்த சேலையூரில் இவரது மகள் வீடு உள்ளது. அங்கு சென்று இருந்த குமார் கடந்த 16-ந்தேதி மகள் வீட்டில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டு உள்ளார்.

    பின்னர் தாம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அதன் பிறகு காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இது பற்றி தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குமாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குமாருக்கும் சேலையூர் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குமார் கடத்தி படுகொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரவியும் அவரது கூட்டாளிகள் 7 பேரும் குமாரை காரில் கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். செஞ்சி அருகே குழி தோண்டி உடலை புதைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவி உள்பட 7 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

    மும்பையில் வசித்து வரும் குமாரின் உறவினர் ஒருவருக்கு சொந்தமாக கானாத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தண்டியில் ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குமார் தான் பாதுகாத்து வந்துள்ளார். இதன் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் அந்த இடத்தை ரவி தனது கள்ளக்காதலியான தனலட்சுமி என்ற பெயரில் போலியாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குமாரின் உறவுக்கார பெண்ணான மகாலட்சுமி பெயரில் ஒரிஜினல் நில பத்திரம் உள்ளது.

    இந்த இடத்தில் ரவி மகாலட்சுமி என்ற பெயரில் போலியாக வேறு ஒரு பெண்ணை தயார் செய்து தனது கள்ளக்காதலியான தனலட்சுமி பெயரில் இடத்தை பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக குமாரை கடத்திச் சென்று நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு காரில் வைத்தே தாக்கியுள்ளனர்.

    இதற்கு குமார் உடன்படாததால் அவரை காருக்குள் வைத்து சித்ரவதை செய்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் கொலையுண்ட குமாரின் உடலுடன் செஞ்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் செஞ்சி அருகே காட்டுப்பகுதியில் பெரிய குழியை தோண்டி குமாரின் உடலை போட்டு புதைத்துள்ளனர்.

    பின்னர் எதுவும் தெரியாது போல ரவி வெளியில் நடமாடியுள்ளார். ஆனால் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி ரவியையும் அவரது கூட்டாளிகளையும் பிடித்து உள்ளனர். சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற குமார் தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மத்தியில் நன்கு அறிமுகமானவராவார். இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தி.மு.க.வினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவி பட்டதாரி வாலிபர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். நிலம் தொடர்பான பிரச்சனை பெரிதாக உருவெடுத்ததால் பயந்து போய் காரில் கடத்திச் சென்று குமாரிடம் இருந்து ஒரிஜினல் பத்திரங்களை வாங்கிவிடலாம் என்று அவர் நினைத்திருக்கிறார்.

    ஆனால் நிலைமை விபரீதம் ஆகி கொலையில் முடிந்து விட்டதால் ரவியும் அவரது கூட்டாளிகளும் சிறை செல்ல நேரிட்டுள்ளது.

    • விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.
    • விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.

    கோவை:

    9 மாத விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினார். இந்த சாதனை பயணம் குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்த போது, விமான பயணம் என்பது சவாலானதாக இருந்தது. தற்போது அந்த பயணம் எளிதாகி விட்டது. அதேபோன்று தான் இப்போது விண்வெளி பயணமும் மாறியுள்ளது.

    விண்வெளி பயணங்கள் என்பது ஓராண்டுக்கு முன்பே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. விண்வெளி நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு விண்கலம் செல்ல வேண்டும்.

    சுனிதா வில்லியம்ஸ் சென்ற போயிங் விண்கலத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த விண்கலம் ஆளில்லாமல் திரும்பி வந்தது.

    இதன் காரணமாக சுனிதா வில்லியம்ஸ் அதிக நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கினார். நீண்ட நாட்களாக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கிறார். விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.

    அவரது உடல், உள்ளம், மனவலிமையே அவர் இவ்வளவு மாதம் தங்க காரணம் ஆகும். அவர் விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் நடைமுறை வாழ்க்கை பழக்கம் ஆவதற்கு சில நாட்கள் ஆகும். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டதும், நடைமுறை வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.

    விண்வெளியில் இருந்து திரும்பி வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் நடைமுறை வாழ்க்கைக்கு பழகவும், இயல்பு நிலைக்கு திரும்பவும் சில நாட்கள் ஆகும்.

    தற்போது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கான காலதாமதத்தின் மூலம் செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதன் செல்வது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இந்திய விஞ்ஞானிகள் 3 அல்லது 4 ஆண்டுகளில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 2 ஆண்டுகளில் ஆளில்லா விண்கலம் செல்லும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×